படம் | Scroll.In
இலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என்னும் போது சில அபிப்பிராயங்களை முன்வைக்கிறோம். இதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கிறோம். இந்த அபிப்பிராயத்தை அல்லாஹ்வின் சட்டம் என்ற பொறுப்புணர்வோடு செய்கிறோம். இது இஸ்லாத்தை படித்தவர்களின் கடமை, பொறுப்பு என்ற வகையில் செய்கிறோம். இதனை ஒரு போராட்டமாகவோ, கருத்து வேறுபாடாகவோ நாங்கள் செய்யவில்லை.
ஒரு விடயத்தில் இன்னொரு அபிப்பிராயம் இருப்பின் கட்டாயமாக அந்த அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டும். இது இஸ்லாமிய பாரம்பரியம். உதாரணமாக இது இமாம் அபூஹனிபா, இமாம் மாலிகி போன்ற சமகாலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் தொட்டு வந்துள்ளது. கருத்துச் சொல்வது, அங்கீகரிப்பது, சகித்துக் கொள்வது இஸ்லாமிய பாரம்பரியம். அந்த ஒழுக்கம் எமது நாட்டில் இன்னும் போதாது. அதுதான் காரணம். ஆனால் இஸ்லாத்தைப் படித்து விட்டு அபிப்பிராயம் சொல்லாமல் இருப்பது அழகில்லை. அது பொருத்தமும் இல்லை. பிரச்சினைப்படுத்திக் குழப்புவதற்காக அன்றி தெளிவுக்காகவே இந்த அவதானம்.
பெண்கள் காதிகளாக, திருமணப்பதிவாளர்களாக, காதிக்கு ஆலோசகராக இருப்பதைப் பற்றி
முஸ்லிம் தனியார் சட்டத்தை எடுத்து நோக்கினால், பெண்கள் காதிகளாக இருக்க முடியாது, திருமணப்பதிவாளராக இருக்க முடியாது, காதிக்கு ஆலோசகராக இருக்க முடியாது, ஒரு இடத்திலும் இருக்க முடியாது. பெண்ணுக்கு இடமில்லை. இதற்குச் சொல்லப்படும் நியாயம் என்னவென்றால் அல்குர்ஆன் வசனம் 4:34 – ‘பெண்கள் மீதான நிர்வாகத் தலைமை ஆண்கள்’. ஆகையால் பெண் பதவி வகிக்க ஏலாது. ஆனால், இந்தக் குர்ஆன் வசனத்தின் முன்பின் பகுதிகளை வாசித்தால் இதனை தெளிவாக விளங்கலாம்.
இது குடும்ப நிர்வாகத்தினைத்தான் கூறுகிறது. பொது நிர்வாகத்தை அல்ல. இதனைப் பொதுமைப்படுத்தினால் பெரும் பிரச்சினையாகிப் போகும். எப்படி எனின் ஒரு பாடசாலையில் அதிபராக இருக்க முடியாது. ஒரு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக இருக்க முடியாது. ஒரு வைத்தியசாலையில் பணிப்பாளராக இருக்க முடியாது. இப்படியான பதவிகள் எதுவும் வகிக்க முடியாது. ஏனெனில், இதற்குக் கீழான பதவிகளில் நிச்சயமாக ஆண்கள் இருப்பார்கள். அவர்களின் மீதான நிர்வாகமாக பெண் இருப்பார். எனவே, மேற்சொன்ன வசனத்தைப் பொதுமைப்படுத்தின் ஒன்றுமே செய்ய முடியாத நிலைக்கு வந்து சேரும். ஆனால், எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஒரு பெண் படித்து பதவிக்கு வரலாம். அந்தத் தகுதி பெண்களுக்கு கண்டிப்பாக இருக்கின்றது. சட்டத்தரணியாக வரலாம். நீதிபதியாக வரலாம். எங்கள் பெண்களே நிறைய சட்டத்தரணிகளாக இருக்கிறார்கள். எனவே, இந்த ஆயத்தை பொதுமைப்படுத்தி பெண்கள் ஒரு இடத்திலும் பதவி வகிக்க இயலாது என்றால் அது நியாயமல்ல. பெண்கள் பதவிகளை ஏற்கக்கூடாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரம் இல்லை என்பதுதான் பதவி வகிக்கலாம் என்பதற்கான ஆதாரம். அவ்வாறு பதவி வகிக்கக் கூடாது எனின் அதனை அல்குர்ஆனும், ஹதீஸும் சொல்ல வேண்டும். எனவே, இதனை எப்படிப் பார்க்க வேண்டும்.
- ஆண்களும், பெண்களும் பொறுப்புக்களை ஏற்கும் சமதகுதி வாய்ந்தவர்கள். இது பொதுக்கருத்து. இதன்படி பெண்கள் பதவி வகிக்கலாம் என்பதுதான் உண்மை. இதற்கு தனியே ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஆண்களும், பெண்களும் சம அந்தஸ்துள்ளவர்கள். எனவே, இந்தப் பதவிகளை வகிக்கலாம் என்ற பொதுக் கருத்தை முன்வைக்கலாம்.
- நபியவர்களின் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் நீதிபதிகளாகக் கடமையாற்றவில்லை என்பது ஒரு ஆதாரமல்ல. இல்லை என்பதனை ஆதாரமாகக் கொள்ள முடியாது. இது அந்தக்கால சமூக யதார்த்தம். உதாரணமாக அமெரிக்காவில் பெண்ணொன்று ஜனாதிபதியாக வந்ததில்லை. ஹிலாரி கிளிண்டன் கேட்ட போதும் தோற்றுப் போனார். இது சமூக யதார்த்தம். பெண்கள் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கவில்லை என்பதன் அர்த்தம் அவர்கள் நாடாளுமன்றத்துக்கோ, ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமமந்திரியாகவோ பதவி வகிக்க முடியாது என்பதல்ல.
இந்தக் கருத்தை நாம் எப்படி விளங்கலாம் எனின், இமாம் தபரியின் கருத்துப்படி, பெண்கள் எந்தத் தலைமைப்பதவியும் வகிக்கலாம். இமாம் இப்னு அபூஹனிபா, இமாம் இப்னு ஹஸம் என்போர் பெண்கள் நீதிபதியாக பதவியை வகிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி எனின் இதற்கு பின்னணி ஒன்று உண்டு. இமாம் ஷாபியை பொறுத்தளவில் நீதிபதி பதவி வகிக்க முடியாது. இமாம்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. எனவே, இதனை நாம் எப்படி பார்க்க வேண்டும் எனில் இது ஹதீஸோ அல்லது அல்குர்ஆன் ஆயத்தோ அல்ல. அதன் நேரடிக் கருத்தும் அல்ல. அந்தக் கால சூழ்நிலையின் படி ஒவ்வொரு இமாம்கள் கொண்ட கருத்து.
‘பெண்ணும் அரசியல் வேலைத் திட்டங்களும் – ஓர் இஸ்லாமிய பார்வை’ என்று ஹிபா றஊப் இஸ்ஸத் இனால் கெய்ரோ பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில் பெண்கள் இந்தப் பதவிகள் எல்லாவற்றுக்கும் வரலாம். வரக்கூடாது என்பதற்கு ஆதாரம் இல்லை’ என்பதை எடுத்துக் காட்டுகிறார்.
இஸ்லாமிய வரலாற்றில் அல்ஹூர்ரதுல் சுலஹியா என்ற பெண் ஹிஜ்ரி 6ஆம் நூற்றாண்டில் ஏமனில் ஒரு பகுதியில் 40 வருடகாலம் ஆட்சித் தலைவராக இருந்தார். 2 வருடம் 5 வருடமல்ல, 40 வருடம். உலமாக்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டு அவருக்கு கீழ் இருந்தார்கள். ஹஸாலா உம்மு ஷமீம் என்ற பெண் ஹவாரிஜ்களுக்கு தலைமை வகித்தார். அவர்களை நாங்கள் காபிர்கள் என்று சொல்வதில்லையே. அவர்கள் இஸ்லாமியர்கள். அந்தக் கூட்டத்துக்கு தலைமையாக இப்பெண் இருந்தார். இவரின் அதிவிசேசம் என்னவெனில் இந்தப் பெண் பெரும் போராளி. கடுமையான போராளி. எந்தளவுக்கு எனில், இப்பெண் தலைமை வகிக்கிறார் என்று கண்டால் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அந்த யுத்தத்திற்கே வரமாட்டார். அந்தளவுக்குப் பெரிய போராளி. யூசுப்பினை உங்களுக்குத் தெரியும். பெரும் போராளி. அநியாயக்காரன். அவன் இப்பெண் தலைமை வகித்தால் பின்வாங்குவான்.
ஸஜரதுர் துர் என்ற பெண் மம்லூக் ஆட்சிக் காலத்தில் அதாவது அடிமை ஆட்சி என்றொரு காலம் வந்தது. அப்போது இப்பெண் அவரது கணவர் உயிரிழந்த பின் சிறிது காலம் ஆட்சித் தலைமை வகித்தார் என்பது வரலாற்றில் இருக்கிறது. ஆயிஷா நாயகி அவர்கள் ஜமல் யுத்தத்தில் தலைமை வகித்தார்கள் என்பதனை பார்த்திருக்கிறோம். அவர்கள் ஒரு போராட்டத்தையே முன்னின்று நடத்தினார்கள். தலைவர்களை நியமிப்பது, தொழுகைக்கு ஆட்களை நியமிப்பது, இமாம்களை நியமிப்பது, கட்டளைகளைப் பிறப்பிப்பது என்பவற்றை ஆயிஷா நாயகி அவர்களே கைக்கொண்டிருந்தார்கள். அவர்கள்தான் மக்களைக் கூட்டி பேச்சு நிகழ்த்தினார்கள். இதனை நாங்கள் இஸ்லாமிய வரலாற்றில் காண்கிறோம். இவ்வாறு நிறைய ஆதாரம் உண்டு.
இதற்கு மாற்றமாக என்னவுண்டு எனப்பார்த்தால் மேற்சொன்ன குர்ஆன் வசனத்தைக் காட்டுகிறார்கள். ஆனால், அது குடும்ப நிர்வாகத்தை மட்டுமே குறிப்பிடுகிறது. மற்றையது ஒரு சமூகத்துக்கு பெண் தலைமை ஏற்றால் அந்த சமூகம் வெற்றி பெறாது என்ற ஹதீஸைக் காட்டுகிறார்கள். இது பாரசீக சமூகத்தைப் பற்றியது. அந்த நேரத்தில் ஆட்சிக்கு வந்த அந்த பாரசீக பெண்ணைப்பற்றி றசூலுல்லாஹ் சொன்ன கருத்தே இது. இது பெண்கள் அனைவருக்கும் எனின் எல்லோருக்கும் பொருந்த வேண்டும். ஆனால், நடைமுறையில் பார்த்தால் அது பொருந்துதில்லை. அல்குர்ஆனில் வரும் சம்பவத்துக்கே பொருந்துதில்லை. அது குர்ஆனில் பல்கீஸ் என்ற அரசி பற்றியது. அந்தப் பெண்ணின் ஆட்சியால் நல்லதே நடந்தது. கடைசியில் அந்த மக்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அப்படியெனின் அந்தப் பெண்ணின் ஆட்சியில் மக்கள் அழிந்தா போனார்கள்? இரண்டாவது, நவீன உலகத்தில் பெண்கள் ஆட்சி செய்த பல நாடுகள் நன்றாக இருந்ததைக் காண்கிறோம். எனவே, மேற்சொன்ன ஹதீஸை பார்த்தால் பொருத்தமில்லாமல் இருக்கிறது. எனவே, இந்த ஹதீஸை நாம் எப்படி நோக்க வேண்டும் எனில் குறிப்பிட்ட கால சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமாக கவனத்தில்கொள்ள வேண்டும். மாறாக பொதுமைப்படுத்தினால் வஹி பிழை என்று வந்துவிடும்.
அந்த வகையில் ஹதீஸையோ குர்ஆனையோ பாவித்து பெண்களை பதவி வகிக்க முடியாது என்று சொல்ல முடியாது. அதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. இத்தகைய ஆதாரம் இல்லை என்பதுதான் பெண்கள் பதவி வகிக்க முடியும் என்பதற்கான ஆதாரமாகும்.
ஷெய்க். உஸ்தாஸ். எம்.ஏ.எம். மன்சூர்
தொடர்புபட்ட கட்டுரைகள்:
நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும்