படங்கள் | Groundviews

பத்தினி-கண்ணகி வழிபாடானது இலங்கையில் இந்து-பௌத்த சமரசப் பண்பிற்கு ஊக்கமளிக்கும் உதாரணமாக விளங்குகிறது. இந்தப் பெண் தெய்வமானவள், சடங்குகள் வழிபாட்டு முறைகளால் இரு சமயத்தவரிடையேயும் பிரதேசங்களிடையேயும் வேறுபட்டிருப்பினும், தமிழ் இந்துக்களாலும் சிங்கள பௌத்தர்களாலும் போற்றப்பட்டு வருகிறாள். ஆயினும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான இலங்கையருக்கு அவள் ஒரு பொதுவான தெய்வம் என்பது தெரியாமலே உள்ளமை – இச்சிறிய நாட்டில் வாழும் இரு பிரதான இன சமூகங்களிடையே உள்ள அந்நியத்தன்மையின் அளவினை தரும் அறிகுறியாக உள்ளது. அவளை தமிழ் இந்துக்கள் கண்ணகி என்றும், சிங்கள பௌத்தர்கள் பத்தினி என்றும் அறிந்துள்ளனர்.

பத்தினி-கண்ணகியானவள் வசீகரமான, சிக்கலான பெண்மைக்கு ஒரு உதாரணம். அவள் நம்பிக்கைத் துரோகம் செய்த கோவலனின் கடமை தவறாத, கற்புடைய மனைவியாக இருக்கிறாள். மறுபுறம் தனக்கு ஏற்பட்ட அநீதியை நிவர்த்திசெய்ய சீற்றத்துடன் தனது வலது மார்பகத்தினை  பறித்தெறிந்து ஒரு நகரையே தீக்கிரையாக்கி பழிதீர்க்கும் விதவையாகத் தெரிகிறாள்.

மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டுப்போரிலிருந்து இலங்கை மெதுவாக மீண்டுவரும் இவ்வேளை வெற்றிக்களிப்பில் சிங்களவரும் தோல்வியின் வேதனையில் தமிழரும் என பிளவுபட்டு காணப்படுகின்ற இரு சமூகங்களை ஒன்றிணைக்க சிங்கள பௌத்தர்கள் மற்றும் இந்துக்களின் பொதுவான வரலாற்றினையும் பாரம்பரியத்தினையும் நினைவுகூர்வது காலத்திற்கு பொருத்தமானதாகும்.

ஆகவே, சார்னி ஜெயவர்தன (புகைப்படவியலாளர்) மற்றும் மாலதி டி அல்விஸ் (சமூக கலாசார மனிதவியல் எழுத்தாளர்) ஆகியோர் இணைந்து இலங்கையில் கண்ணகி வழிப்பாடு முறைமை தொடர்பாக தாங்கள் ஆவணப்படுத்திய தகவல்களைக் கொண்டு கண்காட்சியொன்றை நடத்தவுள்ளனர். அத்தோடு, இது தொடர்பாக இணையத்தளம் ஒன்றையும் அறிமுகம் செய்துவைக்கவுள்ளனர்.

கண்காட்சியானது பெப்ரவரி 21ஆம் திகதியிலிருந்து 23ஆம் திகதி வரை கொழும்பு லயனல் வெண்ட்டில் உள்ள ஹரொல்ட் பீரிஸ் கலைக் கூடத்தில் நடக்கவிருக்கிறது.

பெண் தெய்வமானவள் பெரும்பாலான இந்துக்களாலும் பௌத்தர்களாலும் போற்றப்பட்டாலும் இரு மதங்கள் ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் சடங்கு, வணக்கமுறைகளில் வேறுபாடுகள் காணப்படுகிறது. டி அல்விஸ் மற்றும் ஜெயவர்தன இலங்கையெங்கும் பல வருட காலம் பயணம் செய்து இவ் வேற்றுமைகளையும், உணர்ச்சி ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். இந்தக் கண்காட்சி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலும் நடைபெறவிருக்கிறது. இவ்வருட இறுதியில் டெல்லியிலும் நியூயோர்க்கிலும் கண்காட்சி நிகழ்த்தப்பட உள்ளது.

கண்ணகை அம்மன் தொடர்பாக அவர்கள் செய்த ஆய்வின் சுருக்கம்

இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் வாழும் பக்தர்கள், அரசியின் சிலம்பினைத் திருடினான் என வீண் பழி சுமத்தப்பட்டு, கணவன் கொலை செயப்பட்டதற்கு பழிவாங்கும் முகமாக மதுரையை அழித்த பின், தனது கோபத்தைத்  தணிக்க கண்ணகி இலங்கைக்கு கடல் கடந்து வந்து, இலங்கையின் வட பகுதியில் இரண்டு இடங்களுக்கும், கிழக்கில் ஏழு இடங்களுக்கும் வருகைதந்தாள் என நம்புகின்றனர். இவ் இடங்கள் அனைத்திலும் கண்ணகி அம்மனுக்கு கோயில்கள் அமைந்துள்ளன.

கண்ணகி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வருகைதந்துள்ளார் என குறிப்பிடப்படும் இடங்களைப் பற்றி பல கருத்துக்களும், எதிர் கருத்துக்களும் உள்ளன என்பது ஆச்சரியப்படத்தக்க விடயமன்று. கண்ணகியானவள் முதலில் இலங்கை மண்ணில் ஜம்புகோளபட்டினத்தில் (தற்போது சம்புத்துறை) காலடி வைத்து, சுதுமலையிலும் (இங்குள்ள  கண்ணகி கோவில் ராஜேஸ்வரி அம்மன் கோவில் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது) மட்டுவிலிலும் (இவ்விடம் பெயர் பெற்ற பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் கோவிலைக் கொண்டுள்ளது) இளைப்பாறிய பின் கிழக்கு நோக்கிச் சென்றுள்ளார் என வடக்கில் உள்ள சில பக்தர்கள் கருதுகின்றனர். வேறு சிலரோ கோவலனால் இரண்டாம் தடவையாக ஏமாற்றப்பட்ட கண்ணகி (அவனது வெட்டப்பட்ட உடலை ஒன்று சேர்த்து தைத்து உயிர்பித்த பின் அவன் மீண்டும் மாதவியின் பெயரை உச்சரிக்க) மனமுடைந்து ஐந்து தலை நாகமாக மாறி இலங்கையில் புகலிடம் கோரி நின்றாள் என நம்புகின்றனர். அவள் முதலில் நயினாதீவினை அடைந்து அங்கிருந்து சீரணி, அங்கனம் கடவை, அளவெட்டி சுருவில் வழியே சென்றாள் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். (இந்த வழியெங்கும் நாக தெய்வங்களுக்கு கோயில் அமைந்திருப்பது ஆச்சரியமே).

இன்னொரு பக்தர் கூட்டம் கண்ணகி முதலில் நயினாதீவிற்கு நாகத்தின் வடிவில் வந்தார் என ஏற்றுக்கொண்டாலும் அதன் பின் கோப்பாய், மட்டுவில், வெள்ளம்பிறை, கச்சாய், நாகர்கோயில், புளியம்பொக்கணை வழியாக வற்றாப்பளையை அடைந்தாள் எனக் கூறுகின்றனர்.

கிழக்கு வாழ் சில பக்தர்கள் அவள் இலங்கை மண்ணில் வந்தாறுமூலையில், அதாவது ‘வந்து இறங்கிய இடம்’ எனப் பொருள்படும் இடத்தில் காலடிவைத்து மக்கள் வாழும் இடங்களின் மத்தியில் உள்ள தலங்கள் அதிக ஆரவாரம் மிக்கதாக இருப்பதாக கண்ணுற்று இறுதியாக கோரவெளி (கிரான்) எனும் இடத்தில் உள்ள காட்டில் குடிகொண்டாள் எனக் கருதுகின்றனர். ஆயினும், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அதிகளவு பக்தர்களும், சமயச் சடங்கு முறைகளைக் கைக்கொள்வோரும் அவள் பத்தாவதாக வருகைதந்த இடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளையே என்பதனை ஒருமித்து ஏற்றுக்கொள்கின்றனர். இந்த நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டுவதாக பத்திப்பளை, பத்தாம் – பத்தாவது என்றும், பளை – இளைப்பாறும் இடம் என்றும்,  வற்றாப்பளை என்பது பத்திப்பளை என்ற மூலப் பெயரின் திரிபு எனும் வாதத்தை முன்வைக்கின்றனர்.

பத்தினி வழிபாடானது இலங்கையில் கி.பி. 2ஆம் நூற்றாண்டு காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது என்பது இலங்கைவாழ் பௌத்தர்களின் நம்பிக்கையாகும். அவர்கள் ‘ராஜவாளிய’ (17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும்) எனும் அரசாட்சி பற்றிய சரித்திர நூலை பல சந்தர்ப்பங்களில் மேற்கோள் காட்டுகின்றனர். அதில், கஜபாகு மன்னன் 12,000 இலங்கை கைதிகளை சோழ அரசிடமிருந்து காப்பாற்றியபோது (மேலும் 12,000 சோழ கைதிகளையும் சிறைப்பிடித்து) அவன் கண்ணகி தெய்வத்தின் இரத்தின சிலம்புகளையும், கோவில் கடவுளரின் முத்திரைகளையும், வலகம மன்னனின் காலத்தில் (1900-48) கொண்டு செல்லப்பட்ட பிச்சைப் பாத்திரத்தையும் கைப்பற்றினான் எனக் குறிப்பிடுகிறது.

சில பக்தர்களும், சமயச் சடங்கு முறைகளைக் கைக்கொள்வோரும் இந்த நிகழ்வினை சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுடன் ஒருங்கிணைத்து கஜபாகு மன்னன் தனது தலைநகரில் கோவில் அமைத்து, சிலம்பினை அங்கு வைத்தான் எனக் கருதுகின்றனர். இவனே பத்தினியை போற்றுதற்காக தலைநகரை சுற்றி சிலம்பை ஊர்வலமாக கொண்டு செல்லும் முதல் பெரஹர நிகழ்வினை ஆரம்பித்தான் என போற்றப்படுகிறான்.

கஜபாகு மன்னன் கண்ணகியின் சிலம்புடன் இலங்கையை ஜம்புகோளபட்டினம் வழியாக வந்தடைந்தான் என்றும், அவனது முதல் தரிப்பிடம் அங்கனம் கடவை என்றும், அங்கே அவன் அவளுக்கு கோவில் அமைத்தான் என்றும் (சுகுமார் 2009, கிருஷ்ணராஜா 2004, இராசநாயகம் 1926, சற்குணம் 1976, சிற்றம்பலம் 2004, சிவசுப்ரமணியம் 2003) ஆய்வாளர்கள் விவாதித்துள்ளனர். இந்த அனுமானத்தை ஆதரிக்கும் விவாதமாக தீவிலே மிகப் பழமையான கண்ணகி கோவில் இங்கேயே அமைந்தும், கஜபாகு மன்னனுடையது எனக் கருதப்படும் மிகப் பிரமாண்டமான அரச சிலை இக்கோயிலை பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டும் உள்ளது. இராசநாயகம் அவர்கள் (1926) ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இந்த சிலை யானை ஒன்றினால் உடைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்திருந்தார். பிற்காலத்தில் பி.இ. பீரிஸ் தெரனியாகல, கோவில் நிலத்தில், தலைப் பகுதியையும் கால் பகுதியையும் கண்டெடுத்து யாழ். நூதனசாலையில் அவற்றை வைப்பித்துள்ளார்.

சார்னி ஜெயவர்தனவால் எடுக்கப்பட்டுள்ள கண்ணகை அம்மன் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.