படம் | Youtube Screenshot

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, வனாத்தமுல்லையைச் சேர்ந்த சுனில் என்பவருக்கு எதிராக தனது சண்டித்தனத்தை காட்டியுள்ளார். பின்னர், அவர் கடத்தப்பட்டு, மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். ஊடகவியலாளர் மெல் குணசேகரவை கொலைசெய்த நபரை ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளேயே கைதுசெய்துவிட்டோம் என நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கவேண்டிய பொருட்களை ஊடகங்களின் முன்னால் கொண்டுவந்து காண்பித்து பெருமை பாடிக்கொண்டிருந்த பொலிஸ் திணைக்களத்தின் ‘சட்டத்தரணி’ பொலிஸ் பேச்சாளர் இந்தச் சம்பவம் தொடர்பில் கொண்டிருக்கும் மௌன அணுகுமுறை கொண்டிருக்கிறார். கடத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தின்போது ‘சமபோஷ’ சாப்பிட்டுக் கொண்டிருந்த குழுவொன்றினால் பராமரிக்கப்பட்டு வந்த தென்னந்தோட்டம் ஒன்றிலேயே தாம் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக சுனில் தெரிவிக்கிறார். தென்னந் தோட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் கோட்டாபாய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கொன்றில் வரவு வைக்கப்படாது என்று எண்ணுவோம். தென்னந் தோட்டம் பாதுகாப்புச் செயலாளர் அறிந்திராத வேறொருவரால் தேங்காய் கொண்டு ‘சமபோஷ’ தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது என எண்ணுவோம்.

தேங்காயைக் கொண்டு ‘சமபோஷ’ தயாரிப்பதற்குப் பதிலாக தோட்டத்தில் உள்ள வீடு சித்திரவதைக் கூடமாக பயன்படுத்தப்படுகிறது என எண்ணுவோம்.

சுனில் கடத்தப்பட்ட சம்பவத்துக்கும் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகி முன்னணி சோசலிச கட்சியினை ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த பிரேம்குமார் குணரட்னம் கடத்தலுக்கும் ஒற்றுமை நிலவுகிறது. பிரேம்குமார் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரும் தென்னந் தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்களா என்பது தெரியவில்லை. இருப்பினும், சுனில் தெரிவித்தவைக்கும் பிரேம்குமார் மற்றும் திமுது ஆகியோர் ஊடகம் முன்பு கூறியவற்றுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ராஜபக்‌ஷ அரசு மனித உயிர்களோடு தொடர்ந்து விளையாடுவதை புரிந்துகொள்வதற்கு கிடைத்த இன்னொரு சந்தர்ப்பமாகும். எமது கண்முன் இவ்வாறான நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இடம்பெறுகையில் நாட்டுப்பற்று குறித்து எம்முள் முரண்பாடுகள் நிலவுகிறது. நாம் எமக்குள்ள உரிமைகளைப் பயன்படுத்தி இவர்களையே அதிகாரத்துக்கு கொண்டுவந்துள்ளோம்.

எதுவித இறக்கமுமின்றி சாதாரண மக்களை மிதித்து தங்களுடைய தனிப்பட்ட, சுயநலமிக்க தேவைக்காக வேண்டப்பட்ட வேண்டப்படாத விடயங்களை நிறைவேற்றிக்கொள்ள ராஜபக்‌ஷ அரசு சிறந்தது என்பதற்கு இன்னுமொரு சம்பவம் தேவையில்லை என்றே தோணுகிறது. ராஜபக்‌ஷ தன்னுடைய இருப்புக்காக முட்டால்தனமான கருத்தொன்றை முன்வைக்கின்றார். “ராஜபக்‌ஷ இல்லாதவிடத்து தலைவன் ஒருவன் இல்லை” என்ற கருத்தே அது ஆகும். இது முழு நாட்டிலுமுள்ள சிங்கள மக்கள் நம்பக்கூடிய வகையில் மேற்கொள்ளப்படும் அறிவுசார்ந்த பொறியாகும்.

ராஜபக்‌ஷதான் ஒரே தெரிவு, இவரை மிஞ்சிய எவரும் இல்லை என்ற எண்ணம் ஊசி மூலம் ஏற்றப்பட்டுள்ளது போலும். நடைமுறைச் சம்பவங்களை கண்ணுற்று, மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர் யார் என ஆராய்ந்து முடிவெடுக்காததன் விளைவே ஊழல்வாதிகள் அரியணை ஏறுகின்றமையாகும். இதைப் பயன்படுத்திக்கொண்டு தனது முன்னெடுப்பை ராஜபக்‌ஷ தந்திரமாக நகர்த்துகிறார். அவரது முன்னெடுப்பில் அடக்குமுறை, அடிமைப்படுத்தல், அச்சுறுத்தல் முக்கிய இடம் வகிக்கின்றன. இவற்றைக் கொண்டு நாட்டில் காணப்படும் அனைத்து சொத்துக்களையும் கட்டுப்படுத்தும் உரிமையை தன்னகத்தே கொண்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் சுனிலுக்கு எதிராக கையாண்ட சண்டித்தனத்தின் பின்னால் மேற்கூறியனவே உள்ளன. ஆனால், இவர்களால் அமெரிக்காவுக்குச் சென்று இந்த சண்டித்தனத்தை காட்டமுடியாது.

நாட்டில் பொருளாதாரத்தை அழிவை நோக்கி இழுத்துச் செல்வதற்கு ராஜபக்‌ஷ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பெருமதியற்ற மிகப் பெரிய அமைச்சரவை, தனிநபரொருவரால் செய்யக்கூடிய அமைச்சை பல பிரிவுகளாகப் பிரித்தல், வெளிநாடுகளிடம் கடன் வாங்கக்கூடிய அதிகாரம் உள்ள அமைச்சுக்களை தன்னகத்தே வைத்துக்கொள்ளல் போன்றவற்றின் மூலம் பொருளாதார ரீதியாக நாட்டை வலுவிழக்கச் செய்கின்றார். தனக்கு மற்றும் தனது இரத்த சொந்தங்களுக்கு இந்த நாட்டின் அதிகாரங்களை வாழ்நாள் பூராகவும் அனுபவிக்கலாம் என பகல் கனவு காணுகின்றார். அது கூடியது 20 அல்லது 30 ஆண்டுகள் நடந்தேறினாலும் அதன் பின்னர் இந்த பூமியில் பிறக்கும் குழந்தைகள் வாழவேண்டியுள்ளது.

ராஜபக்‌ஷ இல்லாவிட்டால் மக்கள் இல்லை அல்லது இலங்கை இல்லை என்ற கனவில் மிதக்கும் தலைவர்கள் தூக்கத்தில் இருந்து எழும்பாமல் இருக்க மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு ஊட்டப்படும் இவ்வாறான மந்திரங்கள் அழிந்துபோய் நூற்றுக்கணக்கான வருடங்களாகின்றன. 10,000 பி.சி. என்ற திரைப்படத்தில் கடவுள் என்று தன்னை காட்டிக்கொள்ளும் நபர் எய்யப்பட்ட அம்பொன்றினால் கொல்லப்படுகிறான். அதன் பின்னர் முழு அடிமைத்தனமும் இல்லாமல் போய் ஆயிரக்கணக்கான மக்கள் விடுதலை பெறுகின்றனர்.

விடுதலையை வேண்டி மக்கள் கடின பாதையூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது. அவ்வாறான சூழ்நிலைகளை தாண்டி, ஆயிரக்கணக்கான வருடங்களைக் கடந்து வந்த மக்கள் மீண்டும் அவ்வாறானதொரு காலத்தை நோக்கி கொண்டு செல்லவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நபர்களையே தற்போது சந்திக்க நேர்கிறது. இவ்வாறானவர்கள் நாட்டை ஆட்சிசெய்வதற்கு பொருத்தமானவர்கள் அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்கு, அந்த நாடு ஏனைய நாடுகளுடன் நட்புறவுடனான தொடர்பை பேணுவதற்கு திறமையான தலைவர் ஒருவர் தேவைபடுகிறார். அவ்வாறின்றி நாட்டின் சொத்துக்களை கொள்ளையடிப்பதோடு, நாட்டு மக்களை வசீகரிப்பதற்காக மில்லியன் கணக்கில் செலவு செய்வது, தன்னுடைய மகனுக்கும் அதேபோன்ற எதிர்பார்ப்புகளை அளிக்கும் நபரையல்ல.

இந்த பின்புலத்தில், வனாத்தமுல்லையைச் சேர்ந்த சுனில் மற்றும் அவரோடு இருந்த மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் மிக முக்கிய முன்னெடுப்பாகும். நாட்டு மக்களுக்குள்ள உரிமை மற்றும் அதிகாரம் நாட்டை ஆள்பவர்களை விட பலமானது என்பதை இந்த சம்பவம் ஊடாக காணக்கூடியதாக உள்ளது. மக்கள் ஒன்று கூடுவதன் மூலம் தங்களுடைய சுதந்திரத்தை மட்டுமன்றி நாட்டின் சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு அநீதிக்கு எதிராக முன்னிற்கும், அதற்காக உயிரையும் தியாகம் செய்யும் மக்களை மறக்காது, அவர்களுக்கு நன்றிக் கடன் செய்வது முழு நாட்டு மக்களினதும் கடமையாகும். சுதந்திரத்துக்காக போராடும் உண்மையான வீரர்களை தனித்துவிடாமல் அவர்களோடு சேர்ந்து போராடுவது காலத்தின் கட்டாயமாகும். இது நடக்காத வரை ராஜபக்‌ஷவின் அடக்குமுறையும், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அவரின் பாதுகாப்புப் படையும், அவ்வாறே மக்களது வரிப்பணத்தில் விளையாடும் மிகப் பெரிய அமைச்சரவையும்தான் வீரர்களாக இருக்கும்.

சம்பவம் தொடர்பாக சுனில் ஊடகங்களுக்கு விளக்கமளித்த வீடியோ கீழ் தரப்பட்டுள்ளது. வீடியோ உதவி | JVP Media Unit

எமது சகோரதர தளமான ‘விகல்ப’ தளத்தில் வெளியாகிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.

தமிழில் சுள்ளான்