பட மூலம், @uthayashalin

சிரியாவில் 2011 முதல் நடந்துவருகின்ற உள்நாட்டுப்போரில் அனேக மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அனேகர் இடம்பெயர்ந்துள்ளார்கள். தற்போதும் யுத்தம் தொடர்ந்தவண்ணமிருக்கையில் கடந்த சில நாட்களாக யுத்தம் உக்கிரமடைந்திருப்பதுடன் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமையால் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலநூற்றுக்கணக்கான அப்பாவிச் சிறுவர் சிறுமியர்களும் அடங்குவர். இது தொடர்பாக சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியிருந்த செய்திகள் மற்றும் படங்கள் ஏற்கனவே பல்லாண்டுகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அதன் வடு மாறாதநிலையிலுள்ள தமிழ் மக்களிடையே யுத்தத்திற்கெதிராக மீண்டுமொரு மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுயாதீன இளைஞர்கள் பலரும் ஒரே நாளில் சிரிய படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தனர். அவை சமூக வலைத்தளங்களில் பெரியதொரு உரையாடலைத் தோற்றுவித்திருந்தது. அதனடிப்படையில் போராட்டத்தை ஏற்பாடு செய்த மற்றும் பங்குபற்றிய  இளைஞர்களிலிருந்து மாவட்டத்திற்கு ஒருவர் தங்களது மாவட்டத்தில் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியபோது தாமும் தமது நண்பர்களும் எதிர்கொண்ட அனுபவங்களை தமது பார்வையிலிருந்து முன்வைத்துள்ளனர்.

சிரியப் படுகொலைகளுக்கெதிரான போராட்டமும் சில புரிதல்களும்

சிரியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அப்பாவிப் பொதுமக்களின் படுகொலைகளைக் கண்டித்து திருகோணமலையில் ஒரு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டோம். இதற்காக எனது நண்பர்களிடமும், பல்கலைக்கழக மாணவர்களிடமும் உரையாடியபோது அவர்களும் அதனை நடாத்த முனைப்புடன் இருந்தார்கள். எனவே, பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுவிட்டு திருகோணமலையில் சமூக செயற்பாடுகளில் தொடர்ந்தியங்குபவர்கள் சிலரை இணைத்து ஒரு குழு உரையாடலையும் மேற்கொண்டபோது வழமைபோல அதிக எதிர்ப்புகளும், ஆதரவுக் குரல்களும் எழுந்தன. அதன்பின் போராட்ட இடம், நாள் போன்றவையும் கலந்துரையாடி சிவன் கோவிலடி முன்றலில் 01.03.2018 அன்று மாலை நான்கு மணிக்கு நடாத்துவதற்குத் திட்டமிட்டிருந்தோம். அதனை பேஸ்புக்கில் பதிவிட்டதன் பின்னர் மேற்படி ஆர்ப்பாட்டத்தை சிவன் கோவிலடியில் நடாத்துவதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தது. அதில் முஸ்லிம்களுக்காக சிவன்கோயிலடியில் ஆர்ப்பாட்டம் செய்வது முறையில்லாத செயல் என்றும் சிலர் முரண்பட்டனர். அதற்காக சில போலி பேஸ்புக் கணக்குகளிலிருந்து ஒழுங்கமைத்தவர்களையும், அவர்களின் குடும்பத்தையும் மிக வக்கிரமாக வசை பாடியிருந்தனர்.

அத்துடன், திருகோணமலையில் தொடர் மழை வேறு, மிகுந்த மன அழுத்தத்தின் மத்தியில் மேற்கொண்டு நடவடிக்கைகளைச் செய்தோம். மக்கெய்சர் மைதானம் முன்பாக குறித்த நேரத்தில் கவனயீர்ப்பைச் செய்யத் தீர்மானித்து இடமாற்றத்தையும் அறிவித்தோம்.

எல்லாம் சரியாகவே நடந்தது. ஊடக நண்பர்களுக்காக காத்திருந்து நான்கு முப்பது மணிக்குப் பதாகைகளுடன் கவனயீர்ப்பு ஆரம்பமாகியது. நேரம் தாழ்த்தி வந்தவர்களையும் சேர்த்து எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பலர் இடமாற்றம் தெரியாது சிவன் கோயிலடியில் நின்றதாகவும் அறியக்கிடைத்தது. காவல்துறை வாகனமும், புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோஷங்கள் எதுவுமின்றி அமைதியாக எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆறு மணிக்கு முன்னர் கலைந்து சென்றோம்.

பல்வேறு எதிர்ப்புக்குரல்களும், வசைபாடல்களும் வந்ததென்று சொன்னேனல்லவா? அவர்கள் யாரென்று பார்த்தால் இதுவரை சமூகம் சார்ந்து எதுவித செயற்பாடுகளிலும் பங்குபெறாத எல்லாவற்றையும் வியாக்கியானம் செய்யும் அறிவுஜீவிகள்தான். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரம் செலவு செய்ய வேண்டியதில்லை. இங்கு நடக்கின்ற பிரச்சினைக்குப் போராடுங்கள் என்றும் பரவலான கருத்துக்கள் எழுந்தன. நீங்கள் எதாவது போராட்டத்திலோ, சமூகப் பிரச்சினைகளுக்கோ பங்குபற்றியிருந்தால் இன்று போராட்டத்தில் கலந்துகொண்ட அரைவாசிப் பேரைத் தெரிந்திருக்கும். என்ன செய்வது பேஸ்புக்கில் மட்டும் பொங்குபவர்களுக்கு அவர்களைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாம் எதற்காக சிரிய இனப்படுகொலைக்கெதிராக போராட வேண்டும் என்று விரிவான கட்டுரைகளும் எழுதியாயிற்று. ஒரு ஐந்து நிமிடமொதுக்கி முதலில் அவற்றை வாசியுங்கள்.

பங்குபற்றிய, துணை நின்ற அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி. இன, மத, மொழிப் பிரிவுகளைத் தாண்டியும், சிந்திக்கக்கூடியதுமானவர்கள் இருக்கும் வரை மனிதம் சிதைக்கப்படும்போதும், உயிர்கள் கொல்லப்படும்போதும் அவற்றுக்கெதிரான குரல்கள் எழுந்து கொண்டேயிருக்கும்.

ஜெனோஜன் 

யாழ்ப்பாணத்தில் ஆதரவுப் போராட்டம் 

திருகோணமலையில்  சிரியப் படுகொலைக்கெதிரான கண்டனப் போராட்டத்திற்கான அழைப்பை நண்பரொருவர் பதிவிட்டதைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இதை ஒழுங்கமைக்க வேண்டியதன் அவசியத்தை நண்பர்களுடன் கலந்துரையாடினோம். பலர் இதற்கான ஆதரவுக்குரலை வெளிப்படுத்தியிருந்தனர். அதனைத்தொடர்ந்து, பொது அழைப்பாக ஒரு பேஸ்புக் அறிவித்தலை வெளியிட்டிருந்தோம். பலரும் அதனைப் பகிர்ந்தனர். சிலர் அதை விமர்சித்தனர், விமர்சனங்களைத் தாண்டியும் பொது நோக்கமொன்றிற்காக பொதுத்தளத்தில் இணையவேண்டியதன் அவசியத்தைப் பலரும் முன்வைத்தனர்.

பின்னர் போராட்டம், தொடங்கியதும் அமைதியான வழியில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பொதுமக்களும் இளைஞர்களும், முஸ்லிம் மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டமை முக்கியமான  தருணமாக இருந்தது. முதலில் கோஷங்கள் போடுவதில்லையென்று, கதைத்திருந்தோம், பின்னர், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் கேட்ட போது, ஊடகங்களும் பெரும்பாலும் சென்று விட்டதால், நின்று  கொண்டிருப்பவர்களுக்கு பலமளிப்பதாயிருக்கும் என்று போடலாம் என்று சொன்னோம். ஆனால், கோஷங்களை அவர்கள் ஆரம்பித்ததும் பெருமளவான இளைஞர்கள் வெளியேற ஆரம்பித்தனர், இதனைத்தொடர்ந்து கோஷங்களை நிறுத்த முடியுமா என்று கேட்டிருந்தோம், அதன் போது நாங்கள் எங்களுடைய பதாகையின் கீழ் கோஷம் போடுகிறோம், நீங்கள் உங்களுடைய போராட்டத்தைத் தொடருங்கள் என்று சொன்னார்கள். அதனோடு அதிருப்தியுற்ற பலர் தங்களது பதாகைகளை பஸ் ஸ்டாண்ட் முன்னிருக்கும் வேலியில் தொங்கவிட்டும், கட்டியும் வெளியேறியிருந்தனர்.

ஒரு பொது நோக்கிற்கான போராட்டம் என்ற வகையில் இதனை நாம் பெரிதுபடுத்தாது, இப்பொழுது சிரிய மக்களுக்கான எமது ஆதரவைத் தெரிவிப்போம், ஒழுங்குபடுத்தலில் உள்ள குறைபாடுகளை பின்னர் உரையாடுவோம் என்று, ஒழுங்குபடுத்தலில் இணைந்திருந்த பலதரப்பட்டவர்களும் கருத்துக்களைப் பரிமாறிய பின் கலைந்து சென்றோம்.

கிரிஷாந்

அலையெனப்படர்ந்த சிரியப்படுகொலைக்கெதிரான மக்கள் எழுச்சி மட்டக்களப்பிலும்

1ஆம் திகதி மார்ச் மாதம் 2018இல் மட்டக்களப்பில் காந்தி பூங்கா முன் யுத்தத்திற்கும் இனப்படுகொலைக்கும் எதிரான பதாதைகளைத் தாங்கியபடி மக்கள் வீதியில் இறங்கி அமைதியான முறையில் தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டிருந்தனர். யாழ்ப்பாணம் தொடங்கி கிளிநொச்சி முதல் திருகோணமலை வரை இக்கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுந்தமான முறையில் சுயாதீனமாக  சமூக ஆர்வலர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சமூகசெயற்பாட்டாளர் என்ற முறையிலும் மனிதாபிமானமுள்ள மனுசி என்ற வகையிலும் எமக்கு நிகழ்ந்த மனிதப்பேரவலம் இனியும் வேண்டாம் என்றுணர்ந்து இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை மட்டக்களப்பிலும் ஏற்பாடுசெய்ய வேண்டிய தேவை கருதி பேஸ்புக் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் சமூகசெயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்ற சிலரைத் தொடர்புகொண்டு உரையாடியபோது அநேகர் வரவேற்றதுடன், உடனடியாக ஆர்ப்பாட்டத்திற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபடத்தொடங்கினர். இது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்பட்டது. இதன் போது பலர் ஊக்குவிப்பளித்திருந்ததுடன் தமது வருகையையும் உறுதிசெய்திருந்தனர். சிலர் “நாம் யுத்தத்தில் சாகும் போது நமக்காக யார் போராடினர்?” என்பது போன்ற கேள்விகளை கேட்டபடியும் சிலர் விதண்டாவாதம் பேசிக்கொண்டும் இருந்தனர். தொலைபேசிவாயிலாக அழைத்த பலர் “இதை ஏற்பாடுசெய்யும் அமைப்பு எது?” என்பது போன்ற கேள்விகளையும் கேட்டிருந்தனர். அவர்களுக்கான எமது பதில் “மனிதாபிமானமுடைய யுத்தத்தை எதிர்க்கும் செயற்பாட்டாளர் குழு” என்பதாக இருந்தது.

காந்தி பூங்காவையொட்டிய வீதியோரத்தில் 4 மணியளவில் பறை மேள முளக்கத்துடன் மக்கள் பதாதைகளை தாங்கியபடியிருக்க இப்போராட்டம் ஆரம்பமானது. ஐம்பதிற்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்த இப்போராட்டத்தில் அனேகர் பெண்களாயிருந்தனர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் படைப்பாளர்கள், இலக்கியவாதிகள், பெண்ணியவாதிகள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மாணவர்கள் என பலதரப்பட்டோர் பங்குபற்றி தம் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இதன்போது பல ஊடகங்களும் வருகைதந்து எம் கருத்துக்களை கேட்டறிந்தனர். அத்துடன், பொலிஸ் அதிகாரிகள் அங்குமிங்குமாக நின்றுகொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. ஊடகம் தவிர்ந்த ஒரு சிலரும் இப்போராட்டம் தொடர்பாக புகைப்படங்களை எடுத்தபடியிருந்தனர். இவர்கள் புலனாய்வாளர்கள் என பிற்பாடு தெரிந்துகொள்ளக் கூடியதாயிருந்தது. போராட்டம் நிறைவுறும் வேளையில் அங்கே வந்த இருவரில் ஒருவர் தானாகவே முன்வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். இரண்டாவது நபர் எதற்காக இப்போராட்டம் என்பதை கேட்டறிந்ததுடன், “இதற்காக நாம் ஏன் போராட வேண்டும்? நமக்காக யார் போராடினார்கள்? இங்கே யாராவது ஒரு முஸ்லிம் போராட வந்திருக்கிறார்களா?” என்ற பல கேள்விகளைத் தொடுத்தார். இதற்கு எம்மில் ஒருவர், “ஐயா! எல்லோரும் போல நாம் இருக்கவேண்டிய தேவையில்லை. மனிதாபிமானமுடையவர்களாய் யுத்தத்தின் வலியை உணர்ந்தவர்களாய் அந்த அவலம் யாருக்கு நேர்வதையும் எம்மால் அனுமதிக்க முடியாது” என பதிலளித்தார்.

அதன்பின் 5 மணியளவில் எந்தவொரு ஆரவாரமுமின்றி “Silence is a war crime” என்ற வாசகத்திற்கிணங்க எம் கடமையைச் செய்தவர்களாய், எம் எதிர்ப்பை பதிவுசெய்தவர்களாய் கலைந்துசென்றோம்.

மட்டக்களப்பு அதிகளவான முஸ்லிம் மக்களைக் கொண்ட பிரதேசம் என்றவகையில் இப்போராட்டத்தில் மக்களின் அழுத்தமான பார்வை பதிவுசெய்யப்பட்டிருந்தது.

சிதறிக்கிடந்த இரத்தத்தையும் சதையையும் வைத்து நம்மால் அடையாளம் காணமுடிந்ததா இவன் இந்து இவன் முஸ்லிம் என? அடையாளங்காண முடிந்ததெல்லாம் மனிதனின் ரத்தமும் சதையுமென்பதே. எனவே, “யாதும் ஊரே யாவரும் கேளீர்” மனிதப் படுகொலைக்கெதிராய் எம் குரல்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கும் ஒன்றாய் பலவாய்.

சிவதர்சினி

கிளிநொச்சியில் நிகழ்ந்த போராட்டம் 

திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் “சிரிய இனப்படுகொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள்” இளைஞர்களால் செய்யப்படப்போவதை அறிந்து கிளிநொச்சி இளைஞர்களும் அதனை செய்யவேண்டும் என்று முடிவெடுத்தோம். இது தொடர்பாக நண்பர்களுடன் கதைத்தபோது, பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் பல்வேறு பொது இடங்கள் இருந்த போதிலும் கந்தசாமி கோயிலடியில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம் நடக்குமிடத்தில், இனப்படுகொலையின் சாட்சியங்களான நாம் எமக்காகப் போராடிக்கொண்டிருக்கும் இடத்தில் நின்று கொண்டு இன்னொரு இனப்படுகொலைக்கெதிராகக் குரல் கொடுப்பது எமது போராட்டத்தின் நியாயத்தை வலுப்படுத்தும்.

சமூகவலைத்தளங்களில் உரையாடப்பட்டு வந்த விடயம் அடையாளப் போராட்டமாக மாறும் போது பலர் அதை ஏற்றுக்கொள்ளாத நிலமையும், கீழத்தரமாக விமர்சித்தும் இருந்தனர். உதாரணத்திற்கு, ஒரு நண்பர் பேஸ்புக்கில் அழைப்பெடுத்து “இதெல்லாம் ஏன் செய்யிறியள், இதால என்ன பிரியோசனம்” என்று எரிந்து விழுந்தார். பிறகு அவரது பேஸ்புக்கைப் பார்த்தேன், “pray  for Syria” என்று ப்ரொபைல் வைத்திருந்தார். குழந்தைகள் சாகும் போது காப்பாற்றாத கடவுள், உங்களுடைய பேஸ்புக்கைப் பார்த்தா காப்பாற்றப் போகிறார், நீங்கள் எந்த நம்பிக்கையில் அந்த ப்ரொபைலை வைத்தீர்கள் என்று கேட்டேன். “விடுங்க ப்ரோ” என்றார்.

எம்மால் முடிந்ததை நாம் செய்தோம். அவ்வளவுதான். கிளிநொச்சியில் எதிரும் புதிருமான கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்களும், தனியானவர்களும் ஒன்றிணைந்து ஒரு அரசியல் அர்த்தமுள்ள போராட்டத்தைச் செய்வது இதுதான் முதல் முறை. நினைத்ததை விட அதிகளவான ஆதரவு கிடைத்தது. சிலர் இதனைக் குழப்ப நினைத்தாலும், அவர்கள் எந்தவொரு ஆக்கபூர்வமான விடயங்களையும் செய்ய முடியாதவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிடுவோம்.

கஜீவன்     

இந்த அனுபவங்களிலிருந்து கிடைக்கக் கூடிய சில பொதுக்கருத்துக்களைக் கலந்துரையாடலின் பின் நான்கு பேரும் வெளிப்படுத்தினர். அதனைக்  கீழே தொகுத்துள்ளோம்.

யுத்தத்திற்குப் பிறகான காலங்களில் இந்த வகையான போராட்டங்கள் இதற்கு முன் இவ்வளவு சுயாதீனமாக ஒன்றையொன்று பற்றும் காட்டுத்தீபோல பரவியதில்லை. எங்கெங்கோ இருந்து இளைஞர்கள் குரல் கொடுத்தனர், களத்தில் இறங்கினர். இதனை நான்கு பேரின் அனுபவங்களிருந்தும் விளங்கிக்கொள்ளலாம். எதிர்பார்த்ததை விட அதிகளவான மாற்றங்களை எல்லா இடங்களிலும் அவதானிக்கக்கூடியதாய் இருந்தது. அதேநேரம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் கற்றுக்கொள்ள வேண்டியதும் நிறைய இருக்கிறது. உதாரணத்திற்கு யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்தான் கலந்து கொண்டிருந்தார். ஆனால், மட்டக்களப்பில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டிருந்தனர். அதேபோல யாழ்ப்பாணத்தையும் திருகோணமலையையும் தவிர பிற இடங்களில் முஸ்லிம் மக்கள் போராட்டங்களுக்கு வருவதில் தயக்கங்களிருந்தன, அவை மாறவேண்டும். மட்டக்களப்பில் கலைஞர்களும் இலக்கியவாதிகளும் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர், தமது எதிர்ப்பை பறையினூடாக வெளிப்படுத்தியிருந்தனர், பிற இடங்களில் மிகச் சிலரே அப்படிக் கலந்துகொண்டனர்.

பல வேறுபாடான அனுபவங்கள் இருந்தாலும் எல்லா இடங்களிலும் இந்த ஏற்பாட்டிற்கு பெருமளவான வசைகளும், கடும் எதிர்ப்புகளும் ஒன்று போலவே கிடைத்தன. பெயர்கள்தான் வித்தியாசம், ஓரிடத்தில் ஒழுங்குபடுத்துவதில் இணைந்திருந்தவர்கள் மீதான தனிநபர் வசைகள், இன்னொரு இடத்தில் மத ரீதியிலான வேற்றுமைகளைத் தூண்டி, அவர்கள் சார்ந்த குடும்பங்களைக் கூட மிகக் கீழ்த்தரமாக நிந்தித்திருந்தனர். இன்னோரிடத்தில் குதர்க்கம் செய்வதும் விதண்டாவாதம் கதைப்பதும் என்று மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிரிய மக்களுக்கான ஆதரவுப் போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது.

அது இன்னும் நீண்டு முல்லைத்தீவிலும், வவுனியாவிலும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. பத்து இருபது இளைஞர்கள் இணைந்து ஏற்பாடு செய்த போராட்ட அழைப்பு, பொதுத்தளத்தில் பலரையும் இணைத்தது, அது உலகத்திற்கொரு செய்தியை தமிழ் மக்கள் சார்பில் சொல்லமுடியுமென்றால், எங்கள் சகோதரர்களுக்கு எமது அனுபவத்தினைப் பகிர்வதின் ஊடாக எந்த எதிர்வினைகள் வந்தாலும், எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் நாம்

எந்தவொரு அநீதிக்கெதிராயும் எழுந்திருக்க வேண்டியதின் அவசியத்தையும், இன்னும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்ட  சமூகங்களாக மாற வேண்டியதன் முக்கியத்துவத்தினையும் எமது தரப்பிலிருந்து பதிவு செய்கிறோம். இது பிறராலும் எழுதப்பட்டே முழுமையடையும். அடுத்த முறை அநீதிகளுக்கெதிராய் இன்னும் பலர் எழுந்து நிற்பார்கள் என்று நம்புகிறோம்.

இவற்றை நாம் தொகுத்துப் பதிவதென்பது, ஒவ்வொரு போராட்டங்கள் பற்றியதுமான நேர்மையான ஆவணப்பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவும், இதே போல் போராட்டத்தில் பங்குபற்றிய பிறரின் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளிக்கொண்டுவரும், உரையாடலைத் தொடங்கும் நோக்கத்தினாலுமாகும்.

பல கட்சிகளைச் சார்ந்த இளம் தலைமுறை கட்சி பேதமற்று, பொது நோக்கிற்காக இணைந்து நின்றமை சமூக அரசியல் புரிதலில் ஏற்பட்டிருக்கும் மிக முக்கியமான  மாற்றம். அதேபோல் சுயாதீனமான இளைஞர்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்து அநீதிகளுக்கெதிராக எழுந்து நிற்கும்போது யாதும் ஊரே, யாவரும் கேளீர்.

ஜெனோஜன், கிரிஷாந், சிவதர்சினி, கஜீவன்