பட மூலம், president.gov.lk
இலங்கையின் மூன்று பிரதான பௌத்த நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும் புதிய அரசியலமைப்பும் வேண்டாம், இதற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களும் வேண்டாம், அவசியமானால் தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரலாம் என்று ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றி அறிவித்ததுதான் தாமதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுநாளே கண்டி மாநகருக்கு விரைந்து மகாநாயக்க தேரர்களையும் ஏனைய சங்க சபாவின் தலைமைப்பிக்குமாரையும் சந்தித்து மகாசங்கத்தின் ஆசீர்வாதம் இன்றி புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படமாட்டாது என்று உறுதியளித்திருக்கிறார். அத்துடன், அரசியலமைப்பு வரைவு தயாரானதும் அது குறித்து மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடப்படும் என்றும் ஜனாதிபதி உத்தரவாதம் வழங்கியிருக்கிறார்.
மூன்று மகாநாயக்கர்களும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முதல் நாளான கடந்த திங்கட்கிழமை புதிய அரசியலமைப்பொன்று நாட்டுக்குத் தேவையில்லை என்று அஸ்கிரிய பீடத்தின் சங்க சபா தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படுவதிலிருந்து சகலரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனத்தின் ஏற்பாடுகளை உள்நாட்டுச் சட்டத்திற்குள் கூட்டிணைப்பதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றுவதைத் தாமதிக்குமாறும் அஸ்கிரிய பீடம் அரசாங்கத்தைக் கேட்டிருந்தது. சபையில் அந்தச் சட்டமூலம் கடந்த புதன்கிழமை விவாதத்துக்கு எடுக்கப்படவிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைப் படையினர் கைதுசெய்யப்பட்டு போர்க்குற்றங்கள் என்று கூறப்படுகின்றவற்றுக்காக மேற்குலக நாடுகளின் நீதிமன்றங்களிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் விசாரணைக்கு நிறுத்தப்படும் ஆபத்து இருக்கிறது என்று பயம்காட்டியிருந்தார்.
அஸ்கிரிய பீடம் அந்தச் சட்டமூலத்தை தாமதிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டதன் பின்னணியில் ராஜபக்ஷவின் வியூகம் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் பிரச்சினையில்லை. ராஜபக்ஷவின் தலைமையிலான கூட்டு எதிரணி, அரசாங்கம் முன்னெடுக்கின்ற அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை எதிர்த்துக் கொண்டேவருகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டால் மத்திய அரசாங்கத்தின் அதிகார வலு குறைந்துவிடுமென்றும், ஆளுநர்களின் ஊடாக மாகாணங்களை ஜனாதிபதி கட்டுப்படுத்துகின்ற தற்போதைய ஏற்பாடு இல்லாமல் போய்விடுமென்றும் கூட்டு எதிரணியும் அதன் சிங்களத் தேசியவாத நேசசக்திகளும் தென்னிலங்கை மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றன. தற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்ற முதன்மை அந்தஸ்து இல்லாமல் செய்யப்படப்போகின்றது என்றும், ஒற்றையாட்சியை இல்லாமல் செய்து சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்கக்கூடியதாக புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படவிருக்கின்றது என்றும் கூட்டு எதிரணி சிங்கள மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பிக்கொண்டிருக்கின்றது.
அஸ்கிரிய பீடத்தின் தீர்மானம் கூட்டு எதிரணியின் மேற்படி பிரசாரங்களின் தொனியிலேயே அமைந்திருக்கிறது. அந்தத் தீர்மானத்தையே மறுநாள் கண்டியில் கூடிய மூன்று நிக்காயாக்களின் மகாநாயக்கர்களும் ஏகமனதாக ஏறறுக்கொண்டு ஏதோ புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போன்று காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் நோக்குகையில் கூட்டு எதிரணியும் சிங்கள தேசியவாத சக்திகளும் கிளப்பிவருகின்ற ஆதாரமற்ற பீதிகளுக்கு ஒரு நியாயப்பாட்டை ஏற்படுத்திக் கொடுக்கின்ற கைங்கரியத்தையே மகாநாயக்க தேரர்கள் செய்கிறார்கள் என்ற முடிவுக்கே வரக்கூடியதாக இருக்கிறது.
அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை எதிர்க்கின்ற அரசியல் சக்திகளின் நிலைப்பாடுகளை ஆதரித்துக் கொண்டு நாட்டையும் பௌத்த மதத்தையும் காப்பாற்றுவதே தங்கள் தலையாய கடமை என்று பிரகடனம் செய்கின்ற மகாநாயக்கர்கள் எதேச்சாதிகாரத்தை ஒழித்து அரசியலமைப்புச் சீர்திருத்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டுமென்பதற்காக இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்த அரசியல் சக்திகளினதும் வாக்காளர்களினதும் அபிலாசைகளை கிஞ்சித்தேனும் மதிக்கவேண்டுமென்று ஏன் நினைக்கவில்லை?
சிறுபான்மையினத்தவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான சக்திகளின் நிலைப்பாடுகளை மாத்திரம் தான் மகாசங்கம் ஆதரிக்குமா? தாராள சிந்தனையின் அடிப்படையிலான அரசியல் போக்குகளை மகாசங்கம் ஆதரிக்காதா? அப்படியானால் இவ்வாரம் மூன்று பிரதான பௌத்த நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும் ஏகமனதாக நிறைவேற்றியதாகக் கூறிக்கொண்ட தீர்மானம் மஹிந்த ராஜபக்ஷவினதும் அவரின் கூட்டு எதிரணியினதும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு வலுச் சேர்ப்பதற்கான செயற்பாடுகளின் ஒரு அங்கமாகவே தோன்றுகிறது.
ஆக மொத்தத்தில் மகிந்தவுக்காகவே பேசுகிறது மகாசங்கம்…….!
வீ. தனபாலசிங்கம்