மலையக மக்கள் செறிவு குறைவாக வாழ்ந்தாலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றும் தங்கள் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்கும் ஒரு பிரதேசமாக மொனறாகலை மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமாக பல தோட்டங்கள் காணப்படுகின்றன. ஒன்பது பிரிவுகளை உள்ளடக்கிய குமாரவத்தை தோட்டமும் இதில் உள்ளடங்குகின்றது.

இங்கு தொழில்புரிகின்ற தொழிலாளர்களுக்கு இன்னும் புதிய கூட்டு ஒப்பந்தத்தின் படி சம்பளம் வழங்கப்படுவதில்லை. அத்தோடு, சம்பளமும் உரிய திகதியில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் மக்கள் கூறுகிறார்கள். மேலும், தங்களது அடிப்படை உரிமைகளை கூட நிர்வாகத்தால் மறுக்கப்படுவதாகவும் இம்மக்கள் குறைகூறுகிறார்கள்.

இது தொடர்பில் மொனறாகலை மக்கள் அபிவிருத்தி அமைப்பினால் மகஜர் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மகஜர் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கும் மலையக அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக அமைப்பு தெரிவித்திருக்கிறது.

அந்த மகஜரில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் வருமாறு,

அறிமுகம்

மொனறாகலை மாவட்டம் – மொனறாகலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையால் (JEDB) குமாரவத்தை தோட்டம் நிர்வகிக்கப்படுகின்றது. இத்தோட்டம் ஒன்பது பிரிவுகளைக் கொண்டது. மரகலை, குமாரதொல, ஸ்டோர் டிவிஷன், வெளியாய, உலந்தாவத்த, நக்கல, முப்பனைவெளி, பாராவில, கும்புக்கன் என்பன அந்த ஒன்பது பிரிவுகளாகும்.

இங்கு இறப்பரும், கரும்பும் பயிரிடப்படுகின்றன. இன்றைய நிலையில் இத்தோட்டப் பிரிவுகளில் 563 தொழிலாளர்கள் தொழில் புரிகின்றனர். இதில் பெரும்பான்மையானோர் பெண் தொழிலாளிகளாவர். இத்தோட்டங்களில் அடிப்படை வசதிகளான சுகாதாரம், சுத்தமான குடிநீர், போக்குவரத்து, குடியிருப்பு போன்றன இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. மரகலை, குமாரதொலைப் போன்ற தோட்டங்களில் 350 குடும்பங்கள் வரை வசிக்கின்றனர். இவர்கள் 5ஆவது தலைமுறையாக இத்தோட்டங்களில் வாழ்கின்றனர். இதுவரை காலமும் மின்சாரம் வசதி கூட இவர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை. இவை இம்மக்களின் நாளாந்த வாழ்க்கையில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன.

தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

இத்தோட்டத்தில் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்.

 • சேவைகால கொடுப்பனவுகள் (Gratuity) உரியகாலத்தில் பெற்றுக்கொள்ள முடியாமை. தொழிலிலிருந்து ஓய்வுபெற்று பல வருடங்கள் கடந்த பின்னரும் இக்கொடுப்பனவுகள் வழங்கப்படாது நிர்வாகத்தால் இழுத்தடிக்கப்படுகின்றது.
 • இந்த வருடம் ஒக்டோபர் மாதம் கைச்சாதிடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் முதலாளிமார் சம்மேளனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 500 ரூபா அடிப்படை சம்பளம் இன்னும் குமாரவத்தை தோட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் பழைய கூட்டு ஒப்பந்தத்தின் படியே 450 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படுகிறது.
 • ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் (ETF) என்பவற்றுக்கு தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்திலிருந்து அறவிடப்பட்ட போதிலும், அவை உரிய வகையில் நிர்வாகத்தால் குறித்த நிதியங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை. அத்தோடு, அரையாண்டு கூற்று அறிக்கைகளும் கிடைக்கப் பெறுவதில்லை.
 • ஊழியர்களுக்கான சம்பளமும், முற்பணமும் உரிய திகதியில் வழங்கப்படுவதில்லை. குறித்த தினத்திற்கு பிற்பட்ட காலத்தில் வழங்குவதை தோட்ட நிர்வாகம் ஒரு வழமையாகக் கொண்டுள்ளது.
 • மேலும், மரகலை, குமாரதொல பிரிவு தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகள் மொனறாகலை நகருக்கு அருகாமையிலுள்ள தொழிற்சாலை முன்றலிலேயே வழங்கப்படுகின்றது. இதனை பெற்றுச் செல்வதற்காக குறித்த பிரிவுத் தொழிலாளர்கள் 14 கிலோமீற்றர் தூரத்தை நடந்தே கடக்க வேண்டியுள்ளது.
 • மேலதிக நேர கொடுப்பனவுகள் உரியமுறையில் வழங்கப்படுவதில்லை.
 • தொழிலாளர்கள் வேலை செய்யும் சில நாட்களுக்கான பதிவுகள் பதியப்படாத சந்தர்ப்பங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. இதைச் சுட்டிக்காட்டும் வேளைகளில் தொழிலாளர்கள் வீட்டில் இருக்கச் செய்யப்பட்டு அத்தினங்களில் வேலை வழங்கப்பட்டதாக பதிவுசெய்யப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் தொழிலாளர்களின் வருகைக்கான கொடுப்பனவில் தாக்கத்தைச் செலுத்துகின்றது. அதேபோன்று இத்தாக்கமானது தொழிலாளர்களின் EPF, ETF என்பவற்றிலும் செலுத்துகின்றது.
 • தோட்டக் காணி வெளியாருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதால் தோட்டப் பொறுப்பிலுள்ள காணியின் அளவு குறைவடைகின்றது. இச்செயற்பாடானது தோட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பில் நேரடியான பாதிப்பை செலுத்துகின்றது. அத்தோடு, தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலத்தை இச்செயற்பாடானது கேள்விக்குறியாக்கிவிடும். இவர்களின் தொழில் மற்றும் இருப்பிற்கு பாரிய பிரச்சினையாக அமைந்துவிடுகின்றது.
 • தோட்டப்பகுதியில் படித்த இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதில்லை. அதேபோல் இருக்கின்ற வேலைவாய்ப்புகளுக்கும் தோட்ட முகாமையால் இவர்கள் உள்வாங்கப்படுவதில்லை.
 • தோட்டங்களில் தேவைக்கதிகமான மற்றும் அனுபவமற்ற உத்தியோகஸ்தர்கள் தொழில் புரிகின்றனர். இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் தொழிலாளர்கள் மேலதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
 • முன்னரைப்போல் அல்லாது இன்று தகுந்த காரணங்கள் இன்றி தோட்டங்கள் உரிய பராமரிப்பின்றி காடுகளாக்கப்பட்டு மூடப்படுவதால் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பை இழப்பதோடு தோட்டங்களில் உற்பத்தித்திறனும் பாதிக்கப்படுகின்றது.
 • நீண்டகாலமாக தோட்டங்களில் வீட்டு வசதிகளும், மலசலகூட வசதிகளும் மேம்படுத்தப்படாமலேயே உள்ளன. அதேப்போல் இன்று தேவைக்கேற்ப குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுமில்லை. குறிப்பாக குடும்பங்கள் அதிகரித்த போதும் குடியிருப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. இன்றும் ஆங்கிலேயர்கள் கட்டிய வீடுகளே இடிந்துவிழும் நிலையில் உள்ளன. மேலும், சுத்தமான குடிநீரும் கிடைப்பதில்லை. அதேவேளை, தொழிலாளர்கள் தங்களது இருப்பிடங்களை தாங்களாகவே திருத்திக்கொள்வதற்கு முயற்சித்தாலும் தோட்ட நிர்வாகம் அதற்கு அனுமதிப்பதில்லை.

பெண் தொழிலாளர்களுக்கான விசேட பிரச்சினைகள்

 • தோட்டத்தில் பெண்கள் வேலை செய்யும் இடங்களில் அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கான மலசலகூடம், உணவு உட்கொள்ளும் இடம், சுத்தமான குடிநீர் என்பன இல்லாத காரணத்தினால் உடல், உளபாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
 • குமாரதொல மற்றும் மரகலை தோட்டங்களைச் சேர்ந்த பெண்கள் அத்தோட்டங்களிலிருந்து வெளித் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்கின்ற பொழுது அப்பெண்கள் அனைவரும் பாதுகாப்பற்ற டிரெக்டர் வண்டியில் ஏற்றிச் செல்லப்படுகின்றார்கள். இப்பெண்களில் கர்ப்பிணிப் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதனால், இவர்கள் பல்வேறு சொல்லொன்னா துயரத்திற்கு உள்ளாகுவதாக பெண்கள் குறிப்பிடுகின்றார்கள்.
 • குழந்தை பிறந்து 3 மாதத்திற்குப் பின் பாலூட்டும் தாய்மார்கள் வெளித் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்வதனால் அப்பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால், பிள்ளைகளுடைய போசனை மட்டம் குறைவடைந்து மந்த போசனைக்கு உள்ளாகுவதோடு, நோய்கள் ஏற்படவும் காரணமாக அமைந்து விடுகின்றது. இது குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கின்றது. இதன் தொடர்ச்சியாக பிள்ளைகளின் கல்வியையும் பாதிக்கின்றது. தாய்மார்கள் முறையாக பால் கொடுக்க முடியாததால் மனவுளைச்சல் மற்றும் வேறு நோய்களுக்கும் உள்ளாகுகின்றனர்.
 • பெருந்தோட்டங்களில் தொழில் செய்கின்ற தொழிலாளர்களின் பிள்ளைகளை மூன்று வயது வரை பாதுகாக்க வேண்டியது தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை தோட்ட நிர்வாகம் சரிவர செய்வதில்லை என்பது தோட்ட மக்களின் கருத்தாகும். மரகலை, பாரவிலை, குமாரதொலை போன்ற தோட்டங்களில் பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் இல்லை. இதனால், அங்குள்ள தோட்டத்தில் தொழில் செய்கின்ற பெண்கள் பிள்ளைகளை வீட்டிலிருந்து பராமரிக்க வேண்டியுள்ளது. இதனால், இவர்களின் குடும்ப வருமானம் பாதிப்படைவதுடன் தோட்ட நிர்வாகத்திற்கும் நட்டம் ஏற்படுகின்றது. அதாவது, தோட்டத்தில் தொழில் செய்கின்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதனால் உற்பத்தியின் அளவும் குறைவடைகின்றது. மேலும், பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் இருக்கின்ற தோட்டங்களில் அவை சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. குறிப்பாக இந்தப் பிள்ளை பராமரிப்பு நிலையங்களில் நீர் இல்லை. பிள்ளைகள் விளையாடுவதற்கான விளையாட்டுப் பொருட்களில்லை. இங்கு பிள்ளைகள் மலம் கழித்தால் கழுவப்படாமல் துணிகளில் துடைக்கப்பட்டு அக்குழந்தைகள் சுமார் ஆறு மணித்தியாலங்கள் துப்பரவின்றி இருக்கின்றனர். இதனால், அடிக்கடி பிள்ளைகள் நோய்வாய்ப்படுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இங்கு பிள்ளைகள் அடைக்கப்பட்ட நிலையிலேயே வளர்க்கப்படுவதனால் மன வளர்ச்சி பாதிப்படைவதாகவும் பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.
 • தொழில்புரிகின்ற இடங்களில் பெண் தொழிலாளர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆண் மேற்பார்வையாளர்களிடம் தங்களது உடல் சார்ந்த பிரச்சினைகளை எடுத்து கூற முடியாத நிலையே காணப்படுகின்றது. இதனால், குறித்த சில தினங்களுக்கு அத்தொழிலாளர்களினால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. இது அவர்களின் சம்பளத்திலும் தாக்கத்தைச் செலுத்துகின்றது.
 • பெண் தொழிலாளர்களை ஆண் மேற்பார்வையாளர்கள் தகாத வார்த்தைகளை கொண்டு ஏசுவதால் அவர்கள் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றார்கள். இவர்கள் பெண்களை ‘தமுசே, உம்ப, பலயன்’ போன்ற சிங்களச் சொற்களைப் பயன்படுத்தி ஏசுவதாக குறிப்பிடுகின்றனர். மேலும், அவர்களின் பெயரை சொல்லி அழைக்காமல் ‘ஓய், உம்பட்ட’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அதிகமான தொழிலாளர்களுக்கு முன் அழைப்பதனால் இவர்களுக்கு சங்கடம் ஏற்படுவதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.
 • கர்ப்ப நிலையில் இருக்கின்ற தொழிலாளிகளுக்கு ஏனைய சாதாரண தொழிலாளிகளை போல் வேறுபாடுகளின்றி நடத்தப்படுவதனால் கர்ப்பிணி பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதோடு, தனது பிரச்சினையினை மேற்பார்வை செய்யும் ஆண்களிடம் சொல்ல முடியாத துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, பெண் தொழிலாளிகளின் அடிப்படை உரிமையானது பாதுகாக்கப்படுவேண்டும். பெண் தொழிலாளிகள் தொழில் புரியும் இடங்களில் பெண் மேற்பார்வையாளர் ஒருவரை அமர்த்துகின்ற பொழுது பெண்களுடைய பிரச்சினைகளை கூறுவதற்கு இலகுவாக இருக்கும் எனத் இத்தோட்டங்களைச் சேர்ந்த பெண்கள் தமது தீர்வாக முன்வைக்கின்றனர்.
 • வேலைத் தளங்களில் தொழில் ரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை.

மொனறாகலை மாவட்ட அரச தோட்டங்களில் நிலவுகின்ற பிரச்சினைகள் அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் இடம்பெறுவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக பெண் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் விசேட கவனத்திற்கு கொள்ள வேண்டியதாக உள்ளன.

இந்நிலையில், இப்பிரச்சினைகளையிட்டு உங்கள் கவனத்தில் கொண்டு உரிய பெருந்தோட்ட நிர்வாகத்தோடு ஆலோசனைகளை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்காக வெகுவிரைவில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நம்புகின்றோம்.