படம் | ColomboGazette

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெயசங்கர் அரசாங்கத் தரப்பினரை சந்திப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்தார். இதன்போது அவர் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் கூட்டமைப்பினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஜெயசங்கர் அப்படி என்ன கூறினார்?

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட்ட அரசாங்கத் தரப்பினரை சந்திப்பதற்கு முன்னர் கூட்டமைப்பின் கருத்துக்களை அறிந்துகொள்ளும் நோக்கிலேயே மேற்படி சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது. சந்திப்பின் ஆரம்பத்திலேயே அரசாங்கத்திடம் நாங்கள் என்ன கூற வேண்டும் என்பதை கூறுங்கள் என்பதே ஜெயசங்கரின் வேண்டுகோளாக இருந்தது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வழமைபோல் பழைய கதைகளை பேசி நேரத்தை எடுத்துக்கொள்ள முற்பட்ட போது, ஒரு இடத்தில் ஜெயசங்கர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார், “உங்களுக்கும் எனக்கும் தெரிந்த விடயங்களை பேசுவதை விடுத்து, இப்போதைய விடயங்களுக்கு வாருங்கள்.” ஜெயசங்கரின் நோக்கம் தற்போதைய அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதாகவே இருந்திருக்கிறது. உண்மையில் கூட்டமைப்பு மேற்படி சந்திப்பிற்கு முன்னர் ஒரு வீட்டுவேலையை செய்திருக்க வேண்டும். அதாவது, சந்திப்பில் பங்குகொள்ளவுள்ள கூட்டமைப்பின் தலைவர்களை அழைத்து பேச வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருக்க வேண்டும். அரசியல் யாப்பு விடயத்தில் அரசாங்கத்தின் பக்கத்திலுள்ள முட்டுக் கட்டைகள் என்ன? விடயங்களை அமுல்படுத்த வேண்டிய ஒழுங்குமுறை என்ன? உதாரணமாக, வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதில் குழப்பங்கள் நிலவுமாயின் அதனை மேசையில் வைத்துக் கொண்டே ஏனைய விடயங்களை எவ்வாறு அரசாங்கம் முன்னெடுக்கலாம், அதற்கு இந்தியா எவ்வாறு உதவலாம். இப்படியான விடயங்களை பட்டியலிட்டு, அவற்றை எழுத்து வடிவில் ஒரு அறிக்கையாக்கி ஜெயசங்கரிடம் வழங்கியிருக்கலாம். இவ்வாறான நடைமுறையை பின்பற்றியிருந்தால் தொடர்ந்தும் பழைய விடயங்களை பேச வேண்டிய தேவையிருந்திருக்காது. இராஜதந்திர அரசியலில் பரந்த அனுபவம் இருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் ஏன் இவ்வாறு தொடர்ந்தும் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்?

இந்த உரையாடலின் போதுதான் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் பேசப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் இலங்கை அரசு மீது இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்காது என்று ஜெயசங்கர் குறிப்பிட்டிருக்கின்றார் ஆனால், அதனை கைவிடுமாறு அவர் கூறவில்லை. அதனை பேச்சுவார்த்தை மேசையில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அதனை அடிப்படையாகக் கொண்டு மட்டும் விடயங்களை நோக்குவதில் பயனில்லை. அதாவது, நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து விடயங்களையும் ஒரே தடவையிலேயே பெற்றுவிடவேண்டுமென்று எண்ணுவது புத்திசாதுர்யமான அணுகுமுறையாக இருக்காது என்பதே அவரது அறிவுறுத்தலாக இருந்திருக்கிறது. இவ்வாறான உரையாடலின் போதே, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் இந்தியாவிற்குள்ள கடப்பாட்டை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், இதற்கு பதிலளித்த ஜெயசங்கர் – 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் பல்வேறு விடயங்கள் நடந்து முடிந்துவிட்டன. சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. எனவே, இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய வாய்ப்புக்கள் தொடர்பில்தான் நீங்கள் சிந்திப்பதுதான் சரியானதென்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். சுரேஸ் பிரேமசந்திரன் கேட்பதும் தவறல்ல. இந்தியாவிடம் அப்படி கேட்பதற்கான தகுதிநிலை தற்போது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் தலைவர்களில், சுரேஸுக்கு மட்டுமே உண்டு. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அதனூடாக பயனிக்க முடியுமென்று நம்பியது, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி ஒன்றுதான். சம்பந்தன் கூட அன்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு ஆதரவாக செயற்பட்டிருக்கவில்லை. தேர்தல் காலங்களில் கூட மாகாண சபையை அன்றும் நாங்கள் எற்றுக்கொள்ளவில்லை, இன்றும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றவாறுதான் பேசியிருக்கிறார். அப்படியாயின் இப்போது அன்றைய இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் சாத்தியப்பட்ட வடக்கு – கிழக்கு இணைப்பிற்காக இந்தியா மீண்டும் எங்களுடன் நிற்க வேண்டுமென்று வலியுறுத்துவதில் எந்தவொரு தர்க்கநியாயமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், சுரேஸ் அவ்வாறு கூறலாம். ஆனால், அரசியலில் வாய்ப்புக்களை கைநழுவ விடுவதை பேருந்தை தவறவிடுதல் (மிஸ் த பஸ்) என்று கூறுவதுண்டு. பேருந்தை தவறவிட்டால் மீண்டும் அது வரும்வரை காத்திருக்க வேண்டும். ஒருவேளை பேருந்து வராமலேயே போகலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் கட்டாயம் பயணம் செய்யத்தான் வேண்டுமெனின் கிடைக்கின்ற வாகனமொன்றில்தான் பயணம் செய்ய வேண்டும். இப்போது ஜெயசங்கர் கூட்டமைப்பிற்குச் சொல்லிச் செல்வதும் கிட்டத்தட்ட அப்படியான ஒன்றுதான்.

மேலும், இந்தச் சந்திப்பில் சம்பந்தன் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தி மற்றும், தமிழர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பிலும் பேசியிருக்கிறார். இதற்குப் பதலளித்த ஜெயசங்கர், இந்தியா அதில் ஆர்வமாக இருக்கிறது. ஆனால், அதற்கு உங்களிடமிருந்துதான் ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கள் கிடைக்கவில்லை என்றவாறு பதலளித்திருக்கின்றார். சம்பூர் அனல்மின்நிலைய விவகாரத்தில் சம்பந்தனின் தடுமாற்றத்தை மனம் கொண்டு ஜெயசங்கர் அவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் ஒரு அபிப்பிராயம் உண்டு. இவ்வாறான தகவல்களின் அடிப்படையில் நோக்கினால் அரசியல் தீர்வு தொடர்பில் இந்தியாவின் அழுத்தங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவில்தான் இருக்கப் போகிறது. குறிப்பாக அரசியல் தீர்வு விடயத்தில், இந்தியா எவ்வித தலையீட்டையும் செய்யப் போவதில்லை. சுருங்கச் சொன்னால் இது பேசுவதற்கு ஏற்ற அரசாங்கம், இந்த அரசாங்கத்துடன்தான் நீங்கள் பேச வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில், இந்தியா தலையீடு செய்யாவிட்டால் வேறு எந்தவொரு நாடும் தலையீடு செய்யப் போவதில்லை. குறிப்பாக வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரத்தில் இந்தியா ஒன்றால்தான் அழுத்தம் கொடுக்க முடியும். ஆனால், தற்போது இந்தியாவே அதிலிருந்து பின்வாங்கினால் வேறு எவரும் அதில் தலையீடு செய்யப் போவதில்லை. இவ்வாறானதொரு சூழலில் கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது?

இந்தச் சந்திப்பின் போது ஜெயசங்கர், அரசியல் யாப்பு முயற்சிகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வருமாறு, தாம் அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதனைத் தொடர்ந்துதான் சம்பந்தன் 22.02.2017 அன்று சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய போது, அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கின்றார். சம்பந்தன் என்னதான் குறிப்பிட்டாலும், இந்த அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்கும் வகையில் சர்வதேச நாடுகள் எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்கப் போவதில்லை. இது சம்பந்தனும் அறியாத விடயமல்ல. எனவே, இந்தியா ஏமாற்றிவிட்டது என்று கூறிக் கொண்டிருப்பதை விடுத்து, இந்த நிலைமைகளை எந்தளவிற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றவாறு யோசிப்பதே தற்போதைக்கு கூட்டமைப்பிற்கு முன்னாலுள்ள ஒரேயொரு தெரிவு. அதேவேளை, இந்தியா எங்களது விடயங்களில் கரிசனையற்று இருக்கிறது என்று குற்றச்சாட்டை முன்வைக்கும் போது இந்தியா தொடர்பில் எங்களது அணுகுமுறைகளையும் நாம் மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையின் பிரதான அரசியல் சக்திகளில் ஒன்று. அந்த வகையில், இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறை தொடர்பிலும் தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு அதற்குண்டு. நாடுகளுடனான நட்பு என்பது, அந்த நாடுகளது நலன்கள் தொடர்பில் நாங்கள் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறோம் என்பதிலிருந்தும் அளவிடப்படும். இன்று எட்கா உடன்பாடு தொடர்பில் விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பில் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்னும் வகையில் சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? தமிழ் மக்களின் பிரதான தலைமை என்னும் வகையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? பலாலி விமான நிலைய புனரமைப்பு தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக அரசாங்கம் கூறிவருகிறது – இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? திருகோணமலை எண்ணைக் குதங்களை இந்தியாவிடமிருந்து மீளப்பெற வேண்டுமென்று சில குரல்கள் எழுகின்றன – இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? இது எவற்றிலும் கூட்டமைப்பிற்கென்று ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லாவிட்டால் – இந்தியாவிடம் போய் எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்பதில் என்ன பொருளுண்டு?

இந்தியா ஒரு பிராந்திய சக்தி. தனது நலன்களை இலங்கைத் தீவில் எவ்வாறு பேணிப் பாதுகாப்பதென்று அவர்களுக்குத் தெரியும். அதேபோன்று இலங்கைத் தீவில் ஆர்வம் கொண்டிருக்கின்ற ஏனைய தரப்பினருக்கும், தங்களது நலன்களை எவ்வாறு பேணிப்பாதுகாத்துக் கொள்வதென்பது தெரியும். எனவே, அனைவருமே தமிழர்களைத்தான் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று எண்ணுவதைவிடுத்து, தமிழர்களுக்குள்ள வாய்ப்புக்கள் என்னவென்பதை தமிழர்கள்தான் தேட வேண்டும். அரசியலில் மற்றவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று சிந்திப்பது மிகவும் தவறானதொரு புரிதலாகும். மற்றவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்களென்றால் அதன் பொருள் நாங்கள் ஏமாறக் கூடியவர்களாக இருந்திருக்கிறோம். தவறு ஏமாற்றியவர்கள் பக்கத்தில் இல்லை ஏமாறிய, தொடர்ந்தும் ஏமாறிக் கொண்டிருக்கிற எங்களிடமே உண்டு.

யதிந்திரா