பட மூலம், Selvaraja Rajasegar Photo, Flickr
கமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க குற்றத்தடுப்புப் பிரிவினரால் ஜூலை மாதம் 12ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமையை ராஜபக்ஷ தரப்பு அடிப்படைவாதிகளால் பொறுத்துக்கொள்ள – ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக மாறியுள்ளது. டி.கே.பி. தஸநாயக்கவைக் கைதுசெய்வது ஏற்றுக்கொள்ள முடியாது, பெரும் குற்றத்தை செய்கிறார்கள் என்று யானைக் குட்டியொன்றை சட்டத்துக்கு விரோதமாக வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட உடுவே தம்மாலோக்க தேரர் தெரிவித்திருந்தார். அவ்வேளை, குற்றவாளித் தேரரை நோக்கி மைக்கை, கமராவை நீட்டியிருந்த ஊடகவியலாளர்கள் என்றழைக்கப்படுபவர்களால் கேட்கப்படாத கேள்வியொன்று இருந்தது. அது, “அப்படியானால் தேரரே, அப்பாவி இளைஞர்களைக் கடத்திச்சென்று தடுத்துவைத்து, கப்பம் கோரியதன் பின்னர் கொலைசெய்தமையை ஏற்றுக்கொள்ள முடியுமா?” என்பதாகும்.
கடற்படையினரால் கடத்திச்செல்லப்பட்ட இளைஞர்கள் 11 பேரும் கொழும்பை வெடிக்கவைப்பதற்காக வெடி பொருட்களைக் கொண்டுவந்தவர்கள் என்று விமல் வீரவன்ச கூறியிருந்தார். வீரவன்சவின் முட்டாள்தனமான இந்தக் கருத்தை பொலிஸ் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் பொய்ப்பித்திருக்கின்றன. கடத்திச்செல்லப்பட்ட 11 பேரும் எந்தவிதத்திலாவது தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்தவர்களா என்று ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு முப்படைகளின் புலனாய்வுப் பிரிவுகளிடமும், பொலிஸிடமும் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவினரிடமும் விசாரணை நடத்திவரும் குற்றத் தடுப்புப் பிரிவினர் கேட்டிருந்தனர். கடற்படை புலனாய்வுப் பிரிவைத் தவிர ஏனைய அனைத்துப் பிரிவுகளும் அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கின்றன. ஏன் கடற்படை சமர்ப்பிக்கவில்லை என்பதை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும். என்றபோதிலும் ஏனைய அனைத்து அறிக்கைகளிலும், 11 இளைஞர்களும் எந்தவொரு குற்றத்துடனும் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
5 மாணவர்கள் உட்பட 11 பேரை கடத்திச்சென்று, அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கப்பம் கேட்டு அச்சுறுத்தி, கடைசியில் அவர்கள் அத்தனைப் பேரையும் காணாமலாக்கியமை தொடர்பாக கடற்படையின் உயர் அதிகாரிகள் உட்பட கீழ் நிலையிலுள்ள அதிகாரிகள் 7 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அண்மையில் டி.கே.பி. தஸநாயக்க கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தஸநாயக்க தொடர்புபட்டிருக்கின்றமைக்கான ஆதாரங்களை சிஐடியினர் கொண்டிருப்பதனாலேயே இவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
புதிய புலனாய்வுப் பிரிவு
டி.கே.பி. தஸநாயக்க முன்னாள் கடற்படைப் பேச்சாளராவார். அதேவேளை, கடற்படையின் புலனாய்வுப் பிரிவுக்கும் இவரே பொறுப்பாகவிருந்தார். இறுதி யுத்த காலப்பகுதியில் வழமையாக இருந்த புலனாய்வுப் பிரிவிற்கு மேலதிகமாக விசேட புலனாய்வுப் பிரிவொன்றை முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உருவாக்கியிருந்தார். இந்த இரு பிரிவுகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை தஸநாயக்கவே கொண்டிருந்தார். வழமையான புலனாய்வுப் பிரிவு கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியது. அதற்கு நேவி சம்பத் என்றழைக்கப்படும் கமான்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆரச்சி தலைமை தாங்கினார். விசேட புலனாய்வுப் பிரிவு, திருகோணமலை கடற்படை முகாமில் செயற்பட்டுவந்ததோடு, அதற்குப் பொறுப்பாக லெப்டினன்ட் ரணசிங்க பேடிகே சுமித் ரணசிங்க என்பவர் செயற்பட்டார். இளைஞர்கள் கடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டமை தொடர்பாக இந்த இரு பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள் அறிந்திருந்தனர். கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட அப்பாவிகள் 11 பேரும் முதலில் சைத்திய வீதியில் உள்ள கடற்படை பராக்கிர நிறுவனத்தின் ‘பிட்டு பம்பு’ என்று அழைக்கப்படும் கட்டடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். கமாண்டர் ஹெட்டி ஆரச்சியின் காரியாலயம் அங்குதான் அமைந்திருந்தது. அதன் பின்னர் திருகோணமலை டொக்யார்ட் முகாமில் உள்ள நிலக்கீழ் சிறைச்சாலையான ‘கன்சைட்’ இல் தடுத்துவைக்கப்பட்டனர். அங்குவைத்துதான் இவர்கள் அனைவரும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம் சுமித் ரணசிங்கவின் பொறுப்பின் கீழ் செயற்பட்டுள்ளது.
மேல் குறிப்பிடப்பட்ட அதிகாரிகளுக்கும் அவர்களது உயர் அதிகாரியான டி.கே.பி. தஸநாயக்கவுக்கும் தெரியாமல் இந்தச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருக்காது என சிஐடியினருக்கு கிடைத்திருக்கும் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. நாளாந்தம் தெளிவுபடுத்தல் கூட்டத்தின்போது தெஹிவளை பொலிஸ் நிலையம் அருகில் வைத்து 5 இளைஞர்கள் ஹெட்டி ஆரச்சியின் டீம்மால் கைதுசெய்யப்பட்டனர் என டி.கே.பி. தஸநாயக்கவால் தன்னிடம் தெரிவிக்கப்பட்டது என்றும், பின்னர் அவர்கள் கடற்படை தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தமையை தான் அறிந்திருந்தார் என்றும் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட தெரிவித்தார் என சிஐடியினர் நீதிமன்றிடம் தெரிவித்திருக்கிறது.
நாடுகடத்தப்பட்ட தஸநாயக்க
டி.கே.பி. தஸநாயக்க கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலங்களை சிஐடி பெற்றிருந்தது. அந்தத் தகவல்களின் அடிப்படையில்தான் டி.கே.பி. தஸநாயக்க வரையான கைதுகள் இடம்பெற்றிருப்பதோடு, இன்னும் கைதுகள் இடம்பெறவும் இருக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமானபோதே டி.கே.பி. தஸநாயக்க விசாரிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் வெளிநாட்டுக்கு பயணம் செய்யவிருந்த அவரை அனுமதிக்க வேண்டாம் என அப்போதைய கடற்படைத் தளபதி கொலம்பகேவிடம் சிஐடியினர் கேட்டிருந்தபோதும், அதனைப் பொருட்படுத்தாமல் வெளிநாடு பறந்திருந்தார் தஸநாயக்க. 2014 செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெற்ற பயிற்சி செயலமர்வொன்றுக்கே அவர் சென்றிருந்தார். இருந்தபோதிலும் சிஐடியினர் தங்களது முயற்சியைக் கைவிடவில்லை. முயற்சியின் பலனாக அமெரிக்கா தஸநாயக்கவை நாடுகடத்தியது. 2015 டிசம்பர் மாதம் 20ஆம் திகதி பயிற்சியின் இடைநடுவே இலங்கை வந்தடைந்தார் தஸநாயக்க. அதன் பின்னர் இரு தடவைகள் சிஐடியினர் அவரிடம் விசாரணை நடத்தினர். இன்னுமொருமுறை வருமாறு சிஐடியினர் தஸநாயக்கவைக் கோரியபோதும், தான் சென்றால் கைதுசெய்யப்படுவேன் என்று அஞ்சி வைத்தியசாலையில் அடைக்கலம் புகுந்திருந்தார். இருந்தபோதிலும் அவர் கைதுசெய்யப்பட்டார்.
அனுமதி வழங்கிய கோத்தபாய
இந்த காணாமல்போனோர் தொடர்பான சம்பவத்தை விசாரிக்க 15.06.2010 அன்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் பொலிஸார் அனுமதி கேட்டிருந்தனர். இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக சிஐடியின் பணிப்பாளர் எம்.கே.டீ.டபிள்யூ. அமரசிங்க இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார், “இன்றைய தினம் விசாரணை இல. C267/09/CM இல் உள்ளடங்கியுள்ள கடத்தல் தொடர்பாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் கபில ஹென்தவிதாரணவுடன் பாதுகாப்புச் செயலாளர் கலந்துரையாடியிருக்கிறார். அதன் பின்னர் இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி தன்னிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கூறினார். அதன் படி விசாரணை தொடர்பாக திட்டமொன்றை தயாரித்து, விசாரணையின் முன்னேற்றம் குறித்து 15.07.2010 அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.”
இதன் மூலம் தெரியவருவது என்ன? வீரவன்ச இன்று என்னதான் கூறினாலும், அவர்களின் தலைவர்களில் ஒருவரான கோத்தபாயவே இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முதலில் அனுமதியை வழங்கியிருக்கிறார்.
கரன்னாகொடவின் முறைப்பாடு
அதேபோல, 28 மே மாதம் 2009ஆம் ஆண்டு அப்போதை கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே இந்தக் கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தன்னுடைய சிரேஷ்ட அதிகாரியான சம்பத் முணசிங்க விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் தொடர்புபட்டிருக்கிறார் என தனக்கு சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்துமாறு கரன்னாகொட தனது முறைப்பாட்டில் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னர் கடற்படையின் ஒழுக்க விடயம் தொடர்பான அதிகாரியொருவர் சம்பத் முணசிங்கவின் இல. 8 உத்தியோகபூர்வ இல்லத்தில் சோதனை நடத்தியிருந்தார். இதன்போது ஒரு கடவுச் சீட்டும், நான்கு அடையாள அட்டைகள், 450 துப்பாக்கி ரவைகள், கைத்தொலைப்பேசியொன்று மற்றும் உறுதிமொழிப் பத்திரமும் மீட்கப்பட்டிருந்தன. அடையாள அட்டைகள் மற்றும் கடவுச் சீட்டு தொடர்பில் தேடிப்பார்த்தபோது அவை அண்மையில் கொழும்பில் காணாமல்போனவர்களுடையது என கண்டறிப்பட்டது. விசாரணையின் தொடர்ச்சியாக கடத்தப்பட்ட ஐந்து பேர் உட்பட இன்னும் பலர் தொடர்பான தகவல்களும் தெரியவந்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 28 பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இன்னும் 17 பேர் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டியிருக்கிறது.
கஸ்தூரி ஆரச்சிலாகே அன்டன், கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், தியாகராஜா ஜெகன், ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹமட் நிலான், மொஹமட் சாஜித், சூசைப்பிள்ளை அமலன் லியோன், சூசைப்பிள்ளை ரொஷான் லியோன் மற்றும் அலி அன்வர் ஆகியோரே கப்பம் பெறும் நோக்கில் கடத்தப்பட்டிருக்கிறார்கள். கடத்தப்பட்டவர்களில் அலி அன்வர் எனப்படும் ஹாஜியார் கடற்படையினருக்கு உளவுபார்த்தவர் என்பதோடு பணவசதி உள்ளவர்கள் தொடர்பாக கடற்படையின் கடத்தல் குழுவுக்கு தகவலும் வழங்கியிருக்கிறார். கடைசியில் தகவல்களை வெளியிடக்கூடும் என்ற அச்சத்தில் அவரையும் கடத்தி காணாமலாக்கியுள்ளார்கள்.
தற்போது பழைய இராணுவ அதிகாரிகள், கைதுசெய்யப்பட்ட கடற்படையைச் சேர்ந்தவர்களுடைய மனைவிகளின் கண்ணீரைக் விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய கணவன்மார்கள் சிறையில் இருப்பதால் தாங்களும், தந்தை இல்லாதமையினால் பிள்ளைகளும் கவலையுடன் இருப்பதாக மனைவிமார்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால், 2008ஆம் ஆண்டிலிருந்து தங்களுடைய பிள்ளைகள், கணவன்மார்கள், காதலர்கள் காணாமலாக்கப்பட்டதன் பின்னர் அவர்களுடைய தாய்மார்கள், மனைவிகள், காதலிகள் வடித்த கண்ணீர் மட்டும் கண்ணீர் இல்லையா? சிறையில் இருந்தாலும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறைச்சாலையினுள் உள்ள வைத்தியசாலையில் தஸநாயக்க போன்றோர் சுகமாகக் காலத்தைக் கடத்துவார்கள். ஆனால், இந்த அப்பாவிப் பெண்களின் நெருங்கிய உறவுகள் இருட்டான நிலக்கீழ் சித்திரவதை அறையில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்காக இந்தப் பெண்கள் 9 வருடங்களாக வடிக்கும் கண்ணீருக்குப் பொறுப்புக்கூறுவது யார்? காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் எனக் கொக்கரிக்கும் வீரவன்சவுக்கு இவர்களின் இன்னல் தெரியவா போகிறது?
பொலிதீன் உரைகளில் சடலங்கள்
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக நேரில் கண்ட பலரிடம் சிஐடியினர் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அவை வாக்குமூலங்களாக இல்லாவிட்டாலும் அந்தத் தகவல்களைக் கொண்டு கொடூர சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை ஊகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. திருகோணமலை, ‘கன்சைட்’ நிலக்கீழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை தாங்கள் கண்டனர் என கடற்படை அதிகாரிகள், சிப்பாய்கள் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கியவர்கள், மலசலகூடத்திற்கு, குளிப்பதற்கு வரும்போது கண்டவர்கள் அதில் அடங்குவர். பின்னர், இந்த சிறைக்கூடத்திலிருந்து கறுப்புப் பொலிதீன் பைகளில் சடலங்கள் கொண்டுசெல்லப்பட்டதைக் கண்டவர்களும் சிஐடினிரின் விசாரணையின்போது தெரிவித்திருக்கின்றனர்.
தெஹிவளை பகுதியில் வைத்து கடத்தப்பட்ட இளைஞர்கள் பயணித்த கறுப்பு நிறத்திலான டாடா இன்டிகா ரக கார் திருகோணமலை முகாம் பிரதானி ரணசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அருகிலும் முகாமின் வாகனம் திருத்தும் நிலையத்திலும் இருந்துள்ளதை கண்டவர்கள் இருக்கிறார்கள். பின்னர் அந்த வாகனம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு நிலக்கீழ் அறையொன்றில் குவித்துவைக்கப்பட்டிருந்ததையும் கண்டிருக்கிறார்கள். தனது காதலியுடன் 56-5539 என்ற இலக்கத்தைக் கொண்ட டொல்பின் ரக வான் ஒன்றில் ஹெந்தலை கடற்கரைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோத கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட் கடத்தப்பட்டிருந்தார். அந்த வானும் திருகோணமலை கடற்படை முகாமின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ‘නාහ 6021 இலக்கத் தகடுடன் அந்த வான் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இப்போது அந்த வாகனமும் பொலிஸாரின் தடுப்பில் இருக்கிறது. அந்த வாகனத்தில் செசி இலக்கம், என்ஜின் இலக்கம் ஆகியன மாற்றப்பட்டுள்ளதாக அதனை ஆராய்ந்த நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
வெள்ளை வானை அனுப்பி கடத்தலில் ஈடுபடுவது கோத்தபாய ராஜபக்ஷவின் குற்றங்களைத் தடுப்பதற்காக ஒரு வழியுமாகவிருந்தது. இந்த வெள்ளை வான் குற்றங்கள் குறித்து ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், இராணுவம் மற்றும் பொலிஸில் அனைவரும் அறிந்திருந்தார்கள். அதற்கு அனுமதியும் வழங்கினார்கள். இன்றும் கூட வெள்ளை வான் இருக்கவில்லை என்று வீரவன்ச மறுக்கவில்லை. இந்த வெள்ளை வான்களில் தீவிரவாதிகளை கடத்திச் சென்றதாக அவர்கள் கூறுகிறார்கள். அதை குற்றமாகவே அவர்கள் கருதவில்லை. அரசாங்கத்தின் மூலோபாயமாக இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றபோதிலும் அதன் பின்னணியில் இன்னும் பல விடயங்கள் அரங்கேறியிருக்கின்றன. அரசாங்கத்தில் உயர் அந்தஸ்துடன் இருந்தவர்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெருப்புக்கு அமைய தேவையானவர்களைக் கடத்தி காணாமல் செய்திருக்கின்றனர். அந்தப் பட்டியலில் பிரகீத் எக்னலிகொடவும் இருக்கிறார்.
இந்த வெள்ளை வான் மூலம் தாங்களும் ஏதாவது செய்துகொள்ள வேண்டும் என சிந்தித்த இராணுவத்தினர் சிலர், மக்களை கடத்தி கப்பமும் பெற்றிருக்கிறார்கள்.
குற்றவாளிகள் யாரென்று பார்க்காமல் அவர்களை நீதிக்கு முன் கொண்டுவருவதுதான் இப்போது செய்யவேண்டிய காரியமாகும். இராணுவம் என்று பார்க்காமல் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். இந்த விடயத்தில் வீரவன்சவின், ராஜபக்ஷாக்களின் கூச்சல்களுக்கு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. தங்களுடைய மற்றும் இராணுவத்தின் நற்பெயருக்கு தீங்கை ஏற்படுத்திய இதுபோன்றவர்களை நீதியின் முன் கொண்டுவருவதை ஒழுக்கமுள்ள, சட்டத்திற்குட்பட்டு செயற்படக்கூடிய எந்தவொரு இராணுவ உறுப்பினரும் எதிர்க்க மாட்டார். இது போன்ற சிலருக்கு தண்டனை வழங்குவதன் மூலம் இராணுவத்தின் மீது படிந்திருக்கும் களங்கம் விலகும் என அவர்கள் அறிவார்கள்.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக நீதியாக விசாரணை நடத்தி, மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அருண ஜயவர்தன என்பவரால் எழுதப்பட்டு ‘ராவய’ பத்திரிகையில் வெளியான கட்டுரையைத் தமிழாக்கம் செய்தவர் செல்வராஜா ராஜசேகர்.