பட மூலம், PMD News
ஆசிரியர் குறிப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் தொடர்பாக ‘ஜனாதிபதி அப்பா’ என்ற தலைப்பில் அவரது மகள் சத்துரிகா சிறிசேன எழுதிய நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 15ஆம் திகதி இடம்பெற்றது.
###
“அப்பாவை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று துலாஞ்சலி அடிக்கடி எனக்குக் கூறுவார்.” துலாஞ்சலி பிரேமதாசவின் ஆலோசனையின் படி சத்துரிகா சிறிசேன தனது ‘ஜனாதிபதி அப்பா’வைப் பாதுகாத்தார், பாதுகாத்தும் வருகிறார்.
ராஜபக்ஷவின் தசாப்தத்தில் இடம்பெற்ற கொடூரப் படுகொலைகள், காணாமலாக்கப்படல், கோடிக்கணக்கில் ஊழல் மோசடி இடம்பெறுவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக கடும் தண்டனை வழங்குவதாக சத்தியப்பிரமாணம் செய்தே சத்துரிகா சிறிசேனவின் ‘ஜனாதிபதி அப்பா’ ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எந்தவிதத்திலும் மன்னிப்பு வழங்கக்கூடாது என்ற நம்பிக்கையுடன்தான் 62 இலட்சம் மக்கள் தங்களுடைய வாக்குகளைப் பயன்படுத்தியிருந்தார்கள்.
சத்துரிகா சிறிசேன, தான் எழுதியதாகக் கூறிக்கொள்ளும் ‘ஜனாதிபதி அப்பா’ புத்தக வெளியீட்டுக்கு துலாஞ்சலி பிரேமதாச மட்டுமன்றி, துலாஞ்சலியினுடைய தந்தையின் உத்தரவுக்கமைய உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட ரோஹண விஜேவீரவின் மகளையும் அழைத்திருந்தார். (அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் நல்லவேளை சந்திரிகா குமாரதுங்கவின் மகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை).
அந்த நிகழ்வில் சத்துரிகா சிறிசேன உணர்வுபூர்வமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். துலாஞ்சலி மற்றும் ஈஸா விஜேவீரவின் தந்தை தொடர்பாக துக்கம் நிறைந்த முகத்துடன் சத்துரிகா பேசியிருந்தார். ஆனால், ஆயிரக்கணக்கான மகள்களுடைய தந்தையை பறித்தெடுத்த குற்றங்களைப் புரிந்த தங்களுடைய தந்தைகள் குறித்து சத்துரிகா சிறிசேனவுக்கும் மறந்துவிட்டது. சிங்கள அரசியல் தலைவர்களின் மகள்கள் மட்டுமே சத்துரிகா சிறிசேனவுக்கு இப்போது தேவைப்படுகிறது.
துலாஞ்சலியின் தந்தையுடைய அரசாங்கத்தினால், தலையைத் துண்டித்து தடிகளில் சொருகி சந்திகளில், பாலங்களில் காட்சிப்படுத்திய, ரயர்கள் கொண்டு உயிரோடு எரித்த ஆயிரக்கணக்கான தந்தைகள் பற்றி சத்துரிகாவுக்கு எந்தவித அக்கறையுமில்லை? ஈஸாவின் தந்தையினுடைய குட்டி அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவை மீறினார்கள் என்பதற்காக கொல்லப்பட்ட பஸ் சாரதிகள், பெட்டிக் கடை உரிமையாளர்கள், இடதுசாரிகள், கலைஞர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான தந்தைகள் பற்றி சத்துரிகா எந்த அக்கறையுமில்லை?
தன்னுடைய தந்தை 10 வருடகாலமாக அங்கம் வகித்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட இன்னும் பல்லாயிரக்கணக்கான தந்தையர்களின் மகள்கள் குறித்தும் சத்துரிகாவுக்கு நினைவில்லை. இந்த குற்றத்தைப் புரிந்தவர்களுக்குத் தண்டனை வழங்குவதாக உறுதிகூறிய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ‘ஜனாதிபதி அப்பா’ ஆனதன் பின்னர் ‘ரணவிரு’ (இராணுவ வீரர்) தேவாரத்தைப் பாடிக்கொண்டு உறுதிமொழிகளை குப்பை கூடையில் வீசுவது பற்றி சத்துரிகாவுக்கு எதுவும் நினைவில் இல்லை.
பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு குறித்து சத்துரிகா சிறிசேனவின் ‘ஜனாதிபதி அப்பா’ என்ன கூறியிருந்தார்? “எல்லோரும் தெரிந்தவொரு வழக்கொன்றுக்காக 6 மாதங்களாக ‘ரணவிருவன்’ (இராணுவ வீரர்கள்) தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். எந்தவித அறிவித்தலும் எனக்கு வழங்காமல் இராணுவ வீரர்களை நீதிமன்றங்களுக்குக் கொண்டுசெல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.
பிரகீத் எக்னலிகொடவுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் 8 வருடங்களாக நீதிமன்ற வாசல்படி ஏறி இறங்கும் சந்தியா எக்னலிகொட அனுபவித்துவரும் வேதனை பற்றி இப்போது கண்டும்காணாமல் போல் இருக்கும் ‘ஜனாதிபதி அப்பா’, ஜனாதிபதி வேட்பாளராக ஏறிய ஒவ்வொரு மேடையிலும் பிரகீத்தின் பெயரை உச்சரிக்காமல் இறங்கவில்லை.
பிரகீத்தைக் கடத்தி கிரிதலே இராணுவ முகாமுக்குக் கொண்டு சென்ற, அங்கு வைத்து பிரகீத்தைப் பொறுப்பேற்ற இராணுவ அதிகாரிகள் குறித்து அனைத்து சாட்சியங்களும் இருக்கின்ற நிலையில், அவர்களுடைய மனைவிமார்களின் கண்ணீருக்காக மட்டும் உருகும் சத்துரிகாவின் ‘ஜனாதிபதி அப்பா’வுக்கு சந்தியா எக்னலிகொட மற்றும் அவருடைய பிள்ளைகளின் கண்ணீர் குறித்து எந்த அக்கறையும் இல்லை.
8 வருடங்களாக நீதிமன்றங்களுக்குச் செல்லும் சந்தியா எக்னலிகொடவுக்கு சுதந்திரமாகச் சென்று வருவதற்குக்கூட இடமளிக்காத மஞ்சள் நிற ஆடை போர்த்தியிருக்கும் கலபொட அத்தே ஞானசார உட்பட ஏனையவர்களுக்கு ‘மகா சங்கத்தினர்’ எனக் கூறி ‘ஜனாதிபதி அப்பா’வின் ஆலோசகர்கள் பாதுகாப்பு வழங்குகின்றார்கள். ஏன் அவ்வாறு இடம்பெறுகிறது என்பது தொடர்பாக ஆராய சத்துரிகாவின் ‘ஜனாதிபதி அப்பா’ அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும், ரணவிரு லேபலுடன் காணப்படும் கொலையாளிகளைப் பாதுகாப்பதற்கும், ‘மகா சங்கம்’ லேபலுடன் பௌத்த மதத்தை அவமதிக்கும் மஞ்சள் நிற ஆடை போரத்தியிருக்கும் குண்டர்களைப் பாதுகாப்பதற்கும் மார்பில் அடித்து வீராவேசத்துடன் பேசுவது சத்துரிகாவின் ‘ஜனாதிபதி அப்பா’தான்.
பிரகீத் எக்னலிகொட மட்டுமன்றி லசந்த விக்ரமதுங்க, சம்பத் லக்மல், தாஜூதீன், வட கிழக்கு ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள், சிவிலியன்கள், வெலிக்கடை சிறைச்சாலையினுள் பெயர் பட்டியல் கொண்டு நடத்தப்பட்ட கொலைகள் போன்ற ஆயிரக்கணக்கான படுகொலைகள் ரணவிரு லேபலின் கீழ் மறைத்துவைக்கப்பட்டிருப்பது ஏன் என்ற விடயத்தை ‘ஜனாதிபதி தந்தை’ தேடிப்பார்க்காமல் இருப்பது குறித்து சத்துரிகா சிறிசேன தெளிவுபடுத்த வேண்டும்.
துலாஞ்சலியின் தந்தை தொடர்பாகவும், ஈஸா விஜேவீரவின் தந்தை தொடர்பாகவும் கண்ணீர் வடிக்கும் சத்துரிகா சிறிசேனவுக்கு மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் கொலைசெய்யப்பட்டிருப்பவர்களின் மகள்கள், தாய்மார்களின் கணவர்கள், மகன்கள் குறித்து ஒரு துளியளவேனும் அக்கறையில்லாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.
ஓரளவு எழுதத் தெரிந்த மஹிந்த இலேபெரும ‘குரஹன் சாடகய’ (முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணம் பற்றியது) எழுதினார் என்று நம்ப முடிந்தாலும், இதுவரை சத்துரிகா சிறிசேன எழுதிய ஒரு வசனத்தைக் கூட பார்க்க முடியாத ஒரு நிலையில் தற்போது அவர் ஒரு எழுத்தாளராக உருவெடுத்திருப்பது அவரது எதிர்கால அரசியல் பயணத்தை அனுமானிக்கக்கூடியதாக இருக்கிறது.
இறுதியாக ஒரு விடயத்தைக் கூறவேண்டும். உலகில் ஜனாதிபதி பதவி வகித்தவர்கள் ஓய்வுபெற்ற பின்னரே தனது அரசியல் வாழ்வை, சுயசரிதையை எழுதியிருக்கிறார்கள். அதுவும், தனது பிள்ளைகளைக் கொண்டில்லாமல் எழுத்தாளர்களைக் கொண்டே எழுதியிருக்கிறார்கள். ஆனால், இலங்கை நிலைமை நகைப்புக்குரிய விடயமாக இருக்கிறது.
‘லங்கா ஈ நிவ்ஸ்’ தளத்துக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் போத்தல ஜயந்த எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.