சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதியும் தற்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான (Office for National Unity and Reconciliation (ONUR) சந்திரிக்கா குமாரதுங்க, மிகவும் தெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது, போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை. தற்போது அரசியல் யாப்பு விவகாரங்கள் தொடர்பில் மட்டும் சிந்தித்தால் போதுமானது. கலந்தாலோசனை செயலணியின் அறிக்கை தொடர்பான கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே, சந்திரிக்கா மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இத்தனைக்கும் குறித்த கலந்தாலோசனை செயலணியின் அறிக்கையை கையளிக்கும் நிகழ்வில் பங்குகொண்டு அதனை பெற்றுக் கொண்டவரும் இதே சந்திரிக்காதான். இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் திட்டமிட்டே நிகழ்வை புறக்கணித்திருந்தனர். இதற்கு என்ன காரணம்? விடயம் மிகவும் இலகுவானது. அதாவது, குறித்த செயலணி, போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு அவசியம் என்று வலியுறுத்தியிருந்தது. குறித்த செயலணியின் தலைவராக மனோரி முத்தேட்டுகம செயற்பட்டிருந்தார். அவர் ஒரு சிங்களவராவார். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைப்பீடம் எந்தவொரு அபிப்பிராயத்தையும் இதுவரை வெளியிடவில்லை. குறித்த நேர்காணலில் சந்திரிக்கா பிறிதொரு விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார். அதாவது, போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கருத்துக் கூறும் உரிமை, குறித்த செயலணியிருக்கு இல்லை. மக்களின் அபிப்பிராயங்களை திரட்டுவது மட்டும்தான் அவர்களது பணியாகும். ஆனால், அவர்களோ தங்களது அபிப்பிராயங்களையும் சேர்த்திருக்கின்றனர். ஆனால், இது தொடர்பில் மனோரி முத்தேட்டுகமவும் இதுவரை எந்தவொரு அபிப்பிராயத்தையும் தெரிவித்திருக்கவில்லை. உண்மையில் குறித்த செயலணியுடன் இணைந்து வடக்கு கிழக்கில் பலரும் பணியாற்றியிருந்தனர். இந்த செயலணியுடன் இணைந்து பணியாற்றிய கத்தோலிக்க மதகுரு ஒருவர், இது பற்றி கூறும்போது, எங்களையெல்லாம் மடையர்களாக்கியிருக்கின்றனர் என்று கவலையுடன் குறிப்பிட்டார்.

இது ஒருபுறம் என்றால் தற்போது மங்கள சமரவீரவும் சந்திரிக்காவின் கருத்தை ஆமோதித்துப் பேசியிருக்கிறார். அவரும் மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார் – அதாவது, பொறுப்பு கூறலுக்கான நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்பட மாட்டார்கள். வெளிநாட்டு பங்களிப்பு இருக்கும். ஆனால், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறமாட்டார்கள். அதனை செய்ய வேண்டுமென்றால் நாட்டின் நீதித்துறைச் சட்டங்களை மாற்ற வேண்டும். ஒரு புதிய அரசியல் யாப்பு வரவுள்ளது. உண்மையெனின் நீதித்துறையின் சட்டங்களை மாற்றுவதில் என்ன சிக்கல் இருக்கிறது? யார் கேட்பது?

இதிலிருந்து விடயங்கள் வெள்ளிடைமலை. போர்க்குற்ற விசாரணை – அப்படியொன்று ஒருபோதுமே இடம்பெறப் போவதில்லை. ஏனெனில், அதனை முன்னெடுப்பதற்குரிய அரசியல் திடசங்கற்பம் கொழும்பின் தலைமையிடம் இல்லை. அதேவேளை, தென்னிலங்கை அரசியலிலும் இல்லை. எனவே, அது நடைபெறப் போவதில்லை. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம், அவ்வாறாயின் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? கூட்டமைப்பை பொறுத்தவரையில் இதுவரை போர்க்குற்ற விசாரணை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தவில்லை. அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக அழுத்திக் குறிப்பிடும் போதே, கூட்டமைப்பும் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அது நிகழவில்லை. ஒரு பேச்சு வழக்குண்டு. அதாவது, மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி. கூட்டமைப்பின் மௌனத்தை அரசாங்கத்திற்கான சம்மதம் என்று எடுத்துக் கொள்ளலாமா? கூட்டமைப்பு மிகவும் குழம்பிப் போயுள்ளது என்பது வெள்ளிடைமலை. அதனால், எதனையும் திட்டவட்டமாக இடித்துரைக்க முடியவில்லை. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் மிகவும் முக்கித்துவமுடையது. அதனை எதிர்கொள்வதற்கான தயாரிப்புக்களில் அரசாங்கம் மிகவும் தீவிரமாக இயங்கிவருகிறது. ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியை பேணிப்பாதுகாத்தல் என்னும் நிலையில் அரசாங்கம் சர்வதேச அரங்கிலும் மிகவும் பலமாகவே இருக்கிறது.

இந்த நிலையில், கூட்டமைப்போ தொடர்ந்தும் மௌனம் காத்துவருகிறது. கூட்டமைப்பு எதிர்வரும் மார்ச் மாதத்தை முன்னிறுத்தி தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையில் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? உள்நாட்டு பொறிமுறை தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? மங்கள சமரவீரவால் வெளிநாட்டு செய்தியாளர்களைச் சந்திக்க முடியுமானால் எதிர்க்கட்சித் தலைவரினாலும் சந்திக்க முடியும். சர்வதேச இராஜதந்திரிகளை அழைத்து விளக்கமளிக்க முடியும். ஆனால், கூட்டமைப்போ அதனை செய்ய மறுக்கிறது. ஏன்? இல்லாவிட்டால் கூட்டமைப்பு தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மை நிலைமையை தெளிவுபடுத்த வேண்டும். அதனையும் கூட்டமைப்பு செய்யவில்லை. ஏன்? மொத்தத்தில் கூட்டமைப்பு மிகவும் குழப்பமடைந்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது. எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

கூட்டமைப்பின் இந்த தடுமாற்ற நிலையே மறுபுறமாக, கூட்டமைப்பை எதிர்ப்பவர்களுக்குச் சாதமானதொரு சூழலாக மாறியிருக்கிறது. பொதுவாக இருக்கும் ஒன்றின் மீதான அதிருப்திகளே புதிய ஒன்றை நாடுவதற்கான ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் கூட்டமைப்பின் மீதான அதிருப்தியே வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான ஆதரவாக உருமாறியிருக்கிறது. சம்பந்தன் தொடர்ந்தும் அமைதியாக இருப்பதை ஒரு வாய்ப்பாகக் கொண்டே, விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் போர்க் குற்ற விசாரணை தொடர்பில் ஆராயவுள்ளதாக அறிவித்திருக்கின்றார். விக்னேஸ்வரன் ஒரு நீதியரசர். முப்பது வருடங்களுக்கு மேலான நீதித்துறை அனுபவமுள்ள ஒருவர். அவருக்கு இலங்கையின் நீதித்துறையின் எல்லைகள் தெரியாதா? ஆனால், அரசியல்வாதிக்கும் நீதியரசருக்கும் வித்தியாசமுண்டு. ஒரு அரசியல் வாதியாக அவர் கூட்டமைப்பின் மீதான அதிருப்தியை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்கான நுட்பங்களையும் இப்போது கையாளத் தொடங்கியிருக்கிறார். ஆனால், கூட்டமைப்பின் மீதான அதிருப்தியை திரட்டியெடுத்து இறுதியில் என்ன செய்யப் போகின்றார்? இந்த இடத்தில்தான் கூட்டமைப்பின் மீதான அதிருப்தியை தங்களுக்கான அரசியல் முதலீடாக மாற்றிக் கொள்வதில் தீவிரம் காண்பித்துவருவோர் தொடர்பிலும் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. கூட்டமைப்பு தடுமாறுகிறது என்பது உண்மைதான் ஆனால், தடுமாறாத நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? உங்களிடம் இருக்கின்ற திட்டங்கள் என்ன?

கூட்டமைப்பை தவறான ஒன்றாக நிருபிப்பற்கு அப்பால், உங்களிடம் இருக்கின்ற மேலான திட்டங்கள் என்ன? கூட்டமைப்பு தோல்வியடையும் இடத்திலிருந்து நீங்கள் எவ்வாறு வெற்றியை நோக்கி பயணிக்கப் போகின்றீர்கள்? இப்படியான கேள்விகளை எழுப்பினால் இவர்கள் மத்தியிலும் தடுமாற்றமே எஞ்சும். ஏனெனில், இவர்களிடமும் எந்தவொரு திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், யார் சரி? யார் தவறு? என்று விவாதிப்பதில் என்ன பொருள் இருக்கப்போகிறது? உண்மையில் இங்கு ஒரு முரண்நகையான விடயத்தை அவதானிக்க முடியும். கூட்டமைப்பும் சரி கூட்டமைப்பை எதிர்த்து நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சரி அல்லது கூட்டமைப்பின் அங்கமாக இருக்கின்ற போதும், சம்பந்தனது முடிவுகள் தொடர்பில் முரண்பாடுள்ளவர்களும் சரி அனைவருக்குமிடையிலும் ஒரு ஒற்றுமை உண்டு. அனைவருமே நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று, நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென்றே விரும்புகின்றனர். ஆனால், எதற்காக நாடாளுமன்றம்? நாடாளுமன்றம் செல்லாமல் மக்களோடு மக்களாக நின்று அரசியல் செய்ய முடியாதா? இப்படியான கேள்விகள் தொடர்பில் எவரிடமும் பதிலில்லை. அனைவருமே நாடாளுமன்றம் சென்று அங்கு மக்களது உரிமைகள் தொடர்பில் குரல் கொடுப்பதில் தங்களை வேறுபடுத்திக் காண்பிக்கவே விரும்புகின்றனர். இலங்கையின் நாடாளுமன்றத்தில் பேசி போர்க்குற்ற விசாரணையை கொண்டுவர முடியுமா? இலங்கையின் நாடாளுமன்றத்தில் பேசி சமஸ்டி தீர்வை கொண்டுவர முடியுமா? இலங்கையின் நாடாளுமன்றத்தில் பேசி ஒரு நாடு இரு தேசங்கள் தீர்வை சாத்தியப்படுத்த முடியுமா? நாடாளுமன்றத்தில் பேசி, வடக்கு – கிழக்கு இணைப்பை சாத்தியப்படுத்த முடியுமா? இப்படியான கேள்விகளுக்கு எவரிடமும் நிச்சயம் ஆம் என்னும் பதில் இருக்காது? ஏனெனில், இவற்றை நாடாளுமன்றத்தில் பேசுவதால் அடைந்திருக்க முடியுமென்றால் அதனை செல்வநாயகத்தால், அமிர்தலிங்கத்தால் பெற்றிருக்க முடியும். அவ்வாறாயின் பிறகெதற்கு நாடாளுமன்றம் செல்ல வேண்டும்? முதலில் மக்களுக்கு உண்மையாக இருப்பதுதான் அவசியம்.

எனவே, கூட்டமைப்பை எதிர்ப்பவர்கள் நாடாளுமன்ற அரசியலை முதலில் துறக்க வேண்டும். அதன் மூலம்தான் அவர்கள் மக்கள் மத்தியில் தங்களை வேறுபடுத்திக் காட்ட முடியும். தேர்தல் அரசியலை நிராகரித்து, ஒரு சமூக இயக்கமாக மாற வேண்டும். வடக்கு – கிழக்கு தழுவி பலமானதொரு சமூக இயக்கம் உருவாகுமென்றால் பின்னர் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் உங்களால் ஆட்டுவிக்கப்படுபவர்களாக மாறுவர். வடக்கு கிழக்கின் அரசியல் தலைமைகளை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு வலுவான சமூக சக்தி இல்லை. இதன் காரணமாகவே அரசியல்வாதிகளும் தாங்கள் நினைத்தவற்றை எல்லாம் செய்யலாம் என்று எண்ணுகின்றனர். கூட்டமைப்பு தனது நிலைப்பாடு தொடர்பிலும், கூட்டமைப்பை எதிர்ப்பவர்கள் தங்களது நிலைப்பாடு தொடர்பிலும் தெளிவாக பேசாத வரைக்கும் விக்கிரமாதித்தியன் வேதாளத்திற்கு மீண்டும், மீண்டும் கதை சொன்னது போன்றுதான் பத்தியாளர்களும் ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளுக்கு கதை சொல்வர். கதைகள் தொடரும். அரசியல்வாதிகளும் குழப்புவர். ஆய்வாளர்களும் குழப்புவர். இறுதியில் மக்களோ மேலும் மேலும் நடுத்தெருவுக்கு வருவர்.

யதீந்திரா