படம் | reliefweb

சமீபத்தில் தமிழ் நாட்டில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், தமிழரசு கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன், இந்திய மாநில ஆட்சிக்கு நிகரான ஆட்சிமுறையொன்றையே தாம் எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப் புலிகளின் அழிவிற்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சம்பந்தன், முதல் முதலாக கூட்டமைப்பு, எவ்வாறானதொரு அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றது என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கும் சந்தர்ப்பம் இதுவாகும். இது குறித்து கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏனைய கட்சிகள் எத்தகைய அபிப்பிராயங்களை கொண்டிருக்கின்றன என்பதை அறிய முடியாவிட்டாலும் கூட, இந்திய மாநில ஆட்சிக்கு ஒப்பான ஒன்றை கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏனைய கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்களான சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் எதிர்க்கப்போவதில்லை. சமீப காலமாக, வழமைக்கு மாறாக தமிழ் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு அப்பால், தமிழ் நாட்டின் பி.ஜே.பி தலைவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்த சம்பந்தன், இதன் தொடர்ச்சியாகவே, தமிழ் நாட்டில் வைத்து அரசியல் தீர்வு குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கின்றார். ஆனால், கூட்டமைப்பிற்குள் இருந்தவாறு தொடர்ந்தும் புலிவாத அரசியலை தூக்கிப்பிடிக்க முற்படும் ஒரு சிலருக்கு சம்பந்தனின் மேற்படி அறிவிப்பு உவப்பான ஒன்றாக இருந்திருக்காது என்பதில் ஜயமில்லை.

சம்பந்தனின் மேற்படி அறிவிப்பின் மூலம் கூட்டமைப்பு தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வந்த கேள்வியொன்றுக்கு பதில் கிடைத்துவிட்டது. கூட்டமைப்பு தமிழ் மக்களின் சார்பில் எதிர்பார்க்கும் தீர்வுதான் என்ன? தற்போது அதற்கு பதில் கிடைத்திருக்கிறது. சம்பந்தன் ஏன் இவ்வாறானதொரு அறிவிப்பை இந்த சந்தர்ப்பத்தில் வெளியிட்டிருக்கின்றார். இந்தியாவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்னும் எதிர்வு கூறல் பலமடைந்துவரும் சூழலில்தான் சம்பந்தன் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். இலங்கையில் தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்படும் ஒரு தீர்வாலோசனை, இந்தியாவின் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். வெறுமனே அது தமிழ் நாட்டிற்குள் மட்டுமே வரவேற்கப்படுவதில் அர்த்தமில்லை. இதனைக் கருத்தில் கொண்டுதான் சம்பந்தன் மேற்படி அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். சம்பந்தனின் இன்றைய அறிவிப்பு, ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியால் முன்வைக்கப்பட்டு வந்த விடயம்தான். ஆனால், இன்று சம்பந்தன் அதனை முன்வைக்கும் போது அதன் பெறுமதி மிகவும் கனதியானது. வழமைபோலவே சம்பந்தனின் மேற்படி கருத்து, அவரை விமர்சிப்பதையே தங்களது பிரதான அரசியல் இலக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் அணியினரால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் இந்திய மாநிலங்களுக்கு ஒப்பானதொரு அரசியல் தீர்வை வடக்கு கிழக்கில் வாழ்ந்துவரும் தமிழர்கள் எப்போதோ பெற்றிருக்க முடியும். ஆனால், அரசியலில் தூர நோக்குடன் சிந்தித்து செயலாற்றும் தலைமைகள், தமிழர்கள் மத்தியில் தோன்றியிராமையினால் இன்று மீண்டும் பழைய விடயங்களையே பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில், தமிழர்கள் ஒரு தோல்வியடைந்த சமூகம். புலிகளை ஆதரித்தவர்கள், எதிர்த்து நின்றவர்கள் ஆகிய அனைவருமே தோற்றுப் போனவர்கள்தான். ஆனால், இந்தத் தோல்வியின் சுமையை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்துவரும் ஏழை மக்களாவர். எனவே, எந்தவொரு விடயத்தை முன்னிறுத்தும் போதும், முதலில் மேற்படி ஏழை மக்களின் நலன்களை கருத்தில்கொள்ள வேண்டிய அவசியப்பாடு அனைத்து தலைமைகளுக்கும் உண்டு. இன்றைய சூழலில் என்னதான் விவாதித்தாலும், ஆவேசப்பட்டாலும், கொள்கைகளை அழகாகச் சொன்னாலும், நிலைமைகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படப்போவதில்லை. பழக்கதோஷத்தில் சிலர் உரத்துப் பேசினாலும், அவர்களிடம் எதுவுமில்லை என்பது அவர்களுக்கே தெரியும்.

எனவே, இத்தகையதொரு பின்னனியில், ஓரளவு சாத்தியமான விடயங்களை முன்னிறுத்துவதுதான் பொருத்தமான ஒன்றாக அமையும். ஒருவேளை, அவை சாத்தியப்படாவிட்டாலும் கூட, அதனால் மீண்டும் ஏழை மக்கள் பாதிக்கப்படாதவொரு நிலைமையாவது மிஞ்சும். எனவே, இன்று சம்பந்தன் குறிப்பிடும் விடயம் நடக்கின்றதா இல்லையா என்பதற்கு அப்பால், அதனால் இருக்கின்ற நிலைமை மேலும் மோசமடையாது என்பது உறுதி.

இன்றைய சூழலில், கூட்டமைப்பு ஒரு யதார்த்தபூர்வமான அணுகுமுறையையே முன்வைக்க முயல்கிறது. அதனைத்தானே கூட்டமைப்பினால் செய்யவும் முடியும். அதாவது, இலங்கைக்குள் இருக்கின்ற குறிப்பிட்டளவான சிங்கள மக்கள், அதிகாரப்பகிர்விற்கு ஆதரவான சக்திகள், இந்திய மத்திய அரசு, சர்வதேச சமூகம் ஆகிய அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வுதான் பொருத்தமானதாக இருக்கும் என்பதே அந்த நிலைப்பாடு. அது பொருத்தமானது என்பதற்கு அப்பால், அதுதான் இன்றைய சூழலில் நம்மால் முன்வைக்கக் கூடியது. அந்த வகையில்தான் சம்பந்தனின் கூற்றை நோக்கவேண்டும். சில தினங்களுக்கு முன்னர் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் பேசியிருந்த வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் நூறு விகிதமான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். அனைவரும் வெற்றிபெறக் கூடியவாறான (win-win situation) ஒரு தீர்வின் மூலமே இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

தற்போது சம்பந்தன் தெரிவித்திருக்கும் இந்திய மாநில ஆட்சிக்கு ஒப்பான தீர்வு என்பதும், விக்னேஸ்வரன் குறிப்பிடும் – தமிழ் மக்கள் நூறுவிகித அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை என்னும் கூற்றும் ஒரு புள்ளியில்தான் சந்திக்கின்றது. எனவே, கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு என்பது ஒரு இந்திய மாதிரிதான் என்று இப்பத்தி குறிப்பிடுவது சரியான ஒன்றே! ஆனால் இது பற்றி அறிக்கையிட்டிருக்கும் ‘த நேசன்’ பத்திரிக்கை, தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, மேற்படி விக்னேஸ்வரனின் கருத்துடன் முரண்படுவதாக குறிப்பிட்டிருக்கின்றது. இது குறித்து கூட்டமைப்பினரே விளக்கவேண்டும். எனினும், கூட்டமைப்பில் உள்ள அனைவரும், தீர்வு குறித்த விடயத்தில் ஒருமித்தமான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டியது காலத் தேவையாகும். அந்த வகையில் சம்பந்தனின் அறிவிப்பு மிகவும் காலப்பொருத்தம் கருதிய ஒன்றும் முன்னேற்றகரமான ஒன்றுமாகும். உண்மையில், தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு தீர்வு கிடைக்க வேண்டுமென்று அக்கறைகொள்வோர் ஒவ்வொருவரும், சம்பந்தனின் கரங்களை பலப்படுத்தவேண்டியது இன்றைய தேவையாகும். அதாவது, அவர் குறிப்பிடும் – இந்திய மாநில ஆட்சிக்கு ஒப்பான ஒரு தீர்வு என்னும் நிலைப்பட்டை.

யதீந்திரா

DSC_4908