பட மூலம், SrilankaMirror

“பிரயாணங்களின் போதான எனது நாளாந்த அனுபவங்கள் மிகவும் கசப்பானவை. நான் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு தினமும் தனியாகப் பிரயாணம் செய்யும்போது பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்கிறேன்” என்கிறார் பல்கலைக்கழக விரிவுரையாளரான நிசன்சலா. இதனால் தான் பாதுகாப்பின்மையை உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ளும் பெரும்பாலான பெண்கள் மௌனமாக இருக்கிறார்கள். தினமும் 6 மணித்தியாலங்களைப் பேருந்துப் பயணங்களில் செலவு செய்யும் இவரது பயணங்களைப் பொறுப்பற்ற நபர்கள் நரகமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

“பெரும்பாலான ஆண்களுக்குப் பேருந்துகளில் எப்படி அமர்வது என்று சொல்லிக்குடுக்க வேண்டியிருக்கிறது. பக்கத்தில் இருக்கும் பெண்களைத் துன்புறுத்துகிறோம் என்ற எந்த உணர்வும் இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் நெருக்கடிகளை தமக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள். என்னுடைய பெரும்பாலான பேருந்துப்பயணங்கள் மோசமான அனுபவங்களையே எனக்கு வழங்கியிருக்கின்றன” என்கிறார் ஊடகவியலாளரான தர்ஷி. வார இறுதி நாட்களில் உயர்கல்வியின் பொருட்டு இரவுநேரங்களிலேயே வவுனியாவில் இருந்து கொழும்புக்குப் பயணம்செய்ய வேண்டிய சூழல் இருப்பதாகவும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில நபர்கள் தம்மை நாகரிகமானவர்களாக, அப்பாவிகளாகக் காட்டிக்கொண்டு இவ்வாறான செயல்களைச் செய்கிறார்கள். தவறுதலாகச் செய்வது போல் அல்லது நித்திரை கொள்வதுபோல் பாவனை செய்துகொள்பவர்களாகப் பல ஆண்கள் இருக்கிறார்கள்.

“பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை வவுனியாவில் இருந்து தினமும் கிளிநொச்சிக்கு வேலைக்குச் சென்றுவரும்போது பல சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்களை விட நடுத்தரவயது ஆண்களே இவ்வாறான செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுகின்றனர். அதிலும் விடுமுறையில் சென்றுவரும் பாதுகாப்புத் தரப்பினரால் இவ்வாறான சீண்டல்களை அதிகம் எதிர்கொள்கிறேன் என்கிறார்” அனித்தா.

“பெரும்பாலான பேருந்துப் பயணங்களில் நான் பலவீனமானவளாக உணர்கிறேன். எனக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பமுடியாதவளாக இருக்கிறேன். பாதிக்கப்படும் பெண்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டு ஒதுங்கிப் போகத்தான் முடிகிறது” என்கிறார் சரிதா. பல்கலைக்கழகம் செல்லும் போதான குறுந்தூரப் பயணங்களின் போது தான் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் எவ்வளவுதான் தெளிவான பெண்ணாகத் தான் இருந்தாலும் பாலியல் ரீதியான சீண்டல்களைக் கடந்து செல்தல் என்பது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பின் இருக்கைகளில் இருந்து சீண்டுதல், தவறான தொடுதல்கள் போன்றவற்றை தான் பிரயாணங்களின் போது எதிர்கொண்டதாக கவிதா குறிப்பிட்டார். தான் ஒரு சட்டத்தரணியாக இருந்தும் கூட இது தொடர்பில் சட்ட ரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ளமுடியவில்லை எனும் போது மற்றப் பெண்களின் நிலை குறித்து அவர் கேள்வியெழுப்பினார்.

முற்போக்குச் சிந்தனைகள் எழுச்சிபெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில் ஆண்களின் அருகில் அமர்ந்து பயணம் செய்வதென்பது சாதாரணமானது. அது மட்டுமல்லாமல் பயணங்களின் போது யார் அருகில் இருக்கிறார்கள் என்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது. ஆனால், பயணங்களின் போது பெண்கள் வக்கிரம் பிடித்த நபர்களின் அருவருப்பான செய்கைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படுகின்றது. இவ்வாறான சொல் மற்றும் செயல் மூலமான வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு இவ் விடயத்தை எவ்வாறு கையாள்வது என்று தெரிந்திருப்பதில்லை. பொலிஸ் நிலையத்தில் முறையிடலாமா? வேண்டாமா? என்ற குழப்பங்களுடன் பெரும்பாலான பெண்கள் இவ்வாறான அத்துமீறல்களை இயலாமையுடன் கடந்துவிடுகின்றனர். இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களை வெளியில் சொல்ல அஞ்சுபவர்களாகவும் பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள். வேலைப்பளு, மனஅழுத்தம் போன்றவற்றுடன் நாளின் பெரும்பகுதியைப் பயணங்களில் செலவிடுகின்ற பெண்களுக்கு இது பாரிய சவால். பெண்கள் படித்துவிட்டால் மாத்திரம் இவ்வாறான வன்முறைகளைக் கடந்துவிடலாமா? முதிர்ச்சியுடைய முற்போக்கான பெண்கள் கூட இவ்வாறான விடயங்களைச் சகித்துக் கொண்டு கடந்து சென்றுவிடுகின்றனர்.

பயணங்களின் போது, பல சந்தர்ப்பங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டும் காணாமலும் இருப்பவர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள். பேருந்து நடத்துனர்கள் இவ்விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒரு சில நடத்துனர்களே சமூக அக்கறையுடன் செயற்படுகிறார்கள். முதுகெலும்புள்ள நபர்கள் தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டும். சில பேருந்து நடத்துனர்களும் இவ்வாறான வன்முறைகளை மேற்கொள்வதாகப் பல்கலைக்கழக மாணவியான சாதனா குறிப்பிடுகிறார். பாடசாலை மாணவியாக இருந்த காலத்தில் தினமும் பாடசாலைக்குச் செல்லும் போது தான் இதுபோன்ற வன்முறைகளை எதிர்கொண்டதாகவும் இதுபோன்ற துஷ்பிரயோகங்களை எப்படி கையாழ்வது என்று தனக்குத் தெரிந்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இளைஞர்களை விட நடுத்தரவயது ஆண்களாலேயே தான் அதிகம் பாலியல் ரீதியான சீண்டல்களை எதிர்கொள்வதாகவும் பெரும்பாலான ஆண்கள் தமக்குப் பரீட்சயம் அற்ற பெண்களிடமே தமது தாகாத செயல்களை அரங்கேற்றுவதாகவும் ஆராதானா குறிப்பிட்டார். இவர் தனது மேற்படிப்பிற்காக வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு வார இறுதி நாட்களில் பேருந்து மற்றும் புகையிரதம் போன்ற பொதுப் போக்குவரத்துக்களில் பயணிப்பதாகவும் அதன்போதே இவ்வாறான வன்முறைகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் குறுந்தூரப் பேருந்துப் பயணங்களிலும் கூட இவ்வாறான வன்முறைகளைப் பெண்கள் எதிர்கொள்ள நேரிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

தம்முடன் பிரயாணம் செய்யும் பெண்களை சக மனுசியாக மதிக்கத் தெரியாத சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோம். பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விழிப்புணர்வு அவசியம். இவ்வாறான குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும். அத்துடன், பொதுப்போக்குவரத்துச் சேவைகளைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றுவது எப்படி என்பது தொடர்பில் அனைவரும் சிந்திக்கவேண்டியது அவசியம். இந்த உலகத்தில் உள்ளவர்களின் துன்பங்களிற்குக் காரணம் வன்முறையாளர்கள் மாத்திரமல்ல வன்முறைகளை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களும் தான்.

“நீண்டதூரப் பயணங்களின் போது உடல் பகுதிகளைத் தொட முயற்சித்தல், இடித்தல், உரசுதல், கண்ணடித்தல், மோசமான பார்வை, தவறான சொற்பிரயோகங்கள் போன்ற பல்வேறுபட்ட துஷ்பிரயோகங்களை அடிக்கடி எதிர்கொண்டிருக்கிறேன். முதல் விடயம் எப்படி இதைச் சட்டப்படி அணுகுவது என்று எனக்குத் தெரியாது. இலங்கையின் சட்டத்துறையை நான் நம்பவில்லை. அவசர இலக்கத்திற்கு அழைத்தும் சரியான தீர்வைப் பெறமுடிவதில்லை. அத்துடன், ஆண்கள் பழியை பெண்கள் மேல் போடுவார்கள் மற்றும் மோசமான பெண்ணாகச் சித்தரிப்பார்கள் என்ற பயம் காரணமாக இதுபற்றி நான் யாரிடமும் முறையிட விரும்புவதில்லை. பெரும்பாலும் நடத்துனர் போன்றவர்கள் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதைக் கவனித்திருக்கிறேன்” என்கிறார் உதவி விரிவுரையாளரான திலினி.

“பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் போதான சமிக்ஞைகள், முறைப்பாட்டு வசதிகள் பொதுப்போக்குவரத்தில் ஏற்படுத்தப்படவேண்டும். பெண் நடத்துனர்கள், பெண் மேற்பார்வையாளர்கள் இருக்கவேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு எப்படி சட்டப்படி அணுகுவது என்பது தொடர்பில் தெரிந்திருப்பதில்லை. எனவே, அது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்” எனவும் திலினி குறிப்பிட்டார்.

 “இலங்கையில் பெரும்பாலான பொலிஸ் நிலையங்கள் பெண்கள் அணுகுவதற்கு ஏற்ற இடமாக இல்லை. சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கேட்கிறார்கள். நீ பெண், இவற்றைக் கடந்து தான் செல்லவேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்குவதுடன் முறையீடுகளைச் செய்யச் செல்லும் பெண்களை குற்றவாளியாக்கும் உலகம் இது” என்கிறார் கிருத்திகா. பொதுப்போக்குவரத்துக்களில் பயணம் செய்யும் பெரும்பாலான பெண்கள் முறையிடுவதில்லை. அதற்கு இதுபோன்ற பல்வேறுப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. பொலிஸார் உட்பட பாதுகாப்புத் தரப்பினர், சட்டத்துறையினருக்கு முதலில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான புரிதல் அவசியம்.

போக்குவரத்தின் போது தாம் தமது உடையில் அதிக கவனம் கவனம் செலுத்துவதாகவும் இரவு நேரப்பயணங்களின் போது பெண்மையை பிரதிபலிக்காத தடித்த உடைகளைத் தெரிவுசெய்வதாகவும் சில பெண்கள் தெரிவித்தனர். ஆனால், உடை ஒரு விடயம் அல்ல என்பதை தாம் பெரும்பாலான சந்தர்ப்பத்தில் உணர்ந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

உலகளாவிய ரீதியில் பெண்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படுகின்றது. அதேவேளை பல்லாயிரக்கணக்கான பெண்கள் நாளாந்தம் இதுபோன்ற பாலியல் ரீதியான வன்முறைகளை பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் போது எதிர்கொள்கின்றனர். இதனால், பொதுப்போக்குவரத்துக்களைப் பயன்படுத்தும் போது பெண்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றார்கள். பிரயாணங்களின் போது இடம்பெறும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் இன்று உலகளாவிய பாரிய சமூகப் பிரச்சினையாக இருந்துவருகின்றன. உரசல்கள் மற்றும் தொந்தரவுகள் அற்ற பயணங்கள் பெண்களுக்கு அரிதாகவே கிடைக்கின்றன.

ஏன் இந்த நபர்கள் பிரயாணங்களின் போது பெண்களுக்கெதிராக இவ்வாறான துஷ்பிரயோகங்களை பிரயோகிக்கின்றனர்? நெரிசல்களைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றார்கள். பெண்ணின் உலகைச் சிதைக்க வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மையா? நவீனம் வளர்ந்து விட்ட 21ஆம் நூற்றாண்டில் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. பேருந்து மற்றும் ஏனைய பொதுப் போக்குவரத்துக்கள் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை.

2012ஆம் ஆண்டில் இந்தியாவில் 23 வயதான மருத்துவ மாணவி ஒருவர் பேருந்தில் வைத்து ஒரு குழுவினரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே. பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றிலேயே இம் மோசமான சம்பவம் இடம்பெற்றது. இது போன்ற சம்பவங்கள் அதிகளவில் ஆசிய நாடுகளில் உள்ள பெண்கள் நாளாந்த வாழ்கையில் எதிர்கொள்ளும் பாரிய சவாலாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 2017ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வொன்று பொதுப் போக்குவரத்தின் போது 90 வீதமான இலங்கைப் பெண்கள் வன்முறைகளை எதிர்கொள்வதாகவும் அதில் 4 வீதமான பெண்களே பொலிஸில் முறையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் இலங்கை பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகம் இடம்பெறும் நாடுகளில் முன்னிலையில் இருப்பதாகக் குறிப்பிடுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் மனிதம் மரித்துக் கொண்டிருக்கிறது என்பதற்குச் சிறந்த உதாரணங்கள் ஆகும். இலங்கையில் பெரும்பாலானோர் பொதுப் போக்குவரத்துக்களையே பயன்படுத்துகின்றனர். நாம் சந்திக்கின்ற பெண்களில் பொதுப்போக்குவரத்துக்களைப் பயன்படுத்துகின்ற அனைவருமே பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை நாளாந்தம் சந்திப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

பெண்களுக்கெதிரான பாலியல் ரீதியான வன்முறைகள், வார்த்தைகள் மூலமான துஷ்பிரயோகங்கள், தவறான தொடுதல்கள், சைகைகள், எரிச்சலூட்டும் நடத்தைகைள் போன்றவற்றவை “இலங்கைத் தண்டனைச் சட்டக் கோவையில் உள்ள 1995ஆம் ஆண்டு 22ஆம் இலக்க திருத்தச் சட்டத்தில் 345ஆவது சரத்தில் தண்டிக்கப்படக்கூடிய குற்றவியல் குற்றங்கள் ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளன.” இவ்வாறான பெண்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆகக்கூடியது 5 வருட சிறைத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல் 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைப் பிரகடனத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை அகற்றல் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் பிரயாணம் செய்வதற்கான உரிமை பெண்களுக்கு உண்டு.

இவ் ஆய்வு வெளி மாவட்டங்களில் பணிபுரியும் பெண்கள், நாளாந்தம் பொதுப் போக்குவரத்துக்களில் தொழிலுக்குச் செல்கின்ற பெண்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவிகள் போன்றோரிடம் மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அன்றாட பயணங்களின் போதும் வார இறுதிநாட்களில் சொந்த ஊர்களிற்குப் பயணிக்கும் போதும், மேற்படிப்பிற்காக கொழும்பு, கண்டி போன்ற நகரங்களுக்குப் பயணிக்கும் போதும் இவ்வாறான சவால்களைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டனர். இவ்வாறான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் பெண்களின் பயணங்களை நரகமாக்கிக் கொண்டிருப்பதுடன் அவற்றை மட்டுப்படுத்துகின்றன என அவர்கள் குறிப்பிட்டனர்.

அனுதர்ஷி லிங்கநாதன்