பட மூலம், Selvaraja Rajasegar

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பாணம பகுதியில் விசேட அதிரடிப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மட்டுமே இருந்தன. சுற்றிவர விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருந்தபோதிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர்களால் பாணம மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை. போரின் விளைவாக மக்கள் இடம்பெயரவுமில்லை. அதனால், சேனைப் பயிர்ச்சிசெய்கையில் மக்கள் பரவலாக ஈடுபட்டார்கள். கடலுக்கு, களப்புக்குச் சென்று மீன் பிடித்தார்கள். காடுகளுக்குச் சென்று தேன், பழங்கள் எடுத்து வந்து வாழ்க்கையை கொண்டு நடத்தினார்கள். பல ஆண்டுகாலமாக, பல பரம்பரைகளாக நீண்டு வந்த இயற்கையுடனான அவர்களுடைய வாழ்வு ஒரே நாளில் முடிவுக்கு வரும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். இலங்கையில் உள்நாட்டு போர் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும் உண்மையிலேயே அந்தக் காலப்பகுதியில்தான் பாணம பகுதியில் போர் ஆரம்பமாகியது. காடுகளுக்கும் மக்களுக்குமான – கடலுக்கும் மக்களுக்குமான – களப்புக்கும் மக்களுக்குமான தொடர்பை காட்டாட்சி நடத்தியவர்கள் துண்டிக்கத் திட்டமிட்டார்கள்.

காடுகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு அதிகாரிகளும் வரத் தொடங்கினார்கள். காடுகள் வீக்கமடைய அதுவரை வாழ்வாதாரத்தில் ஒருபகுதியாக இருந்த அவையும் அவர்களை விட்டுப் பிரிந்தது.

கடல் பக்கமாக சுனாமியை விட மிகப்பெரியதொரு பிரச்சினையை அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. நீர்ச்சறுக்கலுக்கு மிகவும் உகந்த இடமாக பாணம கடல் பகுதி கருதப்பட்டதனாலேயே இந்தப் பிரச்சினையை அவர்கள் எதிர்கொண்டார்கள். இதை வைத்து வியாபாரம் பார்க்க ராஜபக்‌ஷாக்கள் நாவைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலையத் தொடங்கினார்கள். ஆண்டாண்டு காலமாக மக்கள் வாழ்ந்து வந்த நிலப்பகுதியை சுற்றிவளைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தார்கள்.

நாள் – 2010  ஜூலை 17ஆம் திகதி. இடம் – பாணம ராகம்வெல. நேரம் – நள்ளிரவு 12.00 மணியிருக்கும். கறுப்புத் துணியால் முகத்தை மூடிக்கொண்டு ஆயுதங்கள், பொல்லுகள், கம்பிகளுடன் பாணம ராகம்வெல கிராமத்தினுள் நுழைந்த எஸ்.டி.எவ். குண்டர்கள் அங்கிருந்த மக்களை வயது வித்தியாசம் பார்க்காமல் விரட்டி விரட்டி சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். அதன் பின்னர் மக்களின் குடில்களுக்கு தீவைத்திருக்கிறார்கள். ராஜபக்‌ஷாக்களின் இராணுவ ஆட்சிக்கு எதிராக எதையும் செய்யமுடியாமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்கள். இந்த அநீதிக்கு எதிராக நீதியை எதிர்பார்த்துச் சென்ற மக்கள் ராஜபக்‌ஷவின் சட்டத்தின் ஆட்சியின் கீழ் கைதுசெய்யப்பட்டார்கள், 4ஆம் மாடிக்கு வரவழைக்கப்பட்டார்கள். அல்லது வழக்குகளுடன் வீடு திரும்பினார்கள்.

பாணம மக்களின் போராட்டத்தையும் தேர்தல் சுலோகமாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமும் இந்த மக்களை ஏமாற்றியமை, அதனைத் தொடர்ந்து அவர்கள் பலவந்தமாக சிறிய நிலப்பகுதியில் குடியேறியமை, சுற்றிவளைத்து முகாம்கள் அமைத்திருக்கும் இராணுவத்தினர், யானைத் தாக்குதல்கள், வாழ்வாதாரத்துக்காக கஷ்டப்படும் மக்கள் போன்ற விடயங்கள் அடங்கிய கட்டுரையை இங்கு கிளிக் செய்வதன் மூலமாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் வாசிக்கலாம்.

"கொன்றாலும் இனிமேல் இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம்"

 

ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரைகள், “யார் சொன்னது, நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று”, “அமைச்சரவைத் தீர்மானத்துக்கு 853 நாட்கள்”