“எனது தந்தை, எனது தந்தையின் தந்தை, எனது தந்தையின் பாட்டன் என எல்லோருமே இங்கு வாழ்ந்துள்ளார்கள். பரம்பரை பரம்பரையாக முள்ளிக்குளமே எங்கள் வதிவிடமாக இருந்துவந்துள்ளது. எங்கள் தேவாலயம், நான் பிறப்பதற்கு முன்னரே எனது முப்பாட்டன் காலத்தில் கட்டப்பட்டது. எங்கள் ஊரினூடாக 4 வாய்க்கால்கள் ஓடுகின்றன. குளிப்பதற்கு மட்டுமென்றே ஒரு ஆறும் இருந்தது. கடலிலே போய் மீன்பிடிக்கமுடியாத சந்தர்ப்பங்களில் வாய்க்கால்களில் மீன்பிடிப்போம். பயிர்ச்செய்கை, மாடு, கோழி, எருமை என அனைத்தும் அபரிமிதமாகவும், உண்பதற்கும் பருகுவதற்கும் போதுமானதாகவும் இருந்தது. மாலைவேளைகளில் ஒன்றுகூடி நடன, நாடக நிகழ்வுகள் ஏற்பாடுசெய்து அனைவரும் அகமகிழ்ந்தோம். எமது முஸ்லிம் சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததுடன், யுத்தகாலத்தில் தாக்குதல் தீவிரமடையும் போதெல்லாம் அவர்களுடனேயே தங்கியிருந்து, நிலைமை சுமூகமடைந்ததும் வீடு திரும்புவது வழக்கம். நிச்சயம் இந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு நல்லது நடக்கும் என உறுதியாக நம்புகிறேன். நாங்கள் எல்லோரும் ஒன்றாக சமாதானமாக வாழ்வோம் என ஒவ்வொரு நாளும் நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் இந்த மண்ணைவிட்டுப் போகுமுன்பாவது அது நடந்துவிடவேண்டும்”

2007ஆம் ஆண்டிலிருந்து வீடுதிரும்ப முடியாமல் இருக்கின்ற, முள்ளிக்குளத்தைச் சேர்ந்த 88 வயதான எம். பிரான்சிஸ் வாஸ் என்கிற முதியவர் தனது நினைவுகளை இவ்வாறு மீட்டினார்.

எம். பிரான்சிஸ் வாஸ்

வீடுதிரும்புவதற்கான தமது போராட்டத்தை மீண்டும் ஆரம்பம்

மூன்று நாட்களுக்குள் திருப்பி அழைக்கப்படுவார்கள் என்கிற வாக்குறுதியுடன் செப்டெம்பர் 8, 2007இல், இராணுவத்தினரால் மூர்க்கமான முறையில் முழுகிராமமும் வெளியேற்றப்பட்டது. பத்து வருடங்களுக்குப் பின்னரும்கூட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பி பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுவதற்கு, இன்னமும் அனுமதி வழங்கப்படாமல் இருக்கிறார்கள். 2007இல் முள்ளிக்குளத்திலிருந்து அவர்கள் அகற்றப்பட்டதிலிருந்து முழு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் வட மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் அங்கு நிறுவப்பட்டுள்ளது. பல ஆர்ப்பாட்டங்கள், மனுக்கள்[i], உரையாடல்கள், போலி வாக்குறுதிகள்[ii] என ஒரு தசாப்தகாலமாக நீட்சிபெற்று வந்த போராட்டமானது, உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்ற பாதிக்கப்பட்ட ஏனைய மக்களின் செய்திகள் கொடுத்த உந்துதலினாலும், இனமத வேறுபாடின்றி பலர் கொடுத்த ஆதரவினாலும், தற்போது மீண்டும் இவ்வூர் மக்களை வீதிகளுக்குக் கொண்டுவந்திருக்கின்றது.

தங்களது சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு 2011 செப்டெம்பர் மாதம் அனுப்பப்பட்ட மனு.

வௌியேற்றப்பட்ட முள்ளிக்குளம் மக்கள் மலன்காட்டுப் பகுதியில் வசித்தபோது – 2012 ஜூன் (படம் – NAFSO)

முள்ளிக்குளத்தைச் சேர்ந்த இம்மக்கள், மன்னார் -புத்தளம் பிரதான வீதியிலிருந்து தமது மூதாதையரின் கிராமத்திற்குத் திரும்புகின்ற வளைவில் அமைந்துள்ள முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த, ஆதரவும் அனுதாபமும் மிக்க ஒருவரின் வீட்டுவளாகத்தினை தங்கள் அண்மைய ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு தெரிவுசெய்தமையிலிருந்து, அப்பிரதேச முதியவர் பிரான்ஸிஸ் வாஸ் கூறியபடி, கஷ்டப்படுகின்றவேளைகளில் ஊரையொட்டி அமைந்துள்ள மரிச்சுக்கட்டு பிரதேசவாழ் முஸ்லிம்களுடன் சமாதானமாக வாழ்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துவந்ததாக அவர் மீட்டிய நினைவுகள் மீள்உறுதிசெய்யப்பட்டு உயிரூட்டப்பட்டிருக்கிறது.

அண்மைக்காலங்களில் வடக்கு – கிழக்கு முழுவதும் காணிகளை மீளக்கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையும் நீதியும் வேண்டியும் பரந்த அளவில் நடாத்தப்படுகின்ற தொடர் ஆர்ப்பாட்ட அலைகளின் தாக்கமானது, 2007 முதற்கொண்டு சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற தம் சொந்த கிராமங்களுக்குத் திரும்புவதற்கான முள்ளிக்குளம் வாசிகளின் போராட்டத்திற்கு ஒருவகையான புத்துயிரைக் கொடுத்திருக்கிறது. கடந்த மாதம் இடம்பெற்ற கூட்டமொன்றில் (மேரி மாதா சங்கம்) முள்ளிக்குளத்தைச் சேர்ந்த வயதானப் பெண்கள், நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற கேப்பாபுலவு மக்களின் காணிமீட்பு போராட்டத்தைப்பற்றி கலந்துரையாடி, தாமும் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக மீள்-போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டுமென்று தீர்மானித்திருந்தார்கள். அதன்பின்னர் அவர்கள் கிராமத்தில் உள்ள ஆண்களிடம் தங்கள் தீர்மானத்தைக் கூற அவர்களும் அதற்கு ஒத்துழைப்பதற்கு இணங்கியுள்ளனர்.

தற்போது சுமார் 120 குடும்பங்கள் மலன்காட்டிலும்[iii], 150 குடும்பங்கள் காயாக்குழியிலும் தற்காலிகமாக குடியேற்றப்பட்டு இருக்கின்றனர். அத்துடன், போர் மற்றும் இடப்பெயர்வின் நிமித்தம் இந்தியாவுக்குச் சென்றுள்ள சுமார் 100 குடும்பங்கள் காணிகள் மீட்கப்படும் பட்சத்தில் மீண்டும் நாடு திரும்புவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

“வியாழக்கிழமை (மார்ச் 23) காலை 8 மணியளவில் நாம் (மலன்காடு மற்றும் காயக்குழி பிரதேசத்திலிருந்து சுமார் 50 கிராமத்தவர்கள்) எமது காணிமீட்புப் போராட்டத்தை ஆரம்பித்தோம். அப்போது கடற்படையினர் அங்கு வந்து “ஏன் இங்கு ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள், ஏன் மாவட்டச் செயலகத்துக்கு முன் செய்யவில்லை? அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு பேரூந்துகளைக்கூட வழங்குகிறோம். நாங்கள் உங்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருந்தும் நீங்கள் எங்களுக்கு எதிராக செயற்படுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்” என அந்த மக்கள் கூறினர். “அவர்கள் எங்கள் காணிகளை திருப்பித்தந்தால், அவர்கள் எங்களுக்கு உதவவேண்டிய அவசியமேயில்லையே” எனவும் கூறினர்.

முள்ளிக்குளத்திலிருந்து இடப்பெயர்வும் அதன்பின்னரான பிரச்சினைகளும்

“2007இல் நாங்கள் வெளியேறியபோது, கிட்டத்தட்ட 100 வீடுகள் நல்ல நிலையிலும் 50 மண்குடிசைகளும் காணப்பட்டன. அத்துடன், எங்கள் ஞாபகத்திற்கேற்ப இங்கு ஒரு கிறிஸ்தவ திருச்சபையும், கூட்டுறவுத்துறை நிலையமும், மூன்று பாடசாலைகளும், ஒரு முன்பள்ளியும், இரு மருத்துவமனைகளும், ஒரு நூலகமும், தபால் நிலையமும், மீனவர் கூட்டுறவுச்சங்கமும், ஆசிரியர் விடுதியும், மாவட்டசெயலாளர் கட்டடமும் ஆறு பொதுமக்களுக்கான மற்றும் நான்கு தனிநபர்களுக்குச் சொந்தமான கிணறுகளும் ஒன்பது நீர்த்தாங்கிகளும் இருந்தன” என இக்கிராமத்தவர்கள் நினைவுபடுத்திக்கொண்டனர். தற்போது அந்த நீர்த்தாங்கிகளையும் பொதுஇடங்களையும் பயன்படுத்துவதற்கு அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதுடன், பயிர்ச்செய்கை நிலத்திற்கு வரையறுக்கப்பட்ட அனுமதியே இருக்கிறது.

150 வீடுகளில் 27 வீடுகளே தற்போது எஞ்சியிருப்பதுடன், அதில் கடற்படை அதிகாரிகள்[iv] குடியிருக்கின்றனர். மீதி வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கிராமத்தவர்கள் கூறுகின்றார்கள். வேறொரு வழியினூடாகவே தேவாலயம் செல்லக்கூடியதாக இருப்பதுடன், வாய்க்கால் – வரப்பினூடான குறுக்குப்பாதை கடற்படையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. விரும்பும்போதெல்லாம் தேவாலயம் சென்று பிரார்த்திப்பதற்கு பல முதியவர்கள் சிரமப்படுகிறார்கள், ஞாயிறு திருப்பலிப்பூசைக்கு சென்றுவருவதற்கு கடற்படையினரின் பேரூந்துசேவையில் தங்கியிருக்கவேண்டியிருக்கிறது. ஆலயத்திற்குச் செல்வதற்கு 50-100 மீற்றராக இருந்த நடைதூரம், தற்போது மலன்காட்டிலிருந்தும் காயற்குழியிலிருந்தும் 3 கி.மீ – 10 கி.மீ தூரமாக மாறியுள்ளது. சிறுவர்கள் பாடசாலைக்குச் சென்றுவருவதற்கு, கடற்படையினர் தினசரி பேரூந்து வசதி செய்துகொடுப்பதுடன், அப்பாடசாலையில் ஆண்டு 9 வரையிலேயே கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதற்குப் பின் அண்மையிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்குச்[v] சிறுவர்கள் தாமாகவே சென்றுவரவேண்டிய அல்லது தூரமாக இருந்தால் விடுதியில் தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

முள்ளிக்குளம் மக்கள், பிரதானமாக விவசாய மற்றும் மீனவ சமூகமாகவே இருப்பதால் கடலுக்கு அண்மித்திருப்பது, அவர்களுக்கு அத்தியாவசியமானது. முதலில் இறால் மற்றும் ஏனைய நன்னீர் மீன்பிடிப்பதற்கான 9 ‘பாடு’களுக்கு[vi] (கரைவலை அனுமதி) அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும் தற்போது நான்கிற்கு[vii] மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஏனைய கரைவலைகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்தக் கிராமத்தவர்கள் 2007இல் முள்ளிக்குளத்திலிருந்து அகற்றப்பட்டபோது பின்வருவன ஒவ்வொன்றிலும் எண்ணிக்கைப்படி 64 மீன்பிடிசாதனங்களை விட்டுவிட்டு சென்றிருக்கின்றனர் – நவீன படகுகள், மோட்டார்கள், வலைகள், கயிறுகள், வேறும் மீன்பிடி உபகரணங்கள், 90 தெப்பங்கள் மற்றும் 3 இழுவை-வலைகள்.[viii]

கண்காணிப்பும் அச்சுறுத்தலும்

“நீங்கள் இந்தப் போராட்டத்தை நிறுத்தாவிடில், நாங்கள் கடலில் எங்கள் அதிகாரத்தை உங்களுக்குக் காண்பிப்போம்” என்று ஆர்ப்பாட்டத்தின் முதல்நாளிலேயே கடற்படையினர் மக்களை மிரட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் மீதும் அவர்களை வெளிப்பகுதிகளில் இருந்து சந்திக்க வருபவர்களின் மீதும் கடற்படையினராலும் சிலாவத்துறை பொலிஸாரினாலும் (போக்குவரத்து பொலிஸ் உட்பட) பாரிய அளவிலான கண்காணிப்பும் அச்சுறுத்தலும்[ix] ஆரம்ப நாட்களில் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், 2ஆவது வார போராட்டங்களின் போது கடற்படை அதிகாரிகள், தங்கள் வீரியத்தை குறைத்துக்கொண்டதுடன், கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்புத்துறையின் எந்தத் தீர்மானத்திற்கும் ஏற்ப செயற்பட, தாம் தயாராக இருப்பதாக, இந்தப் பகுதிக்கான கடற்படைத் தளபதியும் ஏனைய அதிகாரிகளும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் தேவாலயத் தலைவர்களுக்கும் தெரிவித்தனர். ஆனாலும் கிட்டத்தட்ட இருவாரங்களாக தேவாலய தலைவர்களின் முயற்சிக்கும் அப்பால், இந்தவிடயத்தில் கொழும்பு மௌனமாகவே இருந்துவருகின்றது.

காணியின் சட்டரீதியான நிலையும் மாவட்ட செயலகத்தின் பதிலுரையும்

தனிநபர்களுக்குச் சொந்தமான காணிகளை, கடற்படையினர் தகாதமுறையில் ஆக்கிரமித்துள்ளனரென இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன், வேறுகாணிகளை வழங்குவதற்கு உத்தேசித்திருக்கும் பட்சத்தில் மக்களின் பூரணசம்மதம் கருத்திற்கொள்ளப்படவேண்டுமெனவும், வேறு இடங்களில் குடியேறும்படி அவர்களை வற்புறுத்தக்கூடாதெனவும் சிபாரிசுசெய்துள்ளது.[x]

மாவட்டச் செயலாளரும் அவரது பிரதிநிதிகளும் மார்ச் 23ஆம் திகதியே மக்களைச் சந்தித்து, போராடுவதினால் பெரிதாக எதுவும் அடையமுடியாது எனவும் மக்களின் கோரிக்கைகளை ஒரு கடிதத்தில் வரைந்து தம்மிடம் கொடுக்கும்படியும், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தாம் அதனை மேலதிகாரிகளிடம் கையளிப்பதாகவும் கூறியுள்ளனர். காணிகளின் பெரும்பான்மையான பகுதி தனிப்பட்ட நபர்களுக்கும், மன்னார் கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமானது. நிலங்களின் ஏனைய பகுதி, காணிஅபிவிருத்தி கட்டளையின் பிரகாரம் வழங்கப்பட்ட அனுமதி மற்றும் மானியம் அடிப்படையிலானவையும் அரசாங்கம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானவையும் ஆகும்.

மாற்றுவீடுகள் கொடுக்கப்பட்ட பின்னரும் அவர்கள் ஏன் இன்னமும் போராடுகிறார்கள் என மாவட்ட செயலாளர் அவர்களிடம் வினவியுள்ளார். சொந்த நிலங்களைக்கோரி தாம் தொடர்ச்சியாகப் போராடிவந்ததாகவும், இடைக்காலத்தில் கொடுக்கப்பட்ட தற்காலிக வீடமைப்பை விருப்பமின்றியே ஏற்றுக்கொண்டதாகவும் கிராமத்தவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக குரலெழுப்பினர். “வீடு திரும்பவேண்டுமென்கிற நிலைப்பாட்டுடனேயே நாங்கள் எப்போதும் இருந்தோம்” என்றனர்.

“எம்மிடம் அனைத்தும் இருந்தது. இப்போதோ காட்டில் வாழ்கிறோம். இவ்வாறு எப்படி வாழ முடியும்? எல்லாவற்றையும் நாங்கள் திரும்பப் பெற்றுக்கொள்வோமென எனக்கு நம்பிக்கை இருக்கிறது. குறைந்தபட்சம் எங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாவது நாங்கள் வளர்ந்த வீட்டைக் கண்டுகளிக்கவேண்டும்” என்பதே ஊர் முதியவர் பிரான்சிஸ் வாஸின் ஆசையாகும்.

மரிசா டி சில்வா, நில்ஷான் பொன்சேகா, ருகி பெர்னான்டோ

[i] Sky No Roof, Edited by Kusal Perera, Annexes – Letter by villagers of Mullikulam to the President dated 13th September, 2011 – https://drive.google.com/file/d/0BzO8SAlmDKanZmN0TXRRdjNyR1k/view

[ii] WATCHDOG, Sri Lanka Navy vs. the people of Mullikulam – http://groundviews.org/2013/01/24/sri-lanka-navy-vs-the-people-of-mullikulam/

[iii] Ruki Fernando, The struggle to go home in post war Sri Lanka: The story of Mullikulam – http://groundviews.org/2012/08/01/the-struggle-to-go-home-in-post-war-sri-lanka-the-story-of-mullikulam/

[iv] WATCHDOG, Mullikulam: The continuing occupation of a school by the Sri Lankan Navy – http://groundviews.org/2012/09/11/mullikulam-the-continuing-occupation-of-a-school-by-the-sri-lankan-navy/

[v] Schools in Nanattan, Mannar town, Kondachchi, Silavathurai, Murunkan and Kokkupadayan.

[vi] 1 Paadu = 450 meters.

[vii] WATCHDOG, Mullikulam: Restrictions on fishing, cultivation, access to the church and school continue – http://groundviews.org/2013/03/15/mullikulam-restrictions-on-fishing-cultivation-access-to-the-church-and-school-continue/

[viii] WATCHDOG, Mullikulam: Restrictions on fishing, cultivation, access to the church and school continue – http://groundviews.org/2013/03/15/mullikulam-restrictions-on-fishing-cultivation-access-to-the-church-and-school-continue/

[ix] Heavy surveillance by #Navy Intel & #Police at #Mullikulam protest today. OIC asked us who we were & why we had come – https://twitter.com/Mari_deSilva/status/845184613085462529 & https://twitter.com/Mari_deSilva/status/845187308412272643

[x] Sky No Roof, Edited by Kusal Perera, Private Land Occupied by the Security Forces – Mullikulam, study report by the National Protection and Durable Solutions for Internally Displaced Persons Project of the Human Rights Commission of Sri Lanka, June 2011, Pg. 5 – https://drive.google.com/file/d/0BzO8SAlmDKanZmN0TXRRdjNyR1k/view

###

சமூக ஊடகங்களில் மாற்றம்:

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்

ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்

இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்