பட மூலம், Selvaraja Rajasegar
அவளுடைய மகளுக்கு ஏழு வயதானவுடன், ‘கத்னா’வுக்குரிய – அதாவது பெண்ணின் பிறப்புறுப்பை சிதைக்கும் (Female Genital Mutilation-FGM) சடங்குக்குரிய காலம் வந்துவிடும். நாகியாவுடைய உற்ற தோழி அதற்காக பட்டர் கத்தி முறையை முயற்சி செய்து பார்க்கும் படி கூறினார்.
இலங்கையின் தலைநகரான கொழும்பிலுள்ள நம்பிக்கைக்குரிய வைத்தியர் ஒருவர் சிறிய தன்சீமின் யோனியின் மீது மேலோட்டமாக மழுங்கிய கத்தி ஒன்றைக் கொண்டு செல்லுவார். அதன் பின் நாகியா தன்னுடைய உறவினர்களிடம் சடங்கு முடிவடைந்ததாகக் கூறக் கூடியதாக இருக்கும். எந்தவிதமான இரத்தப்போக்கோ அல்லது வலியோ காணப்படமாட்டாது.
கடுமையான உடல் உளப்பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் கூடிய எப்ஜிஎம் ஆனது அதிகமாக ஆபிரிக்க நாடுகளுடன் தொடர்புடையதாக இருப்பதுடன் இப்பழக்கத்தை முடிவுறுத்துவதற்காக சர்வதேச ரீதியான முயற்சிகளுக்கு இட்டுச் சென்றுள்ளது.
ஆனால், பின்நோக்கிப் பார்க்கும் பொழுது, பல தலைமுறைகளாக இலங்கையில் காணப்படும் தாவூதி போரா சமூகத்தைச் சேர்ந்த நாகியாவின் முஸ்லிம் குடும்பத்தில் பெண்கள் கத்னாவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சடங்கானது பிளேட்டினால் சின்னக் கீறல் இடப்படுவது முதற்கொண்டு பகுதியளவிலோ அல்லது முற்றாகவோ இந்தச் சமூகத்தின் பாவத்தின் மூலமாகக் கருதப்படும் பெண்குறியின் கிளிட்டோரிஸ் நீக்கப்படுவது வரை பலவகையாக செய்யப்படுகின்றது.
பட்டர் கத்தியைப் பாவிக்கும் படி வலியுறுத்துவதன் மூலம் நாகியாவினால், தன்சீமின் உடல் சிதைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
தன்னுடைய உண்மையான பெயரை வெளிப்படுத்த விரும்பாத நாகியாவும் தனக்கு நேர்ந்த கத்னாவினால் பெரும் மனஅழுத்தத்திற்கும், வேதனைக்கும் உள்ளாகியிருந்தது மட்டுமன்றி பல தசாப்தங்கள் கடந்த நிலையில் இன்றும் அச்சம்பவத்தின் ஒவ்வொரு விபரத்தையும் அவரால் நினைவுபடுத்திக் கூறக்கூடியதாக இருக்கிறது.
ஒரு அறையில் வைத்தியர், அவருடைய மனைவி மற்றும் ஒரு உதவியாளர் இருந்தனர். அவளுடைய கால்கள் விரிக்கப்பட்டு இறுக்கமாகப் பிடிக்கப்பட்டிருந்த வேளையில் வைத்தியர் ஒரு பிளேட்டுடன் அவளை அணுகி எந்தவிதமான மயக்க மருந்தும் கொடுக்காமல் தாங்கொணாத வலியை ஏற்படுத்தினார்.
இந்தக் கொடுமை இடம்பெறும்போது நாகியாவின் விருப்பத்திற்குரிய சித்தி அவளை ஆறுதல்படுத்த முயற்சித்தபடி அவளுக்கருகிலேயே நின்று கொண்டிருந்தார். சில நாட்களுக்குப் பின்னர் குணமடைந்ததும் உறவினர்களும், நண்பர்களும் சடங்கு நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடக் குழுமிய வேளையில் நாகியாவுக்கு பலவிதமான பரிசு மழையும், கவனிப்பும் கிடைத்தன.
நாகியா தனக்கு நடந்ததைப் பற்றிய விபரங்களை ஒருபோதும் தன்னுடைய கணவனுடன் கதைத்ததில்லை. இலங்கையில் எப்ஜிஎம் பற்றிய 15 வாக்குமூலங்கள் சேகரிக்கப்படுகையில்தான் முதன்முதலாக இவர் தனது கதைகளை எழுதிப் பகிர்ந்து கொண்டார். இவ்வாக்குமூலங்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, பல நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றிடம் சமர்பிக்கப்பட்டுள்ளன.
பாதிப்புக்குள்ளான பெண்கள் மற்றும் செயற்பாட்டாளர்களினால் தொகுக்கப்பட்ட ஜூன் அறிக்கைதான் இந்தத் தீவில் இடம்பெற்று வரும் எப்ஜிஎம் நடைமுறை தொடர்பாக இலங்கையின் உத்தியோகபூர்வ நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்ட முதலாவது சமர்ப்பிப்பாகும்.
“இது இலங்கையில் நடைபெற்று வருகின்றது என்று நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை” என்று நாடாளுமன்ற உறுப்பினரும், பொது சுகாதாரத்தில் தேர்ச்சி பெற்றவருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறுகிறார்.
இரகசிய நடைமுறை
‘சட்டத்தால் நெறிப்படுத்தப்படாமல் இருக்கும் இந்தப் பழக்கம் பற்றி, இலங்கையில் ஆய்வுகளின் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இது சம்பந்தமான பகிரங்க தகவல்கள் காணப்படவில்லையென்றும் அவர் கூறுகிறார்.
இது குர்ஆனில் கூறப்படாத போதும் போரா சமூகத்தினர் கத்னாவினை ஒரு சமயக் கடப்பாடாகக் கருதுகின்றனர்.
இவை இரகசியமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது. இருந்தபோதிலும் இலங்கையில் 3,000 போரா மக்கள் வாழ்கிறார்கள். அதில் 70 அல்லது 90 சதவிகிதமான பெண்கள் இந்நடைமுறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று சில ஆதாரங்கள் கூறுகின்றன.
ஆனால், இது போரா சமூகத்தில் மட்டும் இடம்பெறும் ஒரு வழக்கமல்ல என்று இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கத்தின் கொள்கைப் பணிப்பாளர் மதுஷா திசாநாயக்க தெரிவிக்கின்றார்.
2012ஆம் ஆண்டின் சனத் தொகை புள்ளிவிபரங்களுக்கு ஏற்ப 2 மில்லியன் மக்களைக் கொண்ட சோனகர் மற்றும் மலேயர் சமூகங்களைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினரின் வாக்குமூலங்களை மதுஷா திசாநாயக்க சேகரித்து வருகின்றார். இதில் சில குடும்பங்கள் பெண் குழந்தை பிறந்த 40ஆவது நாளில் மருத்துவரீதியாக எதுவித தகுதியுமற்ற ‘ஒஸ்த்தி மாமி’ என்றழைக்கப்படும் பெண்களின் உதவியுடன் எப்ஜிஎம் இனை மேற்கொள்வதாகத் திசாநாயக்க கண்டறிந்துள்ளார்.
இலங்கை முழுவதும் முஸ்லிம் சமூகத்தின் மீது பரந்த செல்வாக்குள்ள அகில இலங்கை ஜாமியத்துல் உலமாவானது, 2008ஆம் ஆண்டு இந்த நடைமுறையானது கட்டாயமானது என பத்வா (உத்தரவு) கொடுத்தது. இதன் ஒரு பிரதியும் எப்ஜிஎம் பற்றிய சமர்ப்பிப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
“தங்களுடைய பெண் பிள்ளைகளை இந்த நடைமுறைக்கு உட்படுத்தும் தாய்மாரை இப்போதும் நாம் கொண்டிருக்கிறோம்” என்று அவர் மேலும் கூறுகிறார். இதன் விளைவாக பெண்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்பானது கடும் நோய்த்தொற்றில் தொடங்கி பிறப்புறப்பு திசுக்கள் வீங்குதல் உட்பட சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது வரை பல வகையானதாகும்.
பிரசவ நேரங்களில் சிக்கல் மற்றும் குறைபிரசவம் ஏற்படுவதற்கான அபாயம் அல்லது குழந்தை இறந்தே பிறத்தல் என்பனவும் எப்ஜிஎம்முடனும் தொடர்புடையனவாகும்.
பல பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உளரீதியிலான மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர். “சிறுவர்களால் இதற்கு சம்மதம் வழங்க முடியாது. இது சிறுவர் உரிமைக்கு எதிரான விடயமாகும்” என்று பெர்னாண்டோபுள்ளே கூறினார்.
பெண் சட்ட வல்லுநர்களைக் கொண்ட சில குழுக்களுடன் இணைந்து சுகாதார அமைச்சுடனும், நீதி அமைச்சுடனும் ஒன்றுபட்டு இந்த நடைமுறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இவர், “எங்களால் சில சாதகமான மாற்றங்களைக் கொண்டுவர முடியுமென எண்ணுகிறோம்” என்று கூறுகிறார்.
பாதிப்புக்குள்ளான பெண்கள் பெர்னாண்டோபுள்ளை மற்றும் அவரது சக குழுவினருடன் கலந்துரையாடும் பொழுது இந்தியாவில் ஒரு மில்லியனாயும், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலும் வாழும் ஷியா முஸ்லிம் பிரிவின் ஒரு பகுதியான தாவூதி போராக்களுக்குள் இருக்கும் பாரிய போராட்டத்தின் ஒரு பகுதியாக தாமும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
அறிக்கை சமர்ப்பிப்புக்கு உதவி செய்த சட்டத்தரணி ஏமிஸா டெகல் “எப்.ஜி.எம்.க்கு எதிரான போராட்டத்தை, இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பரந்துபட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாகவே காண்கிறேன்” எனத் தெரிவித்தார்.
“இஸ்லாத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் இத்தீங்கு விளைவிக்கும் கலாசார நடைமுறைக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கான ஒரு பாதையை அவர்கள் ஏற்படுத்துகின்றனர்”.
“எப்.ஜி.எம். இனைத் தடை செய்வதினூடாக பெண்களுக்கு அவர்களின் மகள்களைப் பாதுகாக்க உதவும் அதே நேரத்தில் இது பற்றிய கலந்துரையாடல்கள் மெதுவாக ஆரம்பிக்கத் தொடங்குவதன் ஊடாக சமூகத்தில் உள்ள பெரியவர்களினால் ஏற்படுத்தப்படும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று நான் கருதுகிறேன்” என்றும் அவர் கூறுகிறார்.
மாற்றமடையும் நடத்தை
பாத்திமா, எப்.ஜி.எம். இனால் பாதிப்புக்குள்ளான ஒருவர். தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அவர் தனது பெண்குறி சிதைக்கப்பட்டிருப்பதை தனது இருபது வயதிலேயே கண்டறிந்திருக்கிறார். அவரும் தன்னுடைய வாக்குமூலத்தை எப்.ஜி.எம். அறிக்கைக்காக சமர்ப்பணம் செய்தவர் என்ற ரீதியில் இதனைப் பற்றி வெளிஆட்களிடம் கூறினார் என்ற காரணத்துக்காகவே தான் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கலாம் என்று கூறினார்.
பாத்திமா அடுத்த தலைமுறையின் சிறுமிகளுக்காக வெற்றிகரமாகப் பிரச்சாரம் செய்திருக்கின்றார்.
“ஒவ்வொரு பிள்ளையும் முக்கியம் என்பதுதான் எனது கரிசனையாக இருக்கின்றது. ஒரு பிள்ளையின் சிதைக்கப்படாத எதிர்காலம், ஒரு பிள்ளையின் எப்.ஜி.எம். இன் விளைவுகளற்ற ஒரு வாழ்க்கை – அந்தப் பிள்ளையின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் மாற்றம் – அது மிகவும் முக்கியமானது.’
அவருடைய தாய் இஸ்மத் மிகவும் ஆதரவு அளிப்பவராக இருக்கிறார். அவருடைய காலப்பகுதியில் கத்னா என்பது ஒரு விழுமியம் என்பதுடன் கலந்துரையாடப்படுவதொன்றல்ல. “என்னால் அதற்கெதிராகப் பேச முடிந்திருக்கவில்லை. எனக்கு எந்தவொரு ஆதரவும் இருக்கவில்லை” என்று அவர் கூறினார்.
கத்னா செய்யப்படுவதன் மூலம் பெண் பிள்ளைகள் சுத்தமும், நல்லொழுக்கமும் கொண்டவர்களாக மாறி விடுகிறார்கள் என அவரிடம் கூறப்பட்டது. ஆனால் பாத்திமாவுடனான கலந்துரையாடலின் பின்னர் அவரின் கண்ணோட்டம் மாறிவிட்டது. மேலும், “செயற்படுவது மனம்தான். உடல் அல்ல என்பதனை அறிந்து கொள்ளும் வகையில் நான் எனது பிள்ளைகளை வளர்த்துள்ளேன்” என்றார்.
தன்னுடைய தலைமுறையோடு எப்.ஜி.எம். இன் வலியும், இழிவான நடத்துகையும் நிறுத்தப்பட வேண்டும் என்று நாகியாவும் தீர்மானித்துள்ளார்.
அவரும், அவருடைய கணவரும் தங்களுடைய மகளுக்கு அடையாள ரீதியாகக் கூட, “பட்டர் கத்தி” சடங்கு அவசியமில்லை என்று தீர்மானித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து ஏற்பட்ட பாரிய அழுத்தத்தை எதிர்கொண்டனர்.
“எனக்கு நடந்தது பற்றி என்னால் கோபப்பட முடிந்தளவு என் பெற்றோர் மீது கோபப்பட முடியாது. ஏனென்றால், அவர்கள் காலாகாலமாக பின்பற்றி வந்த நடைமுறைகளேயே பின்பற்றினார்கள்” என்று கூறினார்.
“இது எவ்வளவு பாரதூரமானது என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால், எங்களுக்குத் தெரியும். தன்சீமின் முகத்தைப் பார்த்து சமூக அழுத்தத்தின் காரணமாக நான் இதனை அவளுக்குச் செய்தேன் என்று கூறுவதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.”
“Butter knife or sharp blade? Either way, FGM survivors in Sri Lanka want it to stop” என்ற தலைப்பில் ரொய்ட்டர்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம். தமிழுக்கு தலைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.