பட மூலம், Marisa de Silva

“அல்லாவிற்கு அஞ்சுங்கள்! உங்களது சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அநீதியை ஏற்படுத்தாதீர்கள்.” ஜூலை 28, 2018 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட  முஸ்லிம் ஆண்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்த்திருத்த அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் (ACJU- மற்றொரு ஆண்களை மட்டும் உள்ளடக்கிய குழு) கலந்துரையாடுவதற்கு எதிர்புத் தெரிவித்தவாறு நாடாளுமன்றிற்கு அருகில் நின்றிருந்த பல பெண்கள் தமது கைகளில் ஏந்தியிருந்த பதாகைகளிலிருந்த வேண்டுகோள் இதுவே. அங்கு நின்றிருந்த பல ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் பெண்களுக்கு என்ன நிகழக்கூடும் என்று தெரிந்திருந்தது. ஏனெனில், அவர்கள் அதானால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பலருக்கு அதுவே முதன்முறை – முதன்முறையாகப் பொதுவில் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர், முதன்முறையாக இஸ்லாம் தொடர்பான எல்லாவற்றுக்கும் ஒரே பாதுகாவலராகவும், ஒரே நடுவராகவும் தம்மைத் தாமே அறிவித்துக்கொண்ட ஒரு மத அமைப்பினைக் கேள்விக்குட்படுத்துகின்றனர்.

இவ்வருடம் ஜனவரியில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்த அறிக்கையானது நீதியமைச்சர் கௌரவ தலதா அத்துக்கோரளவிடம் கையளிக்கப்பட்டது. பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்டமைந்த குழுவானது ஒன்பது வருடங்களாக ஆழ்ந்து ஆராய்ந்த பின்னரேயே அவ்வறிக்கையை இறுதியாகத் தயாரித்திருந்தது. நீதியமைச்சினால் அதிகாரபூர்வமாகத் தமது இணையத்தளத்தில் அவ்வறிக்கை பிரசுரிக்கப்படுவதற்கு ஏறத்தாழ ஆறு மாதங்கள் எடுத்தது.

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினைச் சீர்த்திருத்துவது தொடர்பான பரிந்துரைகளென வரும்போது அக்குழுவினாற் பூரண கருத்தொற்றுமையை அடைய முடியவில்லை. குழு இரண்டாகப் பிளவுபட்டதுடன், இரு பிரிவுகளும் இருவேறு பரிந்துரைகளை அளித்திருந்தன. அதனைத் தொடர்ந்து யாருடைய பரிந்துரைகள் ஷரீஆ கொள்கைகள் மற்றும் இஸ்லாமியச் சட்டம் என்பவற்றுக்கு அமைவாக உள்ளன என்பது தொடர்பில் பல விவாதங்கள் நடந்தேறின. குழுவினால் பூரண கருத்தொற்றுமையை அடைய முடியவில்லை என்றபோதும், சில அதிமுக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் பூரண உடன்பாட்டைக் கொண்டிருந்தனர். உதாரணமாக நிபந்தனைக்குட்பட்ட பலதாரமணம், திருமணத்திற்குப் பெண்களின் சம்மதத்தை நாடுதல், ஒருதலைப்பட்சமான தலாக்கிற்குக் கட்டாய இழப்பீடு போன்ற விடயங்கள் தொடர்பாக இணக்கப்பாடுகள் காணப்பட்டபோதிலும், மறுசீரமைப்புக் குழுவானது கருத்தொற்றுமையை அடையத் தவறிய நான்கு முக்கிய விடயங்கள் பின்வருமாறு:

  1. பால்யதிருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் இந்நாட்டின் ஏனைய பெண்களைப்போல் திருமணத்திற்கான வயதெல்லையை பதினெட்டாக நிர்ணயித்தல்.
  2. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளில் பெண்களுக்குச் சம பிரதிநிதித்துவம் வழங்கல். குறிப்பாகப் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும்.
  3. முஸ்லிம் திருமணங்களின் கட்டாயப் பதிவு.
  4. உட்பிரிவுகள் அல்லது ‘மதகப்’ தொடர்பான குறிப்புகளை நீக்குதல். இதன் மூலம் எல்லா விடயங்களும் “முஸ்லிம் சட்டத்தின்” கீழ்வரும் என்பதுடன் காதிமார் வாரியம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பன தமது கட்டளைகள் மற்றும் முடிவுகளை மேற்கொள்ளும்போது, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய கருத்தியல் கோட்பாடுகளும் அபிப்பிராயங்களும் கவனத்திலெடுக்கப்படுதல்.

குழுவின் தலைவர் (நீதிபதி சலீம் மர்சூப்) உட்பட ஒன்பது பேரை உள்ளடக்கிய பிரிவு தமது சீர்திருத்தப் பரிந்துரைகளினோர் பகுதியாக இவ்வனைத்து மாற்றங்களையும் பரிந்துரைத்துள்ளது. ஆனால், ACJU தலைவர் எம். ஐ. எம். ரிஸ்வியின் தலைமையிலான குழுவின் மற்றைய பிரிவு இம்முக்கிய விடயங்கள் தொடர்பில் முரண்படுவதோடு, பழமைவாதப் பரிந்துரைகளுடன் கூடிய, குறிப்பாக ஹாபி மதாப் நிலைப்பாட்டை எடுக்கும் எட்டுப் பக்க அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளது. புனித குர்ஆன் ஆனது மதத்தைப் பிரிவுகளாகப் பிளவுபடுத்துவதையும், பெண்களிடமிருந்து சமத்துவம், நீதி மற்றும் நியாயமான செயற்பாடு என்பவற்றைப் பறித்தெடுப்பதையும் தடை செய்கிறது.

ACJU உள்நுழைவு

இச்சூழலில் உரையாடலில் தனியாதிக்கத்தைச் செலுத்துவதற்கான ACJUஇன் முயற்சிகள் கவலையளிக்கின்றன. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினைச் சீர்த்திருத்துவதைத் தொடர்ந்தும் எதிர்த்துவரும் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இவ்வமைப்பிற்கு உதவி வருகிறார். அவரது எதிர்ப்பானது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் ஒரு தெய்வீக நியதியென்பதால் அதில் மாற்றங்களை ஏற்படுத்தவியலாது எனும் போலிவாதத்தினை அடிப்படையாகக் கொண்டது. மாறாக, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது எமது காலனித்துவ மரபினோர் பகுதியாகும். இன்றைய இலங்கை முஸ்லிம்களின் யதார்த்தத்தை அது இன்று பிரதிபலிக்கவில்லை என்பதுடன். உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் சமூகங்கள் மற்றும் நாடுகளில் முஸ்லிம் தனியாள் சட்டப் பொருட்கோடல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களையும் அது பிரதிபலிக்கவில்லை. 1770ஆம் ஆண்டில் டச்சு ஆட்சியின்போது, பத்தாவியா (இன்றைய இந்தோனேஷியா) இலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவாகம் மற்றும் விவாகரத்துத் தொடர்பான சட்டக்கோவையை அடிப்படையாகக் கொண்டே இலங்கையின் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் உருவானது. 1806 மற்றும் 1951இற்கிடையில் இச்சட்டக்கோவையானது சட்டத்தொகுப்பு, மீளாய்வு மற்றும் மாற்றியமைப்பு என்பவற்றை உள்ளடக்கியதோர் செயன்முறைக்கு உட்படுத்தப்பட்டது. எனவே, அது ஷரீஆவின் சில அம்சங்களினதும், அப்போது நடைமுறையிலிருந்த சம்பிரதாயங்களினதும் கலவையாகும். முரண்நகை என்னவெனில், இன்று முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது ஷரீஆ நியதிகளுக்கு முரணான அம்சங்களைக் கொண்டுள்ளது. அதற்கான ஒரு உதாரணமாகத் தற்போது இலங்கை முஸ்லிம்களினால் பின்பற்றப்படும் கைக்கூலி (மணப்பெண் தரப்பினால் மணமகனுக்கு அளிக்கப்படும் சீதனம்) இனைக் குறிப்பிட முடியும். சில இஸ்லாமியக் கருத்தியற் கோட்பாடுகளின்படி  கைக்கூலியானது ஹராம் ஆகும். அதாவது அது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டவொன்று.

2009இல் அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொட, இப்போதைய நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள கொண்டிருக்கும் அதே அக்கறைகளையே கொண்டிருந்திருப்பார். அவர் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினை மதத்தினால் அடையாளப்படுத்தப்பட்டவோர் சமூகத்தின் பிரச்சினையாகவே பார்த்திருப்பார். எனவே, அவர் பெரும்பாலும் இஸ்லாமிய அறிஞர்கள், சட்டவல்லுநர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளையும், இரு ACJU உறுப்பினர்களையும் (தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்) கொண்டமைந்த குழுவொன்றை, மதச் சட்டகவமைப்பிற்குட்பட்டு சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கு நியமித்தார். அவர்கள் சரியாக அதைத்தான் செய்துள்ளனர். 313 பக்க அறிக்கையும், தொகுதி 02 இன் வடிவிலமைந்த மற்றுமொரு 302 பக்க இணைப்புகளுமே அதற்குச் சான்று. அது ஏனைய முஸ்லிம் நாடுகளின் சீர்த்திருத்தங்களிலிருந்தும், இஸ்லாமியச் சட்டம் (பிக்) இன் பொருத்தத்தன்மையிலிருந்தும் உதாரணங்களை எடுத்திருப்பதோடு, இங்கும், பிறவிடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சமகால ஆய்வுகளிலிருந்து முடிவுகளை மேற்கொண்டுள்ளது. மிக முக்கியமாக, பல சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகள்,  முஸ்லிம் கல்வியாளர்கள், இஸ்லாமிய அறிஞர்கள், மதக் குழுக்களின் சமர்ப்பிப்புகள்,  மற்றும் அதி முக்கியமாக பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் என்பவற்றையுடைய இணைப்புகளை இவ்வறிக்கை கொண்டுள்ளது.

இவ்வறிக்கையானது நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான ஆதாரபூர்வமான அத்தாட்சிப்படுத்தப்பட்ட வரைபு ஒன்றை அமைச்சர் தலதா அத்துக்கோரளவிற்களிக்கிறது. வரலாற்றின் அநீதிகளைத் திருத்தி, இவ்வுலகின் முழுமையான அர்த்தத்தில், இலங்கையின் முஸ்லிம் பெண்களைக் குடிமக்களாக மாற்றுவதற்கான வாய்ப்பு அவரிடமுள்ளது.

அமைச்சர் அத்துக்கோரள தக்கவாறான வழிமுறைகளைப் பின்பற்றுவாரா? அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் முன்னால் அவர் சமர்ப்பிக்கும் வரைவானது முஸ்லிம் பெண்களதும், சிறுமிகளதும் அக்கறைகளுக்குப் பதிலளிக்குமா? இலங்கையின் அரசியலமைப்பானது இந்நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் சமனான உரிமைகளை அளிக்கிறது என்பதையும், நீதியமைச்சர் என்றவகையில் முஸ்லிம் பெண்கள் அவ்வுரிமைகளிலிருந்து விலக்கப்படாதிருப்பத்தை உறுதிசெய்வது அவரது கடமையென்பதையும் அவர் நினைவிற்கொள்வாரா? முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்த்திருத்தமானது எமது அரசியலமைப்பினால் பேணிப்பாதுகாக்கப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் நீதி தொடர்பான கோட்பாடுகளினால் வழிநடத்தப்படுவதை அவர் உறுதி செய்வாரா? இல்லை ACJUஇன் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து, இலங்கையின் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளை அவர் கைவிடுவாரா?

ஷிரீன் அப்துல் சரூர் 

 


ஆசிரியர் குறிப்பு தொடர்புபட்ட கட்டுரை, “முஸ்லிம் திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படல் வேண்டுமா?”, “முஸ்லிம் பெண்களின் உரிமைகளை யதார்த்தமாக்குவது எப்போது?”