படம் | tehelka
சென்னை அண்ணா விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லும் வழி முழுவதும் அம்மாவுக்கும் வருங்கால பாரத முதல்வருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளாகவே நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டியே இத்தனை ஆரவாரங்களும். இங்கு காணப்படும் ஈகோ அரசியலுக்கு இணையாக, தேர்தல் ஜனநாயகம் வழக்கிலிருக்கும் வேறெந்த இந்திய மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ காண்போமா என்பது பெரும் சந்தேகமாகத்தானிருக்கின்றது. அதுவும், ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்வதற்கான உத்தரவு பிறப்பித்ததன் பயனாக தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் புகழ் உச்சக்கட்டத்தில் நிற்கின்றது எனலாம். வரும் தேர்தல்களில் 40 ஆசனங்களையும் கைப்பற்றும் சாத்தியம் அம்மாவுக்கு இருக்கின்றது என அடித்துச் சொல்கின்றனர் ஆதரவாளர்கள். 40 ஆசனங்கள் கைப்பற்றுவது கடினம் என்றாலும்கூட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்ஸிஸ்ட் கட்சியும் இணைந்து அவருடைய கட்சிக் கூட்டணி குறைந்தது 30 ஆசனங்களையாவது கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 30 ஆசனங்கள் புது டில்லியில் பேரம் பேசுவதற்குப் போதுமானவைதான். இந்தியத் துணை முதல்வராகவாவது ஜெயலலிதா அமரும் வாய்ப்பு இருக்கின்றது என்கிறார்கள்.
அவருடைய ஈகோ அரசியல் ஒரு புறமிருக்க, இங்கு தமிழ்நாட்டினை இந்திய அரசியலில் வெகு துணிகரமாக நடுநாயகமாக இருத்துவதற்கு ஜெயலலிதா எடுக்கும் முயற்சிகள் பற்றிப் பேசியே ஆகவேண்டும். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை வகிப்பதாக இருக்கட்டும், அல்லது அதன் பின்பு ஸ்தாபிக்கப்பட்ட இந்திய அரசுக்குத் தலைமை வகிப்பதாகத்தானிருக்கட்டும், இதுவரை ஹிந்தி பேசும் வடக்குதான் அந்தப் பாத்திரத்தினை எடுத்திருந்தது. தெற்கின் நான்கு மாநிலங்களும், ஒரிஸ்ஸா, வங்காளம் போன்ற கிழக்கு மாநிலங்களும் இந்த அதிகாரப் போட்டியை நெருங்க முடியாதவையாகத்தான் இதுகாலவரையும் இருந்தன. இடைநடுவில் ஆந்திராவிலிருந்து நரசிம்மராவ் பிரதம மந்திரியாக பதவி ஏற்றிருந்தாலும் அவர் வடக்கினைத் தளமாகக் கொண்ட காங்கிரஸ் கட்சி சார்பிலேயே அப்பதவியை ஏற்றிருந்தார் என்பதனால் அவருக்குப் பின்பு தலைமை திரும்பவும் வடக்கு நோக்கிப் போய்விட்டது. இப்பொழுது தமிழ்நாடு வெகு பகிரங்கமாகவே பாரத முதல்வர் என்கின்ற பதவிக்கான போட்டியில் தன்னை நிறுத்திக்கொண்டிருக்கின்றது. மேலோட்டமாகப் பார்த்தால், இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று தோன்றக்கூடும். ஒரு மாநிலத்தை மட்டுமே சார்ந்த கட்சியின் தலைவர் 300 ஆசனங்கள் எடுக்கவேண்டிய பாரதத்தின் முதல்வராக ஆகமுடியுமா? இது ஜெயலலிதாவுக்குத் தெரியாதா? ஆனால், இக்கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு.
இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட கடந்த இருபது வருட காலத்தில் தமிழ்நாடு அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சிதான் முதலாவது பதிலாகும். இன்று மும்பாய் தலைநகராகக் கொண்டிருக்கும் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியில் தொழிற்துறை வளர்ச்சியில் தமிழ்நாடுதான் நிற்கின்றது. கல்வித்துறையில் அது அடைந்த முன்னேற்றம் அடுத்த விடயமாகும். தலைக்கு அதிகமான கல்லூரிகள் இருக்கும் மாநிலம் இதுவாகும். இன்றும் மதராஸ் கிறிஸ்டியன் கல்லூரி அகில இந்திய ரீதியில் முதன்மைத் தர இடத்தினைப் பற்றியிருக்கின்றது. வருடாவருடம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்காகச் செல்லும் விசாவுக்காக விண்ணப்பிக்கும் சுமார் 50,000 மாணவர்களில் அரைவாசித் தொகையினர் தமிழ் நாட்டைச் சோந்தவர்களென புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பெரியாரின் இயக்கத்தின் பயனாக சாதீய ஒடுக்குமுறைகள் மற்றைய மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் குறைந்து காணப்படும் அச்சமூகப்புரட்சியே இவ்வளவு அபிவிருத்திக்கும் காரணம் என்பது எனது சொந்தக் கருத்து. சினிமாத்துறையிலும் ஒஸ்கார் விருது வரைக்கும் சென்ற கலைஞர்கள் தெற்கினைச் சேர்ந்தவர்கள்தாம். இவ்வளவு சாதனை படைக்கின்றவர்கள் ஏன் ஒரு நாட்டின் அரசியல்தலைமையை கைப்பற்றக் கூடாது? இங்கு ஒரு தீர்க்கதரிசனத்துடன்தான் ஏனைய மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகும் இந்த முதலடியினை ஜெயலலிதா எடுத்து வைத்திருக்கின்றார். அவருக்கு சாதகமாக பல அரசியல் நிலைமைகள் இருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் எப்போதுமே கண்டிராத அளவுக்கு ஊழல் மலிந்த ஆட்சியினை நடத்தி இந்தியாவை பொருளாதார வீழ்ச்சிகாண வைத்து ஆதரவிழந்து போயிரக்கும் காங்கிரஸ் கட்சி. தேசிய அளவில் ஒரு கட்சியும் பெரும்பான்மை ஆதரவுபெற முடியாத வண்ணம் மாநிலக் கட்சிகள் வளர்ந்திருக்கும் தன்மை, பிரதமர் வேட்பாளராக பாரதீய ஜனதா கட்சியினால் முன்னிறுத்தப்பட்டிருக்கின்ற மோடியின் இனவாத அரசியலைப் பற்றி சகல மாநிலங்களிலும் எழந்திருக்கும் சர்ச்சை. இதன் மத்தியில், இந்தியாவுக்கான தரிசனத்துடன் தேர்தலில் குதித்திருக்கின்றது அ.தி.முக. ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்திருக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் இதற்கு சாட்சி பகருகின்றது.
‘தமிழக சாதனைத் திட்டங்கள் இந்திய அளவில் நிறைவேற்றப்படும்’ என்கின்ற சுலோகத்துடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது இந்த விஞ்ஞாபனம். இது தமிழ்நாட்டுக்கான கொள்கைகள், தேசிய அளவிலான கொள்கைகள் என வகை பிரித்துக்காட்டப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டுக்கான கொள்கைகளாக கூட்டுறவுக் கூட்டாட்சிக் கொள்கையை நிலைநாட்டுதல், இலங்கைத் தமிழர்களுக்கிடையே தனிநாட்டைப் பற்றிய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டியதை வலியுறுத்துதல், தமிழை ஆட்சி மொழியாக வரித்தல், சில்லறை வாணிபத்தில் (சுப்பர் மார்க்கெட் போன்ற வர்த்தக செயற்பாடுகள்) அந்நிய முதலீட்டினை அகற்றுதல் போன்றவை உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றையும், இப்பொழுது சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கும் அரசு நடத்தவிருக்கும் சேவைகளையும் (அம்மா மருந்தகம், அம்மா உணவகம், அம்மா 20 லீட்டர் கான் குடிநீர் இத்தியாதி) நோக்குபவர்கள் இவர் தனது கூட்டணியிலுள்ள மார்க்சீயக் கட்சிகளின் செல்வாக்கிற்கு ஆட்கொள்ளப்பட்டு விட்டாரா என ஐயமுறச் செய்திருக்கின்றன. இவற்றை விடவும் தேசிய அளவிலான கொள்கைகள் இன்னும் ஆச்சரியமாக இருக்கின்றன.
மதச்சார்பின்மைக் கொள்கையை நிலைநாட்டவும் மேம்படுத்தவும் அ.தி.மு.க. பாடுபடும். இட ஒதுக்கீடு கொள்கையை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப தொடர்ந்து செயற்படுத்தும். இந்துத்துவவாத பாரதீய ஜனதா கட்சியுடன் இவர் கூட்டுச் சேராததற்கு இப்பொழுது காரணங்கள் புரிகின்றன அல்லவா? அடுத்து பெண்கள் மேம்பாட்டிற்காகத் தமிழ்நாட்டில் செயற்படுத்தப்படும் பல புத்தாக்கமான திட்டங்களை இந்திய அளவில் செயற்படுத்த முன்வந்திருக்கின்றது. இதற்கு ஓர் உதாரணமாக, ஒப்பந்தக்காரர்கள் தமது வினைத்திற்ன மிக்க தொழிலாளர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பெண்களை வேலைக்கு அமர்த்தியிருந்தால்தான் அவர்கள் அரசு திட்டங்களுக்கு கேள்விப் பத்திரம் சமர்ப்பிக்க முடியும் என்கின்ற விதியினை எடுத்துச் சொல்லலாம். இந்த நடைமுறை கொண்டுவந்ததனால்தான், அதுவரை சித்தாளாக மட்டும் பெண்கள் பணி செய்த கட்டடத் தொழில்களிலெல்லாம் கூடிய சம்பளம் வாங்கும் தொழில்களில் பெண்கள் பயிற்றுவித்து அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இது போலவே பாராளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் 33 சதவீதம் இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பிரேரணையை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை அ.தி.மு.க எடுக்கும். இவையெல்லாமே இப்பொழுது அகில இந்திய ரீதியாகப் பெண்கள் அமைப்புகள் பல வருட காலங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் கோரிக்கைகளாகும். அவர்களின் ஆதரவு இவருக்கு நிச்சயம் கிட்டுவது மட்டுமல்லாமல், ஏனைய மாநிலக்கட்சிகளும் இவருடைய கொள்கைகளைப் பின்பற்றும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
மேலும், நதிகள் யாவும் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருக்கின்றது. நதிகளை இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக் கூறப்படுகின்றது. மற்றும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கக்கூடாது என்பதையும், செலவாணி அடிப்படையிலான யூக வணிகம் நீக்கப்படுமென்பதையும் இது வலியுறுத்தியிருக்கின்றது. மத்திய அரசின் வருமானத்திலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஐந்து சதவீத ஒதுக்கீடு சிபாரிசு செய்யப்படுகின்றது. அத்துடன், மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட சட்டங்களும் திட்டங்களும், வெளிநாட்டு வங்கிகளிலுள்ள கறுப்புப் பணத்தினை மீட்டெடுக்கும் திட்டங்களும், இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உறுப்பினர் அந்தஸ்தினை ஆதரிக்கும் திட்டமுமாக இந்த விஞ்ஞாபனம் செல்லுகின்றது. இத்துடன், தமிழ்நாட்டினை இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக ஆக்குவதற்குரிய 20 வருடத் திட்டமும் போடப்பட்டிருக்கின்றது.
அதாவது, ஒரு மாநிலக்கட்சியாகவே இருந்துகொண்டு தேசிய அரசியலை நெறிப்படுத்தலாம், அப்படித்தான் செல்வாக்குச் செலுத்தவேண்டும் என்கின்ற இந்திய அரசியலின் எதிர்காலப் போக்கினை மிகத் தெளிவாக முன்வைத்திருக்கின்றார். இது இந்தத் தேர்தலில் முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருக்கலாம். ஆனால், அதற்கான அத்திவாரத்தினை ஜெயலலிதா நாட்டி விட்டார் என்பதில் சந்தேகமே இல்லை. எதிர்காலத்தில் தமிழ்நாடு இந்திய அரசியலில் கோலோச்ச ஆரம்பித்தால் எமது நாட்டில் தமிழர் இனப்பிரச்சினையின் குணமே மாறிவிடும். அதற்குத் தயாராக சிங்களத் தலைவர்கள் இருக்கின்றார்களா என்பதுதான் கேள்வியே.
அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்
தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.