படம் | rightsnow

அமெரிக்காவின் மூன்றாவது பிரேரனை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிறிதொரு விவாதத்தை தொடக்கி வைத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா, பின்னர் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இயங்கிவந்த எழிலன் என்னும் புனைப்பெயருடைய வேலாயுதம் சசிதரனின் மனைவியான அனந்தி, வடக்கு மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளை பெற்ற ஒருவர். நீதிபதி விக்னேஸ்வரனிலும் பார்க்க அனந்தி அதிக விருப்பு வாக்குகளை பெறுவார் என்றே அப்போது எதிர்பார்க்கப்பட்டது. அனந்தியின் பின்னால் இருந்து செயற்பட்டவர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது. ஆனால், இறுதியில் அவ்வாறு நிகழவில்லை. ஈழத் தமிழ் சூழலில் பெண்கள் ஜனநாயக அரசியலில் பங்குகொள்வது என்பது, முயல்கொம்பாக இருக்கின்ற நிலையில் அனந்தியின் வருகை சமூகமாற்றத்தை விரும்பும் பலராலும் பெரிதும் வரவேற்கப்பட்டது.

ஆனால், ஆரம்பத்திலிருந்தே அனந்தியின் செயற்பாடுகள் தன்னை ஒரு ஆளுமைமிக்க அரசியல் தலைவராக உருப்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் முனைப்பை வெளிப்படுத்தி நிற்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே, அனந்தியிடம் தன்னை புலிகளின் தொடர்ச்சியாக காண்பிக்க வேண்டுமென்னும் முனைப்பே தென்பட்டது. இதனை அவர் சுயமாக செய்திருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், அதுவரை அவர் எந்தவொரு அரசியல் நாட்டமுமின்றி, கணவன்தான் எல்லாம் என்னும் மனநிலையில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு சராசரி தமிழ் பெண். இவருக்கு எங்கிருந்து வந்தது இப்படியொரு துனிவு என்று அனைவரும் வியக்கும் வகையில் அவரது பின்னைய செயற்பாடுகள் அமைந்திருந்தன. வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் பதவியேற்பின் போது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பொங்குதமிழ் நிகழ்வுகளின்போது உடுத்தும் சிகப்பு – மஞ்சள் கலவையிலான சேலையணிந்து வந்திருந்தார். அதன் மூலம் தான் எவ்வாறிருக்கப் போகிறேன் என்பதையே அவர் மறைமுகமாக உணர்த்தியிருந்தார். ஆனால் இதுவும் அவரது சொந்த புத்தியிலிருந்து வந்ததுதான் என்பதை நம்புவது கடினமானதாகும். ஏனெனில், அனந்தியின் அரசியல் பிரவேசம் திடீரென நிகழ்ந்த ஒன்று. இவ்வாறு திடீரெனப் புகுந்த ஒருவர், அதுவும் மாகாணசபை உறுப்பினர் என்னும் தகுதிநிலையை மட்டுமே வைத்திருக்கும் ஒருவர், சர்வதேச விசாரனை பற்றியெல்லாம் பேசுகின்றார் என்றால், அதற்கு ஒரு பின்புலம் நிட்சயம் தேவை. இத்தகையதொரு பின்புலத்தில்தான், அவர் தற்போது கூட்டமைப்பில் இரா.சம்பந்தனுக்கு அடுத்து, வெளிவிவகாரங்களை கையாளும் அதிகாரமுள்ள தமிழரசு கட்சியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் நேரடியாக மோதும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார். உண்மையில் இது அனந்தியின் ஆற்றலுக்கும் தகுதிநிலைக்கும் அப்பாற்பட்ட ஒரு செயற்பாடு. இதனை அனந்தி தனித்து செய்திருப்பார் என்று நம்பலாமா?

கடந்த 6.13.2014 அன்று, யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சுமந்திரன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் தன்னை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை என்று அனந்தி தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி 13இல் ஜெனிவாவில் 18 இராஜதந்திரிகளுடனான சந்திப்பொன்று நடந்ததாகவும், இதன் போது, போர்குற்ற விசாரனை தொடர்பாகவோ, இனப்படுகொலை தொடர்பாகவோ பேசவில்லை என்றும், என்னையும் பேச அனுமதித்திருக்கவில்லை என்றும் அனந்தி மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருக்கின்றார். இது சாதாரண மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால், இது பற்றி இணையத்தளம் ஒன்றிற்கு (http://www.malarum.com/) பதிலளித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அனந்தியின் கருத்துக்கள் முற்றிலும் அரசியல் சுயலாபத்திற்கானது என்று தெரிவித்திருக்கின்றார்.

சுமந்திரன் மேலும் குறிப்பிடும் போது, அமெரிக்கப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ள முக்கியமான தருணத்தில் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ள அரசியல் சுயலாபக் கருத்து, ஜெனீவாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உண்மையில் இத்தருணத்தில் நாம் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். எமக்குள் வேற்றுமை கொள்ளக்கூடாது. இலங்கை தொடர்பான பிரேரணையை மேலும் காத்திரமாக்கி நிறைவேற்ற வைக்க வேண்டும். இதை அனைவரும் உணர்ந்து செயற்படவேண்டும். கடந்த மாதம் நடுப்பகுதியில் 3 நாட்கள் அனந்தி ஜெனீவாவில் இருந்தார். நானும் இருந்தேன். அப்போது ஜெனீவாவிலுள்ள பலநாட்டு இராஜதந்திரிகளுடன் நாம் பேச்சு நடத்தினோம். இந்தச் சந்திப்புக்கள் குறித்து அனந்தி நாடு திரும்பியவுடன் பத்திரிகைகளுக்கு செய்திகளையும் பேட்டிகளையும் வழங்கியிருந்தார். அப்போது தான் பல நாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்து தமிழர் பிரச்சினைகளை எடுத்துக்கூறினார் எனத் தெரிவித்திருந்தார். அத்துடன், சர்வதேச விசாரணைப் பொறிமுறை தேவை என்றும் அவர் கூறியிருந்தார். இது பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தன. மேலும் கனடா, அமெரிக்க நாடுகளின் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புக்களில் சர்வதேச விசாரணை தேவை என்ற தொனியில் சுமந்திரன் எம்.பி. கருத்துக் கூறினார் என்றும் – தான் கூறியவற்றை அப்படியே அந்த அதிகாரிகளுக்கு எடுத்து விளக்கினார் என்றும் – தெரிவித்திருந்தார். மேலும், ஜெனீவாவில் மிகவும் கடுமையான பிரேரணை இம்முறை வருவது சந்தேகம் எனத் தான் உணர்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இப்படியான கருத்துகளைத் தெரிவித்திருந்த அனந்தி தற்போது திடீரென அதற்கு முற்றிலும் முரணான கருத்துகளை கூறியிருக்கிறார். ஜெனீவாவில் பல நாட்டு அதிகாரிகள் சந்திப்பில் தன்னைச் சுமந்திரன் எம்.பி. சுதந்திரமாகப் பேச விடவில்லை என்றும் – சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை ஒன்றை வலியுறுத்தவில்லை என்றும் – தெரிவித்திருக்கிறார். இது எனக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் தருகிறது. இவ்வாறு சுமந்திரன் வாக்கு மூலம் அளித்திருக்கின்றார்.

இதில் எவர் சொல்லுவது சரி, பிழை என்பதற்கு அப்பால் முதலில் ஜெனிவாவில் ஒரு அமெரிக்கப் பிரேரணையானது, வாக்கெடுப்பை எதிர்பார்த்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், இது போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களை அனந்தி பகிரங்கமாக பேசியிருக்கக் கூடாது. உண்மையிலேயே சுமந்திரன் அவ்வாறு தன்னை பேச அனுமதித்திருக்கவில்லை எனின், அது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தலைவரும், தமிழரசு கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தனின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்க வேண்டும் அல்லது அனந்தி ஒரு மாகாணசபை உறுப்பினர் என்னும் வகையில், வடக்கு முதலமைச்சருடன் இது பற்றி கலந்துரையாடியிருக்கலாம். மேலும், பெப்ரவரி 13இல் இடம்பெற்ற ஒரு விடயத்தை ஏன் அனந்தி மார்ச் மாதம் வரை காத்திருந்து தெரிவிக்க வேண்டும்? அதனை ஏன் அப்போதே வெளிப்படுத்த முடியாமல் போனது? இங்கு மேற்குறிப்பிடப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அனந்தி, இன அழிப்பு பற்றி சுமந்திரன் ஏதும் குறிப்பிடவில்லை மேலும் என்னையும் பேச அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் கருத்தை உற்றுநோக்கும்போது அது சில சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. சர்வதேச விசாரனை கோரி வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூட இனப்படுகொலை அல்லது இனவழிப்பு போன்ற சொற்கள் நீக்கப்பட்டுள்ளன. அதனை உள்ளடக்குவதற்கு முதலமைச்சர் அனுமதித்திருக்கவில்லை. இது பற்றி எனது முன்னைய பத்திகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். தான் பிரதிநிதித்துவம் வகித்துவரும் வடக்கு மாகாணசபையில், தன்னையும் உள்ளடக்கி நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ளடங்காத ஒரு விடயம் குறித்து ஏன் சுமந்திரன் பேசவேண்டுமென்று அனந்தி எதிர்பார்க்கின்றார்? இதுவும் அனந்தியின் குற்றச்சாட்டுக்கள் குறித்து சந்தேகத்தை எழுப்புகின்றது.

ஒட்டுமொத்தமாக நோக்கினால், தற்போது அனந்தி ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சையால் அரசே அதிக நன்மையை அடைந்துள்ளது. அமெரிக்கப் பிரேரணையை தாங்கள் ஏற்கப் போவதில்லை என்று அரசு அறிவித்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், கூட்டமைப்பில் உள்ளவர்களும் அத்தகையதொரு கருத்தை வெளிப்படுத்துவதன் மூலம் தமிழர் தொடர்பில் அனுதாபமுள்ள சர்வதேச தரப்பினர் குழப்பமடையலாம். ஆனால், இரா.சம்பந்தன் இது தொடர்பில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றார். இரா.சம்பந்தனின் ஆலோசனையின் பேரிலேயே சுமந்திரன் தன்னுடைய வெளிநாட்டு நிகழ்ச்சிநிரல்களை திட்டமிட்டு வருகின்றார். இத்தகையதொரு சூழலில், சுமந்திரனின் சர்வதேச செயற்பாடுகளை விமர்சிப்பது என்பது இன்னொரு வகையில் கூட்டமைப்பின் அரசியல் வேலைத்திட்டங்களை குழப்புவதாகவே அமையும். கூட்டமைப்பின் வேலைத்திட்டங்களை குழப்புவது யாருக்கெல்லாம் நன்மை? அவ்வாறாயின் அனந்தி போன்றவர்கள் யாருக்காக பணியாற்ற விரும்புகின்றனர்? இன்றைய சூழலில் தீவிர நிலைப்பாடுகளால் எவரெல்லாம் நன்மையடைய முற்படுகின்றனரோ, அவர்கள் அனந்தியின் மேற்படி செயலால் நன்மை அடைந்திருப்பர் என்பதில் ஜயமில்லை. அனந்தி போன்றவர்கள் தன்னைச் சுற்றி நல்ல சக்திகளை திரட்டிக்கொள்வதன் மூலம் மட்டுமே அரசியலில் தனக்கென்று ஒரு இடத்தை அவர் உருவாக்கிக்கொள்ள முடியும்.

யதீந்திரா

DSC_4908