பட மூலம், Tamil Guardian 

இந்தக் கட்டுரை எழுதப்படும் போது வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பநிலை தீரவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கடையடைப்பு, எதிர்ப்புப் பேரணி, கண்டனக் கூட்டமென வடக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. இந்த நிலையில், நாளை என்ன நிகழும் என்பது பற்றிய கணிப்புக்களை வெளியிடுவதும் கடினமானது. இந்தப் பிரச்சினையின் ஆழத்தை மதிப்பிடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். தமிழ் அரசியல் பரப்பில் கடந்த இரண்டு வாரகாலமாக வடக்கு மாகாண சபை விவகாரமே பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால், அமைச்சர்கள் மீதான விசாரணைதான் இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் போல் தெரியும். அதுதான் உண்மையான காரணமா?

முதலில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்! ஒக்டோபர் 2013இல் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தப் பொறுப்பை ஏற்கும் போது விக்னேஸ்வரன், சம்பந்தனதும் தமிழரசு கட்சியினதும் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர். ஆனால், இப்போது அதே விக்னேஸ்வரன் மீது, அதே தமிழரசு கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்கும் போது அனைத்தும் சம்பந்தனதும் சுமந்திரனதும் ஆலோசனையின் பேரில்தான் நடந்தேறியது. அமைச்சர்கள் நியமனத்திலிருந்து அவைத் தலைவர் வரையில் அனைத்துமே தமிழரசு கட்சியின் ஆதிக்கத்தின் கீழ்தான் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அனைத்தையும் விக்னேஸ்வரன்தான் செய்கிறார் என்பதான தோற்றமே வெளியில் காண்பிக்கப்பட்டது.

அமைச்சரவை நியமனத்தின் போது திட்டமிட்டு கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய கட்சிகளின் தெரிவுகள் நிராகரிக்கப்பட்டன. தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு இடம் வழங்கப்பட்டது. அதற்கும் பின்னாலும் கூட, கட்சிகளை பிரித்தாளும் திட்டம் இருந்ததேயன்றி, நல்ல நோக்கம் இருக்கவில்லை. ஆனால், இன்று நிலைமைகள் கணிசமாக மாறிவிட்டது. புளொட் தலைவர் சித்தார்த்தன் திம்பு பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்ட ஒருவர். அப்படியான ஒருவருக்கு அமைச்சரவையில் ஒரு இடம்கொடுக்க தமிழரசு கட்சி மறுத்தது. மகாபாரத்தில் எல்லாப் பழியும் கிருஸ்ணனுக்கே என்பது போல் இந்தப் பழியையும் விக்னேஸ்வரனே சுமந்துகொண்டார். ஆனால், இன்று எந்த சித்தார்த்தனை, சம்பந்தன் கண்டுகொள்ளவில்லையோ, அந்த சித்தார்த்தனின் உதவியை நாடியிருக்கிறார். சித்தார்த்தனைக் கொண்டே சம்பந்தன் சமரச முயற்சியில் இறங்கியிருக்கிறார். சித்தார்த்தன், முதலமைச்சர் மற்றும் சம்பந்தன் ஆகியோருடன் பேசக் கூடிய ஒருவராக இருப்பதால், சமரச முயற்சிக்காக அவரை நாடவேண்டிய நிலைக்கு தமிழரசு கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

பொதுவாக அரசியலில் ஒரு பிரபலமான கருத்துண்டு. அதாவது, அரசியலில் நிரந்தர நன்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது. இந்தக் கூற்றுக்கு வடக்கு மாகாண சபையே தற்போது மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறது. ஆரம்பத்தில் விக்னேஸ்வரனா! அவர் அற்புதம் என்றவர்கள் எவரும் தற்போது அவருடன் இல்லை. ஆனால், ஆரம்பத்தில் அவரிலிருந்து விலகிநின்றவர்கள் அனைவரும் தற்போது அவருக்கு பக்கபலமாக நிற்கின்றனர். இந்த நிலைமை ஏற்பட்டதற்கு விக்னேஸ்வரன் ஊழல் தொடர்பில் உறுதியான முடிவை அறிவித்தது மட்டும்தான் காரணமா? விடயங்களை மேலோட்டமாகப் பார்த்தால் விடயங்கள் அனைத்தும் இரண்டு அமைச்சர்கள் தொடர்பானது போன்றே தெரியும். அதாவது கட்டாய விடுமுறையில் செல்லுமாறு பணிக்கப்பட்ட அமைர்ச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகிய இருவரைக் காப்பாற்றும் நோக்கில்தான், அனைத்துமே நடைபெறுவது போன்றதொரு தோற்றம் தெரிகிறது. உண்மையில் இதற்காகவா விக்னேஸ்வரன் மீது தமிழரசு கட்சி இந்தளவு கோபம் கொண்டது? ஆனால், விக்னேஸ்வரன் அவ்வாறானதொரு முடிவை எடுப்பதற்கு முன்னர் கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் பேசியிருக்கிறார். அவர்களது ஆலோசனைகளை கேட்டிருக்கிறார். இதில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளும் நான்கு அமைசர்களையும் மாற்றுமாறுதான் அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றன. ஆனால், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை, விக்னேஸ்வரனின் முடிவை எதிர்த்ததுடன், அவ்வாறாயின் நீங்களும் விலக வேண்டும் என்று கூறியிருக்கிறார். மாவையின் மேற்படி கூற்று, விக்னேஸ்வரனை வெளியேற்ற வேண்டும் என்னும் திட்டம் ஏற்கனவே தமிழரசு கட்சியிடம் இருந்திருக்கிறது என்பதையே காண்பிக்கிறது. கூட்டமைப்பின் முதலமைச்சர் என்னும் வகையில் நோக்கினால் விக்னேஸ்வரன் எடுத்து முடிவு சரியானது. அதில் ஒரு ஜனநாயம் உண்டு. ஆனால், முதலமைச்சரை வெளியேற்றும் விடயத்தில் தமிழரசு கட்சியானது, ஏனைய கட்சிகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தன்னிச்சையாகவே முடிவுகளை எடுத்துவிட்டு, அதனை ஏற்குமாறு ஏனைய கட்சிகளுக்கு கட்டளையிட்டிருக்கிறது. ஆனால், இந்த விடயத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் மூன்றும் சரியான பக்கத்தில் நிற்கின்றன. தமிழரசு கட்சியின் முடிவை முற்றிலுமாக நிராகரித்திருக்கின்றனர்.

இந்த இடத்தில் ஒரு கேள்வியை கேட்போம் – அப்படியென்ன அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் மீதும் தமிழரசு கட்சிக்கு இந்தளவு காதல்? உண்மையில் டெனீஸ்வரன் டெலோவின் சார்பில் அமைச்சராக இருப்பவர். அவரைக் காப்பாற்ற டெலோவே முயற்சிக்கவில்லை. அப்படிப் பார்க்கப் போனால் ஒரு சத்தியலிங்கத்திற்காகவா தமிழரசு கட்சி இந்தளவிற்கு முதல்வரை எதிர்க்கிறது? அவரை வெளியேற்ற முயற்சிக்கிறது?

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் சம்பந்தனுக்கும் இடையிலான முரண்பாடு என்பது இருவருக்கும் இடையிலான ஈகோ விவகாரமாக காண்பிக்கப்பட்ட போதிலும் கூட, உண்மையில் அது ஒரு ஈகோப் பிரச்சினையல்ல. மாறாக அரசியல் நிலைப்பாடு தொடர்பிலான பிரச்சினை. விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவந்தது சம்பந்தன் என்றாலும் கூட, ஒரு கட்டத்திற்கு பின்னர் சம்பந்தனது நிலைப்பாட்டுடன் விக்னேஸ்வரன் பயணிக்கவில்லை. அவர் தனித்து பயணித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் என்னும் வகையில் அவரது அரசியல் நிலைப்பாடுகள் சம்பந்தனது நகர்வுகளுக்கு இடைஞ்சலாக மாறின. தமிழ் அரசியலில் சம்பந்தன் தரப்பு என்றும், விக்னேஸ்வரன் தரப்பு என்றும் பிரித்து நோக்குமளவிற்கு அரசியலில் ஒரு தெளிவான கருத்துநிலைப்பட்ட பிளவு தெரிந்தது. களத்திலும் புலத்திலும் தமிழ்த் தேசியம் தொடர்பில் உறுதியான நிலைப்பாடுடைய பலரும் விக்னேஸ்வரனையே தலைவராகக் கண்டனர். இது கொழும்பின் நிகழ்ச்சிநிரலுக்கும் ஒரு தலையிடியாக மாறியது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் பலவீனமடைந்துவிடும் என்னும் கொழும்பின் கணக்கை பொய்ப்பிக்கக் கூடிய ஒருவராக விக்னேஸ்வரன் தெரிந்தார். முக்கியமாக வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் மற்றும் விக்னேஸ்வரனின் தொடர்ச்சியான பேச்சுக்கள் தமிழ்த் தேசிய சக்திகளுக்கு புத்துணர்ச்சியூட்டியது. புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலும் விக்னேஸ்வரனின் நன்மதிப்பு உயர்ந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தமிழ் மக்கள் பேரவை விக்னேஸ்வரனை முன்னிலைப்படுத்தி தோற்றம்பெற்றது. இதன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட எழுக தமிழ் நிகழ்வுகளை, தமிழரசு கட்சி எதிர்க்கிறது என்று தெரிந்தும், விக்னேஸ்வரன் அவற்றில் பங்குகொண்டார்.

இவை அனைத்தையும் தொகுத்து நோக்கினால் விக்னேஸ்வரன் தமிழரசு கட்சியால் எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவராக இருந்தார். இவ்வாறானதொரு நிலையில் விக்னேஸ்வரன் என்னும் தலையிடியை எவ்வாறு போக்குவது என்னும் சிந்தனையின் விளைவுதான் தற்போதைய நம்பிக்கையில்லா தீர்மானம். எனவே, அமைச்சர்கள் விவகாரம் என்பது வெறும் துருப்புச் சீட்டு மட்டுமே. உண்மையான இலக்கு விக்னேஸ்வரன் ஆவார். அந்த வகையில் இது முன் கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட தமிழரசு கட்சியினது ஒரு தாக்குதல் நடவடிக்கையாகும் – ஒப்பிரேசன் விக்னேஸ்வரன்.

விக்னேஸ்வரனை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை சற்று உற்று நோக்கினால் அதன் அரசியல் ஆழத்தை புரிந்துகொள்ள முடியும். விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவருவதற்காக ஆளும் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜக்கிய தேசியக் கட்சியின் உதவியை தமிழரசு கட்சி நாடியிருக்கிறது. இது யாழ். சமூகத்தின் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றையே எள்ளிநகையாடும் ஒரு செயல். இதன் பின்னாலும் ஒரு இரகசிய நிகழ்ச்சிநிரல் உண்டு என்பதே இந்தக் கட்டுரையின் சந்தேகம். ஏற்கனவே, கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு, ஒரு கூட்டாட்சியிலேயே பங்கு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸோடு சேர்ந்து ஆட்சியமைப்பதாக கூறிய போதும் பின்னர், ஆளும் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனும் இணைந்தே ஆட்சியமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஆரியவதி கலப்பதி என்னும் சிங்கள பெண்மணி போக்குவரத்து அமைச்சராக இருக்கின்றார். இங்கும் ஏனைய கட்சிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு, தமிழரசு கட்சியைச் சேர்ந்த இருவரே அமைர்ச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இருவருமே தமிழ் தேசிய அரசியலுடன் தொடர்பற்றவர்கள். இதன் ஊடாக தமிழரசு கட்சி, கிழக்கு மாகாணத்தின் தமிழ் தேசியக் குரல்களை பலவீனப்படுத்துவதில் தற்காலிக வெற்றியை பெற்றுக்கொண்டது. கிழக்கு மாகாணத்தின் சூழலுக்கு ஏற்ப தந்திரோபாய ரீதியாக ஏனைய சமூகங்களோடு ஊடாடுவதை இந்தக் கட்டுரை நிராகரிக்கவில்லை. கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அது அவசியமானதே. ஆனால், அதில் நிதானம் இருப்பது அவசியம். தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி செயலாற்றுவது என்பதும் தமிழரசு கட்சியின் சுய நலன்களை முன்னிறுத்தி செயலாற்றுவது என்பதும் ஒன்றல்ல.

இன்று கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய அரசியலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு சூழலில்தான் வடக்கில் விக்கினேஸ்வரன் தமிழ் தேசியத்தின் வலுவான குரலாக இருந்துவருகிறார். தமிழ்த் தேசிய அரசியலை சிலர் யாழ். மையவாத அரசியல் என்றும் கூறுவதுண்டு. அது தவிர்க்க முடியாதது என்பதே இக்கட்டுரையின் கருத்து. ஏனெனில், தமிழ் மக்கள் தனித்து மேலாதிக்கம் செலுத்தும் பாரம்பரிய பகுதியான வடக்குத்தான் தமிழ்த் தேசிய அரசியலின் மையமாக இருந்தது. எனவே, அங்கு தமிழ் மக்களின் குரல் வலுவாக இருந்தால்தான் அதனை அடித்தளமாகக் கொண்டு கிழக்கிலும் தமிழ்த் தேசிய அரசியலை பலப்படுத்த முடியும். வடக்கில் தமிழ்த் தேசிய குரல் பலவீனப்படுமாக இருப்பின் அது தமிழ்த் தேசிய அரசியலை வீழச்சிப் பாதையிலேயே கொண்டு செல்லும். வடக்கின்றி கிழக்கால் தனித்து எழ முடியாது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் விக்னேஸ்வரனை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. ஒருவேளை இந்த விடயத்தில் தமிழரசு கட்சி வெற்றிபெறுமாக இருப்பின் கிழக்கு போன்று வடக்கிலும் ஆளும் கட்சிகளுடன் சேர்ந்து ஒரு கூட்டாட்சி இடம்பெறும். இதன் மூலம் வடக்கிலும் கிழக்கிலும் அனைவரும் இணைந்து ஆட்சியமைத்திருக்கும் நிலையில் இலங்கையில் என்ன பிரச்சினையிருக்கிறது என்னும் தர்க்கம் முன்வைக்கப்படும். தமிழ் அரசியல் முற்றிலுமான தமிழ்த் தேசிய நீக்கத்திற்குள்ளாகும். இதுவே தமிழரசு கட்சியின் திட்டம். இது அவர்களின் திட்டம் மட்டும்தானா? ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான தமிழரசு கட்சியின் செயற்பாடானது, தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு கறையாகும். இனி முடிவு மக்களிடம்.

யதீந்திரா