பட மூலம், Getty Images, CHATHAM HOUSE
பௌத்தர்கள் தலைமையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினர் மீது தொடாச்சியாக இடம்பெற்ற வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு முடியாத நிலை காணப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் மார்ச் மாதம் ஏழாம் திகதி சமூக ஊடகங்களையும் தொடர்பாடல் எப்களையும் தற்காலிகமாக தடைசெய்துள்ளது. 2011இற்குப் பின்னர் முதல்தடவையாக அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனைத்து தொலைதொடர்பு சேவைவழங்குநர்களையும் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் பேஸ்புக் மற்றும் வட்ஸப், வைபர் பாவனையை இடைநிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இன வன்முறைகள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரியொருவர் இவ்வாறு தெரிவித்தார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
இதேவேளை கண்டி மாவட்டத்தில் மாத்திரம் இணையபாவனை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது என ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை ஒருங்கிணைப்பதற்காக, வட்ஸப் போன்றவற்றை கலகங்களில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்துவது தெரியவந்ததன் பின்னரே இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது.
பொதுமக்களின் தொடர்பாடல் வலையமைப்புகளை தடைசெய்வது எந்த சந்தர்ப்பத்திலும் சிறந்த நடவடிக்கையல்ல, குறிப்பாக தங்கள் குடும்பத்தவர்கள் உறவினர்களின் பாதுகாப்பு குறித்து மக்கள் பதற்றத்துடன் தகவல்களை பெற முனையும் அல்லது பகிர்ந்துகொள்ள முயலும் நெருக்கடியான தருணங்களில் இது சிறந்த நடவடிக்கையில்லை.
தெரிவுசெய்யப்பட்ட இணையத்தளங்களை அல்லது சமூக ஊடகங்களை தடைசெய்வது சுயதோல்வியை வெளிப்படுத்தும் ஒரு நடவடிக்கை. டிஜிட்டல் தொழில்நுட்பங்களை சிறப்பாக கையாளும் ஆளுமையுள்ளவர்கள் புரொக்சி சேர்வர்களைப் பயன்படுத்துவார்கள். டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவை குறைவாகக் கொண்ட பயனாளர்களே செய்திகள், கருத்துக்கள் மேலதிக தகவல்களை இழக்கவேண்டியிருக்கும். அவ்வாறான தகவல் வெற்றிடம் காரணமாக வதந்திகள் வேகமாகவும் பரந்துபட்ட அளவிலும் பரவலாம்.
எனினும், இலங்கை அதிகாரிகள் இவ்வாறான முக்கிய விடயங்களைக் கருத்தில் எடுக்கவில்லை, அவர்களிடம் தகவல் முகாமைத்துவ நெருக்கடி ஏற்படும்போது அதனை கையாள்வதற்கான அவசர திட்டங்களும் காணப்படவில்லை. 2016 மற்றும் 2017 இல் பருவப்பெயர்ச்சி மழையால் ஏற்பட்ட அனர்த்த நிலையைத் தொடர்ந்து தகவல் முகாமைத்துவ நெருக்கடி ஏற்படும்போது அதனைக் கையாள்வதற்கான அவசர திட்டம் அவசியம் என நாங்கள் தொடர்ந்தும் தீவிரமாக வலியுறுத்தி வந்தபோதிலும் அரசாங்கம் அதற்குத் தயாராக இருக்கவில்லை.
முழுமையாக தடைசெய்வதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றாலும் கூட முழுமையாக தடைசெய்வதே அவர்களைப் பொறுத்தவரை இலகுவானது.
மார்ச் 7ஆம் திகதி காலை நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பான டயலொக் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், தேசத்தின் பாதுகாப்பு நலன்களை கருத்தில்கொண்டு சில சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மறு அறிவித்தல் வரும் வரை கட்டுப்படுத்தப்படுகின்றது என்ற தகவலை வெளியிட்டதுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு டுவிட்டர் செய்திகளையும் அனுப்பியிருந்தது.
எனினும், யதார்த்தத்தில் இது தேசிய பாதுகாப்பை விட பொது ஒழுங்குடன் தொடர்புபட்ட விடயமாகக் காணப்படுகின்றது. சட்டமொழுங்கு பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் முதலில் வீதிகளில் கட்டுப்பாட்டை நிலைநாட்டியிருக்கவேண்டும். அதன் பின்னர் இணையத்தை ஒழுங்குபடுத்த முயன்றிருக்கவேண்டும்.
இந்த விடயத்தில் மார்ச் 7ஆம் திகதி இரவு வரை திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை. பொலிஸாருக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டு அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்ட போதிலும் மத்திய மாகாணத்தில் காடையர் கும்பல்கள் முஸ்லிம்களின் வீடுகளையும் மசூதிகளையும் கடைகளையும் தொடர்ந்தும் தாக்கியவண்ணமிருந்தனர். வன்முறைகள் இடம்பெறும் பகுதிகளுக்குச் சென்ற வெளிநாட்டு செய்தியாளர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பொதுமக்களும் படங்களுடன் கூடிய தகவல்களை வெளியிட்ட வண்ணமிருந்தனர்.
தடிகளையும் எண்ணெய் கான்களையும் வைத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபட்ட காடையர் கும்பலை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாதநிலை காணப்பட்டது என்பதை என்னால் நம்பமுடியாமலுள்ளது. விமர்சனத்திற்கும் தண்டனைக்கும் அப்பாற்பட்டவர்கள் என இலங்கையின் பாரம்பரிய சமூகத்தினால் பரந்துபட்ட அளவிற்கு கருதப்படும் தீவிரவாத போக்குடைய பௌத்தமத குருமார் வன்முறையைத் தூண்டியதே இதற்கான காரணமா?
இதற்கு மாறாக இதே காவல்துறையினர் கொழும்பு வீதிகளில் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவேளை அதற்கு எதிராக துரிதமாகவும் ஈவிரமக்கமற்ற முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நிலைமையை சுலபமாகக் கட்டுப்படுத்தும் திறமை அல்லது அவர்களின் திறமையின்மையை விட அவர்களின் ஈவிரக்கமற்ற தன்மையே அவ்வேளைகளில் அதிக கரிசனைக்குரிய விடயமாகக் காணப்பட்டது. ஆகவே, வெளிப்படையாக சட்டத்தை மீறிய, சட்டத்திற்கு கட்டுப்பட மறுத்த காவி உடையணிந்த குண்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏன் பொலிஸார் விரும்பவில்லை அல்லது தயங்கினர்?
ஆயுதமயப்படுத்தப்பட்ட சமூக ஊடகங்கள்
எனினும், தற்போதைய வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் சமூக ஊடகங்களை தடைசெய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் தாமதமாகவே இடம்பெற்றுள்ளது. வெறுப்புணர்ச்சி என்ற பூதம் எப்போதோ போத்திலிற்குள் இருந்து வெளியே வந்துவிட்டது. அரசாங்கம் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்க – அது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுள்ளது.
நாங்கள் ஒரே இரவில் இந்த நிலையை அடையவில்லை, பல வருடங்களாக தீவிர தேசியவாதிகள் மக்களின் மனங்களை இன மற்றும் மத வெறுப்புணர்ச்சியால் நஞ்சூட்டி வந்துள்ளனர். சில உள்ளூர் மொழி பத்திரிகைகள் – சிங்களம் – தமிழ் – வழமையாக இனரீதியிலான உணர்வூட்டப்பட்ட மொழியைப் பயன்படுத்தி வந்துள்ளதுடன் தீவிரவாதக் கருத்துக்களுக்கு இடமளித்து வந்துள்ளன. தரவரிசையில் சிறந்த இடத்தைப் பிடிப்பதற்காக தனியார் தொலைக்காட்சிகளும் சில வேளைகளில் மதவாத தீயுடன் விளையாடியுள்ளன.
2010 அளவிலேயே சிங்கள தீவிர தேசியவாதிகள், மையநீரோட்ட ஊடகங்களுக்கு இருப்பது போல கண்காணிப்பாளர்களோ அல்லது கட்டுப்பாடுகளோ இல்லாத சமூக ஊடகங்களைக் கண்டுபிடித்தனர் – பயன்படுத்த தொடங்கினர். அதற்குப் பிந்திய வருடங்களில் சில அரசியல் மற்றும் மதக் குழுக்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில் சமூக ஊடகங்களை ஆயுதமயப்படுத்தியுள்ளன. அநாமதேய நபர்களாக விளங்குவதற்கும் அல்லது புனைப்பெயர்களைப் பயன்படுத்துவதற்கும் இணையங்கள் வழங்குகின்ற வாய்ப்பைபையும், உள்ளடக்கங்களை பகிர்ந்துகொள்வதற்கான அவற்றின் திறனையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.
எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதுடன் அவை புறக்கணிக்கப்பட்டுமிருந்தன. இலங்கையின் முக்கிய சமூக ஊடகமான பேஸ்புக்கில் (6 மில்லியன் பயனாளர்கள்) வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்களும் உள்ளடக்கங்களும் அதிகரித்து வருவது குறித்து சமூக செயற்பாட்டாளர்களும் ஆய்வாளர்களும் 2014 முதல் எச்சரிக்கை விடுத்துவந்துள்ளனர்.
2014இல் அவ்வாறானதொரு உள்ளூர் ஆய்வு வெளியானது, இலாப நோக்கமற்ற பக்கச்சார்பற்ற அமைப்பான மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அந்த ஆய்வில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது – இலங்கையில் இணையங்களில் வெறுப்பை – பகையுணர்ச்சியை தூண்டும் உள்ளடக்கங்கள் அதிகரித்து வருவது இன்னொரு இனக்கலவரத்திற்கு வித்திடும் என உத்தரவாதமளிக்க முடியாது. எனினும், இது சமூக, இன, கலாச்சார மத சகவாழ்வு, பல் வகைதன்மை மற்றும் முக்கியமாக யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் எங்களை நாங்கள் எவ்வாறு கருதுகின்றோம், ஒழுங்கமைத்துக் கொள்கின்றோம் போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கும் ஆட்சிக்கும் பல சவால்களை இது விடுக்கின்றது என அது குறிப்பிட்டிருந்தது.
இலங்கையின் சனத்தொகையில் 9 வீதமாகக் காணப்படுகின்ற முஸ்லிம்களே இணையத்தின் மூலமான வெறுப்பை தூண்டும் உள்ளடக்கங்களின் நேரடி இலக்காக காணப்பட்டனர். அதேவேளை ஏனைய சமூகத்தவர்களும் இதன் இலக்காகக் காணப்பட்டதை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வு வெளிக்கொணர்ந்தது. இவர்களில் மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், மதங்களுக்கு இடையில் ஐக்கியத்தை வலியுறுத்தும் மதத் தலைவர்கள், பெண்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் தீவிர சிங்கள பௌத்த கொள்கையுடன் தங்களை அடையாளம் காணாத மக்களும் அவற்றின் இலக்காகக் காணப்பட்டனர்.
இவ்வாறான பகைமையைத் தூண்டும் கருத்துக்களைக் கையாள்வதற்கான சட்டம் நாட்டின் சட்டப்புத்தகத்தில் நீண்ட காலமாக உள்ளது என்கிறார் மனித உரிமை சட்டத்தரணி கெஹான் குணதிலக. 2007ஆம் ஆண்டின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் 56 இலக்க சட்டம் பாகுபாடு குரோதம் அல்லது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்த மதவெறுப்பினை பிரச்சாரம் செய்வதை தடைசெய்கின்றது. இந்தச் சட்டம் முழுமையாக சர்வதேச தராதரத்தை அடிப்படையாகக் கொண்டது.
எனினும், இதனை நடைமுறைப்படுத்தவில்லை என்பதே பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இணையங்கள் மூலமாகவோ அல்லது இணையச்சூழலிற்கு அப்பாலோ இவ்வாறான பிரச்சாரத்தை முன்னெடுத்த எவரும் இதுவரை சட்டத்தின் முன்நிறுத்தப்படவில்லை. சிலர் தங்கள் பெயர்களை வெளியிட்டு இணையங்களில் குரோதங்களைத் தூண்டும் வீடியோக்களை வெளியிட்டுவருகின்ற போதிலும் சட்டமா அதிபரும் பொலிஸாரும் அவர்களுக்கு எதிராக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு இன்னமும் முன்வரவில்லை.
தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவிற்குக் கொண்டுவருதல்
தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் இனவாதிகளுக்கும் மதவெறியர்களுக்கும் அவர்களால் மூளைச்சலவை செய்யப்படுபவர்களுக்கும் துணிச்சலை அளித்துள்ளது. அவர்கள் இணையவெளிக்குள் காலடி எடுத்துவைத்துள்ளதுடன் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகக் கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
முஸ்லிம் கடைகளில் விற்கப்படும் உணவுகள் மற்றும் உடைகள் மூலமாக சிங்கள சமூகத்தை மகப்பேறடைய முடியாத படி மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகள் தொடர்பிலேயே அனேகமாக பிரச்சாரங்கள் காணப்படுகின்றன .நுகர்வோரை இவ்வாறான ஸ்தாபனங்களை புறக்கணிக்குமாறு அழைப்புவிடுப்பதற்காக இந்தக் கட்டுகதைகளை முன்னர் பயன்படுத்தியிருந்தனர் (அவை தோல்வியில் முடிவடைந்தன). பெப்ரவரி 27ஆம் திகதி அம்பாறையில் வன்முறைகள் வெடிப்பதற்கு இந்த தவறான தகவலே காரணமாக அமைந்தது.
உடனடியாக மகப்பேறடையாத படி குறைக்கும் மருந்து எதுவும் இல்லையென சுகதார அதிகாரிகளும் மருத்துவ துறையினரும் உறுதிசெய்துள்ளனர். இருந்தபோதிலும் இதனை அவர்கள் நம்புவதாக இல்லை. இதனை விட இன்று மிகவும் தீயநோக்கம் கொண்ட தகவலாகக் காணப்படுவது சிறுபான்மையின சமூகமாக காணப்படும் முஸ்லிம்கள் இன்னும் சில தசாப்தங்களில் பெரும்பான்மையினத்தவர்களாக மாறிவிடுவார்கள் என்ற கருத்தேயாகும், இதனையும் விமர்சனமின்றி பரப்பிவருகின்றனர். மக்கள் தொகை குறித்த நிபுணர்கள் இதனை முற்றிலும் அர்த்தமற்ற தகவல் என நிராகரித்துள்ளனர். எனினும், இந்தக் கட்டுக்கதைகள் தொடர்கின்றன.
சமூக ஊடகங்கள் எப்போதும் ஆராவாரமும் போட்டியும் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன. ஆனால், பலர் கட்டுக்கதைகள், தவறான கருத்துக்கள், பாரபட்சங்களை எதிர்ப்பதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார காணப்படுகின்றார். சமூக ஊடகங்களில் இலங்கையின் அரசியல் தலைவர்களைப் பின்தொடர்பவர்களை விட அதிகமானவர்கள் அவரைப் பின்தொடர்கின்றனர். அவர் இந்த வாரம் அமைதி ஒற்றுமையை வலியுறுத்தி உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் இதேபோன்ற உணர்வுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். சிலர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள முஸ்லிம் மக்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு முன்வந்துள்ள அதேவேளை சில பௌத்தர்கள் மசூதிகளைப் பாதுகாத்த சம்பவங்களும் நடந்துள்ளன.
வெளியாகியுள்ள நல்லெண்ணம் ஒற்றுமை குறித்து இன்னமும் சரியான மதிப்பீடுகள் இடம்பெறவில்லை. ஆனால், நாங்கள் நிச்சயமாக மக்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. 1958 – 1983 இல் கலவரங்கள் இடம்பெற்ற காலங்களில் காணப்பட்டது போல மக்கள் தற்போது இல்லை. அவர்கள் தற்போது அதிகளவிற்கு தங்களை வெளிப்படுத்துபவர்களாகவும் தொடர்புகளை கொண்டுள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர்.
பேஸ்புக்கைத் தடைசெய்துள்ளமை இவ்வாறான சாதகமான கருத்துப்பறிமாற்றங்களை இடைநிறுத்தும். ஆனால், நீண்ட நாட்களிற்கு இந்த நிலை நீடிக்காது என எதிர்பார்ப்போம்.
புதிய யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள்
கொள்கை வகுப்பாளர்களும் ஒழுங்குபடுத்துபவர்களும் தொடர்பாடல் குறித்த இந்தப் புதிய யதார்த்த்தை ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். தகவல் பரிமாற்றத்தை அரசாங்கமோ அல்லது மையநீரோட்ட ஊடகங்களோ கட்டுப்படுத்தக்கூடிய காலம் எப்போதோ முடிவடைந்துவிட்டது. நன்மைக்காவோ அல்லது தீமைக்காகவோ இந்த அதிகாரம் தற்போது ஜனநாயக மயப்படுத்தப்பட்டுள்ளது.
குரோதமான பேச்சுக்கள் போலியான செய்திகள் உட்பட ஏனைய துஸ்பிரயோகங்களை எதிர்கொள்வதற்காக அனைவரினதும் டிஜிட்டல் அறிவினை எவ்வாறு அதிகரிப்பது என்பதே தற்போது எங்கள் முன் உள்ள சவாலாகும்.
குரோதங்களை தூண்டும் கருத்துக்களும் உரைகளும் சமூக ஊடக இணையத்தளங்கள் மற்றும் தொலைபேசியின் தகவல் அனுப்பும் சாதனங்கள் ஊடாக வேகமாக பரவுவதைத் தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கையாகவே இந்த வார தடைகள் இடம்பெற்றுள்ளன என இலங்கையின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
“எங்கள் கடந்த தலைமுறையின் தவறுகளை நீங்களும் செய்யாதீர்கள், எங்கள் முன்னோர்கள் எதிர்காலத்தில் சாத்தியமாகும் என நினைத்துக்கூட பார்க்காத தொழில்நுட்பங்கள் உங்கள் கரங்களில் உள்ளன, உங்கள் ஸ்மார்ட் போன்களை கீழே வையுங்கள். உங்கள் குரோதங்கள் உங்களை விட்டு அகலச்செய்யுங்கள். அனைவருக்கும் நன்மையை வழங்கும் புதிய இலங்கையை ஏற்படுத்துங்கள்” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சில அடிப்படைவாதிகள் விமானங்களையும், வாகனங்களையும் நாளாந்தம் பயன்படுத்தப்படும் ஏனைய பொருட்களையும் ஆயுதமாக்கியுள்ள போதிலும் நவீன சமூகங்கள் இந்தக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவதை கைவிடவில்லை. மாறாக முன்னெச்சரிக்கையையும் தயார்நிலையையும் அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளார்கள். இதேபோன்று இலங்கையும் தனது டிஜிட்டல் மாற்றத்தின் புதிய காலகட்டத்திற்கு மாறவேண்டியுள்ளது.
தேசத்தின் காயங்களை ஆற்றுவதற்கும் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்காகவும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பது குறித்து அரசாங்கம், சிவில் சமூகத்தினர் மற்றும் தகவல் தொழில்நுட்பம’ துறையினர் நீண்டகாலமாக தாமதமாகிவரும் கலந்துரையாடல்களை இனியாவது மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்போம்.
அப்பாவித்தனத்தின் யுகம் முடிவிற்கு வந்துவிட்டது. தற்போது எச்சரிக்கை அறிவூட்டும் ஈடுபாடுகள் ஆகியவற்றின் புதிய சகாப்தம் ஆரம்பமாகவேண்டும்.
நாலக்க குணவர்தன
ஆசிரியர் குறிப்பு: “Smart Phones and Stupid Governments: Blocking Social Media Sri Lanka as Burns” என்ற தலைப்பில் மார்ச் மாதம் 8ஆம் திகதி கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.
தொடர்புபட்ட கட்டுரைகள்: “இனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…”, “வெறுப்பை விதைத்தல்”