பட மூலம், Paradisebeachmirissa
யால தேசிய பூங்காவிற்குள் புளொக் ஒன்று பற்றியும் அங்கு அளவுக்கதிமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது குறித்தும் அதன் காரணமாக வனவிலங்குகளுக்கு குழப்பமும் ஆபத்தும் ஏற்படுத்தப்படுவது குறித்தும் பலர் எழுதிவிட்டனர், பல கருத்துக்களும் வெளியாகியுள்ளன. புளொக் ஒன்றிற்குள் வரும் ஜீப்களின் எண்ணிக்கையை 500 ஆக மட்டுப்படுத்துவது குறித்த சமீபத்தைய தீர்மானம் பல காரணங்களிற்காக தொடர்ந்தும் பின்பற்றமுடியாததாக காணப்படுகின்றது. ஜீப் சாரதிகளின் எண்ணிக்கையை 200 ஆக குறைப்பது – காலை 100, மாலை 100 ஆகக் குறைப்பது என்ற முடிவை ஜீப் சாரதிகள் ஏற்றுக்கொள்ளாததன் காரணமாகவே இந்த புதிய நடைமுறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாற்று சிந்தனைகள் சிலவற்றிற்கான எண்ணங்களை நான் இங்கே பகிர்ந்துகொள்ள முயல்கின்றேன். இது இந்த விவகாரம் குறித்த சிந்தனைக்கான நோக்கத்தை மேலும் விரிவுபடுத்துவதுடன் இந்தப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான நீடித்துநிலைக்கத்தக்க தீர்வை காண்பதற்கான எண்ணத்தொகுப்பை உருவாக்குவதே இதன் நோக்கம். நான் வனவிலங்குகள் விவகாரத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவன் இல்லை. மாறாக கொள்கை மற்றும் தந்திரோபாய விடயங்களில் நிபுணத்துவம் உள்ளது.
மனிதர்களின் நடவடிக்கையில் செல்வாக்கு செலுத்துவதற்கு இரண்டு வகையான அணுகுமுறைகளைப் பின்பற்றலாம் என நான் கருதுகின்றேன். முதலாவது சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை அல்லது விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது சலுகை அடிப்படையிலான அணுமுறை. சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட அணுமுறை என்பது பிரச்சினைகளுக்குத் தீர்வை காண்பதற்காக மீறமுடியாத விதிமுறைகளை உருவாக்கவேண்டும் அல்லது சட்டங்களை இயற்றவேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளது. மேலும், ஒருமுறை சட்டங்களை உருவாக்கினால் அதனை அமுல்படுத்துவதன் மூலம் அது கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யலாம் என்ற அபிப்பிராயத்தையும் அது கொண்டுள்ளது. இதேவேளை, சலுகைமுறை அணுகுமுறை என்பது மனிதர்கள் சில நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சிலவகையான விதத்தில் நடந்துகொள்கின்றனர். அந்த சலுகைகளை நிறுத்துவதன் மூலம் அவர்கள் அவ்வாறு செயற்படுவதை தடுக்கலாம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்னமும் தெளிவாக சொல்லப்போனால் மனிதர்கள் சலுகைகளை அடிப்படையாக வைத்து ஒருவகையான விதத்தில் தாங்கள் நடந்துகொள்வதா இல்லையா என்பதை என்பதை தீர்மானிப்பதை மையமாகக் கொண்டது இந்த முறை.
அதிகாரிகள் சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை பின்பற்றியிருக்கின்றனர். இதற்கு தன்னெழுச்சியான எதிர்ப்பை ஜீப் சாரதிகள் வெளியிட்டுள்ளனர். அவர்கள் பலமான தொழிற்சங்க பின்னணிகளைக் கொண்டவர்கள். அவர்கள் யால தேசிய பூங்காவிற்குள் வரும் ஜீப்களின் எண்ணிக்கையை குறைப்பதை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கையாகக் கருதுகின்றனர். அம்பாந்தோட்டையில் அவர்களுக்கு உள்ள அரசியல் பலத்தைக் கருத்தில்கொள்ளும்போது இந்தப் பிரச்சினைக்கு தற்போதைய சூழலில் சட்டரீதியான தீர்வை காண்பது சாத்தியம் எனத் தோன்றவில்லை. இந்த பிரச்சினை விலங்குகள் பாதுகாப்பிற்கும் மனிதவாழ்வாதாரத்திற்கும் இடையிலான மோதல் என சித்தரிக்கப்படும் வரை பிரச்சினை தொடரும் என நான் கருதுகின்றேன்.
இந்த முறைக்கு மாற்றீடாக சலுகை முறையினை நாங்கள் பயன்படுத்தினால் என்ன? யால தேசிய பூங்காவிற்குள் நுழைவதற்கு பல வாயில்கள் உள்ளன என்பதை நாங்கள் நினைவில் இருத்தவேண்டும். புளொக் ஒன்றிற்கு இரு நுழைவாயில்கள் உள்ளன – பலட்டுபன மற்றும் கட்டகமுவ. புளொக் இரண்டிற்கு இரு தடைசெய்யப்பட்ட நுழைவாயில்கள் உள்ளன. புளொக் மூன்று மற்றும் ஐந்திற்குள் புத்தள – கதிர்காமம் வீதியில் கலகேயூடாக நுழைய முடியும். ஆனால், புளொக் ஒன்றிற்கான வீதிகளுடன் ஒப்பிடும்போது இந்த வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. புளொக் ஒன்றில் சிறுத்தைகளை அதிகமாக காணலாம் என்ற கருத்து காணப்படுகின்றது. ஆனால், நிபுணர்கள் விலங்குகளுக்கு எல்லைகள் இல்லை, விலங்குகளுக்கு வரைபடங்களில் உள்ள எல்லைக்கோடுகள் குறித்தும் எதுவும் தெரியாது என்பதை ஏற்றுக்கொள்வார்கள் என நான் நம்புகின்றேன். இதன் காரணமாக இந்தக் கருத்து எப்படி நம்பகத்தன்மை வாய்ந்தது என்பது எனக்கு விளங்கவில்லை. தேசிய பூங்காவில் உள்ள எல்லைகள் நுண்ணியமானவை என்பதால் சிறுத்தைகளால் அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளமுடியும் என நான் கருதுகின்றேன். அதேவேளை, இந்தக் கருத்து எவ்வாறு மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்பதையும் என்னால் புரிந்துகொள்ளமுடிகின்றது. இதன் காரணமாகவும் இந்த ஏனைய பகுதிகளின் வீதிகள் மோசமாக உள்ளதனாலும் புளொக் ஒன்றிற்கு அதிகமானவர்கள் செல்கின்றனர். ஏனைய பகுதிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலானவர்களே செல்கின்றனர்.
சலுகைகள்
யாலவில் உள்ள ஏனைய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு – புளொக் ஒன்றிற்கான – வில்பத்துவிற்கான வீதிகளை போன்ற வீதிகளை அமைப்பதற்கு அதிகாரிகள் நிதிகளை வழங்கினால் என்ன? திஸ்ஸமகாராமவிற்கும் (இதுவே யாலவிற்கான பல ஜீப் சாரதிகளின் மையமாக உள்ளது) கல்கேயிற்கும் (இங்கேயே மூன்று மற்றும் ஐந்தாவது புளொக்குகள் அமைந்துள்ளன) இடையில் பயணம் செய்வதற்கு 45 நிமிடங்கள் எடுக்கின்றது. ஆனால், இது திஸ்ஸமகாராமவிற்கும் பலட்டுபனவிற்கும் இடையில் (இங்கேயே முதலாவது புளொக் அமைந்திருக்கிறது) பயணம் செய்வதற்கான நேரத்தை விட 20 நிமிடம் கூடுதலாகும். இதுவே திஸ்ஸமகாராம ஜீப் சாரதிகள் தற்போது பயன்படுத்தும் வழமையான வீதியாகவும் காணப்படுகின்றது.
இது மூன்று விடயங்களை செய்யக்கூடும், முதலாவது மேலதிக கொடுப்பனவு-இது திஸ்ஸமகராமவை சேர்ந்த ஜீப் சாரதிகள் மேலும் 20 நிமிடங்கள் பயணம் செய்து ஏனைய புளொக்குகளிற்குள்( மூன்று- ஐந்து)செல்வதற்கான ஊக்கத்தை கொடுக்கும்.இரண்டாவது இது கதிர்காமத்தை தளமாக கொண்ட சாரதிகளிற்கு மேலும் 20 நிமிடங்கள் பயணம் செய்து கலகேயை அடைவதற்கான மாற்றீடாக அமையும்.மூன்றாவது கலகேயிலும் அதற்கு வடக்காக புத்தளவிலும் உள்ள மக்களிற்கு புதிய வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை வழங்கும்.
ஆனால், இன்னமும் சில பிரச்சினைகள் அப்படியே உள்ளன. முதலாவது புளொக்கைப் பயன்படுத்தும் வாகனச்சாரதிகளுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது புளொக்குகளை பயன்படுத்துவதற்கான (மேலும் கூடுதலாக 20 நிமிடங்கள் பயணிக்கவேண்டியிருப்பதால்) சலுகைகளை எவ்வாறு வழங்குவது? ஏன் இதனை செய்வதை மலிவானதாக்க முடியாது? புளொக் 3 மற்றும் 5இல் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டதும் யால பூங்காவிற்குள் நுழையும் வாகனங்களுக்கு விலங்குகள் இயைந்துபோக சிறிது காலம் எடுக்கும். அதனால், அனைத்து புதிய வீதிகளையும் திறப்பதற்கும் விலங்குகளை பார்வையிடுவதற்குமான நேரங்களிற்கு இடையில் குழப்பம் எழக்கூடும். இந்த இடைப்பட்ட காலத்தில் புளொக் 3, 5இற்குள் செல்வதற்கான கட்டணங்களை ஏன் இரண்டு வருடங்களுக்குக் குறைக்கக்கூடாது?இது இந்தப் பகுதிக்கு ஜீப்கள் வருவதற்கு ஜீப் சாரதிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் விலங்குகள் பழகுவதற்கான கால அவகாசத்தை வழங்கும்.
சலுகைகளைக் குறைத்தல்
அதேவேளை, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான வாகனங்களை விட அதிகமாக வரும் வாகனங்களிற்கு வழமையான கட்டணத்தை விட அதிகமான கட்டணத்தை அறவிட்டால் என்ன? (இரண்டு மடங்கு, அவர்கள் வர விரும்பும் பட்சத்தில்).
இதனை இன்னமும் தெளிவாக தெரிவிப்பது என்றால், இத்தனை வாகனங்கள் தான் நுழையலாம் என்ற கட்டுப்பாட்டை நீக்கிவிட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையான வாகனங்கள்தான் உள்வாங்கப்படும், அதன் பின்னர் வரும் வாகனங்களுக்கு மேலதிகமாக அதிக கட்டணத்தை வசூலிக்கலாம். இன்னும் விரிவாக தெரிவிப்பதென்றால் புளொக் ஒன்றிற்குள் அதிகளவு ஜீப்கள் நுழைவதற்குத் தடை விதிக்கவேண்டாம். ஆனால், அதற்கான பொருளாதார செலவை அதிகரியுங்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜீப்கள் உள்ளே நுழைந்த பின்னரும் வேறு ஜீப்கள் உள்ளே நுழைய விரும்பினால் அதற்கான செலவை சாரதிகள் சுற்றுலாப் பயணிகளின் தோளில் சுமத்தவேண்டும்.
புளொக் ஒன்றிற்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் நுழைந்த பின்னர் வரும் ஏனைய வாகனங்களுக்கு அதிக கட்டணம் அறவிடப்படும் அதேவேளை, ஏனைய புளொக்குகளிற்கு செல்லும் வாகனங்களுக்கு பொருளாதார சலுகையை வழங்கவேண்டும். இது செலவு குறைந்த வழிமுறையாகும்.
சில ஒழுங்குகள்
ஆனால், சிலர் சுலபமாக மாறப்போவதில்லை, ஜீப் சாரதிகள் ஓழங்கான முறையில் வரிசையில் நின்றுவிட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையான வாகனங்கள் உள்ளே நுழைந்துவிட்டதை அறிந்ததும் அவர்கள் அங்கிருந்து அமைதியாக வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கலாம். இறுதி நேரத்தில் அவர்கள் இதனை எவ்வாறு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவார்கள்? இந்த விடயத்திற்கு தீர்வை காண்பதற்காக வனவிலங்கு திணைக்களம் அந்த வாரத்திற்கான ஜீப்சாரதிகளை குலுக்கல் முறையில் தெரிவு செய்யவேண்டும். வார ஆரம்பத்தில் அடுத்த வாரத்திற்கான சாரதிகளை தெரிவு செய்யவேண்டும். இதன் மூலம் வாகனச் சாரத்திகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்தலாம். பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எந்த புளொக்கிற்கு செல்வது என்பதையும், அதிக கட்டணத்தை செலுத்த தயாரா என்பதையும் அவர்கள் தீர்மானிக்கலாம். ஏனைய புளொக்குகளிற்கான வீதிகள், முதலாவது புளொக் வீதிகளை போன்று அபிவிருத்தி செய்யப்பட்டவுடன அதன் பின்னர் விலங்குகளைப் பார்வையிடுவது குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகும் பட்சத்தில் – முதலாவது புளொக் அதிகளவு சுற்றுலாப் பயணிகளின் வருகை பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
“Conserving Yala: An Alternative Approach” என்ற தலைப்பில் ‘கிரவுண்ட் விவ்ஸ்’ தளத்தில் வெளியாகிய கட்டுரையின் தமிழாக்கம்