படங்கள் | Tamil Guardian

பல தசாப்தங்களாக நீடித்துவந்த போர் 2009ஆம் ஆண்டு 19ஆம் திகதி முடிவுற்றதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அன்றிலிருந்து மே 19 போர் வெற்றி தினமாக இராணுவ அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டு வந்தது.

மஹிந்த அரசாங்கத்தைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இனிமேல் மே 19 போரில் உயிர் நீத்தவர்களின் “நினைவு நாளாக” அனுஷ்டிக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தார்.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு, கண்காணிப்புக்கு, கைதுகளுக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலியைச் செய்துவந்த மக்களுக்கு புதுத் தெம்பாக நல்லாட்சியின் இந்த அறிவிப்பு இருந்தது.

இருந்தபோதிலும் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து எந்தவித எதிர்ப்புகள் வராதபோதிலும் பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தலுடன் கூடிய நடவடிக்கைகளில் ஓய்வு ஏற்பட்டிருக்கவில்லை.

ஆனால், இம்முறை அதற்கு ஒருபடி மேல் போய் முள்ளிவாய்க்காலில் சிவில் சமூக அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வை நடாத்தவிடாமல் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றிடம் பொலிஸார் தடையுத்தரவொன்றைப் பெற்றிருந்தனர்.

நினைவேந்தல் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களில் ஒரு தொகுதியினருடைய பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு கற்களைப் பதிப்பதற்கு அவர்கள் மேற்கொண்டிருந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்கும், பொது அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் விளைவிக்கும் செயற்பாடாகும் என முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்தது.

இந்தத் தடையுத்தரவை இரத்துச் செய்யக்கோரி மனித உரிமை செயற்பாட்டாளரான எழில் ராஜன் சார்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடந்த வாதத்தை அடுத்து நீதிபதி, நினைவுச்சின்னம் அமைந்துள்ள இடத்திற்குள் எவரும் செல்லக் கூடாது என உத்தரவிட்டார். மேலும், நினைவேந்தல் நிகழ்வுகளை ஆலயத்தினுள்ளே நடத்துமாறும் ஆலயமருகில் நினைவஞ்சலி செலுத்துபவர்கள் கூடியிருந்து செயற்படலாம் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

அத்தோடு, நினைவு கற்களில் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்றும் நீதவான் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி, கிறிஸ்தவ ஆலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இருந்தபோதிலும், வழமையான புலனாய்வாளர்களின் வேலை நடந்துகொண்டுதான் இருந்தது. அத்தோடு நிகழ்வை ஏற்பாடு செய்த மனித உரிமை செயற்பாட்டாளர் எழில் ராஜனை மற்றும் கற்களில் பெயர்களைப் பொறித்த இளைஞனை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தெற்கில் மீண்டும் பாற்சோறு வழங்கப்பட்டு போர் வெற்றி தினம் மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது.

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றிச் சின்னங்கள் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே வருகின்றன, புதிதாகவும் முளைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், போரில் உயிரிழந்த தங்களது உறவுகளை நினைவுகூர்ந்து பெயர் பொறிக்கப்பட்ட கல்லைக் கூட நடுவதற்கு முடியாமல் மஹிந்த அரசாங்கத்தைப் போன்றே நல்லாட்சியிலும் தமிழ் மக்கள் தடையை எதிர்நோக்கி வருகிறார்கள்.

நல்லிணக்கத்திற்கென்று ஓர் அமைச்சு, அமைப்பு இருக்கின்ற போதிலும் நினைவுகூரும் உரிமையைப் பாதுகாக்க எவரும் முன்வரவில்லை. ஆனால், அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு எவராலும் எதுவித இடையூறும் ஏற்படுத்தப்படவில்லை.

அண்மையில் ‘மாற்றம்’ காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்திருந்தது. போர் முடிவடைந்த இறுதி நாட்களில் பாதுகாப்புப் படையினரிடம் தாங்களே கையளித்த பிள்ளைகள், சகோதரர்கள், கணவர், பேரப்பிள்ளைகள் என்றாவது ஒருநாள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். “விடுதலைப் புலி அமைப்பில் இருந்தவர்கள் என்பதால்தானே ஒப்படைத்தோம், விசாரித்துவிட்டு அனுப்புவார்கள் என்று. எத்தனையோ முகாம்களுக்குப் போய் தேடியும் எங்கும் அவர்கள் இல்லை. கையைப் பிடித்து இந்தாங்கோ என்று கொடுத்தவர்கள் இப்போது இல்லை என்றால்…”

போர் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள நிலையில் காணாமல்போனவர்களின் வரவை எதிர்பார்த்து உறவுகள் வீதிகளையோ வீடாக்கியுள்ளார்கள். வாழ்க்கையைக் கொண்டு நடாத்த பூர்வீக நிலத்தை திருப்பித் தருமாறு இன்னுனொரு மக்கள் கூட்டமும் தெருவில் காத்திருக்கிறார்கள். கொடூரமாக கொல்லப்பட்டவர்களை நினைவுகூரக்கூட முடியாத நிலையில் மற்றுமொரு மக்கள் கூட்டம். ஆனால், இன்றும் மே 18 தென்னிலங்கைக்கு போர் வெற்றி தினம்.