படம் | SrilankaBrief
நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணி அதன் இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்தபோது இலங்கை நிலைமாறுதல் காலகட்டமொன்றின் ஊடாக சென்றுகொண்டிருக்கின்ற நாடு என்ற யதார்த்தம் மீண்டும் ஒரு தடவை முனைப்பாகத் தெரிந்தது. செயலணியின் உறுப்பினர்கள் தங்களின் அறிக்கையின் முக்கியத்துவம் காரணமாக அதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க வேண்டும் என்றே எதிர்பார்த்தார்கள். ஜனாதிபதி பிரசன்னமாயிருக்கக்கூடிய ஒரு நேரத்தைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் காரணமாக அவர்கள் அறிக்கை கையளிப்பதை பல வாரங்களுக்கு தாமதித்தார்கள். பிறகு ஒரு திகதி நிர்ணயிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்தில் வைபவமும் இடம்பெற்றது. ஆனால், துரதிர்ஷடவசமாக இறுதி நேரத்தில் ஜனாதிபதி அதில் கலந்துகொள்ளவில்லை. ஜனாதிபதி சுகவீனம் காரணமாகவே வரவில்லை என்று வைபவத்தில் பங்கேற்றவர்களுக்கு அறிவித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அரசாங்கத்தின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கையைப் பெற்றுக்கொண்டார். அங்கு சிறியதொரு உரையை நிகழ்த்திய அவர் தற்போதைய தருணம் நீண்டகால இனநெருக்கடிக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு வாய்ப்பானது என்று சொன்னார்.
நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை பாதிக்கப்பட்டவர்களின் அபிப்பிராயங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். அதனால், போரில் தங்கள் அன்புக்குரியவர்களையும் உடைமைகளை இழந்தவர்களினதும் போர்க்குற்றங்களின் கொடூரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அனுபவித்தவர்களினதும் அக்கறைகள் மீது கவனத்தைச் செலுத்துவதில் அறிக்கை பயனுடைய பங்களிப்பைச் செய்யக்கூடியதாக இருக்கிறது. மனித உரிமைகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் என்று வரும்போது சர்வதேச சமூகத்தினதும் சர்வதேச நியமங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் கணிசமானளவுக்கு உதவக்கூடியதாகவும் இந்த அறிக்கை இருக்கிறது. இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 2015 அக்டோபர் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மான நிபந்தனைகளையும் பூர்த்திசெய்யக்கூடியதாக அறிக்கை அமைந்திருக்கிறது. கலப்புமுறையிலான நீதிவிசாரணை செயன்முறையை அறிக்கை விதந்துரைத்திருக்கிறது. அதாவது, உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு அமைக்கப்படவேண்டியிருக்கும் விசேட நீதிமன்றங்களில், நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கைகளாகவும் ஒரு பகுதியினர் வெளிநாட்டவர்களாகவும் இருக்கக்கூடியதான ஏற்பாடு குறித்தே விதப்புரை அமைந்திருக்கிறது. ஆனால், நாடு இன்னமும் கூட ஒரு நிலைமாறுதல் கட்டத்தினூடாக சென்று கொண்டிருப்பதால், இத்தகைய விதப்புரைகள் சர்ச்சைக்குரியவையாகவே இருக்கும்.
வெளிநாட்டு சட்ட அதிகாரிகளின் ஈடுபாட்டுடன் கூடிய கலப்புமுறையிலான நீதிவிசாரணைகளைப் பொறிமுறையையே தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரிப்பது சாத்தியம் என்கின்ற அதேவேளை, சிங்களவர்கள் அதேமாதிரியான உணர்வைக் கொண்டிருப்பது சாத்தியமானது அல்ல. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக அழித்தொழிக்கப்பட்டதை அடுத்து இனப்பிரச்சினையும் கூட, முடிவை எட்டிவிட்ட ஒன்று என்றே பெரும்பான்மையான சிங்களவர்கள் கருதுகிறார்கள். அத்துடன், இராணுவ மோதல்கள் காரணமாக சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தோன்றிய மனிதாபிமான நெருக்கடிகளைப் பொறுத்தவரை சர்வதேச சமூகத்தின் இரண்டகமான அணுகுமுறைகள் குறித்தும் சிங்களவர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். செயலணியின் அறிக்கை தொடர்பிலான அரசாங்க அமைச்சர்களின் பிரபலிப்பு எதிர்நிலையானதாக மாத்திரமல்ல, அக்கறையற்றதாகவும் இதுவரையில் அமைந்திருக்கிறது. அந்தச் செயலணியை நியமித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை கையளிக்கப்பட்ட ஜனாதிபதி செயலக வைபவத்திற்கு வரவில்லை. ஜனாதிபதியின் சார்பில் குரல்தர வல்லவர்கள் என்று கருதப்படுகின்ற அமைச்சர்கள் இலங்கையர்கள் மீது தீர்ப்புக் கூறுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்கள். இது ஜனாதிபதி ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகக் கூறிய நிலைப்பாட்டையே அவர்கள் திருப்ப ஒப்புவிக்கிறார்கள்.
நினைவு ஆராதனை
உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் இருந்தவேளையில், 2009 ஜனவரியில் பட்டப்பகலில் நடுவீதியில் வைத்துக் கொலைசெய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவை நினைவுகூர்ந்து நடத்தப்பட்ட ஆராதனை இலங்கை நிலைமாறுதல் காலகட்டமொன்றின் ஊடாகச் சென்று கொண்டிருக்கும் நாடு என்ற யதார்த்தத்தை மீண்டும் வெளிக்காட்டியது. முன்னைய அரசாங்கத்தின் போக்குகளை கடுமையாக கண்டனம் செய்து மிகவும் துணிச்சலாகக் குரல்கொடுத்தவர் விக்கிரமதுங்க. போரை அரசாங்கம் நடத்திய முறையை அவர் கடுமையாகச் சாடினார். மோதல்களில் கொல்லப்படுகின்றவர்களின் எண்ணிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவத்தைக் கொடுத்து அதுகுறித்து பெருமைபட்ட அரசாங்கத்தின் போக்கு விக்கிரமதுங்கவுக்கு அறவே பிடிக்கவில்லை. அத்துடன், இராணுவ தளபாடங்கள் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை அவர் துணிச்சலுடன் அம்பலப்படுத்தினார். போர் நடத்தப்பட்ட முறை மீது மாத்திரம் அல்ல, முன்னைய அரசாங்கத்தில் காணப்பட்ட குடும்ப அரசியல் ஆதிக்கம், சட்டத்தின் ஆட்சியின் சீர்குழைவு, படுமோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், சட்டத்தில் இருந்து விடுபட்டு உரிமை பெற்றவர்கள் போன்று ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் சுதந்திரமாக நடமாடக்கூடியதாக இருந்த சூழ்நிலை என்று பலகெடுதிகள் மீதும் அவர் கவனத்தைச் செலுத்தி தனது பத்திரிகையில் எழுதினார். முன்னைய அரசாங்கத்தில் இருந்த பலருக்கு அவர் தொடர்பில் நேர்நிலையான உணர்வு இருந்திருக்காது. விக்கிரமதுங்கவின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஊடகத்துறைச் சகாக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்று பலர் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற நினைவு ஆராதனையில் கலந்துகொண்டனர். அரசியல்வாதிகள் மத்தியில் சிரேஷ்ட அமைச்சர்களும் காணப்பட்டனர். பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியையும் அதற்கு ஆதரவான சிறுபான்மையினக் கட்சிகளையும் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். முன்னர் எதிரணியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அரசாங்க மாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்காகவும் விக்கிரமதுங்க மிகவும் நெருக்கமாக செயற்பட்டார். இன்று அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு சிரேஷ்ட உறுப்பினரையும் நினைவு ஆராதனையில் காணமுடியவில்லை. இது அவர்கள் மத்தியில் விக்கிரமதுங்க மீது இருக்கக்கூடிய வெறுப்பை அல்லது அக்கறையின்மையை வெளிக்காட்டியது. அவரது எழுத்துக்களினால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். தனது கடமையைச் செய்தவேளையில் கொல்லப்பட்ட ஒரு பத்திரிகையாளரை நினைவுகூர்ந்து கௌரவப்படுத்துவதில் கூட ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற இந்த இடைவெளி நிலைமாறுதல் காலகட்டமொன்றில் இருக்கின்ற நாட்டில் குற்றவியல் நீதி தொடர்பில் ஐக்கியப்பட்டதொரு நிலைப்பாட்டை பெற்றுக்கொள்வதென்பது எவ்வளவு கஷ்டமானது என்பதை வெளிக்காட்டியது.
நினைவு ஆராதனையில் உரையாற்றியவர்களில் ஒருவரான, கொலையைத் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளில் விக்கிரமதுங்க தரப்பினரின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சட்டத்தரணி, கொலையாளிகளைப் பிடிப்பதற்கும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முன்னைய அரசாங்கக் காலத்தில் எவ்வாறு தடுக்கப்பட்டன என்பதை அவர் விபரித்தார். 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து சட்டச் செயற்பாடுகள் முன்னோக்கி நகரத் தொடங்கின. முன்னைய 6 வருடங்களின்போது தாங்கள் திரட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் செயற்படத் தொடங்கியபோது ஆரம்பத்தில் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. அந்தத் தகவல்களை முன்னைய ஆட்சிக்காலத்தில் பொலிஸாரால் பயன்படுத்த முடியவில்லை. அந்த அரசாங்கத்தின் தலைவர்கள் கடந்தகால குற்றச்செயல்கள் தொடர்பில் எந்த விசாரணைகளையும் நடத்தப்படுவதை விரும்பவில்லை. ஆனால், கடந்த காலத்தில் நடந்தவற்றைக் கண்டறிவதற்கான வாய்ப்பு இப்போது இல்லாமல் போய்க்கொண்டிருப்பதாகவும் முன்னோக்கிய நகர்வுகள் தாமதமடைவதாகவும் நினைவு ஆராதனையில் பங்குகொண்டிருந்தவர்கள் மத்தியில் கூறுவதற்கு அந்தச் சட்டத்தரணி தயங்கவில்லை.
அரசாங்கத்தின் மீது வெறுப்பு
இன்று அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் நல்லாட்சி பற்றி மக்களிடம் பெரும் எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. இன்று ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தல் பிரசார காலத்தில் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஊழலில் ஈடுபட்டவர்கள், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுவிட்டு சட்டத்தில் இருந்து விடுபாட்டு உரிமை பெற்றவர்கள் போன்று சுதந்திரமாக நடமாடியவர்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைச் சீர்குலைத்தவர்கள் எல்லோரும் அபகீர்த்திக்குள்ளாக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆரம்பத்தில் பெருவாரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஊழலில் ஈடுபட்டதாகவும் சட்டத்தை மீறியவர்களாகவும் சந்தேகிக்கப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். ஆனால், சட்ட நடவடிக்கை என்று வந்தபோது பல வழக்குகளில், தவறிழைத்ததாகச் சந்தேகிக்கப்பட்டவர்கள் செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்செயல்கள் பாரதூரம் குறைந்தவையாக மாற்றப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. அதன் விளைவாக அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். அதற்குப் பிறகு எதுவுமே நடக்காதது போன்று நிலவரம் காணப்படுகின்றது.
பாரிய ஊழல் மோசடிகள், மக்கள் பெருமளவில் கொலைசெய்யப்பட்ட சம்பவங்களில் பெரும்பாலும் அரசின் பங்கு இருக்கவே செய்யும். அரசின் ஈடுபாடு குறைந்தமட்டத்தில் இருந்தாலும் கூட, அத்தகைய விவகாரங்களைக் கையாளும்போது அரச இயந்திரம் முழுமையும் மிகுந்த முன்யோசனையுடனும் விழிப்புடனுமே செயற்படவேண்டியிருக்கும். அதன் காரணத்தினால்தான் வெறுக்கத்தக்கதும் கறைபடிந்ததுமான கடந்த காலத்துடன் தொடர்புடைய விவகாரங்களுக்கு முகம்கொடுப்பதில் அரசியல் ஐக்கியம் தேவைப்படுகிறது. லசந்த விக்கிரமதுங்கவின் நினைவு ஆராதனையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் கலந்துகொள்ளாதமை அரசாங்கத்தின் இரு பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் இருக்கின்ற பிளவை தெளிவாகக் வெளிகாட்டுகிறது. இது எதிர்கால ஒத்துழைப்புக்கு நல்லதல்ல. அரசியலமைப்பு நகல் வரைவு தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஒத்திவைக்கப்பட்டமையும், 2020 ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டுமென்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எடுத்த தீர்மானமும் மேலும் ஆழமாக ஆராயவேண்டிய தேவையை வேண்டி நிற்கும் புதிய பரிமாணம் ஒன்றைக் கொண்டிருக்கிறது. இனநெருக்கடிக்கான தீர்வு முயற்சிகளுடன் சம்பந்தப்பட்ட அரசியலமைப்புச் சீர்த்திருத்த அம்சங்கள் குறித்து மீண்டும் கலந்தாலோசனை செய்யவேண்டிய அவசரத் தேவையும் ஏற்பட்டிருக்கிறது.
2015 அக்டோபரில் இலங்கையும் இணை அனுசரணை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த முடியாததொரு நிலை அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறினால் அரசாங்கத்துக்கும் தமிழ் அரசியல் சமுதாயத்துக்கும் – அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான நம்பிக்கை முறிவடைவதற்கான சூழ்நிலை தோன்றலாம். நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியினால் செய்யப்பட்டிருக்கும் விதப்புரைகளை அக்கறையுடன் கையாளத் தவறினால், போரினால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அபிலாசைகளுக்கும் துரோகமிழைப்பதாகவே முடியும். நீதியை வழங்குவதில் அரசே நடுநாயகமாக இருப்பதால், ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூடுதலான அளவுக்கு ஒன்றிணைந்து உறுதிப்பாட்டுடன் செயற்படவேண்டியது அவசியமாகும். இவ்விரு கட்சிகளின் தலைவர்கள் குறிப்பாக ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் தங்களுக்கிடையிலான உறவுகளை திடப்படுத்தி 2020ஆம் ஆண்டில் நடைபெறக்கூடிய தேசியத் தேர்தல்களுக்கும் அப்பால் நீடிக்கக்கூடியதாகவும் புரிந்துணர்வொன்றை எட்டவேண்டிய தேவையிருக்கிறது. அரசு சீர்த்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை ஒரு கட்சியினால் மாத்திரம் உறுதிப்படுத்த முடியாது என்பது தெளிவானது.
கலாநிதி ஜெகான் பெரேரா