பட மூலம், Andbeyond

காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைவதையும்  வாழை, தென்னந் தோட்டங்களும், வயல் வெளிகளை துவம்சம் செய்வதையும்,வீடுகளை தாக்கி உடைப்பதையும் தொடர்ச்சியாக நாம் அறிவோம். காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் செய்திகளாக்குவதும் தெரிந்ததே.

அத்தோடு, மக்கள் தமக்கு நேர்ந்த அழிவுகளுக்கு நட்டஈடு, பாதுகாப்பு வேலி என்பன கோரி போராட்டம் நடத்துவதும் தொடர் நிகழ்வுகளாக உள்ளன. ஒரு சில இடங்களில் பழக்கப்பட்ட யானைகள் திட்டமிட்டே கிராமங்களுக்குள்ளும், தோட்டங்களுக்குள்ளும் அனுப்பப்படுவதாகவும் மக்கள் சந்தேகப்படுகின்றனர். காரணம் மக்களை பயத்தோடு வாழவைப்பதற்கும், அவர்களை அப்பூமியில் இருந்து அகற்குவதற்கும் எடுக்கின்ற இனவாத செயற்பாடாகவே சிந்திக்கின்றனர்.

அபிவிருத்தி எனும் போர்வையில் காடுகளை அழிப்பது, காட்டுப் பகுதியில் கஞ்சா வளர்ப்பது, விலை மதிப்பு மிகுந்த மரங்களை வெட்டி அகற்றுவது போன்ற காரணங்களால் அடிமட்ட விவசாய மக்கள் பல்வேறு பாதிப்புக்களை வனவிலங்குகள் மூலம் சந்திக்கின்றனர்.

இக் கட்டுரையின் நோக்கம் மேற்கூறிய விடயத்தை ஆராய்வதல்ல, வெளிவராததும் மலையக மக்கள் சந்திக்கின்றதுமான அபாயகரமான விடயம் தொடர்பில் அவதானத்தை ஏற்படுத்துவதாகும்.

அன்மையில் ஹட்டன், பத்தனை, திம்புல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பத்தனை கிரேக்லி தோட்டத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைக் குட்டிகள் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளன (வீரகேசரி 11-03-2018) எனும் செய்தி வெளியாகி இருந்தது.

நாவலப்பிட்டி பார்கேப்பல் தோட்ட ஊழியரான சிரில் எந்தனி, “முன்னர் 1,200 ஏக்கரில் தேயிலை வளர்க்கப்பட்டதோடு தற்போது 100 ஏக்கரில் மட்டுமே தேயிலை வளர்கின்றது. ஏனைய பிரதேசங்கள் காடுகளாக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. கடந்த 5 வருடகாலமாக மக்கள் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர்” எனக் கூறுகின்றார்.

பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டங்கள் காடுகளாவதற்கு விட்டுவிடுகின்றன. இதனால், தொழிலாளர்கள் தொழிலை இழக்கின்றனர் என்பது நாம் அறிந்ததே. தேயிலை செடிகள் ஆளுயர  வளர்ந்து, புல்லுகளும் நிறைந்துள்ள பகுதியில் தொழிலுக்கு செல்வோர் தொடர்ச்சியாக குளவி கொட்டுக்கும் உள்ளாகி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்ற செய்திகளும் அடிக்கடி வெளிவரும் நிலையில்தான் சிறுத்தைகள் தொடர்பான செய்திகளும் நம் காதுகளுக்கு எட்டியுள்ளன.

கோப்பி பயிர் செய்கையைத் தொடர்ந்து தேயிலைச் செய்கை பெருந் தோட்டங்களாக வளர்ச்சியடைந்த பின்னர் கொடிய விலங்குகளின் நடமாட்டம், அதன் தாக்குதல் தொடர்பான சம்பவங்கள் மிக அண்மைக் காலம் வரை அறியக் கிடைக்கவில்லை.

ஆனால், தற்போது கலஹா, நாவலப்பிட்டி, கினிகத்ஹேனை, தியகமை, புஸ்ஸல்லாவை, பொகவந்தலாவை, மில்லகஹாமுல்ல, பெகலாய தோட்டம், பென்ரோஸ் தோட்டம், கெட்டபூலா, பார்கேபல், கொட்டகலை, ஹட்டன், நோர்வுட் போன்ற மலையகத்தின் மையப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. மேலும், புலிகளின் தாக்குதலால் இதுவரை 40க்கும் அதிக சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் பதியப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பாரிய சம்பவங்கள் 25க்கும் அதிகம் எனவும், ஒரு பெண் சிறுத்தையினால் இழுத்துச் செல்லப்பட்டு சடலம் வேறு மிருகங்களுக்கு இறையாகாமல் இருக்க இரவோடு இரவாக பொலிஸார் மீட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், சிறுத்தைகள் தம் உணவிற்காக ஆடு, மாடு, கோழி என்பவற்றை தேடித் தோட்ட குடியிருப்பிற்கு அண்மையில் நடமாடுவதாகவும் கூறப்படுகின்றது. இதனால் மக்கள்:

1)             பயத்தோடு வாழவேண்டும்.

2)             பயத்தோடு தொழிலுக்குச் செல்ல வேண்டும்.

3)             பயத்தோடு பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்.

4)             ஆடு மாடு, கோழி இழப்பால் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

இதன் பின்புலத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் தமக்கு கீழ் உள்ள பெருந்தோட்டங்களை திட்டமிட்டே காடுகளாக்குகின்றனவா? வன விலங்கு நடமாட்டம், சிறுத்தைகள் தாக்குதல் எதிர்பார்க்கப்படுகின்றதா? எனும் கேள்விகளை எழுப்பத் தோன்றுகின்றது.

ஏனெனில், சில இனவாத அமைப்புகள் பிரித்தானியரின் கொள்கையில்லா, திட்டமில்லா காடழிப்பாலும், பொருளாதார சூறையாடல் நோக்கத்தாலும், மலையக மக்களின் வருகையாலுமே மலையகத்தின் இயற்கை சூழல் அழிந்தது எனும் குற்றச்சாட்டினை மலையக மக்களுக்கு எதிராக வைப்பதைக் காணலாம். தற்போது மலையகத்தில் வாழ்ந்து வரும் மக்கள் இதற்கு பொருப்பானவர்கள் அல்லர்.

மலையக பகுதிகளில் வாழும் மக்கள் “இலங்கை மலையகத் தமிழர்” என்றே அழைத்தல் வேண்டும், அதுவே அவர்களுக்கான அரசியல் சமூக கௌரவத்தை உருவாக்கும். ஆனால், இவர்கள் “இந்திய வம்சாவழி தமிழர்” என்றே அழைக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் இம் மக்களை இம் மண்ணுக்கு அந்நியமாகவே வைத்திருக்க வேண்டும் எனும் சிந்தனையாகும்.

இந்நோக்கத்தினை நிறைவேற்ற அரசின் “தேசிய பௌதீக திட்டம் 2030” என்பதில் திட்டமிடப்பட்டுள்ளது.  இதில் மலையக பிரதேசத்தில் புதிய நகரங்கள் உருவாக்குதல், சுற்றுலா துறையை மேம்படுத்துதல் பெருந்தோட்டத் துறையை சுற்றுலாத் துறையோடு இணைத்தல் ஆகிய திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனால்தான் நகரங்களுக்கே உரித்தான அளவில் பொருந்தோட்ட மக்களுக்கும் சுய பொருளாதாரத்தில் வளரமுடியாத முறையில் வீட்டுக்கு மட்டும் 7 பேர்ச் காணி வழங்கப்படுவதை நாம் அறிவோம். ஒரே மாதிரியான வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டு பலவந்தமாக நகர் கலாச்சாரத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.

இதற்குள் தமக்குத் தேவையான தொழிலாளர்களை, அவர்கள் குடும்பங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஏனையோரை அப்பூமியிலிருந்து வெளியேற்றும் திட்டமும் இனவாதிகளின் “தேசிய பௌதீகத் திட்டம் 2030” இற்குள் அடக்கி உள்ளனர்.

இந்நிலையில், மலையகத்தில் அண்மையில் தோன்றியுள்ள சிறுத்தைகள் பிரச்சினை மக்கள் இயல்பு வாழ்வையும், பொருளாதாரத்தையும் பாதிப்பதால் மக்கள் தமது பாதுகாப்பு, எதிர்காலம் என்பன கருதி தாம் தொடர்ந்து வாழ்ந்து வரும் பூமியிலிருந்து சுயமாகவே வெளியேறி விடுவர். இது ஆட்சியாளர்களுக்கும், இனவாதிகளுக்கும் தமது திட்டத்தை நிறைவேற்ற இலகுவாக அமையும்.

எதிர்வரும் காலங்களில் இயற்கை இனப் பெருக்கத்தால் சிறுத்தைகளின் தொகை இன்னும் அதிகரிக்கலாம். இவற்றை கட்டுப்படுத்த மக்கள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருவதை தடுக்க யானைகளுக்கு தடுப்புவேலி அமைப்பதைப் போன்று அமைக்க முடியாது. சிறுத்தைகள் மரங்கள் மீதேறி பாய்ந்து வெளியில் வரும்.

மக்களின் பாதுகாப்பு என்பது அவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இதனால் தனித் தனி குடும்பங்களாக வெளியேறலாம். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாடும் இம் மக்கள் எங்கோ ஒரு இடத்தில் தொழிலாளியாக இணைவதோடு குடும்ப வாழ்வும் சிதைவடையும்.

எனவே, தற்போது பெருந்தோட்ட கம்பனிகள் உற்பத்தியிலிருந்து நிலம் கைவிடுதல், காடாக்குதல், அரசின் பௌதீக திட்டம் 2030, சிறுத்தைகளின் நடமாட்டம் என்பவற்றின் பின்னால் மலையக மக்களுக்கும் அரசியலுக்கும், பூமிக்கும் அவர்களுக்கு இருக்கும் பற்றிற்கும், அவர்களின் இருப்பிற்கும் எதிரான பாரிய திட்டம் உள்ளது போல் தோன்றுகின்றது.

வட கிழக்கு தமிழர்கள் அடக்கப்பட்டு விட்டார்கள​ எனும் சிந்தையோடு முஸ்லிம்களின் பொருளாதாரத்தைப் பறித்ததும் திட்டமிட்ட முறையில் அவர்களுக்கு எதிரான வன்முறை காலத்திற்கு காலம் தூண்டி விடப்பட்டு பயத்திலே வாழ வைத்திருப்பதோடு அவர்களின் பொருளாதார வளர்ச்சியையும் தடுக்க திட்டமிட்டுள்ளனர். இதன் இன்னுமொரு திட்டம் மலையகத்தில் அரங்கேறி மக்கள் இயல்பு வாழ்வை பாதிக்கவிட்டு நிலத்தை கையகப்படுத்தும், இனவாதத்தோடு பொருளாதார அபிவிருத்திக் கொள்கையை முன்னெடுக்க முனைவதாக தோன்றுகின்றது.

அரசின் முதலாளித்துவ தாராள பொருளாதார கொள்கையின் முகம் கிழிக்கப்படுவதன் மூலமே மலையக மக்களின் இயல்பு வாழ்வையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். இதனை மலையக அரசியல்வாதிகளால்  செய்ய முடியாது. ஏனெனில், அவர்கள் முதலாளித்துவ ஏணிகளிலே ஏறுவதற்கு பெரும்பான்மை கட்சிகளின் தயவில் தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.

மலையக மக்களைப் பொறுத்த வரையில் எல்லா மலைகளுமே கல்வாரி மலைகள் தான். யார் யாரோ வாழ்வதற்கு இவர்கள் வாழ் நாள் முழுதும் சிலுவை சுமக்கிறார்கள்.

அருட்தந்தை மா. சத்திவேல்

 


ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரைகள், “மலையக மக்களின் ஜனநாயகத் தோல்வி”, “ரொட்டியும் சோறும்”