பட மூலம், 30yearsago.asia

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுடைய வீடுகளுக்குத் தீவைத்து, சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தி விரட்டியடித்து, இரக்கமே இல்லாமல் கொலைசெய்த சிங்கள இனவாதிகளின் அரக்கத்தனமான செயற்பாடுகள் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில் என தொடர்ந்து ஏழு நாட்களாக இடம்பெற்றுவந்தன. சிங்கள இனவாதிகள் தங்களுடைய கொடூரப் பக்கத்தை காட்ட ஆரம்பித்தது நேற்றைய நாளைப் போன்றதொரு நாளாகும், அதாவது 1983 ஜூலை மாதம் 23 நாளாகும். தமிழ் மக்களுக்கு எதிரான அந்த அழிவு ஏற்படுத்தப்பட்டு 34 ஆண்டுகளாகின்றன.

ஜனநாயகத்தின் அடிப்படையில் இனங்களுக்கிடையில் வேறுபாட்டை நோக்காத நேர்மையான சிங்களவர்களின் மனசாட்சிகளை இருளாக்கிய அந்த அனர்த்தம் 30 வருட கொடூரமான யுத்தத்துக்கு வழிகோலியது. இருப்பினும், இன்னும் தீர்வுகள் எட்டப்படாமல் இழுபட்டுக்கொண்டே செல்கிறது.

யாழ்ப்பாணம், திண்ணைவேலிக்கும் கொக்குவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் தமிழ்ப் புலிகளால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு சிங்கள பெளத்த இனவாதிகள் எதிர்வினையாற்றியதன் விளைவாகவே கறுப்பு ஜூலை கலவரம் ஏற்பட்டது.

சிறைச்சாலை அதிகாரிகளின் ஆதரவுடன் சிங்கள சிறைக்கைதிகளால் 53 தமிழ் சந்தேகநபர்கள் கொல்லப்பட்டதும் இதேபோன்றதொரு வாரத்தில்தான். சில கைதிகளின் கண்களைப் பிடுங்கி எறியுமளவுக்கு கொடூரமானவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

இன்று போன்று அன்றும் ஏனைய இன, மத மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் அடையாளத்தை ஏற்றுக்கொள்வதற்கு சிங்கள மக்கள் ஜனநாயக ரீதியில் தயாராக இருக்கவில்லை. அதேபோல இன்று போல் அன்றும் இடதுசாரி அமைப்புகள் சிங்கள இனவாதிகளின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக கருத்தாடல்களை மேற்கொண்டிருந்தனர். சிங்கள இனவாதிகளின் சிந்தனைகளால் இடதுசாரிகளின் உரையாடல்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கறுப்பு ஜூலையின் பின்னர் தேசிய பிரச்சினை என்பது இலங்கை அரசியலில் ஏனைய விடயங்களை விட பிரதான பிரச்சினையாக பார்க்கப்பட்டது. இன்னும் அதே நிலையே காணப்படுகிறது. காரணம், யுத்தத்துக்கு முன்னர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாமை மற்றும் யுத்தத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் மென்மேலும் மோசமடைந்து செல்வதாலுமேயாகும். தெற்கில் உரிமை சார்ந்து செயற்படும் இயங்கங்களை உயிர்ப்பிக்கும் முகமாக நடாத்தப்பட்டு வரும் உரையாடல்கள் வடக்கு கிழக்கிற்கு எந்தவி​த்திலும் தொடர்புபட்டதாக இல்லை. இதனால், இன அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயக ரீதியான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த நல்லாட்சி இன்று அதனை இலகுவாக மறந்து செயற்படக்கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

தயாபால திராணகம