பட மூலம், Xinhua

“வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளையிட்டு அச்சமாயிருங்கள்”

– அல் குர் ஆன் –

திகனயில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்திற்குப் பின் நாடு முழுவதும் அமைதியின்மை நீடிக்கிறது. பற்றியெரியும் கடைகளையும் பள்ளிவாசல்களையும் வீதிகளையும் மனங்களையும் இந்தத் துன்பியல் சம்பவம் உருவாக்கியிருக்கிறது. சிறுபான்மை இனக்குழுக்களின் மேல் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் இனவாதக் கருத்துக்களே சமூக வலைத்தளங்களிலும் பொது வெளியிலும் பரவியோடுகிறது. கொஞ்சமாவது நிதானித்து நின்று யோசிக்க, உரையாட யாருக்கும் நேரமில்லை. தனிமனிதர்களின் குறைபாடுகளை, கடந்த கால கசப்பான அனுபவங்களைத் தொகுத்து, இப்போது வெளிக்கொண்டு வருகின்றனர். இதனை ஒரு சடங்கு போல ஆற்றத்தொடங்கி விட்டன எல்லா சமூகங்களும்.

இலங்கையின் மையமான தேசிய இனங்களில் மூன்றில் உள்ள இனவாதத் தரப்பு முழு மூச்சாக இந்தச் சம்பவங்களை ஊதிப் பெருப்பிக்கின்றது. எந்தவொரு சமூகத்திலும் எதிர் உணர்வுகள் இலகுவில் பற்றக்கூடியது, எல்லா சமூகங்களுக்குமிடையிலும் உரையாடலையும் பரஸ்பர புரிந்துணர்வையும் உருவாக்குவதற்கு நூறு ஆண்டுகள் தேவையென்றால் அதனை உடைத்து, மொத்த இருப்பையும் குழப்புவதற்கு ஒரு சம்பவம் போதும். ஒரு இரவு போதும்.

எல்லா இனக்குழுக்களிலும் எல்லா வகைக் குறைபாடுகளும் உண்டு. அதனை எல்லா இடங்களிலும் பொதுமைப்படுத்தி, அவர் முஸ்லிம், இவர் தமிழ் என்று இன அடையாளங்களை முன்னிறுத்தி மனித மாண்புகளைக் கொல்வது எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. சமூக வலைத்தளங்கள் இந்த இனவாதத்தை மூட்டி வளர்ப்பதில் மிக முக்கியமான பாத்திரத்தை ஆற்றிக்கொண்டிருக்கின்றன.

ஆகவே, இனவாதத்திற்கெதிரான, படுகொலைகளுக்கெதிரான, வன்முறைகளுக்கெதிரான குரலைப் பதிவுசெய்ய வேண்டியதும், அவற்றுக்காக எழுந்து நிற்க வேண்டியதும் நமது காலத்தின் தேவை.

நாம் தவறுகளை உரையாட வேண்டியதும், ஆக்கிரமிப்புகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகப் பேச வேண்டியதும் ஒரு சமூகத்தை நோக்கியல்ல, எல்லா சமூகங்களும் தமக்குள்ளும் தமக்கு வெளியிலும் விவாதிக்க வேண்டிய கூட்டுச் செயல்பாடு, அதுவொன்றும் ஒரே நாளில் நிகழ்ந்துவிடக் கூடியதொன்றல்ல. அதற்கு என்ன வழிமுறை?

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்து கொண்டமைக்காகவோ, வரலாற்றைப் பற்றியோ சமூகங்களினதும் மனித வாழ்க்கையினதும் எதிர்காலத்தைப் பற்றியதுமோ கொஞ்சமும் அக்கறையில்லாமல் கருத்துக்களை முன்வைப்பவர்களை வைத்தோ, மொத்த சமூகத்தையும் மதிப்பிடுவது தவறானது.

எல்லா சமூகங்களிலுமுள்ள இனவாதத்திற்கெதிரான, மானுட வன்முறைகளுக்குமெதிரான குரல்கள் பலமாக ஒலிக்க வேண்டிய காலமிது. இனவாதம் வந்தவுடன் தடுத்து நிறுத்தி, திருப்பியனுப்பிவிடும் செயலல்ல. அது பற்றியெரியும் போது தடுப்பதற்கு, யாருக்கும் வக்கிருக்காது. அப்பொழுதும் சமூக வலைத்தளங்களில், அடித்து விட்டான் பார், மிதித்து விட்டான் கேள் என்று ஒப்பாரி வைப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. கருத்துக்களைச் சொல்பவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். முன்னைய காலங்களைப் போல அரச இயந்திரமோ, காடையர்களோ மட்டுமல்ல இந்த  நிகழ்வுகளை ஊக்குவிப்பதும் பரப்புவதும், சமூக வலைத்தளங்களின் வருகைக்குப் பின் தகவல்களையோ கருத்துக்களையோ பதிவுசெய்யும் ஒவ்வொருவருக்கும் கூட்டுப்பொறுப்பு உண்டு. தாம் பதிவு செய்பவற்றினால் சமூகத்தில் உண்டாகப்போகும் விளைவுகளையிட்டு குற்ற உணர்ச்சி வேண்டும். இல்லையென்றால் நாம் எல்லோரும் இதன் விளைவுகளை கூட்டாக எதிர்கொள்ளும் காலம் வரும். அவ்வளவு அறமில்லாதவர்களா நாம். இந்தப் பிரச்சினையை இனவாதமாக்காமல் முடிவுக்குக்கொண்டு வர வேண்டுமென்று சொல்பவர்களை நடுநிலையாளர்கள் என்று பிறர் கேலி செய்கிறார்கள். அது மிகவும் தவறு. அவர்கள் நடுநிலையாளர்கள் அல்ல. அவர்கள் பக்கச்  சார்பானவர்களே. அவர்கள் நிற்பது அறத்தின் பக்கம். அறத்தின் பக்கமே நாம் நிற்க முடியும். அது ஒடுக்கும் தரப்பின் நியாயமாக நிற்காது, எல்லாவகையான ஒடுக்குதல்களுக்கும் எதிரானதே நாம் நிற்க வேண்டிய பக்கம்.

மதத் தலைவர்கள், இனவாதத்தைக் கக்கும், இனவாதத்தை நடைமுறைப்படுத்தும் மனிதர்களுக்கு ஆதரவாக நிற்பதும் இந்த நாட்டில் தொடர்ந்து நிகழப்போவதுதான். சிங்கள பௌத்த பேரினவாதமோ, கடும்போக்கு வாதமோ எவ்வளவு ஆபத்தோ, அதேயளவுக்கு விடுதலைக்கான கருத்தியல்களாக உருக்கொண்ட சிறுபான்மை இனங்களின் தேசியவாதங்கள், அதே கடும்போக்கு வாதத்தையும், பழியையும் பரஸ்பரம் வீசிக்கொள்வது நமது சமூகங்களில் நிகழ்ந்த மாபெரும் வீழ்ச்சி. விடுதலைக்கான கருத்தியல் என்பது பிறர் அழும் போது, பிறர் அழிக்கப்படும் போது பார்த்துவிட்டு, “நீங்கள் செய்ததற்குத் தான் நீங்கள் அனுபவிக்கிறீர்கள்” என்று, துக்கம் நிகழுமிடத்தில் கல்லைக் கொண்டு எறிவதா? இல்லை புரிந்துகொள்வதா?

அதேபோல், அநீதியிழைக்கப்பட்டது என்பதற்காக, வன்முறையாளர்கள் வீதியில் டயர் போட்டு எரிப்பதைப் போல், முஸ்லிம்களும் டயர் போட்டு எரிப்பதும், வன்முறையாகப் பிறருடன் நடந்து கொள்வதும், தமிழர்களின் மேல் வன்முறைகளைப் பிரயோகிப்பதும் நீதியானதா? இதுதான் இஸ்லாமிய அறமா? எல்லோரும் பொறுப்புடனும், நிதானத்துடனும் கடந்துவர வேண்டிய காலமிது. நம் ஒவ்வொருவரின் செயல்களுக்கும் கூட்டு விளைவு உண்டு. அதனையிட்டு அச்சமாயிருங்கள். இனவாதம் எங்கள் வீட்டுக்கும் பல்லிளித்துக்கொண்டு வரும். அப்பொழுது திருப்பி அடிப்போம் போன்ற நகைச்சுவைகளை நினைத்துப் பார்க்காதீர்கள், ஒன்றும் முடியாது. நம் அனைவரினதும் ஒற்றுமை மட்டும்தான் இருக்கும் ஒரே பலம். இனவாதத்திற்கெதிராக நாம் தூக்கிப்பிடிக்க வேண்டியது, அன்பின் வர்ணத்தில்  ஒற்றுமையின் கொடியை.

உயர்த்திப்பிடிப்போம். எதிர்த்து நிற்போம்.

கிரிஷாந்