முஸ்லிம்களின் விவாக விவகாரத்துச் சட்டம் தொடர்பான நீதியரசர் சலீம் மர்சூப் ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை மிக்க தரப்பிடமிருந்து எமது சகோதர தளமான கிரவுண்ட்விவ்ஸிற்குக் கிடைத்துள்ளது (அறிக்கையை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்).
முஸ்லிம் தனியாள் சட்டத்தில் காணப்படும் பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான வயதெல்லை, பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படாமை, திருமணத்தின்போது பெண்களின் விருப்பம் கருத்திற் கொள்ளப்படாமை மற்றும் பலதார மணம் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்ற பால்நிலை சமத்துவமற்ற, குறைபாடுகளைக் கொண்ட சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான தேவை முஸ்லிம் சமூகத்திற்குள் எழுந்ததன் காரணமாக 2009ஆம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடவினால் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் மூன்று முஸ்லிம் பெண்கள் உள்ளடங்கலாக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆறு மாதங்களுக்குள் குறித்த சட்டத்தை திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை சமர்ப்பித்திருக்க வேண்டியிருந்த போதிலும், பல வருடங்களுக்குப் பின்னர் அந்தக் குழுவினரின் அறிக்கை நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளையிடம் இந்த வருடம் ஜனவரி 24ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
எனினும், இதுவரை குறிப்பிட்ட அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை.
அறிக்கை, காதி நீதிமன்றத்தின், காதி நீதிபதியின் தரத்தை விஸ்தரிப்பது, வலுப்படுத்துவது உட்பட பல விடயங்கள் தொடர்பில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. முஸ்லிம் விவாக விவகாரத்து ஆலோசனைச் சபையை சீர்திருத்தம் செய்வது, காதிகளாகப் பெண்களை நியமிப்பது மற்றும் முஸ்லிம் விவாக விவகாரத்து ஆலோசனைச் சபைக்கு பதிவாளர்களாக – ஆலோசகர்களாக – மதிப்பீட்டார்களாக பெண்களை நியமிப்பது, திருமணங்களைப் பதிவுசெய்வது, திருமண வயதைப் பதிவுசெய்வது, பலதார மணம், விவகாரத்து மற்றும் சாட்சிகளாக சட்டத்தரணிகள் சமூகமளிப்பது உட்பட பல விடயங்கள் குறித்து குறிப்பிட்ட அறிக்கை பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
முஸ்லிம் விவாக விவகாரத்து சட்டத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ‘மாற்றம்’ பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக “நீதியைத் தேடும் பெண்கள்” என்ற தலைப்பில் இந்தச் சட்டத்தில் காணப்படும் குறைப்பாட்டால் பெண்கள் எதிர்நோக்கிவரும் இன்னல் குறித்து தொடர்ச்சியாக நேர்க்காணல்களைப் பதிவுசெய்துவருகிறது. இந்த நேர்க்காணல்களில், பராமரிப்புச் செலவை சரிவர கணவர் தராததால் பிள்ளைகளுடைய தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியாமல் தவிப்பதாகவும், விவாகப் பதிவுச் சான்றிதழ்கள் இல்லாமல் பாடசாலை செல்லக்கூடிய வயதில் இருந்தும் பிள்ளைகளைச் சேர்க்க முடியாத நிலை காணப்படுகிறது என்றும் பெண்கள் கூறுகிறார்கள். கணவர் வாழும் பகுதியில்தான் வழக்கு தொடரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் பல கிலோமீற்றர்கள் பயணித்து, கையிலிருக்கும் பணத்தையும் செலவழித்துவிட்டு வெறும் கையோடு வீடுதிரும்புவதாகவும் ‘மாற்றத்திற்கு’ பெண்கள் கூறியிருக்கிறார்கள். வழக்கு தொடர்பான ஆவணங்கள் காணாமல்போயுள்ளதாக காதிநீதிபதிகள் கூறி தங்களைத் தொடர்ந்து வீட்டுக்கும் காதிநீதிமன்றத்திற்குமாக அலைவைப்பதாகவும், காதி நீதிமன்றத்தில் ஆண்கள் மட்டுமே பங்கெடுத்திருப்பதால் தாங்கள் எதிர்நோக்கிய சில பிரச்சினைகளைக் கூட கூறமுடியாத ஒரு நிலை காணப்படுவதாகவும் சில பெண்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்த நிலையில் வெளியிடப்பட்ட நீதியசர் சலீம் மர்சூப் அறிக்கை தொடர்பில் முரண்பாடுகளும் கருத்துவேறுபாடுகளும் குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் காணப்பட்டதையும் அறிக்கை உறுதி செய்துள்ளது.
நீதிபதி சலீம் மர்சூப் குழுவினர் பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
- திருமணப் பதிவை திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும்.
- காதி முறையை நீதிமன்றத்தின் அளவிற்கு தரமுயர்த்தவேண்டும்.
- முஸ்லிம் தனியாள் சட்டங்கள் குறித்து சிறந்த அறிவைக் கொண்ட முஸ்லிம் சட்டத்தரணிகள் இவற்றின் உறுப்பினர்களாக விளங்கவேண்டும். இவர்கள் நீதிச்சேவை ஆணைக்குழு முன்வைத்துள்ள தராதரங்களை கொண்டிருக்கவேண்டும்.
சில விடயங்கள் ஏனையவற்றை விட சர்ச்சைக்குரியனவாக காணப்பட்டன. காதி முறைக்குள் சமமான பிரதிநிதித்துவம் காணப்படவேண்டும் என்ற வேண்டுகோள்கள் காணப்பட்டபோதிலும் காதிகளாக பெண்களை நியமிப்பது குறித்து இணக்கப்பாடு எட்டப்படவில்லை. எனினும், குறிப்பிட்ட குழுவினர் பெண்களை நீதிமன்றத்திற்கு நியமிப்பதை தடைசெய்யும் சட்டத்தின் பொருத்தமான பிரிவுகளில் இருந்து ஆண் என்ற பதத்தை நீக்குமாறு பரிந்துரை செய்துள்ளனர்.
மேலும், பலதார மணம், விவகாரத்தின் பின்னர் பராமரிப்புச் செலவு போன்ற பிரிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். திருமணத்திற்கான கட்டாயமான அடிப்படையாக திருமணப் பதிவு காணப்படவேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வெளியிடப்படும் இந்த அறிக்கையில், அடையாளம் காண உதவக்கூடிய தனிப்பட்ட சாட்சியங்கள், பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள், மின்னஞ்சல்கள் போன்ற தகவல்களை கிரவுண்ட்விவ்ஸ் நீக்கியுள்ளது. இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என கருதுகின்றோம்.
அறிக்கையின் PDF வடிவம்
ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரைகள், “முஸ்லிம் பெண்களின் உரிமைகளை யதார்த்தமாக்குவது எப்போது?“, “முஸ்லிம் திருமணங்கள் கட்டாயம் பதிவுசெய்யப்படல் வேண்டுமா?“