பட மூலம், SBS
அண்மைய இலங்கை வரலாற்றில் எந்தவொரு வெளிநாட்டு பிரஜைக்கும் இலங்கையின் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படவில்லை. வழங்குவதற்கு ஏற்ற சட்ட ஏற்பாடுகளும் இந்த நாட்டில் இல்லை.
நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 30 மியன்மார் பிரஜைகளை இலங்கை கடற்படை பாதுகாப்பாக கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. அவர்கள் குறிப்பிட்ட காலம் வடக்கில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் ஐ.நாவின் தலையீட்டினால் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.
2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தடவையாக மியன்மார் அகதிகள் இலங்கை வந்தடைந்தார்கள். அவர்கள் 55 பேரும் 2012 ஜூலை மாதம் இலங்கையிலிருந்து வெளியேறினார்கள். 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை வந்தடைந்த 101 பேரும் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையத்தின் தலையீட்டினை அடுத்து அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறி சர்வதேச சட்டங்களின் படி வசதிகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்கள்.
1948ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் படி இலங்கை அரசால் எந்தவொரு வெளிநபருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்க முடியாது. உலகின் எந்த மூலையில் இருந்து அகதிகள் வந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரம் இலங்கைக்கு இல்லை. ரோஹிஞ்சா மக்களுக்கு இலங்கை அரசு குடியுரிமை வழங்கப்போகிறது என்ற கருத்தெல்லாம் சுத்தப் பொய். இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் சபை அவ்வாறான கோரிக்கை எதையும் முன்வைக்கவும் முடியாது, முன்வைக்கவும் இல்லை. குடிவரவு குடியகல்வு அதிகாரி வீரசேகர இதனை உறுதிப்படுத்தியுமுள்ளார்.
இந்தச் சட்டம் எந்தளவு பலம் வாயந்தது என்றால், இலங்கை பிரஜையொருவரை வெளிநாடொன்றைச் சேர்ந்த பெண்ணொருவர் திருமணம் செய்தாலும் அவருக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்காது.
இலங்கையில் தற்போது 7 ஆண்களும் 7 பெண்களும் ஏனையோர் சிறுவர்களுமாக மொத்தமாக 30 மியன்மார் அகதிகள் தங்கியிருக்கிறார்கள். இதற்கு மேலதிகமாக ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. குறைந்தது இந்தக் குழந்தைக்காவது குடியுரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் கூட 1948ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. மேலும், போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கை வந்த 4 பேருமாக மொத்தம் 35 பேர் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதியும், 2017 ஏப்ரல் 30ஆம் திகதியும் இலங்கை வந்திருக்கின்றனர்.
இவர்களை சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையமே பாதுகாப்பு வழங்கி பராமரித்து வருகிறது. அவர்களுக்கான உணவு, தண்ணீர், அணிய ஆடை, சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள், பேனை, பென்சில்களை ஐ.நாவே வழங்குகிறது, இலங்கை அரசாங்கம் அல்ல. அவர்களைக் குடிமர்த்த சில மேற்கு நாடுகளுடன் ஐ.நா. பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகிறது. 2012ஆம் ஆண்டு நடந்ததைப் போன்றே இந்த 35 பேருக்கும் அமெரிக்கா அல்லது கனடா தஞ்சம் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வழங்கவேண்டும்; கூடிய விரைவில் வழங்கவேண்டும்.
வேறு ஒரு காரணத்துக்காகவே நான் இந்தப் பதிவை முன்வைக்கிறேன். முதலாவது, படகுகளில் வரும் அப்பாவிகளைப் பார்த்து நாம் பயந்து நடுங்குகிறோம். இரண்டாவது, எந்நேரமும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தும் அபாயமான கடல் வழி போக்குவரத்தில் ஈடுபட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்ட மக்கள் மீது இரக்கம் கொள்ளாத ஒரு கூட்டத்தினரிடம் இலங்கை அரசியல் சிக்குண்டிருக்கிறது. மூன்றாவது, எமது நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டம் பற்றிய அறிவு பூச்சியமாகும்.
1983ஆம் ஆண்டின் பின்னர் 18 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தஞ்சம் வழங்கி, வசதிகளை வழங்கி, பாதுகாத்து அந்தந்த நாடுகளின் வளத்தை இலங்கையில் இருக்கும் அவர்களது உறவினர்களுக்கு வழங்குவதற்குக் கூட மேற்கு நாடுகள் இடமளித்திருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ரஜித் கீர்த்தி தென்னகோன் எழுதி ‘சிறிலங்கா ப்ரீப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்