படம் | TheStar

இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டமானது (MMDA) பல ஆய்வுகளினதும் கற்கைகளினதும் கருப்பொருளாக இருந்து வருகின்றது. எவ்வாறாயினும், மிகவும் மனம் வருந்தத்தக்க வகையில் நடப்பது என்னவென்றால் மறுசீரமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற சகல முயற்சிகளும் ஏதோ ஒரு குழு மட்டத்தில் அல்லது குழுக்கள் பரிந்துரைகளை விடுப்பதுடன் முடிவடைந்து விடுகின்றன. இவற்றிற்கு அப்பால் எதுவும் நடப்பதில்லை. இதனால், தமது கணவன்மாரினால் முஸ்லிம் பெண்கள் மோசமான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவது தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. தமது மனைவிமாரை அடித்துத் தண்டிப்பது தமது உரிமை என்று கூட சில கணவன்மார்கள் நினைக்கின்றனர். தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனும் நிலைக்கு பெண்களைத் தள்ளுமளவிற்கு இத்துஷ்பிரயோகங்கள் கடுமையானவையாக இருக்கின்றன. துஷ்பிரயோகங்கள் மனைவிமாருக்கு மட்டுமல்லாது பிள்ளைகளுக்கும் உடல்ரீதியான தாக்கத்தினையும் மனோரீதியான சித்திரவதையினையும் ஏற்படுத்துகின்றன.

இருப்பினும், பயன்பாட்டிலுள்ள சட்ட முறைமை மூலமாக முஸ்லிம் பெண்களால் பரிகாரம் காண முடியாமையினால் குற்றத்தை நிகழ்த்துபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து அதிகமான சந்தர்ப்பங்களில் தப்பிவிடுகின்றனர். எனவே, இந்தக் கட்டுரையானது முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டமுறைகளில் நிலைநாட்டப்பட்டு பேணப்பட்டுவருவதில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் மௌனமாகத் துயருருகின்ற பெண்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை கோடிட்டுக் காட்டுவதாகவும் உள்ளது. அத்துடன், ஆணாதிக்கத்திற்கு உட்பட்டு மறுசீரமைப்பினைக் கோரி நிற்கின்ற காதி நீதிமன்ற முறைமையிலே பெண்களுக்கு சமமான நீதி கிடைக்காத காரணத்தினால் அவர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளையும் வெளிக்காட்டுகின்ற ஒரு முயற்சியாகவும் உள்ளது.

நற்பண்புடைய மற்றும் நல்ல பதவியினைக் கொண்ட எந்தவொரு ஆண் முஸ்லிமும் காதி நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு நியமிக்கப்படுகின்ற நீதிபதியின் நியாயாதிக்கமானது பிரதேச ரீதியாக வரையறுக்கப்படுவதுடன், அது குறிப்பிட்ட காலத்திற்கும் வரையறுக்கப்பட்டதாகும். நியமிக்கப்படும் காதி நீதிபதியானவர் ஷரியாச் சட்டத்தினைப் பற்றியோ அல்லது குறிப்பாக முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம் பற்றியோ புரிதலைக் கொண்டிருக்கின்றாரா என்பதை வெளிப்படுத்துவதற்கான எந்தத் தேவைப்பாடுகளும் நியமனத்தின்போது கோரப்படுவதில்லை. பெரும்பான்மையான இலங்கையின் காதிகள் முறைசார் சட்டப் பயிற்சியினைக் கொண்டிருப்பதில்லை. காதிமார்களின் தீர்மானங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும்போது அதனை விசாரிப்பதற்காக இச்சட்டமானது காதிச் சபையினை நியமிப்பதற்கான ஏற்பாடுகளையும் வழங்குகின்றது. முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தின் 4ஆம் பிரிவானது பின்வரும் கோரிக்கைகள் எவற்றினையாவது விசாரித்து அவற்றுக்கு தீர்ப்பு வழங்குவதை உள்ளடக்கும் தன்மை மிக்கதான திருமண நியாயாதிக்கத்தினை காதிக்கு வழங்குகின்றது. அவையாவன:

மகரைப் பெற்றுத் தரக்கோரும் மனைவியின் கோரிக்கை, பராமரிப்பினைப் பெற்றுத் தரக்கோரும் மனைவியின் கோரிக்கை அல்லது மனைவியின் சார்பில் பராமரிப்பினை பெற்றுத் தரக்கோரும் கோரிக்கை அல்லது பராமரிப்பினை பெற்றுத் தருமாறு பிள்ளை விடுக்கும் கோரிக்கை (திருமண பந்தத்திற்குள் பிறந்த அல்லது திருமண பந்தத்திற்கு அப்பால் பிறந்த), பராமரிப்பினை பெற்றுத்தருமாறு பிள்ளையின் சார்பில் விடுக்கப்படும் கோரிக்கை, இத்தா பராமரிப்புக்காக விவாகரத்துப் பெற்ற மனைவி விடுக்கும் கோரிக்கை, இந்தப் பிரிவின் கீழ் கட்டளையிடப்படும் எந்தவொரு பராமரிப்புத் தொகையினையும் அதிகரிக்க அல்லது குறைக்க விடுக்கப்படும் வேண்டுகோள், கைக்கூலிக்கான வேண்டுகோள், கணவன் மனைவிக்கு இடையில் காதியினை மத்தியஸ்த்தம் செய்து வைக்குமாறு கோரும் வேண்டுகோள், திருமணத்தினை வறிதாக்கும்படி கணவன் அல்லது மனைவி விடுக்கும் வேண்டுகோள்.

நியாயமான நீதி விசாரணையினை அணுகிக்கொள்ள முடியாமல் பெண்கள் அதிகமாக முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் இச்சமுதாய நீதிமன்ற முறைகளிலேயே ஊசலாடுகின்றன. இச்சமுதாய நீதிமன்றங்கள் ஆணாதிக்கத்திற்கு உட்பட்டிருப்பதுடன் அவை குடும்ப வன்முறைச் சட்டம் உள்ளடங்கலாக பொதுச்சட்டத்தைப் பயன்படுத்தி நீதியினைக் கோருவதை விட்டும் பெண்களை இது அப்புறப்படுத்துகின்றது. மேலும், பெண்களும் சிறுவர்களும் முகங்கொடுக்கின்ற வன்முறையின் தீவிரத்தன்மையினைக் கருத்தில் கொள்வதரிது. அதிகமான சந்தர்ப்பங்களில் குடும்ப வன்முறை நிகழும்போது தங்களது கணவன்மாருடன் செல்லுமாறு பெண்களுக்கு கூறப்படுவதுடன், தனது மனைவிமாரை அன்புடன் நடத்துமாறு கணவன்மாரும் வேண்டப்படுகின்றனர்.

காதி நீதிமன்றங்களில் வழக்குகளைச் சந்தித்துள்ள 26 முஸ்லிம் பெண்களை புத்தளத்திலும் மன்னாரிலும் சந்தித்திருந்தேன். இவர்கள் கூறிய கதைகளில் அதிகமானவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக இருந்தது. மேலும், காதி நீதிமன்ற முறைமையானது ஆண்களுக்கு பக்கச்சார்பாக இருந்து வருவதுடன் குடும்பங்களின் நலன்களை குறிப்பாக, சிறுவர்களைப் பாதிக்கின்ற மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையினைத் தூண்டுவதாகவும் இருப்பது அக்கதைகளில் இருந்து தெரியவந்தது. நான் நேர்கண்ட பல பெண்கள் தம் கணவன்மாரினாலும் தம் கணவனின் உறவினர்களாலும் தம்மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறையின் தீவிரத் தன்மையினை கருத்தில் கொண்டு விவாகரத்தினை பெற்றுக் கொள்வதை விரும்பாதவர்களாகக் காணப்படுகின்றனர். மாறாக மீளிணக்கத்திற்காக அல்லது பராமரிப்பினைப் பெறுவதற்காகவோ அவர்கள் காதி நீதிமன்றங்களுக்கே செல்கின்றனர். இதற்கான காரணமாவது,

  1. சமுதாயத்தினுள் பாதுகாப்பென்பது சீர்குலைந்திருப்பதும் விவாகரத்தைப் பெற்றவர் என சமூகத்தினால் ஒதுக்கிவைக்கப்படுதலும்
  2. தமது பிள்ளைகளுக்கு ஒரு தகப்பன் தேவையென அவர்கள் நினைக்கின்றனர் (குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு சிறந்த கணவன்மாரினைப் பெற்றுக் கொடுப்பதற்கு தமது கணவன்மார் இருக்க வேண்டுமென அவர்கள் நினைக்கின்றனர்).
  3. தான் விவாகரத்தினை முன்னெடுத்தால் பராமரிப்புக்கும் நட்டயீட்டுக்குமான தமது உரிமையினை தாமும் தமது பிள்ளைகளும் இழந்துவிடுவர் என அவர்கள் பயப்படுகின்றனர்.

அதிகமான சந்தர்ப்பங்களில் இவ்வாறான வன்முறைக்கான காரணங்களாக இருப்பனவற்றை பின்வருமாறு குறிப்பிடலாம். கணவன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் முடிப்பதற்கோ அல்லது தனது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவினை சட்டபூர்வமானதாக்குவதற்கோ பெண்னையும் பிள்ளைகளையும் அச்சுறுத்துவதேயாகும். பெண்ணின் தரப்பில் இருந்து முறைப்பாடு வருகையில், குறிப்பாக ஆண் வேறொரு பெண்ணை நாடுவது தொடர்பான முறைப்பாடுகளாக இருக்கும் பட்சத்தில் தீர்ப்பினை வழங்குவதில் தாமதங்கள் ஏற்படுவதையே என்னுடைய நேர்காணல்கள் எடுத்துக்காட்டின. தனது இறுதித் தீர்ப்பினை வழங்குவதை காதியார் இழுத்தடிப்பது அல்லது ஆண்களின் இவ்வாறான செயற்பாடுகளை நியாயப்படுத்துவதுதான் பெண்களுக்கு கிடைக்கின்ற அனுபவங்களாக அதிகமான சந்தர்ப்பங்களில் காணப்படுகின்றன.

நட்டஈடு மற்றும் பராமரிப்புடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு விவாகரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு உதவாமல் கணவனின் பலதாரமணத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு காதிமார் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மீது (பெண்கள் மீது) அழுத்தத்தினை ஏற்படுத்துகின்றனர். இன்னும் சில சம்பவங்களில் பெண்கள் தமக்குரிய கடமைகளை நிறைவேற்றாத காரணத்தினாலேயே ஆண்கள் வேறு பெண்களை திருமணம் முடிக்கின்றனர் எனவும் இது நியாயப்படுத்தப்படுகின்றது. (இவற்றிலே மனைவியின் கடமைகளாக உரிய நேரத்தில் உணவு சமைத்துக் கொடுக்காமை, தனது நோயுற்ற பெற்றோரைப் பார்த்துவிட்டு உரிய காலத்தில் வீடு திரும்பாமை ஆகியவை உள்ளடங்குகின்றன).

சில காதிமார்கள் பராமரிப்புத் தொகையினை எழுத்து மூலமாக கொடுக்காமல் இருக்கின்றனர். இன்னும் சிலர் வழக்கினை நீண்டகாலத்திற்கு நடத்திச் செல்கின்றனர். மேலும், இஸ்லாம் அனுமதிக்கின்றது என்று கூறி மறுமணத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு பெண்களை நிர்ப்பந்திப்பதன் மூலமும் இதனை சூழ்ச்சிகரமான முறையிலே நிறைவேற்றி வருகின்றனர். தமது கணவன் இன்னுமொரு பெண்ணை அல்லது பல பெண்களை மணப்பதை ஏற்றுக்கொள்வதற்கு பெண்கள் மறுக்கும்போது அவர்களிடம் பாசா விவாகரத்தினை விண்ணப்பிக்குமாறு இவ்வாறான காதிமார்கள பல சந்தர்ப்பங்களில் ஆலோசனை கூறியுள்ளனர். பாசா விவாகரத்தின் மூலம் பெண் ஒருவர் விவாகரத்தினை முன்வைக்கையில் அவருக்கு நட்டஈட்டினைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமை இல்லாமல் போகின்றது.

இதனால் கணவனுக்கு சாதகமான சமரசம் இங்கே ஏற்படுகின்றது. தனது கணவனின் 2ஆவது அல்லது 3ஆவது திருமணத்தினை ஏற்றுக்கொள்ள ஒரு பெண் விரும்பாவிட்டால், அவளினால் நட்டஈட்டினையோ அல்லது பராமரிப்பினையோ கோரமுடியாது எனக் காதிமார்கள் பகிரங்கமாகக் கருத்துக்கூறி இந்த வாதத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காதிமாரின் இந்த நடத்தையினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல காதிமார்கள் தாமே ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முடித்துள்ளதால் அவர்களின் மூலம் எவ்வாறு தமது கணவன்மாரின் நடத்தைக்கு எதிராக சவால் விடுக்க முடியும் என்கின்ற எதிர் முறைப்பாட்டினையும் முன்வைக்கின்றனர்.

தொடரும்…


2004-shreensaroor_1474306387ஷிரீன் அப்துல் ஷரூர்