படம் | trustyou

பொதுசனங்களின் கூட்டு சிந்தனையை திசைப்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அரசர்களின் காலத்தில் இருந்து நீண்டதூரம் பயணித்துவிட்டமையாலும், ஜனநாயகம், சுதந்திரம், சுயநிர்ணயம் போன்ற வாழ்வியல் விழுமியங்கள் அரசியல் நடத்தைகளை ஆக்கிரமித்து நிற்பதாலும், சாதாரணர்களின் சிந்தனையை உருவாக்கும் நிலையை ஊடகங்கள் பெற்றிருக்கின்றன. அதுவும் இந்த நூற்றாண்டில் அடிப்படைத் தேவைகளுக்கு அண்மிய நிலையில் ஊடகங்கள் நிற்கின்றன. வாழ்வின் முழுப் பாகத்தையும் கட்டியாழுகின்றன. அதன் ஒவ்வொரு பாகத்தையும் பலநூறு துண்டங்களாக்கி விளம்பரப்படுத்துகின்றன. விற்பனை செய்கின்றன. ஊடக அரசியல் கலாசாரம் என்று சொல்லப்படுகின்ற ஒரு வித போதை அனைத்து தரப்பினரையும் நிர்ணயம் செய்யும் நிலையை உருவாக்கியிருக்கின்றன உலகம் முழுமையும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை. ஏதாவதொரு வகையில் மேற்கின் அடிமைகளாக உலகத்தவரை வைத்திருக்கும் வேலையை இன்றைய ஊடகங்கள் செய்துவருகின்றன. இதன் உச்சமாக சமூக வலைதளங்கள் மாறியிருக்கின்றன. இந்த இடத்தில்தான் ஈழத்தவர்களாகிய நாம் சில அடிப்படை நுண் அரசியல் விளக்கங்களோடு ஊடகங்கள் நோக்கிய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறோம். அது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது. ஊட்டச்சத்து மிகுந்த நல் சமூக உருவாக்கத்திற்கு விழிப்புணர்வுடன்  ஊடகங்களை அணுகுதல் என்ற நிலை அவசியமானது

போருக்குப் பின்னரான, சிதறும் காலத்தில் வாழுகின்ற ஈழத்தமிழர்களின் எண்ணங்களை சிருஸ்டிப்பு செய்வதிலும் ஊடகங்கள் முக்கிய இடம் பிடித்திருப்பதனை அண்மைய நிலவரங்கள் ஆதாரப்படுத்தி நிற்கின்றன. எங்கும் பார்க்க முடியாத இளையவர்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. எதற்கும் ஒன்றுதிரளாத ஒரு தலைமுறை தமிழக சினிமாகாரர்களின் ஆதரவு, எதிர் அணிகளில் இணைந்து மோதிக்கொள்ள அணிதிரள்கின்றனர். அதற்கான எதிர்கருத்திடல்களில் தம் வன்மத்தை தீர்த்துக் கொள்கின்றனர். இடையிடையே காதலும், தற்கொலைகளும் வேறு இலங்கையின் சில பகுதிகளில் நடக்கின்றன. சமூக வலைதளங்கள் ஆரோக்கியமான பணிகளுக்கும், அரசியல் முன்னெடுப்புகளுக்கும் பயன்படுத்தக்கூடியவை என்பதை ‘அரபு வசந்தம்’ என்கிற அரசியல் மாற்றத்துக்கான பேரெழுச்சியை மக்கள்  நிரூபித்த பின்னரும், இவ்வாறானதொரு பேதமைத்தனம் நம் தலைமுறையினரிடம் நீடிப்பது நாம் ஒழுக்க பிறழ்வொன்றுக்குள் அகப்பட்டுவிட்டதை வெளிச்சமிடுகிறது. அரபு வசந்தக்காரர்களும், ஈழத்தமிழர்களும் எதிர்கொள்ளும் அடக்குமுறையின் வடிவங்கள் வேறே தவிர, அதன் இயல்பு ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், நாம் அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாக அதைப் பயன்படுத்த தவறுகிறோம். அரபுக்காரர்கள் தம்மை நோக்கிவீழ்ந்த ஆபத்தையே ஆயுதமாக பயன்படுத்தி வென்றமையை நிகழ்காலம் சொல்லிக் கொண்டிருக்கிறது. நாம் இதிலிருந்தும் விதிவிலக்கானவர்கள்.

இப்போதெல்லாம் இந்திய தொலைக்காட்சிகளுக்கும், அவை நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளும், தொடர்களும் ஈழத் தமிழ் வீடுகள் பலவற்றின் இரவை கலவரத்துக்குள்ளாக்குகின்றன. நீயா? நானா என்று போட்டு போட்டுக் கொண்டு விவாதங்களை நடத்தும் தொலைக்காட்சிகள், உண்மையில் நேர்பட பேசுபவையல்ல. அவைகளின் வணித தரத்தை உயர்த்திக் கொள்ளவும், விளம்பரங்களை அதிகம் பெறுவதற்கான உத்தியாகவுமே இந்த விறுவிறுப்புத்தனத்தை கையாளுகின்றன. அவை சமூகம், சீரழிவு, பண்பாடு என எதுகுறித்தும், பாதிக்கப்படும் எந்தச் தரப்பினர் குறித்தும் கவலைப்படுவதில்லை. சிவகார்த்திகேயன் போன்ற மசாலக் காரர்களுக்கு எல்லா இளம் யுவதிகளும் பொதுவெளியில் முத்தமிடதுடிக்கும் சமூகமொன்றை உருவாக்கவே முயல்கின்றன. அப்படி ஆசைப்படுவோரின் எண்ணிக்கையும், அவர்களுக்கான மாய உலகமுமே வணிகமயப்பட்ட இந்த ஊடகங்களுக்கும், அவை ஒளிபரப்பும் விளம்பரங்களின் வெற்றிக்கும் அவசியப்படுகின்றன.

இவ்வகை வணிக ஊடகங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கெனவே சில நிகழச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. விறுவிறுப்பும், நம்பிக்கையும் ஏற்படத்தக்கவகையில் பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்டவர்களே திரையில் தோன்றி கண்ணீர்விட்டு கதறும் நிலையை பொதுவெளியில் காண்பித்து பணம் சம்பாதிக்கின்றன. உண்மையில் அவ்வாறு பொது வெளியில் தன் பிரச்சினையைபோட்டுத் தள்ளுபவன் யாரெனப் பார்த்தால், சேரியிலோ, மின்சாரமே அறிமுகமில்லாத கிராமத்திலோ வாழும் அப்பாவி இந்திய குடிமகனாகத்தான் இருப்பான். நடுத்தர வர்க்கத்தினருடையதோ, உயர்வர்க்கத்தினருடையதோ பிரச்சினைகளை உண்மையாக எந்த ஊடகங்களும் சொல்வதில்லை. அடித்தட்டு மக்கள் இவ்வாறானதொரு கீழ்த்தன்மை ஒழுக்கம் கொண்டவர்கள் என்ற பொதுப்புத்தியை உருவாக்குவதற்கும், அதை சுவாரஸ்யமாக வழங்கி, தம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளவே இந்த வகை நிகழ்ச்சிகளை தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் வழங்குகின்றன. ஆனால், அதனையும் ரசிக்க நாள்முழுதும் விவாதித்துக் கொண்டிருக்க நாம் இருக்கிறோம். குறித்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டுவிட்டு, வீடு திரும்புபவரை நோக்கி, சமூகம் வீசும் பார்வையை பற்றி யாரும் அக்கறைப்படுத்துவதில்லை.

சினிமா படங்களை தயாரிப்பவர்கள் வியாபார உத்தியாகவேணும் ஈழம் குறித்த ஒரு பாடலையோ, வசனத்தையோ வைத்துக்கொள்ள விருப்பப்படுகின்றனர். அது வணிகத் தேவைக்கானதே தவிர எம்மை நோக்கிய ஆதரவுக்கானதோ, அக்கறைக்கானதோ அல்ல. ஆனால், அவர்களுக்காகவும் நாம் அணிதிரள்வோம். எது நல்ல ரசனை, எது தரமான சினிமா என்பதை தெரியாமலேயே மட்டமான ஒரு ரசனைக்காக போர்க்கொடி தூக்கும் நிலை உருவாகிவருகிறது.

உண்மையில் நமக்கான ரசனையும், சிந்திப்பும் தனித்துவமானது. அதற்கென அறிவு சார்ந்த மரபே இருந்திருக்கிறது. அதை நூலகங்கள் ஒவ்வொன்றும் சிறைபிடித்து வைத்திருக்கின்றன. ஆனால், அவை இன்று நம்மிடம் இல்லை. சுயத்தன்மைகளை இழந்து, நமக்கான அடையாளத்தை தொலைத்து பிறவற்றை பின்பற்றத் தொடங்குகிறோம் அல்லது கலந்து பயன்படுத்துகிறோம். உதாரணமாக, யாழ்ப்பாணத்தின் இன்றைய இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் மொழி வழக்குகளுக்குள் சினிமாத்தனம் இருக்கிறது. அதை சரியெனவே வாதிடும் புத்திசாலித் தலைமுறையொன்றும் சமூக வலைதளங்களில் இயங்குகின்றது. இன அடையாளமே தேசியத்தின் முதல் பகுதி என்பதை உணராத ஒரு தலைமுறை, அடையாளத்தை மறுதலித்து, அக ஜனநாயகத்துடன் கூடிய தேசியம் குறித்து பேசுகிறது. முன் பின் முரணான இந்தத் தத்துவத்தை சிதைத்து கொண்டிருக்கும் தலைமுறையின் அருகில் விதைத்தவர் அதி பயங்கரமான நச்சுக் கொல்லியாகவே இருப்பர்.

ஈழத்திலிருந்து வருகின்ற குறும்படங்கள் இன்னும் மெய்ச்சத்தக்கவை. உலக குறும்பட போக்கு செக்கன்களளவில் மாறிக் கொண்டிருக்கையில் நாம் நிமிடக் கணக்கில் அதிகரித்துப் போகிறோம். அச்சு அசலான தமிழக படங்களை நகலெடுக்க முனைகிறோம். எமக்கென்று எந்தத் தனித்துவமும் இல்லை. 10 நிமிட குறும்படத்தில் 5 நிமிட சோடிப் பாடல் இடம்பெற்றவிடுகிறது. இந்த சினிமா அறிவை எங்கிருந்து பெற்றார்கள் என்ற தெரியவில்லை. உலகம், கை நனைப்பதிலிருந்து, கழிவகற்றுவது வரை கல்வி மயப்பட்டு நிற்கையில் இன்னமும் கேள்வி ஞானத்திலேயே அனைத்தையும் சாதித்துவிடலாம் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம். வசதி வாய்ப்புக்களையும், போரையும் இனியும் காரணம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எதையாவது கற்றுக்கொண்டு நமக்கான புதிய சினிமாவை, அதற்கான தளத்தை உருவாக்க வேண்டும். நாம் முயன்றால் தமிழ் சினிமாவின் அடையாளத்தை நாமே உலகிற்கு கொடுக்க முடியும். நம்மிடமிருக்கும் கதைகள் ஈரானிய சினிமாவை விஞ்சக்கூடியவை. ஆனால், அந்தக் கதைகள் நம் யார் கண்ணிலும் தெரிவதில்லை.

ஆக, கடல் கடந்து வரும் ஊடகங்கள் ஈழ மக்களை இலகுவாக அடிமைப்படுத்தியிருக்கின்றன. முதுகிலேறி வியாபாரம் செய்கின்றன. அதன் மீதோ, சிதைவுறும் காலம் பற்றியோ எவருக்கும் அக்கறையில்லை. அக்கறையிருந்தாலும் அதைக் காட்டிக்கொள்வதில்லை. ஒரு காலப் போக்காகக் கருதி கண்மூடிப் பயணிக்கிறோம். இந்த நிலை அபத்தங்களையும், தொடர் தோல்விகளையும்  அளித்துக் கொண்டேயிருக்கும்.

ஜெரா

Jera