பட மூலம், Selvaraja Rajasegar
சம்பவம் 1:
“எங்களது திருமணம் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் சந்தோசமாகத்தான் வாழ்ந்தோம். நான் இரண்டாவது தாரம். முதல் மனைவியுடன் கோபம், அவளை விட்டு விட்டேன் என்று என்னை மணந்தார். திருமணமான 2ஆவது வருடம் மீண்டும் முதல் மனைவியுடன் சேர்ந்து விட்டார். என்னைத் தலாக் சொல்லவில்லை. எங்களுக்கு ஒரு மகள். மகளின் பெயரைப் பதிவு செய்யக் கேட்டபோது தட்டிக் கழித்துக் கொண்டே வந்தார். பின்னர் ஒரு நாள் ஆஸ்பத்திரியில் பதிவை செய்ய அவர்கள் கேட்டபோது எங்களது திருமணப்பதிவு இல்லாததால் அவரது முதல் மனைவியுடனான திருமணச் சான்றிதழைக் கொடுத்து எனது மகளிற்கு பெயர்ப்பதிவை வைத்திருக்கிறார். இப்போது எனது மகள் சட்டப்படி எனது மகளில்லை. எந்த நிமிடமும் அவள்தான் தாய் என்று என் பிள்ளையை எடுத்துக் கொண்டு போகலாம். பத்து மாசம் சுமந்து பாலைக் கொடுத்து வளர்த்த தாய்க்கு இதனை விட துன்பமிருக்கா?”
சம்பவம் 2:
“நானும், எனது கணவரும் திருமணமாகி 3 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தோம். எங்களுக்கு நிக்காஹ் நடந்தது. ஆனால், பதிவு செய்யப்படவில்லை. எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இப்போது 6 வயது அவருக்கு. திருமணமான 3ஆவது வருடமே அவர் இன்னுமொரு திருமணம் செய்துகொண்டு, என்னை விட்டுப் பிரிந்துச் சென்று விட்டார். ஆனால், எங்களுக்கு விவாகரத்தாகவில்லை. எனக்கோ, மகனுக்கோ பராமரிப்புக்கான பணமும் தருவதில்லை. மகனைப் போன வருசமே பாடசாலைக்கு சேர்த்திருக்கணும். பாடசாலைக்கு சேர்க்க பிறப்புச் சான்றிதழ் இல்லை. பிறப்புச் சான்றிதழ் பெற திருமணப் பதிவைக் கேட்கிறார்கள். எங்கள் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. என் கணவரிடம் கேட்டால் அவர் அக்கறை காட்டுவதும் இல்லை. அடிக்காத குறையாக துரத்துகிறார். அரசாங்க அதிகாரியிடம் கேட்டால் தாயின் பெயரில் மட்டும் பதிவை வைத்துத் தர முடியும் என்கிறார். நான் எப்படி இதற்கு ஒத்துக் கொள்வது? ஒரு காலத்தில் என் பிள்ளை வளர்ந்து, என்னை ஹராத்திலேதான் பெத்தீங்களா? என்று கேட்டால் நான் என்ன சொல்வது? ஹலாலாக பிள்ளை பெற்ற எனக்கு, பிள்ளைக்கு வாப்பாவின் பெயரையும் போட முடியாவிட்டால் இதுல என்ன நீதி இருக்கு? அல்லாஹ்க்கே இது பொறுக்குமா?”
சம்பவம் 3:
“எனது மகளுக்கும், மருமகனுக்கும் பள்ளியால் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் பதிவு செய்யப்படவில்லை. பள்ளிப் பதிவுத் துண்டும் இல்லை. திருமணமான கொஞ்ச நாளிலேயே எனது மருமகன் எனது மகளை அடிக்கத் தொடங்கிவிட்டான். எனது மகள் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தாள். ஒரு நாள் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து என் மகளைக் கொன்று விட்டான். அது மட்டுமன்றி 8 மாத பெண் குழந்தையையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டான். என் மகளின் கடைசி ஆசை தன் மகளை நாங்கள் வளர்க்க வேண்டும் என்பது. இத்தகைய கொடூரமான மனிதனிடம் எப்படிக் குழந்தையை விட்டு வைக்க முடியும்? பிள்ளையைக் கேட்டுப் போனால், திருமணப் பதிவைக் கொண்டு வரக் கேட்கிறார்கள். எனது மகளின் பிள்ளைதான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார்கள். எங்களிடம் திருமணப்பதிவும் இல்லை. அதனால் பிள்ளையின் பதிவும் இல்லை. கஸ்டத்துக்கு மேல் கஸ்டம். நாங்கள் என்னதான் செய்வது?”
###
இலங்கையில் கண்டிய சட்டத்தின் கீழ் திருமணம் கட்டாயம் பதியப்படல் வேண்டும். பொதுச் சட்டத்தின் கீழ் திருமணப்பதிவு கட்டாயமானதல்ல, எனினும், இன்றைய நடைமுறையின் அத்தியாவசியம் கருதி அனைத்து திருமணங்களும் பதிவு செய்யப்படுகின்றன (அண்மையில் பொதுச் சட்டத்தின் கீழான திருமணங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்படல் வேண்டும் என்பது தொடர்பிலான சுற்றறிக்கை ஒன்றை பதிவாளர் நாயகம் வெளியிட்டிருந்தார்). திருமணம் இடம்பெறும் போதே பதிவாளர் முன்னிலையில் மணமகனும், மணமகளும் கையொப்பமிடுகின்றனர். இது பல நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கின்றது.
-
முஸ்லிம் பெண்களின் உரிமைகளை யதார்த்தமாக்குவது எப்போது?
-
(Video) MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 7)
-
முஸ்லிம் தனியார் சட்டம் – சில அவதானங்கள்
1951ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது திருமணங்கள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்யப்படும் என்னும் ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஆயினும், பதிவு செய்யப்படாத திருமணங்களும் வலிதானவையே என்னும் விலக்களிப்பும் காணப்படுகின்றபடியால் இன்றளவும் பல திருமணங்கள் குறிப்பாக பலதார மணங்கள் பதிவு செய்யப்படாமல் நிறைவேற்றப்படுகின்றன. இதன் விளைவாக பெண்களும், பிள்ளைகளும் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்தம் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் இந்தக் காலகட்டத்தில் திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படல் வேண்டுமா என்பதிலும் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. பதிவு செய்தலானது பெண்களதும், பிள்ளைகளதும் சமூகத்தினதும் நன்மைக்கு அவசியம் என்று பதிவை கட்டாயமாக்கும் முயற்சிகள் இடம்பெறும் அதேவேளை பதிவு செய்யக் கூடாது என்பதற்கான அழுத்தமும் காணப்படுகின்றன. இதற்காக முன்வைக்கப்படும் இரண்டு காரணங்கள் பின்வருமாறு.
- இஸ்லாமிய சட்டப்படி திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமில்லை.
நிச்சயமாக திருமணத்தைப் பதிவு செய்வது இஸ்லாமியச் சட்டத்தின்படி கட்டாயமில்லை. நிச்சயமாக வியாபாரத்தைப் பதிவு செய்வது இஸ்லாத்தில் கட்டாயமில்லை. எத்தனை கம்பனிகள், வியாபாரங்களை முஸ்லிம்கள் நடைமுறைத் தேவைக்கேற்றபடி கட்டாயமாக பதிந்திருக்கிறார்கள்? வாகனத்தைப் பதிவு செய்தல் இஸ்லாத்தில் கட்டாயமில்லை. எத்தனை பேர் வாகனங்களைப் பதியாமல் ஓடுகிறார்கள்? அப்படி யாரையும் கண்டுபிடிக்க முடியாது. சாரதி அனுமதிப்பத்திரம் பதிவு செய்தல் இஸ்லாத்தில் கட்டாயமில்லை. நீங்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தைச் செலுத்த முடியுமா? உங்களது அடையாளத்தை நிரூபிக்க அடையாள அட்டையைப் பெற்றிருக்கிறீர்கள் அல்லவா? குழந்தை பிறந்தால் பிறப்புச் சான்றிதழ் இஸ்லாத்தில் கட்டாயமில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இன்றி வைத்திருக்கின்றீர்களா? இங்கு கவனிக்க வேண்டிய விடயம், இவை அனைத்தும் இஸ்லாத்துக்கு முரணானவை அல்ல என்பதாகும். இஸ்லாமியச் சட்டம் ஹராமாக்கியவை தவிர அனைத்தும் ஹலால் என்பதே மார்க்க விதி. ஒரு நாட்டின் விதிகளுக்கமைய, நடைமுறைத் தேவைகளுக்கமைய எமது வாழ்க்கை முறைகளை இஸ்லாத்துக்கு முரணற்ற வகையில் அமைத்துக் கொள்கிறோம்.
நாட்டின் விதிகளுக்கமைய அனைத்து விடயங்களையும் செய்யும் நாம் பெண்களைப் பாதிக்கும் விடயங்களில் மட்டும் ஏன் இத்தனை பிடிவாதம் காட்டுகின்றோம்? உதாரணமாக, ஹஜ் கடமையை நிறைவேற்ற கணவன் மனைவியாக செல்ல திருமணப்பதிவுச் சான்றிதழ் அவசியமாக உள்ளது. இதற்கு என்ன சாட்டுச் சொல்ல முடியும்? நிக்காஹ் செய்து முறைப்படி கணவன் மனைவியாக வாழ்வதனை பதிவு செய்து, பிள்ளையின் பிறப்புச் சான்றிதழை சிக்கலின்றி முறையாகப் பெறுவதில் எப்படி மார்க்கத்தை நுழைத்து பிழை காண்கிறோம்? இஸ்லாம் திருமணத்துக்கோ, விவாகரத்துக்கோ சாட்சிகளை வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறது. திருமணத்தைப் பதிவு செய்வதனை விட இஸ்லாம் தேவைப்படுத்தியுள்ள சாட்சியத்தை எவ்வாறு பலமாக நிறுவ முடியும்?
- திருமணப் பதிவைக் கட்டாயமாக்கினால் பதிவு செய்யப்படாத திருமணங்கள் வலிதற்றவையாகிவிடும்.
புதிதாக சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தால் அது பற்றித் தெரியாத நிலையில் பதிவு செய்யப்படாத திருமணங்கள் வலிதற்றவையாகும் என்ற கருத்தானது மிகவும் விசனத்துக்குரியதாகும். இன்றைய காலகட்டத்தில் தொடர்பாடல் வலையமைப்பும், நவீன தொலைத்தொடர்பு வசதிகளும் (வட்ஸ் அப் போன்றன) நொடியில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகின்றன. உதாரணமாக, நாளைக்கு பெருநாள்தானா என்பதனை, பிறை காணப்பட்டதா என்பதனை நொடியில் அறிந்து கொள்கிறோம். அது தவிர முஸ்லிம்களின் மிகப் பலம் வாய்ந்த வெள்ளிக்கிழமை ஜூம்மா ஒன்று கூடலின் பின்னர் இது தொடர்பான அறிவித்தலை தர முடியும். ஊர்ப்பகுதிகளில் பள்ளிகளின் ஊடான அறிவித்தலில் மிகச் சுலபமாக திருமணப் பதிவின் கட்டாயத்தை அறியத் தரலாம். வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சியின் ஊடாக அறியத்தர முடியும். இதன் மூலம் பதிவு செய்யப்படாத திருமணங்களின் வலிதற்ற தன்மை பற்றி அறிவூட்ட முடியும்.
அது மட்டுமன்றி பொதுவாக சட்டத்திருத்தம் செய்யும் போது ஏற்கனவேயுள்ள நிலைமையினை சீர்செய்ய ஒரு காலக்கெடு வழங்கப்படும். அதன்படி ஏற்கனவே பதிவு செய்யப்படாமல் இருக்கின்ற திருமணங்களுக்கு உதாரணமாக, 3 மாதம் அல்லது 6 மாதம் போன்ற கால அவகாசம் கொடுத்து அவை பதிவு செய்யப்பட முடியும். இதன் மூலம் எந்தவொரு திருமணமும் சட்டரீதியாக பாதுகாக்கப்படும்.
திருமணம் ஒன்று பதிவு செய்யப்படும் போது அது திருமணத்துக்கான எழுத்து மூல சான்றாக அமைகின்றது. இதனால் திருமண வயது, விவாகரத்து, மஹர், பராமரிப்பு, பலதார மணம், பிள்ளையின் பாதுகாவல் தொடர்பில் பிணக்குகள் ஏதும் எழும் போது அவை தொடர்பாக கணவன் மனைவி இருவரது உரிமைகளையும் சிரமமின்றி பெறுவதற்கு பதிவானது நன்மையளிக்கும். பதிவு செய்தால் மட்டுமே திருமணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முடியும். பதிவு செய்யப்படாததால் திருமணச்சான்றிதழ் இல்லாத சந்தர்ப்பங்களில் ஒரு குழந்தைக்கு பிறப்புப் பதிவுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுதல் கூட நடைமுறையில் பல சிக்கல்களையும் வீண் அலைச்சலையும் உருவாக்குகின்றது.
முஸ்லிம்களைப் பொறுத்தளவில் பலதார மணத்தை முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் அங்கீகரிக்கின்றது. இதனால் ஏனைய சமூகத்தவரை விடவும் மிகவும் முக்கியமாக எமக்கே திருமணங்களைப் பதிவு செய்தல் அவசியமாகின்றது. ஊருக்கு ஊர், மாவட்டத்துக்கு மாவட்டம், வெளிநாடுகளிலும் கூட பலதார மணங்களைச் செய்து கொள்ளும் முஸ்லிம் ஆண்கள், உரிய முறையில் தமது மனைவியருக்கும், பிள்ளைகளுக்கும் தமது கடமையினைச் செய்வதனை உறுதிப்படுத்தவும், பலதார மணம் என்ற சலுகையைப் பிழையாகப் பாவித்து பெண்களை ஏமாற்றுவதிலிருந்து தடுக்கவும் திருமணங்களைக் கட்டாயமாகப் பதிவு செய்தல் அவசியமாகின்றது.
சம்பவம் 4:
“எனது கணவருக்கும், எனக்கும் நிக்காஹ் நடந்தது. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். 4 வயதில் ஒரு மகன். 2 வயதில் ஒரு மகள். எந்தப் பிரச்சினையும் இல்லாம வாழ்ந்தோம். அவர் சௌதியில் தொழில் செய்து வந்தார். திடீரென்று இன்னொரு பெண்ணுடன் வாழ்வதாகச் சொன்னார். பராமரிப்புக்கான பணமும் செலுத்துவதில்லை. காதி கோட்டுக்குப் போனால் காதியார் திருமணப்பதிவைக் கேட்கிறார். ஆனால், பதிவு இல்லாவிட்டாலும் வழக்கை எடுக்க முடியும் என்று இங்குள்ள பெண்கள் அமைப்பும், சட்டத்தரணியும் கூறுகின்றனர். ஆனால், காதியார் கெட்ட வார்த்தையால் ஏசுகிறார். நான் கோட்டுக்குப் போறதையே நிறுத்தி விட்டேன். பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை. கண்டதையும் கேட்டு அவமானப்பட முடியவில்லை.”
அநேகமான வழக்குகளில் காதிகளுக்கு சட்டம் தெரிந்திருப்பதில்லை. இதனால், பெண்கள் வழக்கிடும் போது திருமணச் சான்றிதழைக் கொண்டு வரச் சொல்லிக் கட்டாயப் படுத்துகின்றனர். ஆனால், அது தற்போதைய சட்டத்தின் படி தேவையற்றது. காதிகளது சட்டம் பற்றிய அறியாமையும் பெண்கள் கட்டாயம் திருமணப்பதிவுச் சான்றிதழை வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நடைமுறையில் ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தைப் பதிவு செய்தலானது இஸ்லாத்துக்கு முரணான ஒரு விடயமல்ல. மாறாக இஸ்லாமிய அடிப்படையில் திருமணச் சாட்சியத்துக்கு வலுவூட்டக் கூடிய விடயம், இன்றைய காலகட்டத்தில் நாட்டின் நடைமுறைத் தேவைகளுக்கு அத்தியாவசியமான ஒரு விடயம், பிள்ளைகளின் பெயர்ப்பதிவுக்கும், அவர்கள் கல்வியைப் பெறுவதற்கும் இன்றியமையாத விடயம். திருமணம் பதிவு செய்யப்படாமையினால் பாதிக்கப்படுவது எமது சமூகம், எமது சகோதரிகள், எமது சந்ததியினர். முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இதன் தாக்கத்தை உணர்ந்து இம்மாற்றத்துக்காய் குரல் கொடுக்க முன்வரவேண்டும். நீதியின் பக்கம் நில்லுங்கள்.
ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன்