படம் | BBC

வெளிநாட்டு ஆதிக்கத்தையும் பொருளாதார அநீதியையும் இல்லாமற் செய்வதற்காக 1950களில் கியூபா புரட்சிவாதிகள் தங்களது ‘ஜூலை 26 இயக்கத்தை’ ஆரம்பித்தார்கள். 1952ஆம் ஆண்டு பல்ஜென்சியோ பாடிஸ்டா சதிப்புரட்சியொன்றைச் செய்து ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து கியூபா மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளையெல்லாம் இழந்தார்கள். சர்வாதிகார ஆட்சி மீது இவர்கள் வெறுப்புக் கொண்டார்கள், எதிர்க்கத் தொடங்கினார்கள். அமெரிக்கர்களைப் பொறுத்த வரை, பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சி கியூபாவில் இருந்த அவர்களின் வர்த்தக நலன்களுக்கு முழுமையான பாதுகாப்பளித்தது. அதனால், அமெரிக்க அரசாங்கம் பாடிஸ்டா ஆட்சிக்கு உறுதியான அரசியல் மற்றும் இராணுவ ஆதரவை வழங்கியது. ஊழல்தனமான கால்நூற்றாண்டுகால பாடிஸ்டா சர்வாதிகாரத்தின் கீழ் சொல்லொணா கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருந்த வறிய பிரஜைகளுக்கு நாட்டின் செல்வத்தைப் பகிர்ந்தளிக்கப்போவதாக உறுதியளித்துக் கொண்டு 1959 புதுவருடத்தினத்தன்று பிடல் காஸ்ட்ரோ அதிகாரத்துக்கு வந்தார். ஆரம்பத்தில் ஜூலை 26 இயக்கத்துக்கு கியூபா மக்களிடமிருந்து பெரும் அரசியல் ஆதரவு கிடைத்தது. 1940ஆம் ஆண்டின் அரசியலமைப்பை மீள நடைமுறைப்படுத்துவது உட்பட கியூபா மக்களின் உண்மையான அபிலாசைகளுக்காக பாடுபடுகின்ற தேசிய ஜனநாயக இயக்கமாக அது விளங்கியதே அதற்குக் காரணமாகும்.

புதிய கியூபா அரசாங்கம் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாததான விவசாய சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளில் இறங்கியது. அப்போது தேசிய மயமாக்கப்படவிருந்த நிலங்களுக்கு அமெரிக்க நஷ்டஈடு கோரியது. இறுதியாக செலுத்தப்பட்ட வரிகள் தொடர்பான ஆவணங்களில் பிரகடனம் செய்யப்பட்டிருந்த நிலப் பெறுமதிக்கு ஏற்ப நஷ்டஈட்டைத் தருவதற்கு கியூபா முன்வந்தபோதிலும் அதை அமெரிக்கா எதிர்ந்தது. கூடுதலான தொகையை நஷ்டஈடாகக் கோரிய அமெரிக்கா, கொள்வனவு செய்துவந்த கரும்பு கோட்டாவை குறைக்கப்போவதாகவும் அச்சுறுத்தியது. அமெரிக்கா கொள்வனவு செய்யாத கரும்பு எவ்வளவாக இருந்தாலும் அவற்றையெல்லாம் வாங்குவதாக சோவியத் யூனியன் உறுதியளித்தது. அத்துடன், சலுகை விலையில் மசகு எண்ணெயை கொடுத்து கரும்புக்கான கொடுப்பனவைச் செய்வதற்கும் சோவியத் யூனியன் முன்வந்தது. 1962ஆம் ஆண்டு கியூபா தன்னை ஒரு சோசலிச நாடாகப் பிரகடனம் செய்து கொண்டது. புரட்சியின் ஆரம்பக்கட்டங்களில் பின்னடைவு ஏற்பட்ட போதிலும் கூட கல்வி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் தொழில்வாய்ப்பில் தெளிவான முன்னேற்றங்கள் ஏற்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. லத்தீன் அமெரிக்கா, வியட்னாம் மற்றும் ஆபிரிக்காவில் இருந்த புரட்சிகர இயக்கங்களுக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்து சர்வதேசத்தில் பற்றுறுதி வாய்ந்த நாடாக கியூபா விளங்கியது.

ஆனால், கியூபாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான உறவுகள் வலுவடையத் தொடங்கியதும் வெகுஜன சோசலிசக் கட்சியின் (Popular Socialist Party) செல்வாக்கு அதிகரித்தது. இந்த வெகுஜன சோசலிசக் கட்சிதான் 1959 புரட்சிக்கு முன்னர் கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி, பாடிஸ்டா ஆட்சியின் வீழ்ச்சி அதன் இறுதிக் கட்டங்களை நெருங்கிக் கொண்டிருந்த வேளை கூட வெகுஜன சோசலிசக் கட்சி ஜூலை 26 இயக்கத்தின் போராட்டத்தை வெறுமனே சாகசத்தன்மை கொண்டது என்றே வர்ணித்தது. புரட்சிகர இயக்கத்துக்கு ஆதரவளித்த மாணவர் அமைப்பின் தலைவர்களுக்கு வெகுஜன சோசலிசக் கட்சி துரோகம் இழைத்தது. அனிபால் எஸ்கலென்ற் என்பவர் தலைமையிலான வெகுஜன சோசலிசக் கட்சியின் தலைமைத்துவத்துக்கும் ஜூலை 26 இயக்கத்துக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவியபோதிலும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி கியூபா கம்யூனிஸ்ட் கட்சியில் எஸ்கலென்ற் தலைமையிலான குழுவின் ஆதிக்கத்துக்கு வசதியாகவே செயற்பட்டது.

ஜூலை 26 இயக்கத்தின் தலைவர்கள் குறிப்பாக சேகுவேரா போன்றவர்கள் கியூபாவின் பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்த முயற்சித்தபோது வெகுஜன சோசலிசக் கட்சியும் சோவியத் யூனியனும் கரும்புச் செய்கையில் மாத்திரம் தங்கியிருக்கின்ற ஒரு பொருளாதாரமாகவே கியூபா இருக்கவேண்டுமென்று விரும்பின. கியூபாவின் சுதந்திரத்தலைவரன் ஜொஸ் மார்ட்டியின் காலத்திலும் கரும்புச் செய்கையில் மாத்திரம் தங்கியிருப்பது தற்கொலை செய்வதற்கு ஒப்பானது என்றே கருதப்பட்டது. கியூபா அதன் ஏற்றுமதி வருவாய்க்காக கரும்புச் செய்கை மீதே கூடுதலான அளவுக்கு தங்கியருந்தமை அதன் சோர்வான பொருளாதார நிலைமைக்கான பிரதான காரணங்களில் ஒன்று. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளின் விளைவான பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு கரும்புச் செய்கையில் முற்றுமுழுவதுமாக தங்கியிருந்த பொருளாதார நடவடிக்கைகள் பெரிதாக உதவவேயில்லை என்று கூறலாம்.

பிடல் காஸ்ட்ரோவின் திட்டங்கள் தோல்வியடைந்தன. உணவுப் பங்கீட்டு முறை 1961ஆம் ஆண்டு தொடங்கியது. முன்னை வெகுஜன சோசலிசக் கட்சியின் தலைவர்கள் கடைபிடித்த சோவியத் சார்பு கொள்கை நிலைப்பாடுகளில் இருந்து பிடல் காஸ்ட்ரோவை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. சோவியத் யூனியனின் வெளியுறவுக் கொள்கையே கியூபாவின் வெளியுறவு கொள்கையாயிருந்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட உலகம் பூராகவும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெளியுறவு கொள்கைகளும் கூட அவ்வாறே இருந்தன. கியூபாவில் பொருளாதார நிலவரம் மோசமடையத் தொடங்கியதன் விளைவாக கணிசமான எண்ணிக்கையான கியூப ஆபிரிக்கர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள் வெளியேறி அமெரிக்காவிற்குச் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு நிச்சயமற்றதொரு எதிர்காலமே காத்திருந்தது. இந்த வெளியேற்றம் 1960களில் காணப்பட்ட நிலவரத்திலிருந்து வேறுபட்டதாகும்.  அப்போது வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்றவர்கள் கியூப சமூகத்தின் உயர்மட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கியூபாவின் ஜூலை 26 இயக்கத்தைப் போன்றதாகவே 1970களுக்கு முற்பட்ட காலகட்டத்தில் இலங்கையில் விளங்கியது. ஜே.வி.பியின் கோட்பாட்டு வேர்கள் மார்க்சிசம்/ லெனினிசம்/ மாவோயிஸம் மற்றும் கியூபா புரட்சி ஆகியவற்றில் ஆழமாகப் பதிந்தமையாகும். அந்த இயக்கத்தில் இருந்த நாம் கியூபாவின் பொருளாதாரம் கரும்புச் செய்கையை அடிப்படையாகக் கொண்டதாக விளங்கியதைப் போன்று இலங்கைகைப் பொருளாதாரம் பெருந்தோட்டத் தொழில் துறையில் தங்கியிருந்ததை அவதானித்தோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ் நாம் இருப்பதையும் அவதானித்தோம். இலங்கையிலிருந்த தரகு முதலாளித்துவ சக்திகளையும் சரணாகதி அரசியல் செய்துகொண்டிருந்த இடதுசாரிகளையும் சுரண்டப்பட்டுக் கொண்டிருந்த தொழிலாளர் விவசாயிகளையும் நாம் நோக்கினோம். ஆக்கிரமிப்புத் தன்மையான வெளியுறவுக் கொள்கையின் வடிவிலும் மூலவளங்களையும் சந்தைகளையும் வேட்டையாடுகின்ற செயற்பாடுகளின் வடிவிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆபத்து அதிகரித்துவந்த போக்கே கம்யூனிஸ்டுகளையும் ஏனைய இடதுசாரிச் செயற்பாட்டாளர்களையும் ஐக்கியப்படவைத்தது. உலகம் பூராகவும் உள்ள முற்போக்கு இடதுசாரிகள் கியூபா புரட்சியை கவனத்தில் எடுத்தார்கள்.

1971 ஏப்ரல் 5 கிளர்ச்சிக்குப் பிறகு உடனடியாகவே இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை தந்துதவுமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. முதலாளித்துவ நாடுகளும் சோசலிச நாடுகளும் அணிசேரா நாடுகளும் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கின. அரசியல் ரீதியில் வேறுபட்டவையாக விளங்குகின்ற சிங்கப்பூர், இந்தியா, அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா மற்றும் பாகிஸ்தான் என்று சகல நாடுகளுமே ஆயுதங்களைக் கொடுத்தன. கிளர்ச்சி ஒடுக்கப்பட்டதும் சுமார் 15,000 ஜே.வி.பி. போராளிகளை அரசாங்கம் தடுப்புக் காவலில் வைத்தது. இவர்களில் சிலர் ஆயுதப் படைகளுடனான சண்டைகளின்போது பிடிபட்டவர்கள், வேறு சிலர் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள், ஏனையோர் மன்னிப்பு அளிக்கப்படுமென்று அரசாங்கம் அளித்த உறுதிமொழியை நம்பி சரணடைந்தவர்கள். அவர்கள் எல்லோரும் இருண்ட சிறைகளில் நெரிசலாக அடைக்கப்பட்னர். சிலர் சிறையில் இருந்து தப்பியோட முயற்சித்தார்கள் என்று கூறப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

அன்றைய அரசாங்கத்தினால் படுமோசமான முறையில் மனித உரிமைகள் மீறப்பட்டபோதிலும் கியூபா அந்த அரசாங்கத்துக்கே அதன் ஒருமைப்பாட்டை வெளிக்காட்டியது. என்றாலும் இராணுவ தளபாட உதவியெதையும் செய்யவில்லை. ஆனால், இலங்கையில் நிலவரங்கள் அமைதியடையும் வரை பிரதமர் திருமதி ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் புதல்வர் கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் தங்கியிருப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டார். எனது அபிப்பிராயத்தின்படி, கியூபா எடுத்த அந்த நிலைப்பாட்டுக்குக் காரணம், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியினதும் மாஸ்கோ சார்பு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியினதும் செல்வாக்கேயாகும். 1978ஆம் ஆண்டில் கியூபா எரித்திரிய விடுதலை முன்னணிக்கு எதிராக துருப்புக்களை அனுப்பியது. எரித்திரிய பிரிவினைவாதிகளிடமிருந்து எத்தியோப்பியாவின் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டியது அவசியமாயிருந்தது என்று அதற்கு கியூபா காரணத்தையும் கூறிக்கொண்டது. எத்தியோப்பியா ஆட்சியாளர் மெங்கிட்சு மரியத்தின் கொடுங்கோன்மையை உண்மையான முற்போக்கு சக்தி என்றும் கூட கியூபா புகழ்ந்துகொண்டது. சோவியத் யூனியனின் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவான முறையில் தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதற்கு கியூபா தயாராயிருந்தது.

1977ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாடுகளில் உள்ள முற்போக்கு சக்திகளுடன் பெருமளவுக்கு தோழமை உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நோக்கத்தின் அடிப்படையில் ஜே.வி.பி. வியட்நாமிய, கியூப மற்றும் முற்போக்கு விடுதலை இயக்கங்களுடன் ஒருமைப்பாட்டை வெளிக்காட்டி தொடர்புகளை பேண ஆரம்பித்தது. உலகம் பூராகவும் உள்ள இடதுசாரி கட்சிகளும் முற்போக்கு சித்தனை கொண்ட மக்களும் இந்த விடுதலைப் போராட்டங்களை அரசியல் ரீதியாக ஆதரித்தனர். 1970களின் பிற்பகுதியிலும் கூட கியூபா கம்யூனிஸ் கட்சியுடன் எமக்குப் பிரச்சினைகள் இருந்தன. 1979ஆம் ஆண்டு ஹவானாவில் நடத்தப்பட்ட உலக ஜனநாயக இளைஞர் சம்மேளனத்தில் விழாவுக்கு தூதுக்குழுவொன்றை அனுப்பிவைக்குமாறு ஜே.வி.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தோழர் ரோஹண விஜேவீர தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்றார். ஹவானாவில் இருந்தவேளையில் பிடல் காஸ்ட்ரோவை கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்ற வகையில் சந்தித்துப் பேசுவதற்கு விஜேவீர விரும்பினார். கொழும்பில் உள்ள கியூபா தூதரகம் ஊடாக கியூபா கம்யூனிஸ் கட்சிக்கு ஜே.வி.பி. தலைவரின் விருப்பம் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், திரும்பத் திரும்ப விடுக்கப்பட்ட அந்த வேண்டுகோளை கியூபர்கள் நிராகரித்துவிட்டார்கள். அதனால், உலக ஜனநாயக இளைஞர் சம்மேளன விழாவை பகிஷ்கரிப்பதற்கு விஜேவீர தீர்மானித்தார். இது தொடர்பிலும் தூதரகத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இறுதியில் காஸ்ட்ரோவை விஜேவீர சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி தகாத முறையில் செல்வாக்கைப் பிரயோகித்ததாக பின்னர் எம்மால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

1971 ஏப்ரல் கிளர்ச்சியின்போதும், 1988-89 கிளர்ச்சியின்போதும், 1983-2009 இடைப்பட்ட கால கட்டத்தில் தமிழ்த் தீவிரவாதிகளுடன் அரசாங்கப் படைகள் நடத்திய யுத்தத்தின்போதும் சம்பந்தப்பட்ட தரப்புகளினால் மனித உரிமைகள் படுமோசமாக மீறப்பட்டபோதிலும் கூட கியூபா இலங்கை அரசாங்கத்தையே உறுதியாக இடையறாது ஆதரித்து நின்றது. போரின்போது இழைக்கப்பட்டிருக்கக் கூடிய எந்தவொரு குற்றம் தொடர்பிலும் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை கியூபா கடுமையாக எதிர்த்தது. அடக்குமுறையைச் செய்த அரசாங்கங்களின் பக்கத்தில் கியூபா நின்றதற்கு சர்வதேச உதாரணங்களை பலவற்றைக் கூறமுடியும். சோசலிசத்தின் புரட்சிகரப் பரவல் உலகம் பூராகவும் சமச்சீராக இருக்கவில்லை. அதனால், ஏகாதிபத்திய உலகத்துடன் விவகாரங்களைக் கையாளும்போது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு விட்டுக்கொடுப்புகள் தேவைப்படுகின்றன என்பதே கியூபா போன்ற நாடுகளும் அவற்றின் ஆதரவாளர்களும் முன்வைத்த வாதமாகும்.

இந்த வாதத்தின் ‘நியாயவாதி’ ஒருவர் 1970களில் திரிபுபடுத்தப்பட்ட முறையில் பின்வருமாறு கருத்தொன்றை முன்வைத்தார்.

“நிலையற்ற உள் முரண்பாடுகள் நிறைந்ததாக இருக்கின்ற ஒரு ஏகாதிபத்திய உலகத்துடன் கணிசமானதொரு காலகட்டத்துக்கு சோசலிச அரசுகள் சகவாழ்வைச் செய்தே உயிர் வாழவேண்டியிருக்கிறது.”

இத்தகைய அரசியல் இணக்கப் போக்கைத்தான் ரோஹண விஜேவீரவும் அவரது தோழர்களும் ஜே.வி.பியை ஆரம்பித்தபோது நிராகரித்தார்கள். சோவியத் யூனியனினதோ அல்லது சீனாவினதோ அல்லது கியூபாவினதோ உத்தரவுகளில் இருந்து விடுபட்டதாக சுதந்திரமான சுதேசிய முற்போக்கு சோசலிசக் கட்சியொன்றை அமைப்பதற்கு அவர்கள் விரும்பினார்கள். உலக அரங்கில் இந்த சோசலிச முகாம் செலுத்திய செல்வாக்கையும் அதன் விளைவான பயன்களையும் ஜே.வி.பியினர் மதித்த போதிலும் கூட, அதே சோசலிச முகாமிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட அடிவருடிகளின் பிற்போக்குத்தனமான செல்வாக்கு இலங்கை அரசியலில் இருந்ததையும் அவர்களினால் காணக்கூடியதாக இருந்தது.

லயனல் போபகே எழுதி Yester – Years: The Janatha Vimukthi Peramuna and The Cuban Revolution என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கமே இங்கு தரப்பட்டுள்ளது.