365 நாட்கள், வீதியிலேயே கடந்துவிட்டது அந்த அம்மாக்களுக்கு. கடும் வெயிலடித்தும் மழை பெய்தும் காற்றடித்தும் அவர்கள் அசையவில்லை. இயற்கை அச்சுறுத்தலையும் தாண்டி  செயற்கையான அச்சுறுத்தல்களுக்கும் ஓய்விருக்கவில்லை. அவற்றுக்கெல்லாம் முகம்கொடுத்து, சமாளித்துவிட்டு ஒரு வருடத்தை ஒரே இடத்தில், கொட்டிலொன்றில் கடத்திவிட்டார்கள். அருகிலிருக்கும் கந்தசுவாமிதான் தங்களுக்குத் துணையாக இருக்கிறான் என்று அவர்கள் கூறினாலும், அவர்களுடைய எதிர்பார்ப்புதான் இவ்வளவு நாள் அவர்களை அழைத்துவந்திருக்கிறது. ஆனால், இந்த எதிர்பார்ப்பு தொடர்ந்தும் அவர்களை வீதியிலேயே விட்டுவிடுமோ என்ற பயமும் எம்மிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், எதற்காக, எதனை எதிர்பார்த்து இந்த இடத்தில் வந்து உட்கார்ந்தார்களோ அது இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களை மீட்டுத்தருவதில் அரசியல் பிரதிநிதிகள் அக்கறைக்காட்டாத நிலையில் அவர்கள் எங்கிருக்கிருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை அறிவதற்காக அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக தாய், தந்தை, மனைவி, கணவர் என கடந்த வருடம் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் அருகில் கொட்டில் ஒன்றை அமைத்து போராட ஆரம்பித்தார்கள். இன்று அவர்களுடைய போராட்டத்துக்கு ஒரு வருடமாகிறது. இதன் பின்னர் வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார் என ஏனைய மாவட்டங்களில் தொடர் சத்தியாகிரகப் போராட்டத்தை உறவுகள் ஆரம்பித்திருந்தார்கள். அவர்களுடைய போராட்டங்களும் ஒரு வருடத்தை அண்மிக்கிறது.

இந்த ஒரு வருட போராட்டக் காலப்பகுதியில் தங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட அறிந்துகொள்ள முடியாமல் 7 பெற்றோர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். தங்களுடைய உறவுகள் எங்கிருக்கிருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது அறியாமலேயே தாங்களும் இறந்துவிடுவோமோ என்ற அச்சவுணர்வு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அனைவருக்கும் இருக்கிறது. தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடத்துக்கு கொண்டுவந்தவர்களுள் இவர்களும் உள்ளடங்குகிறார்கள். ஆனால், அதிகாரபலத்துக்காக குடுமிச் சண்டையில் ஈடுபட்டிருக்கும் அரச தலைவர், பிரதமருக்கு இது பற்றிக் கவலையில்லை.

இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சிக்கவிழாமல் போகவேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இரண்டு வருடங்கள் பூர்த்தியாக முன்னர் தங்களுடைய போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதே உறவுகளின் வலியாக இருக்கிறது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் அருகில் போராட்டத்தில், உறவுகளை ஏந்தியிருக்கும் கைகள்…

Sway சமூக வலைத்தளத்தினூடாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த புகைப்படக்கட்டுரையை இங்கு கிளிக் செய்வதன் மூலமாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.