படம் | EelamView

கடந்த வருடப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தமிழருக்கு முன்னால் தெளிவான, பிரத்தியேகத் தெரிவுகள் இரண்டு இருந்தன. ஒரு புறம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மறு புறத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் அரசியல் எதிர்காலம் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தரிசனங்களை முன்வைத்துத் தேர்தலைச் சந்தித்தன. இரு கட்சிகள் முன்வைத்த இலக்குகளிலும், இலக்குகளை அடைவதற்காக இக்கட்சிகள் தெரிந்தெடுத்த பாதைகளிலும் பாரிய வேறுபாடுகள் இருந்தது. பொதுத் தேர்தற் கால அரசியல் உரையாடல்களில் இம் முரண்பாடுகள் வன் வலுஎதிர் மென் வலுவாகச் சித்தரிக்கப்பட்டது நினைவிருக்கும்.

அப்பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தமிழ் மக்கள் வழங்கிய மகத்தான ஆணை பலரது அரசியல் எதிர்காலங்களுக்குச் சாவு மணி அடித்தது. இதில் குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டமைப்பினுள்ளிருந்த வண்ணமே கட்சியின் அரசியல் பயணத்திற்குக் கெடுதலுண்டாக்கிக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தேர்தல் காலத்தில் மிகத் தெளிவாகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை ஆதரித்து, அவர்களுக்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் வாக்கு வேட்டை நடத்திய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என்போர் முதன்மையானோர்.

கடந்த ஆண்டின் முடிவில் இவர்கள் தம்மோடொத்த நபர்கள் சிலரைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையை ஆரம்பித்தனர். பேரவை தன்னைக் கட்சி அரசியலுக்கப்பால் தமிழரை ஒருங்கிணைக்கும் தளமாக அறிவித்துக் கொண்ட போதும், பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் அரசியல் நிரலையும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்த, வாழ்-நாள் அரசியல்வாதிகளுக்கு பேரவையில் கொடுக்கப்பட்ட முன்னுரிமை அதன் உள்நோக்கங்களை பல மட்டங்களில் கேள்விக்குள்ளாக்கி இருந்தது.

இன்று தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ்ப் பேரணியை நடாத்தி முடித்து மாதம் ஒன்று கடந்தாயிற்று. இந்தப் பேரணியை ஒழுங்குபடுத்தியவர்களின் அரசியல் என்ன? எழுக தமிழ்ப் பேரணியூடாக தமிழ் மக்கள் பேரவை எதைச் செய்யத் தலைப்பட்டது? இவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் எவை?

இக்கேள்விகளுக்குப் பேரணிக்கான முன்னாயத்தங்கள், பேரணி நடந்து முடிந்த பின் அதன் மீதான அரசியல் உரையாடல்கள், கடந்த நான்கு வாரங்களாகத் தேசிய மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் மட்டங்களில் நடந்த சம்பவங்களிலிருந்து விடை தேடுவதற்கான முயற்சியே இந்தக் கட்டுரை.

பின்புலம்: பேரவைப் பெருந்தலைகளும் கொள்கைப் பற்றுதியும்

எழுக தமிழின் அரசியலைப் புரிந்துகொள்ள தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியவர்களின் கடந்தகால அரசியலை அலசுவது பொருத்தம். பேரவைப் பெருந்தலைகள் தமிழ்த் தேசியத்திற்கான தளராத அர்ப்பணிப்பும், கொள்கை உறுதியும் கொண்டவர்களாக விளம்பரம் செய்து கொள்வதில் உண்மைகளேதுமுண்டா?

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் குத்துக்கரணம்

2014ஆம் ஆண்டில் சர்வதேச விசாரணையை உள்ளடக்கிய ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்படவிருந்த நாட்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வழிகாட்டலில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் குறித்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணைக் கூறு இல்லை, இதனால் இத்தீர்மானத்தைத் தமிழர் நிராகரிப்பதாகக் கூறி பலத்த கூச்சல் எழுப்பப்பட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிதானமான ஒத்துழைப்புடன் பூரணமான சர்வதேச விசாரணையை இத்தீர்மானம் ஏற்படுத்தியது. ஆனால், பொன்னம்பலத்தின் குழப்பங்களோ நின்றபாடில்லை; தொடர்ந்து போரினாற் பாதிக்கப்பட்டோரிடம், குறித்த விசாரணையைப் பற்றிப் புரளிகளைக் கிளப்பி வந்தார். கடந்த 2015 செப்டெம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க்காலக் குற்றங்களுக்கான நீதிவேண்டிக் கலப்புப் பொறிமுறையொன்றை நிறுவ ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முயற்சியெடுத்த போது, சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றே வேண்டும் எனக் கோரி கஜேந்திரகுமார் இலங்கையில் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டார். தமிழ் சிவில் சமூகமென்ற பெயரில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருக்கு ‘பாதிக்கப்பட்ட தமிழர் கலப்பு நீதிமன்றத்தினை நிராகரிப்பதாகக்’ குறிப்பிட்டுக் கடிதமொன்று எழுதப்பட்டது. இன்று கஜேந்திரகுமாரும் அவரது தொண்டர்களும் தாங்களே போராடி கலப்புப் பொறிமுறைக்கான தீர்மானத்தைக் கொண்டு வந்ததைப் போலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசோடு சேர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கிடப்பில் போட முயல்வது போலும் ஒலி வாங்கிகளைப் பொருத்தி குற்றச்சாட்டுக்களை ஏவும் போது சிரிப்பதா, அழுவதா எனச் சில கணம் திண்டாட வேண்டியுள்ளது.

நீண்டகாலமாக நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தொடர்ச்சியாகவே சமஷ்டித் தீர்வை முன்மொழிந்து வந்திருக்கின்ற அரசியல் இயக்கங்களில் தமிழரசுக் கட்சி முதன்மையானது. கடந்த பொதுத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சி தனது விஞ்ஞாபனத்தில் தெளிவாகவே ஒன்றுபட்ட இலங்கைக்குள், ஒருங்கிணைந்த வட கிழக்கில் சமஷ்டியாட்சியைத் (federation) தீர்வாக முன்வைத்து மக்கள் ஆணையைக் கோரியது. இத்தேர்தலின் போது பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ ‘ஒரு நாடு, இரு தேசம்’ என்ற சுலோகத்தில் இணைந்த தேசங்கள் (confederation) என்ற ஆட்சி முறைமையைத் தீர்வாக முன்மொழிந்திருந்தது. இன்றோ பொன்னம்பலம் சமஷ்டியே தீர்வென்று முதலமைச்சரோடு கை கோர்த்து பட்டையைக் கிளப்புகின்றார். இது போதாதென்று தனது கட்சி தேசங்களின் இணைப்பைத் தீர்வாக முன்மொழிந்த வரலாற்றை முற்றாக மறுதலித்து வருகின்றார். ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்வாக எதை முன்மொழிந்து வந்ததென்பது தமிழ் அரசியலை அறிந்தவரெவருக்கும் தெரியும். கட்சித் தலைவர் இப்படியிருக்க, கட்சிப் பிரமுகர் விஸ்வலிங்கம் மணிவண்ணனோ தனது முகநூலில் ‘சுதந்திர ஈழக் கனவை நனவாக்க’ எழுக தமிழ் நிகழ்வில் மக்கள் இணைய வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார். இவர்களில் யாரை நம்புவது? எது கட்சியின் உத்தியோக பூர்வ நிலைப்பாடு? நேற்று இணைந்த தேசங்கள், இன்று சமஷ்டி, அப்போ நாளை ஒற்றையாட்சியா? கஜேந்திரகுமாரும், அவரது சிவில் சமூக நண்பர்களும் தமிழரது அரசியல் எதிர்காலம் தொடர்பில் சர்வதேச உதவியுடன் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழரிடம் நடாத்தவிருந்த பொதுவாக்கெடுப்புப் பேச்செல்லாம் இன்றென்னானது?

மக்கள் இந்த நாடகங்களால் மசிந்துவிடவில்லை. கஜேந்திரகுமாரின் அரசியல்  ஞானத்திற்கும், அவரதும் அவரது கட்சிக்காரரது கொள்கையுறுதிக்கும் கடந்த ஆண்டு பொதுத் தேர்தல் பேறுகளே சான்று.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் சுய முரண்நிலை அரசியல்

பேரவையின் மற்றுமொரு பெருந்தலை சுரேஷ் பிரேமச்சந்திரன், பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் ஆசனம் கேட்டு அலைந்தார், நாள் தோறும் அறிக்கைகள் விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளோடு உடன்படாதவர், கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிச் செல்வதாகக் கருதுபவர் ஏன் அதே கட்சியில் ஆசனம் கேட்டு அலைய வேண்டும்? இதுவா பிரேமச்சந்திரனின் கொள்கைப் பற்றின் இலட்சணம்? கட்சித் தலைமை நாடாளுமன்றத்தில் இவருக்கொரு இடம் கொடுத்திருந்தால் அவர் இன்று பேரவையில் இல்லை, பேரவையும் இல்லை.

விக்னேஸ்வரனின் தடுமாற்றம்

நாடாளுமன்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பேணி வந்த மிதவாத அரசியல் நிரலின் மாகாண மட்ட நீட்சியாக சம்பந்தனால் கொண்டு வரப்பட்டவரே முதலமைச்சர் விக்னேஸ்வரன். தெற்கில் நீண்டகாலம் வாழ்ந்தவரும், சிங்களவரோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவருமான இவர் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையில் பாலமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் முதலமைச்சர் வேட்பாளராக்கப்பட்டார். இவரை முதலமைச்சர் வேட்பாளராக்கியதற்கு இன்று இவரைச் சூழ்ந்திருப்பவர்கள் பலரிடமிருந்து பலத்த எதிர்ப்பு வந்தது. இந்தச் சக்திகள் அன்று அவரை மேட்டுக்குடியாளராகவும், தேசியப் பற்றற்றவராகவும் சித்தரித்தன. பலத்த எதிர்ப்புக்களின் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையினதும், உறுப்பினர்களினதும் உழைப்பின் வழியாக 2013 மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகினார். சம்பந்தனது அரசியல் நிரலோடொத்து அரசியல் செய்யவென அழைத்து வரப்பட்ட இவர் அடுத்து வந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்தார். தேர்தலுக்கு ஒரு கிழமை மிஞ்சியிருந்த நிலையில் எந்தச் சந்தேகங்களுக்கும் இடமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சரணாகதி அரசியலைச் செய்வதாகச் சாடினார். தமிழர் தமது தனித்துவத்தையும், சுயநிர்ணய உரிமையையும் உறுதி செய்யும் பொருட்டு தேர்தல் நாளன்று ‘வீட்டுக்குள்’ (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) முடங்கிக் கிடக்காமல் விடியுமுன்பே எழுந்தடித்து தம் ‘பொன்னான’ (கஜேந்திரகுமார் பொன்னம்பலம்) வாக்குகளை வழங்க வேண்டுமெனச் சொல்லி வைத்தார். அத்தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மக்களால் நிராகரிக்கப்பட்டனர். விஜயகலா மகேஸ்வரனுக்கும், ஏன் அங்கஜன் ராமநாதனுக்குக் கிடைத்த வாக்குகளைக் கூட பொன்னம்பலத்தால் சுவீகரிக்க முடியவில்லை. ஆனால், விக்னேஸ்வரனுக்கு ஏனோ இச்செய்தி உறைக்கவில்லை.

கூட்டமைப்பை துரோகிகளாக்க நினைப்போரோடு இணைந்து இன்றும் அவர் மேடையில் நிற்க, அவர் சொல்வதைப் போலவே ‘மக்களோடு மக்களாக வடக்கில் வாழ்ந்து, அவர்களது இன்னல்களைக் கண்டு நெஞ்சம் கலங்கிப்’ பிறந்த ஞானமா காரணம்? மக்களே கூட்டமைப்பைத் தொடர்ச்சியாகத் தெரிந்து வரும் போது, அந்த ஜனநாயக ஆணையை மதித்துக் கூட்டமைப்பின் அரசியற் பயணத்திற்கு உறுதுணையாக நிற்காமல் மாறாக கூட்டமைப்பை எதிர்க்கின்றாரெனின் மக்களை விடத் தனக்கு மக்களின் நிலைமை தெரியுமென்கிறாரா? மேலும், மக்களின் பதைபதைப்பைப் பார்த்து உண்மையிலேயே துடிக்கும் நெஞ்சம் கையிலிருக்கும் அதிகாரங்களைக் கொண்டு செய்ய முடிந்தவற்றைச் செய்திருக்க வேண்டாமா? வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும், தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கெதிராக இவர் முன்னெடுத்த உருப்படியான நடவடிக்கை தான் என்ன? வட மாகாண சபை தான் இயற்றிய ஒவ்வொரு சட்டத்திற்கும் ஒரு நூறு தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றது. மாகாண சபையின் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படாமல் மத்திக்குத் திரும்பியிருக்கின்றது. வட மாகாண முதலமைச்சராகவிருந்து வெற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றியதையும், தென்னிந்திய மீனவர்களின் அரஜாகமான அத்துமீறல்களுக்கு நெம்பு கொடுத்து வந்த ஜெயலலிதாவின் தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை வாழ்த்தி மடல் வரைந்ததையும் விடுத்து, இவர் செய்தது வேறேதுமுண்டா?

ராஜபக்‌ஷ காலத்திலாவது ஒரு கெடுபிடி இராணுவ ஆளுநர் இருந்தார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் வட மாகாணத்திற்கு சிவில் நிர்வாக பின்னணியைக் கொண்ட, ஒத்திசையும் ஆளுநர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னரும் கூட மாகாண சபை இயக்கத்தில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. மாகாண சபையால் மக்களுக்குப் பயனில்லை என்பது முதலமைச்சரது நிலைப்பாடாகவிருந்தால் இன்று வரை முதலமைச்சர் பதவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் என்ன?  தமிழ் மக்கள் பேரவையைத் தொடக்கும் போது இதிலேதும் கூட்டமைப்புக்கெதிரான அரசியல் கிடையாது, தமிழர் அரசியலில் மக்கள் இயக்கமொன்றின் தேவையை உணர்ந்தே இதைத் தொடங்கினோமென்று முதலமைச்சர் தன் வாயாலேயே படித்துச் சொன்னதில் உண்மையேதுமிருந்தால், ஏன் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட தன் வட மாகாண சபை உறுப்பினர்களோடும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடும் இணைந்திந்த மக்கள் இயக்கத்தை ஆரம்பித்திருக்கக் கூடாது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியற் போக்கை எதிர்க்கக் கூடாதென்பதில்லை, எதிர்ப்பவர்கள் ஆகக் குறைந்த பட்சம் அதைத் தெளிவாகவே மக்களிடம் சொல்லி விட்டுச் செய்ய வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் – குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் – உழைப்பின் வினையாகக் கிடைத்த தலைமைத்துவத்திலிருந்து இறங்கி விட்டு, தன் தனித்துவமான அரசியற் திட்டத்தை மக்களிடம் முன்வைத்து மக்கள் ஆதரவைப் பெறவேண்டும். அதை விடுத்து கடந்த பொதுத்தேர்தலில் செய்த நடுநிலைப் பூச்சாண்டி வேலைகளைத் தொடர வேண்டிய அவசியமில்லை. இங்குமிருந்து அங்குமிருந்து, இன்றொரு கருத்து, நாளையொரு கருத்தென விக்னேஸ்வரன் தொடர்ச்சியாகச் செய்தும், சொல்லியும் வருபவை மக்கள் கரிசனையையும், கொள்கை உறுதியையுமா பிரதிபலித்து நிற்கின்றது?

தொடரும்…

இலைஜா ஹூல்