பட மூலம், JungleDragon

உலகின் வனஜீவராசிகள் வளத்தினைப் பாதுகாக்கின்ற நாடுகளுள் முன்னிலை வகிக்கும் நாடு இலங்கையாகும். வனஜீவராசிகள் வளம் தொடர்பிலான கலந்துரையாடலில் முதலில்வரும் தலைப்புக்களை அட்டவணைப்படுத்தினால் “காட்டு யானைகள்” விசேட தலைப்பாக காணப்படும். வலயத்தின் காட்டு யானைகள் (Elephant Maximus) எண்ணிக்கையில் 10% வீதம் இலங்கையில் காணப்படுவதால் காட்டு யானைகளது வாழ்விற்கு எமது நாடு விசேட பங்களிப்பினை பெற்றுக் கொடுத்துள்ளது என்பதனை சுட்டிக்காட்ட முடியும்.

ஆயினும், காட்டு யானைகளின் பரம்பல் மற்றும் மனித சனத்தொகையின் சமநிலையில் படிப்படியாக வீழ்ச்சியடைதலும் இன்னும்பல காரணங்களின் பிரதிபலனாக இந்நாட்டில் யானை-மனித மோதல் உருவாகியுள்ளது. கடந்த ஐந்து வருட காலப்பகுதியினுள் இலங்கையின் 107 பிரதேச செயலகப் பிரிவுகளில் யானை-மனித மோதல் அதிகரித்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. அதன்படி வருடாந்தம் 75-80 மனித உயிர்களும் 170-190 காட்டு யானைகளும் அக்காலத்தில் அழிவடைந்து போவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

வரலாற்றுக் காரணிகள்

யானை–மனித மோதலுக்கு ஏதுவான காரணிகளை ஆராயும் போது முன்வைக்கப்படும் பிரதான கருத்தாவது யானைகள் இயற்கையாக வசிக்கின்ற பிரதேசங்கள் அழிக்கப்பட்டாலும் அதற்கு இணையாக மனித இனத்தின் விருத்தியும் இதற்கான காரணங்களாக கூறப்படுகின்றது. இதனை ஒரு தர்க்கரீதியான விடயமாக எடுத்துப்பார்த்தால் மொத்த நிலப்பிரதேசத்தில் கூடுதலான பகுதி இயற்கை வனாந்தரமாக காணப்பட்டதோடு குறைந்த சனத்தொகை காணப்பட்ட முற்காலத்தில் யானை-மனித மோதல்கள் எதுவும் காணப்படவில்லை. ஆயினும், இந்நாட்டு வரலாற்றுத் தகவல்களை ஆராய்கின்ற போது யானை-மனித மோதலின் வரலாற்று நிலைமையினை அளவு ரீதியாக அறிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் பெரும்பாலான விடயங்களை எழுதி தொகுத்து வைப்பதற்கு இந்நாட்டிற்கு வருகைதந்த வெளிநாட்டு எழுத்தாளர்கள் கூடுதல் கரிசனை காட்டியுள்ளனர்.

இற்றைக்கு சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் (1656இல்) பிலிப்ஸ் பெல்டியஸ் என்ற மதத்தலைவர் இந்நாட்டுக்கு வருகை தந்தபோது இந்நாட்டில் யானைகள் இனமானது கொழும்பு-காலி வரையிலான பாதையின் இருமருங்கிலும் பரவலாக இருந்ததனை உறுதிப்படுத்துகின்றார். ஒவ்வொரு வருடமும் காட்டு யானைகளால் பெரும்பாலான மனித உயிர்கள் அழிக்கப்பட்டு பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாக பெல்டியஸின் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் காட்டு யானைகள் தொடர்பான ஆய்வாளராகிய எமர்சன் டெனன்ட் என்பவர் “The wild Elephant & The Methods of Capturing & Taming it in Ceylon” என்ற தனது நூலில் வாணிப பெருந்தோட்ட கைத்தொழிற்துறையில் காணப்படுகின்ற மாபெரும் தடையானது யானைகள் என்றும், இதன் காரணமாகவே காட்டு யானைகளை கொன்றொழிப்பதற்கு எந்தவொரு நபருக்கும் அனுமதி மாத்திரமன்றி சன்மானத் தொகையும் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார். 1851-56 வரையான காலப்பகுதிகளில் அந்த அனுமதியினைக் கொண்டு காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான பிரதேசத்தில் சுமார் 2,000 யானைகள் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, ஆதிகால இலங்கை இனச் சமூகத்தின் பழக்க வழக்கங்கள் மற்றும் இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட முக்கியமான உண்மைத்தரவுகளை உள்ளடக்கியதான விரிவான அறிக்கையாக கருதப்படக்கூடிய ரொபர்ட் நொக்ஸ் என்பவருடைய “An Historical Relations of the Island Ceylon in the East Indies” (1681) என்ற நூலில் கிராமவாசிகளுக்கும் காட்டு யானைகளுக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகின்றார்.

மேற்படி வரலாற்றுச் சான்றுகளால் வனப்பரம்பல் மற்றும் மனித இனத்திற்கும் இடையில் சமநிலை வீழ்ச்சியடைந்தமை யானை – மனித முரண்பாட்டுக்கு ஏதுவாகிய ஒரே காரணியல்ல என்ற விடயம் தெளிவாகின்றது. வனசீவராசிகள் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட “Multi-Disciplinary Approaches to control the Human-Elephant Conflict in Sri Lanka” என்ற அறிக்கையினூடாக காட்டு யானைகளது வாழ்விட பிரதேசங்கள் குன்றிப் போதல், முறையான நிலப் பயன்பாட்டுத் திட்டங்கள் இன்மை, அபிவிருத்தி முன்மொழிவுகளில் அடையாளம் காணப்பட்ட காட்டு யானைகளது பாதுகாப்பிற்கான உபாயமார்க்கங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமை மற்றும் மக்களது ஒத்துழைப்பு போதாமை ஆகிய மேலதிகக் காரணிகள் பலவும் இந்த நாட்டின் யானை – மனித முரண்பாட்டுக்கு ஏதுவாகிய அடிப்படை காரணிகளென அடையாளம் காணப்பட்டுள்ளது.

எஹெட்டுவெ மோதல்

தலதா மாளிகை ஊர்வலம் மற்றும் கதிர்காமக் கந்தன் ஆலய திருவிழா காரணமாக இந்நாட்டு நகர வீதிகளில் மத்திய தர வர்க்கத்தினர் வருடாந்தம் அனுபவிக்கும் கலாசார திருப்தியின் உச்சமாக யானைகள் தொடர்பான கலந்துரையாடல் பாராட்டத்தக்கதாகக் காணப்படுகின்றது. ஆயினும், இந்த நாட்டின் எல்லைப்புற பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு அதனை அனுபவிப்பதற்குறிய உரிமையை இழந்திருப்பதானது யானைகள் தொடர்பாக “மரணப் பொறி” என்பதைத் தவிர அவர்களது அன்றாட வாழ்வில் வேறெந்த மீதத்தையும் அது கொண்டிருக்காமையே காரணமாகின்றது.

வடமேல் மாகாணத்தின் எஹெட்டுவெவ மற்றும் கல்கமுவ பிரதேச செயலகப் பிரிவுகள் அடிக்கடி யானை – மனித மோதலுக்கு ஆளாகின்ற பிரதேசங்களாகும். இந்தப் பிரதேசங்களின் மக்களது மேற்கூறிய கலாசார உரிமைகள் வருடாந்தம் இழக்கப்பட்டு வருகின்ற அதேவேளை அதற்கு மேலதிகமாக யானைகள் காரணமாக மரண வாயிலில் வாழ்கின்ற வாழ்க்கையாக அவர்களது அன்றாட வாழ்க்கையின் ஒரு பாகம் மாறிவிட்டது.

இலங்கையில் காட்டு யானைகளது மோதலைக் கட்டுப்படுத்த மின்சார வேலி அமைப்பது பிரதானமான செயன்முறையாகும். ஆயினும், முறையான ஆராய்ச்சிகளின்றி சிலரது தனிப்பட்ட தேவைப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக யானை வேலி அமைத்தலானது முரண்பாட்டினை அதிகரித்துள்ளது என்ற விடயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேற்கூறியதைப் போன்றே தமது தனிப்பட்ட தேவைப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ள எஹெட்டுவெவ, நாகொலகனே ரஜமகா விஹாரையின் விஹாராதிபதி தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் அமைத்துக் கொண்ட மின்சார வேலியின் காரணமாக நாகொலகனெ, எஹெட்டுவெவ மற்றும் கல்கமுவ ஆகிய பிரதேசங்களைச் சுற்றிலுமுள்ள மக்களுக்கு அதுவரை காலமும் யானைகளால் உணரப்பட்டு வந்த மரண வேதனை மேலும் தீவிரமடைந்துள்ளது.

2008, 1553 இலக்கமுடைய வர்த்தமாணி அறிவித்தல் (2008.06.06ஆம் திகதி வெளியிடப்பட்ட) மூலமாக நாகொலகனே புராண ரஜமஹா விகாரையானது குருணாகல் மாவட்டத்திற்குரிய தொல்பொருள் பெறுமதியுடைய ஒரு விகாரையாக பெயரிடப்பட்டுள்ளது. விகாராதிபதி, யானை வேலி அமைப்பதானது தாம் வாழ்ந்து வருகின்ற விகாரையின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டே என பார்க்கின்ற நபர்களுக்கு தோனுகின்ற போதிலும் அது உண்மையான நோக்கமல்ல. உண்மையான காரணம் யாதெனில் விஹாரைக்கு அண்மையில் காணப்படுகின்ற காட்டுப் பிரதேசத்தின் 20 ஏக்கர் நிலத்தை முழுமையாக வெட்டியழித்து மேற்கொள்ளப்பட்டுள்ள “மாந்தோப்பு” யானைகளிடமிருந்து அழிவடையாது பாதுகாப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. மிகச் சரளமாக கூறுவதாயின், எதிர்காலத்தில் பெறக்கூடிய பொருளாதார பிரதிபலன்களை கவனத்திற் கொண்டு இம் மாபெரும் வனாந்தரங்கள் அழிக்கப்பட்டு, இன்னோரான பல பிரச்சினைகள் சுற்றியுள்ள மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

எஹெட்டுவெ பிரதேசமானது ஒப்பீட்டு ரீதியில் இலங்கையில் கூடுதலாக காட்டு யானைகள் வாழும் பிரதேமாகவே கருதப்படுகின்றது. சுமார் 200 காட்டு யானைகள் தமது உணவுத் தேவையின் நிமித்தம் அன்றாடம் பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள காட்டுப்பகுதியில் அலைந்து திரிவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் (Multi-Disciplinary Approaches to control the Human-Elephant Conflict in Sri Lanka) என்ற அறிக்கையினூடாக கூறப்பட்டுள்ளது. பலுகடவல மற்றும் அதரகல்லே குளங்கள் இரண்டும் இந்த பிரதேசங்களுக்கு எல்லையில் அமைந்திருப்பதால் காட்டு யானைகளது வாசஸ்தலங்கள் மற்றும் உணவுப் பிரதேசங்களாக இந்தப் பகுதியைக் கருத்திற் கொள்ள முடியும். அழிக்கப்பட்டுள்ள காட்டுப் பிரதேசமானது வன அடர்த்தியால் சூழப்பட்ட இயற்கை எழிலினைக் கொண்ட பிரதேசம் என்பதால் அதன் எழில்மிகு தோற்றம் இன்று செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மாந்தோப்பிற்காக ஒடுக்கப்பட்டுள்ளது. எஹெட்டுவெவ பிரதேசமானது நீர் மூலங்கள் குறைந்த பிரதேசம் என்பதனால் அழிவின் தாக்கம் வீடுகள் வாரியான நீர் மூலங்கள் வற்றிப் போவதற்கு ஏதுவாக அமையலாம். எனவே எவ்வகையான குறிக்கோளுடன் சரி இவ்வகையான பிரதேசங்களில் 20 ஏக்கர் அளவிலான பாரிய பிரதேசமொன்று அழிக்கப்பட்டிருப்பது என்பது யானை – மனித மோதலை அதிகரிக்கின்ற அதேவேளை, யானைகளதும் மனிதர்களதும் வாழ்க்கையில் மரண அபாயத்தை நெருங்க வைக்கும் செயலாகவும் குறிப்பிட முடியும்.

இந்தப் பிரதேசத்தின் காட்டு யானைகளது எண்ணிக்கை மற்றும் அன்றாட நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணித்து, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கலாநிதி பிரிவிராஜ் பிரணாந்துவால் தயாரிக்கப்பட்ட (Multi-Disciplinary Approaches to control the Human-Elephant Conflict in Sri Lanka) அறிக்கையில் கூறப்படுகின்ற அடிப்படையில், இந்தப் பிரதேசத்தில் காட்டு யானைகளது எண்ணிக்கை மற்றும் அவையுடைய உணவு தேவைப்பாட்டுடன் ஒப்பிடுகையில் இம் மாபெரும் அளவிலான காடழிப்பதானது நேரடியாக யாட்டு யானைகளது உணவு பயன்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவும் காட்டு யானைகளது வருடாந்த இடமாற்றப் பயண செயற்பாட்டினை மாற்றத்திற்குட்படுத்தும் மற்றும் யானைகள் அண்மித்த கிராமங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு ஏற்படுவதால் பாரியளவில் யானை மனித மோதல்களுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக என்றும் தெரிவிக்கின்றார். தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆலோசனையின் படி உரிய பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் யானை வேலி அமைக்கப்படடிருப்பினும் அதனைப் பராமரிக்கும் பொறுப்பு கிராமவாசிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் அதிகப்படியானோர் விவசாயமே தமது வாழ்க்கை என்று வாழ்ந்து வருகின்ற குறைந்த வருமானம் பெறுகின்ற தரப்பினராவர். எனவே, மண்வெட்டியையும் வீச்சுக் கத்தியையும் கொண்டு அன்றாட உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்ற வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமவாசிகளிடம் யானை வேலியை பராமரிப்பதற்கும் தமது வாழ்க்கை மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் இயலுமா என யாரால் தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

சட்டத்திற்கு அப்பால்

எஹெடடுவெவ சுற்றாடல் பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலாளர் விஜே குமாரபால அவர்கள் 2016.12.21ஆம் திகதி தற்போதைய அழிவின் சட்டரீதியான பின்னணியை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றினை முன்வைக்கின்றார். அதற்குக் கிடைக்கின்ற பதில் கடிதத்தில் பிரச்சினைக்குரிய காடழிப்பிற்கு எந்த வகையிலும் சட்டரீதியான அடிப்படை இல்லையென்றும் அவ்வாறான காடழிப்பினை மேற்கொண்டு மின்சார வேலியொன்றினை அமைப்பதென்பது கண்டிப்பாக யானை மனித மோதலை அதிகரிக்குமெனவும் குறிப்படப்பட்டுள்ளது. அதன்படி வரையறுக்கப்பட்ட சுற்றாடல் மன்றத்தின் மற்றும் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள மக்களையும் கொண்டதாக சுற்றாடல் பாதுகாப்பு கூட்டமைப்பின் மத்தியஸ்தத்தினூடாக நாகொலகனே விகாராதிபதி அவர்களது தான்தோன்றித்தனமான செயற்பாட்டினைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு விண்ணப்பமொன்று (CA (Writ) No 243/ 2017) முன்வைக்ப்பட்டது.

எவ்வாறெனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த வழக்கின் அறிவிப்பு வெளியிடுவதனை விலக்களிக்கப்பட்டதன் காரணமாக வரையறுக்கப்பட்ட சுற்றாடல் மன்றம் உட்பட மனுதாரர்கள் கௌரவ உச்ச நீதிதமன்றில் அனுமதி கோரும் விசேட மனு விண்ணப்பமொன்றினை (SC (SPL) LA 289/ 2017)   முன்வைத்த அதேவேளை 2018 ஆகஸ்ட் 01ஆம் திகதி இந்த வழக்கு விசாரணையினைத் தொடர்ந்து இந்த வழக்கினை மீண்டும் விசாரைண செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு கட்டளையிட்டுள்ளது. அதன்படி மிக அண்மித்த காலப்பகுதியில் ஏற்படவிருந்த மாபெரும் அழிவு குறித்து சட்டத்துறையினது கவனம் செலுத்தப்பட்டமையானது நன்மையான ஒரு நிலைமையாகவே கருதப்படுகின்றது.

சர்வதேச சுற்றாடல் சட்டத்திற்கு பொருள் சேர்க்கும் வகையில் வனாந்தர பிரதேசமொன்றினை அழித்தமையினை சுட்டிக்காட்டாது, இயற்கை எழிலினைக் கொண்டதொரு நிலப்பிரதேசத்தினை அழித்து செயற்கை மாந்தோப்பொன்றின் மூலமாக சுற்றாடல் சமநிலையினை மாற்றியதனையும் இங்கு காடழிப்பாகவே கருத வேண்டும். அதன்படி விகாராதிபதியின் செயற்பாடானது தான்தோன்றித்தனத்திற்கு வித்திடுவது மாத்திரமன்றி தேசிய சுற்றாடல் சட்டம், விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம், தொல்பொருள் கட்டளைச் சட்டம் மற்றும் விகாரைகள் தேவாலயங்கள் சட்டம் வரையில் காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகள் யாவற்றையும் உதாசீனம் செய்த ஒன்றாகும்.

இதன்போது தமது குறுகிய பொருளாதார தேவைப்பாட்டினை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சித்தமையினூடாக விகாராதிபதி தமது சுய விருப்பங்களுக்காக எஹெட்டுவெவ பிரதேச சாதாரண மக்களது வாழ்க்கையின் அடிப்படை தேவைப்பாடுகளுக்கிடையில் முரண்பாட்டு நிலைமையினை தோற்றுவித்திருப்பது தெளிவாகின்றது. இவ்வாறான பிரச்சினைக்குரிய செயற்பாட்டின் எதிர்கால விளைவுகளை காண்பதற்கு பாண்டித்திய திறமைகள் அவசியமில்லையெனினும் கடவுளின் பார்வையால் ஆகக் குறைந்த அறிவினையாவது நாகொலகனே விகாராதிபதி கொண்டிருப்பது அவசியமே. அதனைத் தவிர இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது நம் அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டிருக்கும் சட்டரீதியான கடமையுமாகும் என்ற காரணத்தால் இந்தப் பிரச்சினை தொடர்பில் மிகவும் கரிசனையாக இருப்பதும் அவசியமே.

தனுஷ்க சில்வா

අලිවැටෙන් ආරක්‍ෂාව පන්සලට විතර ද? ගමට නැද්ද?” என்ற தலைப்பில் விகல்ப தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.