படம் | ibtimes
இந்தியத் தேர்தல், ஜெனீவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் விடுதலை விவகாரம் என்ற மூன்று விடயங்களும் அடுத்து வரும் மாதங்களில் மேலும் சூடுபிடிக்கப்போகின்றன. இந்த நிலையில், இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களும் அதற்கான பிரசாரங்களும் ஒரு புறமிருக்க, தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்காமை தான் பிரதான பிரச்சினை. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இலங்கை – இந்திய அரசியல் விடயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்திய அரசியலில் ஈழத்தமிழர் பிரச்சினை தேர்தல் காலங்களில் மட்டும் சூடு பிடிப்பது வழமை. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழல் பற்றிய விவகாரங்கள் முக்கியம் பெறுகின்றன.
மனித புதைக்குழி விவகாரம்
வடக்கு, கிழக்கில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மாதம் திருகோணமலை முற்றவெளி மைதானத்திலும், நேற்று முன்தினம் முல்லைத்தீவிலும் புதிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், பல இடங்களில் இவ்வாறான மனித புதைகுழிகள் காணப்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
போர் நடைபெற்ற பிரதேசம் ஒன்றில் மனித புதைகுழிகள் இருக்கும் என்பது தெரிந்தாலும் அவை எந்த இடங்களில் கூடுதலாக காணப்படும் என்பது கூறமுடியாத ஒன்று. அத்துடன், எந்தக் காலப்பகுதிக்குரியவை என்பதையும் கண்டுகொள்ள முடியாது. ஆனாலும், 1983ஆம் ஆண்டில் போர் ஆரம்பிக்கப்பட்டமையினால் ஆட்சிசெய்த அரசுகளின் காலத்தில் அந்தப் படுகொலைகள் நடைபெற்றதாக இலகுவாக கருதலாம். ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுமே மாறிமாறி ஆட்சி புரிந்தன. ஆகவே, இந்தக் கட்சிகள்தான் அந்த மனித புதைகுழிகளுக்கும் உரிமை கோரவேண்டும்.
மனித உரிமை பேரவையில்
மனித புதைகுழி விவகாரங்கள் ஜெனீவா மனித உரிமை பேரவையில் பேசப்படுமா இல்லையா என்பது தொடர்பாக எதுவும் கூறமுடியாது. ஆனால், இந்த விடயங்கள் குறித்து கொழும்பில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்று ஜெனீவா மனித உரிமை பேரவைக்குத் தகவல் அனுப்பியுள்ளதாக அறிய முடிகின்றது.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை ஆகியோரும் இராஜதந்திரிகள் பலரிடம் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுபற்றி பேசியிருந்தாலும் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு எட்டும் படியாக அறிக்கை அல்லது தகவல்களை கொடுத்தார்களா என்பது கேள்விக்குறி தான்.
ஆனால், தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி மனித புதைகுழிகள் பற்றி துணிவுடன் பேசிவருகின்றது. தேர்தல் நோக்கமாக இருந்தாலும் கூட கொழும்பில் அது பற்றி பேசுவது முக்கியமானதாகும். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மஹிந்த ராஜபக்ஷ அரசை விமர்சித்தாலும் மனித புதைகுழி பற்றி அவர்களால் எதுவும் பேச முடியாது.
ஏனெனில், சில மனித புதைகுழிகள் அவர்களின் ஆட்சிக்காலத்திற்கும் உரியது அல்லது அவர்களும் அவ்வாறான படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் என்று கூறலாம். அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மாத்தறையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போது திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தமது அரசின் காலத்தில் நடைபெறவில்லை எனக் கூறியுள்ளார்.
இந்திய அரசியல்வாதிகள்
மனித புதைகுழிகள் மற்றும் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அரங்கில் படையினரை காட்டிக்கொடுக்க அனுமதிக்க முடியாது, இரத்தத்தை கொடுத்து படையினரை காப்பாற்றுவேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
ஆகவே, இரண்டு கட்சிகளும் ஏட்டிக்கு போட்டியாக செயற்பட்டாலும் இனப்பிரச்சினை விவகாரத்தில் ஒரே மாதிரியான கருத்துக்களை கொண்டிருக்கின்றனர் என்பது வெளிப்படை. இந்திய அரசியல்வாதிகளை பொறுத்தவரை குறிப்பாக, தமிழ் அரசியல்வாதிகள் இலங்கையில் உள்ள இந்த இரண்டு கட்சிகளின் செயற்பாடுகளை நன்கு அறிந்து வைத்திருந்தாலும் இனப் பிரச்சினை விடயத்தில் சிங்கள அரசு என்றுதான் பேசுவார்கள்.
உண்மையில் சிங்கள அரசு என்ற கட்டமைப்புத்தான் பிரச்சினை. அதனை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தெளிவாக புரிந்துவைத்துள்ளனர் என்று சொல்லமுடியாது. ஆனாலும், இலங்கை என்றவுடன் சிங்கள அரசு என்ற உணர்வுதான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு முன்னால் வருகின்றது. ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வது பற்றிய பேச்சுக்கள் மாத்திரமே அங்கு சூடுபிடித்திருக்கின்றன.
ஆனால், மனித புதைகுழி பற்றி இன்னமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் முழுமையாக பேச தொடங்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அது பற்றி முக்கியத்துவப்படுத்தவில்லை. இரண்டாவது தமிழ்நாட்டு ஊடகங்களில் அது பற்றிய செய்திகள் பெரியளவில் வெளிவரவில்லை.
கூட்டமைப்பின் செய்தி
ஜெனீவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பியுள்ள கடிதத்திலும் மனித புதைகுழி பற்றிய விடயங்கள் கூறப்படவில்லை. காணி அபகரிப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதும், அதற்கு சர்வதேச மத்தியஸ்தம் அவசியம் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளையும் விட இம்முறை ஜெனீவா விவகாரத்தில் அதிகளவு கவனம் செலுத்தி வந்தாலும் மனித புதைகுழி விவகாரம் பற்றி பெரியளவில் அக்கறைசெலுத்தவில்லை.
இறுதிக் கட்டப்போர் இனப் படுகொலைக்கு ஒப்பானது என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமையினால் அதனை மேலும் நிரூபிக்கும் வகையில் மன்னார், திருகோணமலை மனித புதைகுழி மற்றும் செம்மணி மனித புதைகுழி விவகாரங்கள் பற்றி ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு அறிவித்திருக்கலாம். ஆனால், அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
தமிழ் நாட்டிற்குச் சென்று வந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட மனித புதைகுழி விடயம் தொடர்பாக அங்கு பேசவில்லை. ஏனெனில், மனித புதைகுழிகள் ஐக்கிய தேசிய கட்சியின் காலத்திலும், சந்திரிகா தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியின் போதும் இடம்பெற்றமை.
ஆகவே, அது பற்றி பேசினால் ரணில் விக்கிரமசிங்கவையும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவையும் பகைக்க நேரிடும் என கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். அதன் காரணத்தினால்தான் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு அனுப்பிய கடிதத்திலும் மனித புதைகுழி விவகாரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
குறைகூற முடியாது
இந்த நிலையில், தமிழக அரசியல்வாதிகள் மனித புதைகுழிகள் பற்றி பேசவில்லை என்று யாரும் குறைகூற முடியாது. சிங்கள அரசு என்று கூறுகின்ற தமிழக அரசியல்வாதிகள் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும்தான் நேரடியாக கூறுகின்றனர். அவர்கள் ஜே.வி.பி.யை அல்லது ஜாதிக ஹெல உறுமயவை அவ்வாறு கருதுவதில்லை.
அவற்றை இனவாத அமைப்புகளாக அல்லது சிங்கள அரசு என்ற கட்டமைப்பினால் உருவாக்கிவிடப்பட்ட அமைப்புகளாகவே அவர்கள் பார்க்கின்றனர். இந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சியையும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாக்கும் வகையில் செயற்பட்டால் தமிழக அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, உதவிக்கு வர முற்படும் சர்வதேச நாடுகள் கூட ஒதுங்கும் நிலை ஏற்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த அணுகுமுறை காரணமாகவே இலங்கையில் ஆட்சி மாறினால் அமைதி ஏற்பட்டுவிடும் என்ற கருத்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிடம் விஞ்சிக் காணப்படுகின்றது. ஆகவே, ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டும் என்ற ரணில் விக்கிரம சிங்கவின் கோரிக்கை நியாயமானது என்ற உணர்வு ஏற்பட்டு அதற்கான அழுத்தங்களை சர்வதேச நாடுகள் கொடுக்குமானால் இனப் பிரச்சினை என்பது ஒரு கட்சி அரசியலுக்குள் வரையறை செய்யப்படும் நிலை ஏற்படலாம்.
60 ஆண்டுகால அரசியல் போராட்டம் தனி ஒரு மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினையாக சித்திரிக்க முற்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துணை நிற்கக்கூடாது! ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் விவகாரம் சரி, பிழை என்ற விமர்சனங்களுக்கு அப்பால் இனப் பிரச்சினைக்கு ஒரு நீண்ட வரலாற்றை கொடுத்துள்ளது. அந்த வரலாற்றை சுருக்குவதற்கு இடமளிக்காதீர்கள்!
தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.