படம் | NewNowNext

LGBTIQ சமூகத்துக்கு எதிரான பாரபட்சத்தை நீடித்திருக்கச் செய்கின்ற சட்டங்களை ரத்துச்செய்யக்கோரும் மகஜர் ஒன்றில் 48 மணித்தியாலங்களில் மாத்திரம் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கைச்சாத்திட்டிருக்கிறார்கள். தன்னினச் சேர்க்கையை குற்றமற்றதாக்குவதை நோக்கமாகக் கொண்ட துணை வாசகமொன்று தேசிய மனித உரிமைகள் செயற்திட்ட வரைவில் இருந்து அகற்றப்பட்டதாக வெளியான செய்திகளுக்கான பிரதிபலிப்பாகவே அந்த மகஜர் விநியோகிக்கப்படுகின்றது. அதன் முழுமையான விபரத்தை கீழே தருகிறோம்.

மனித உரிமைகளைப் பேணிக்காத்து மேம்படுத்துவதில் பற்றுறுதிகொண்ட ஒரு நிருவாகம் என்ற வகையில் நல்லாட்சி அரசாங்கம் LGBTIQ சமூகம் என்று தங்களை அடையாளப்படுத்துபவர்கள் உட்பட சகல பிரஜைகளுக்கும் (பெண் ஓரினச் சேர்கையாளர்கள் (Lesbian), ஆண் ஓரினச் சேர்கையாளர்கள் (Gay), இரு பால் பாலியல் நாட்டம் கொண்டோர் (Bisexual), பால் நிலையில் மாற்றம் கொண்டோர் (Transgender), ஆண் மற்றும் பெண் உறுப்புகளை கொண்டோர் (Intersex) மற்றும் தனிப்போக்குள்ள சமூகத்தைச் சார்ந்தோர் (Queer) எதிரான பாரபட்சம், துன்புறுத்தல், வன்முறை மற்றும் அத்துமீறல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அத்தியாவசியமாகும். LGBTIQ நபர்களைப் பாதிக்கின்ற சட்டங்களை குறிப்பாக, தன்னினச் சேர்க்கை நடத்தையை குற்றமானதாகக் கருதி அந்த நபர்களை தொடர்ந்தும் கொடுமைப்படுத்துகின்ற தண்டனைச் சட்டக் கோவையின் 365 மற்றும் 365 A பிரிவுகளை நீக்கி, சீர்த்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான முக்கிய நடவடிக்கைகள் 2017 – 2021 தேசிய மனித உரிமைகள் செயற்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. காலனித்துவ காலத்திலிருந்து வழக்கத்தில் இருந்து வருகின்ற திட்டமிட்ட வன்முறை மற்றும் பாரபட்சத்தை அகற்றுவதற்கான சட்டவாக்க நடவடிக்கைகளையும் கொள்கைத் திட்டங்களையும் முன்னெடுப்பதற்குப் பதிலாக, இன்றைய அரசாங்கம் LGBTIQ என்று அடையாளப்படுத்தப்படுகின்ற நபர்களுக்கு எதிரான வன்முறையையும் பாரபட்சத்தையும் நீடிப்பதில் நாட்டம் கொண்டிருப்பது தொடர்பில் எமது ஆட்சேபனையும் விசனத்தையும் (கீழே கையொப்பமிட்டிக்கும்) நாம் வெளிப்படுத்துவதுடன் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

சகல பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் செய்கின்ற இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிகமாக சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கும் இணங்கிச் செயற்படுவதற்கு உறுதிபூண்டிருப்பதாக நல்லாட்சி அரசாங்கம் பிரகடனம் செய்திருந்தது. அரசியலமைப்பின் சரத்து 4 (d)யின் கீழ் குறித்துரைக்கப்பட்டிருக்கும் மனித உரிமைகளை மதித்துப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான அரசியலமைப்பு ரீதியான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான சட்டவாக்க சீர்த்திருத்தங்கள் மற்றும் கொள்கைத் திட்டங்கள் என்று அரசாங்கம் அடையாளம் கண்டிருக்கக்கூடிய பொறிமுறைகளில் ஒன்றே தேசிய மனித உரிமைகள் செயற்திட்டமாகும்.

தேசிய மனித உரிமைகள் செயற்திட்டத்தை வரைவதில் சிவில் சமூகத்தவரின் பங்கேற்பு இருந்த அதேவேளை, பொதுமக்களின் பங்கேற்புக்கு போதியளவு இடந்தராத முறையில் அந்தச் செயன்முறைகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டன. அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி வரைவு 300க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டிருந்ததென்றும், தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 365 மற்றும் 365 Aயை ரத்துச் செய்வதற்கான ஏற்பாடுகள் உட்பட மனித உரிமைகள் தொடர்பில் இருக்கக்கூடிய குறைபாடுகளையும் போதாமைகளையும் இல்லாமல் செய்வதற்கான கணிசமான நடவடிக்கை யோசனைகள் அதில் உள்ளடக்கியிருந்ததாகவும் உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது. தேசிய மனித உரிமைகள் செயற்திட்ட வரைவை திருத்தியமைத்த அமைச்சரவை உறுப்பினர்கள் பாலியல் நடத்தை மற்றும் பால் அடையாள அடிப்படையிலான பாரபட்சத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் முன்மொழியப்பட்ட யோசனைகளையும் நிராகரித்துவிட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன கூறியதாக பல ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. தேசிய கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கான தேவையைக் காரணம் காட்டியே இவ்வாறு செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் கூறின. தேசிய மனித உரிமைகள் செயற்திட்ட வரைவில் இருந்து நீக்கப்பட்ட ஏனைய ஏற்பாட்டுகளில் யாசகர்கள் தொடர்பானதும் வாழ்க்கைத் துணையினால் இழைக்கப்படுகின்ற பாலியல் வல்லுறவு தொடர்பானதும் அடங்குவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எமது நாட்டுக்கு அந்நியமானவையாக இருக்கின்ற விக்டோரியன் விழுமியங்களை அடிப்படையாக்க் கொண்ட காலனித்துவகால சட்டங்களை மாற்றியமைப்பதற்குப் பதிலாக அரசாங்கம் அதன் சொந்தப் பிரஜைகளுக்கு எதிரான கொடுமைகள், துஷ்பிரயோகங்கள், அநீதி மற்றும் பாரபட்சங்களை நீடித்திருக்கச் செய்கின்ற பழமைப்பட்டுப்போன சட்ட ஏற்பாடுகளையும் நடைமுறைகளையும் தொடருவதற்கு விரும்புகின்றது. இது தொடர்பில் எமது ஆழ்ந்த விசனத்தை வெளிப்படுத்துகின்றோம். தன்னின பாலியல் நடத்தையை குற்றச் செயலாக்குவதுடன் தொடர்புடைய இந்தச் சட்டங்கள் பிரிட்டிஷாரின் ஆட்சியின்போதே இலங்கை மீது திணிக்கப்பட்டன. பிரிட்டிஷ் சட்டத்தில் இருந்த இதேபோன்ற ஏற்பாடுகள் வேறு நாடுகளில் பிறகு ரத்துச் செய்யப்பட்டுவிட்டன.

மேலும் இலங்கையில் காலனித்துவ ஆட்சிக்கு முன்னராக தன்னினச் சேர்க்கை நடத்தை குற்றச் செயலாக்கப்பட்டிருந்தது என்பதற்கான சான்று எதுவும் கிடையாது. எனவே, வன்முறையையும் துஷ்பிரயோகத்தையும் பாரபட்டசத்தையும் சட்டப்படி செல்லுபடியானதாக்கும் முகமாக காலனித்துவ விழுமியங்களை இலங்கைக் கலாசாரத்தின் குறியீடுகளாகக் காண்பித்து மக்களை தற்போதை அரசாங்கம் தவறாக வழிநடத்துவது வெட்கக்கேடானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.

இத்தகையதொரு பின்புலத்திலே, இலங்கையில் LGBTIQ சமூகங்களை ‘மௌனப்படுத்துவது’ பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சமூகங்களை ‘இல்லாத சமூகங்களாகவும் ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமைகளை இச்சமூகத்தினருக்கு தொடர்ச்சியாக நிராகரிப்பதை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்ற சட்டத்தை விரிவுபடுத்துவதாகவே இருக்கிறது. LGBTIQ சமூகம் அதன் பிரஜாவுரிமையினால் வரையறுக்கப்படுகின்றதே தவிர, அச்சமூகத்தின் அன்றாட வாழ்க்கையில் எந்தப் பாதிப்பையும் தாக்கத்தையும் செலுத்தாத ஒரு சட்ட ஏற்பாட்டினால் அல்ல. 365 மற்றும் 365 A ஏற்பாடுகளின் கீழ் எவரையும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கவில்லை என்று அரசாங்கம் வாதிட்டிருக்கின்றது என்றபோதிலும் கூட, வயதுவந்தவர்கள் தங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் ஈடுபடுகின்ற பாலியல் நடவடிக்கைகளை குற்றச்செயலாகவே கருதுகிறது. அதனால், LGBTIQ சமூகத்தை அது பாதிக்கவே செய்கிறது.

LGBTIQ சமூகம் பல வருடங்களாக தனிநபர்களினாலும் அரசாங்க அதிகாரிகளினாலும் துஷ்பிரயோகத்துக்கும் பாரபட்சத்துக்கும் மாத்திரமல்ல, பாலியல் வல்லுறவு போன்ற கொடுமைகளுக்கும் முகம்கொடுத்திருக்கின்ற அதேவேளை, அதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுமிருக்கின்றன. LGBTIQ நபர்களுக்கு எதிரான பாரபட்சத்துக்கும் அவர்களை கறைபடிந்தவர்களாகக் காட்டுவதற்குமான ஒரு கட்டமைப்பை சட்டம் வழங்கியிருக்கிறது. அத்துடன், சட்டத்தின் முழுமையான பாதுகாப்பைப் பெறுவதற்கும் வன்முறைக்கு எதிராகப் பேசுவதற்கும் இயலாதவர்கள் சமூகத்தின் ஒரு பிரிவினரை கையறு நிலைக்குள்ளாக்கியிருக்கும் சட்டம் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களை சட்டத்தில் இருந்து விடுபாட்டு உரிமை பெற்றவர்களாக்கியுமிருக்கிறது. இத்தகைய சூழ்நிலை மன உழைச்சலுக்கும் கவலைக்கும் தனிமைக்கும் ஏன் தற்கொலைக்கும் கூட வழியமைத்திருக்கிறது. உடல் ரீதியான கண்ணியம், பாலியல் சுயாட்சி, சமத்துவம் மற்றும் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படாமல் இருத்தல் போன்ற சமத்துவமான உரிமைகளை அவர்களால் அனுபவிக்க முடியாத நிலையை உருவாக்கியிருக்கிறது. இந்த அநீதிகளுக்கு எதிரான நிவாரணம் என்று சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் செய்யப்பட்டிருக்கக்கூடிய காரியங்கள் கருத்திலெடுக்க முடியாத அளவுக்கு அற்பமானவை. நடைமுறையில் இருக்கும் பாரபட்சமான சட்டம் காரணமாக இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதோ அறிவிப்பதோ கூட இயலாமல் இருக்கிறது. அதன் விளைவாக துஷ்பிரயோக நடைமுறை மேலும் நீடித்திருக்கச் செய்யப்படுகிறது.

மேலும், அரசியலமைப்பின் மூலமாக உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் பல உரிமைகளை மீறுவதாகவும்  365 மற்றும் 365 A பிரிவுகள்அமைந்திருக்கின்றன. அதாவது, ‘இயற்கையான’, ‘இயற்கைக்கு மாறான’ பாலியல் உறவுகள் என்ற எண்ணத்தை வலுக்கட்டாயமாக சட்டரீதியாக்குகிறது. தனிப்பட்ட பாலியல் நடத்தைகளை ‘பண்பற்ற செயல்கள்’ என்று குற்றம்சாட்டப்படுகிறது. அரசியலமைப்பின் 10ஆவது சரத்தின் கீழான ஏற்பாடுகளால் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கின்ற சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சி சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவை மீறப்படுகின்றன. வயதுக்கு வந்த இருவர் மனமொத்து தனிப்பட்ட முறையில் ஈடுபடுகின்ற பாலியல் நடத்தைகளைத் தடைசெய்வதன் மூலமாக தனிப்பட்ட உறவுமுறைகளில் அரசாங்கம் தலையீடு செய்கிறது. இதன் மூலமாக அரசியலமைப்பின் 14 (1) (C) சரத்தினால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள ஒன்று கூடுதல் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. பெரும் எண்ணிக்கையானவர்களை பொலிஸ் துஷ்பிரயோகத்துக்கும் தொழில் வாய்ப்பு பாகுபாடு, சுகாதாரப் பராமரிப்பு மறுப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்படக்கூடியவர்களாக்குவதன் மூலமாக அரசியலமைப்பின் 12ஆம் சரத்தின் கீழான சமத்துவமான பாதுகாப்பு மற்றும் பாரபட்சத்துக்கு உட்படுத்தபடாமை ஆகிய உத்தரவாதங்கள் மீறப்படுகின்றன.

இத்தகைய பின்புலத்திலே, போரின் முடிவுக்குப் பின்னரான மீட்சி மற்றும் முரண்நிலை மாற்றுக் காலகட்டத்துக்கான இரு செயன்முறைகளை அரசாங்கம் முன்னெடுத்தது. ஒன்று, அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்கள் தொடர்பான மக்கள் பிரதிநிதித்துவக் குழு, மற்றையது, நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணி. தேவையான சட்ட மற்றும் கொள்கை மாற்றங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கே இவை அமைக்கப்பட்டன. இரு குழுக்களுமே அவற்றின் அறிக்கைகளில் பாலியல் நடத்தை மற்றும் பால் அடையாளம் தொடர்பில் சமர்ப்பணங்கள் கிடைக்கப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளன. பாரபட்சம், துன்புறுத்தல் தொடர்பில் பிரச்சினைகளை சுட்டிக்காட்டாமலிருக்கும் அறிக்கைகள் இந்தப் பிரச்சினைகளை இல்லாமல் செய்வதற்கான சட்ட மற்றும் நிறுவன ரீதியான பாதுகாப்புகளுக்கான நடவடிக்கைகளை விதந்துரைத்திருக்கின்றது.

அன்றாட அடிப்படையில் தாங்கள் எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இவ்விரு குழுக்களுக்கும் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள்.

எனவே, LGBTIQ சமூகத்தவர்கள் என்று எம்மை அடையாளப்படுத்துகின்ற நாமும் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும், இலங்கைப் பிரஜைகள் தொடர்பில் இருக்கின்ற தேசிய மற்றும் சர்வதேசிய கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பின்வரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

  • 2017 – 2021 தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் மற்றும் அதுதொடர்பிலான மீளாய்வு செயன்முறைகளின் ஊடாக LGBTIQ நபர்களுக்கு எதிரான பாரபட்சம், வன்முறைகளை இல்லாமல் செய்வதற்கான முன்னெடுப்புக்களை உறுதிப்படுத்தல்
  • தண்டனைச் சட்டக் கோவையின் 365 A பிரிவை ரத்துச் செய்தல்
  • யாசகர்கள் தொடர்பான சட்டவிதிகளை ரத்துச் செய்தல்
  • பாலியல் நடத்தை மற்றும் பால் அடையாளங்களின் அடிப்படையில் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பாரபட்சங்களை அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களின் ஊடாக இல்லாதொழித்தல்

மனுவில் கையெழுத்திட இங்கு கிளிக் செய்யவும்.

ஆங்கிலத்தில்