படம் | TransCurrents
பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ப்ரியத் லியனகேவால் எழுதப்பட்டு ‘லங்கா நிவ்ஸ் வெப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது, (தலைப்பு மாற்றப்பட்டுள்ளது).
###
நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பதினாறு ஆண்டுகள் கடந்துள்ளன. படுகொலையாளிக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. எனினும் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் காரணமாக உலகம் முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இன்றியமையாத சேவையொன்றை அவரால் செய்ய முடிந்திருக்கின்றது. மேலும், அவரின் பெயர் தொடர்ச்சியாக பிபிசி நிறுவனத்துக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பிபிசி சேவையின் ஊழியர் ஒழுங்குவிதியிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தில் விடுபட்டிருக்கும் எனக்கு, நடந்தவற்றை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்திருக்கிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து ராவய பத்திரிகைக்கு எழுதிய நிமலராஜன், பிபிசி சிங்கள சேவைக்கும் சுதந்திர ஊடகவியலாளராக அறிக்கையிடல்களை ஆரம்பித்திருந்த வேளையில், வடக்கில் யுத்த நிலைமை தீவிரமாக இருந்தது. சிங்கள சேவை நிர்வாகத்திற்கு பொறுப்பாளராக இருந்த நான் அவரின் பாதுகாப்பு பற்றி பொறுப்புக்கூறவேண்டிய நபராக இருந்தேன். எனினும், நாடுமுழுவதும் பரவியிருந்த நிருபர்களின் பாதுகாப்பு நிமித்தம் ஆலோசனை வழங்குவதைத் தவிர லண்டனிலிருந்து வேறெதுவும் என்னால் செய்ய முடியவில்லை.
ஒருமுறை விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த நான், அக்காலப்பகுதியில் அங்கு நடத்தப்பட்டுவந்த ஹோட்டலொன்றில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து, பயணப் பொதியை அங்கு வைத்துவிட்டு நகரத்திற்குச் சென்று மீண்டும் திரும்பி வந்தேன். அப்போது எனது பயணப் பொதியை எடுத்துக்கொண்டு ஹோட்டலின் முன்னால் நின்றுகொண்ருந்த நிமலராஜன், “சகோதரரே யாழ்ப்பாணத்திற்கு வந்து ஹோட்டல்களில் தங்காதீர்கள். வீட்டுக்குப் போவோம்!” என்று கூறி சைக்கிளில் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நான் அவரைச் சந்தித்த முதலாவதும் – இறுதியுமான சந்திப்பு அதுவாகும்.
யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் அலுவலகத்துக்கு அண்மித்திருந்த வீட்டுக்கு அருகில், இராணுவ சோதனைச் சாவடியொன்றும் நிறுவப்பட்டிருந்தது. நிமலின் வீட்டில் உள்ள நாய்கள் குரைக்கும் சத்தம் அந்த இடத்திற்கு கேட்கும். நிமலின் வீட்டில் இருந்த கிணற்றில் குளித்து, தாய் மற்றும் மனைவி தயாரித்திருந்த இரவு உணவை உண்ட நான், அவர்களின் நலன்புரி தொடர்பில் பொறுப்புடையவராயிருந்தேன். நிமலராஜனின் தலை மீது மூன்று தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அறைக்குள் கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட போது இராணுவ சோதனைச் சாவடிக்கு இவை எதுவும் கேட்காமல் இருக்க வாய்ப்பிருந்திருக்காது, இது தொடர்பில் மெளனமாயிருக்கும் இராணுவம் இந்தப் படுகொலைக்கு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகிறது.
கொலைசெய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர், பிபிசி சந்தேசயவுக்கும் கலாநிதி அர்ஜுன பராக்கிரம தலைமையிலான தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவுக்கும், தீவைச் சுற்றி இடம்பெற்ற தேர்தல் முறைகேடு தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொடுத்திருந்ததும் நிமலராஜன்தான். தேர்தல் மோசடிகளுக்கு பொறுப்புக்கூறவேண்டிய அமைச்சர் டக்ளஸ் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக அதற்கு கி்ட்டிய நாளில் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். உடனடியாக யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறுமாறு நான் கோரியபோது, “சகோதரரரே! நானும் போய்விட்டால் எமது மக்களின் கதைகளை உலகத்திற்குச் சொல்வது யார்?” என்று அவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாதிருந்தேன். அவரின் அர்ப்பணிப்புக்கு என்னுள் ஏற்பட்ட மதிப்பு மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ச்சியாக தகவல்களைப் பெற்றுக்கொண்டு எனது நிகழ்ச்சியை அர்த்தமுள்ளதாக்குவதில் இருந்த சுயநல எண்ணமும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுவதற்கு அவரை தூண்டுவதைத் தடுத்திருக்க காரணமாய் இருந்திருக்கலாம் என்று எனக்கு இப்போது தோன்றுகின்றது.
பிபிசி நிறுவனத்தின் அதிகாரத்துவம், உலகில் சேவையாற்றும் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு நிறுவனத்தின் அடையாள அட்டை வழங்கமுடியாதெனக் கூறி, நிமலராஜனுக்கு பிபிசி அடையாள அட்டை வழங்குவதை நிராகரித்த சந்தர்ப்பத்தில் அதிகாரிகளிடம் கடிந்து கொண்டேன்.
செய்தியொன்றுக்காக 12 பவுண்கள் என்ற மிகச் சிறிய தொகையொன்றை வருமானமாக ஈட்டிய வெளிநாட்டிலுள்ள சுயாதீன ஊடகவியலாளர்கள், அங்கத்துவ கட்டணத்தை செலுத்துவதில்லை என்று அவர்களது போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு பிரிட்டனின் ஊடக தொழிற்சங்கம் முன்வரவில்லை. இறுதியில் சந்தேசயவின் சிரேஷ்ட ஆசிரியர் சந்தன கீர்த்தி பண்டாரவின் தலையீட்டின் பின்னர் ‘ஹரய’ பத்திரிகை அடையாள அட்டை ஒன்றைப் பெற்றுபெற்றுக்கொடுத்தது. பிபிசி தமிழோசை நிமலராஜனின் செய்திகளை அரிதாகவே பெற்றுக்கொண்டது. நிமலராஜனின் தமிழ்மொழி அறிவு மற்றும் உச்சரிப்பின் தரம் தமது ஒளிபரப்புக்கு பொருத்தமானதல்ல என்று அவர்கள் கூறினர்.
தேர்தலில் வெற்றி பெற்ற புதிய அரசாங்கங்கத்தின் பதவிப்பிரமாணம் இடம்பெற்ற 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி அதிகாலை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் முன்னிலையில் பிரதமராக ரட்ணசிறி விக்ரமநாயக்க பதவிப்பிரமானம் செய்துகொண்டதுடன், நீதி அமைச்சராக பெடி வீரகோன் நியமிக்கப்பட்டார். அந்த அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டதுடன், மகாவலி அமைச்சராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டார். புனர்வாழ்வு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டவர் வடக்கில் வெற்றிபெற்ற டக்ளஸ் தேவானந்தா எம்.பிதான். அன்றிரவு நிமலராஜன் படுகொலைக்குக் காரணமாக இருந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் சத்தம் யாழ்ப்பாணத்தின் கொழும்புத்துறை வீதியிலுள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு மட்டுமல்லாது, இந்த குழுவினருக்கும் கேட்டிருக்கவில்லையா? ஊரடங்குச் சட்டம் அமுலுக்குவந்து இரண்டு மணித்தியாலங்கள் கடந்திருந்த நிலையில் துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் கத்தி எடுத்துக்கொண்டு சைக்கிள்களில் வந்த கொலையாளிகளுக்கு (அளுகோசு) சோதனைச் சாவடியை திறந்துவிடுவதற்கு உத்தரவு கிடைத்தது தற்போதைய நல்லாட்சி அரசின் ஸ்தாபகர் (முன்னாள்) ஜனாதிபதி சந்திரிகாவிடமிருந்தா? பிரதமர், மகாவலி அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் அல்லது நீதி அமைச்சர் இது பற்றி கேள்வி எழுப்பியிருக்கவில்லையா? கொலையாளியை நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டுவருவதற்கு அவசியமான தகவல்களைத் தெரிந்து வைத்திருந்தும், நீதியைப் பெற்றுதருவதற்குத் தடையாக இருந்தவர்களும் இன்று நல்லாட்சியில் உயர் பதவிகளை வகிக்கின்றனர்தானே? இவ்வாறான கேள்விகளுக்கு பதிலளிக்ககூடிய பலர் இருக்கின்றபோதிலும், பதில் கிடைப்பதாகத் தெரியவில்லை.
இவ்வாறு இந்த அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்திய கொடூர நெப்போலியன் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்று சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார். ஈ.பி.டி.பி. தலைவர் அமைச்சர் தேவானந்தாவின் பாதுகாப்பாளராக சேவையாற்றிய அவர், ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கைதுசெய்யப்பட்ட போதும், பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
நிமலராஜன் படுகொலைசெய்யப்பட்ட அந்தக் கொடூர இரவில் கத்திவெட்டால் படுகாயத்துக்கு உள்ளான அவரின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கு இரகசியமான தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வழங்குவதற்கு அப்போதைய பிபிசியின் கொழும்பு நிருபர் பிரான்ஸிஸ் ஹெரிசன் மற்றும் சிங்கள சேவையின் எல்மோ பர்ணாந்து ஆகியோரே நடவடிக்கை எடுத்திருந்தனர். கொலையாளிகளைப் பார்த்து அச்சமடைந்த பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்திலுள்ள பதினொரு பேரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க நேர்ந்ததுடன், சாட்சியாளர்களை மெளனமாக்கும் நோக்கில் கழுத்துப் பகுதி வெட்டப்பட்டிருந்த நிலையிலும், உயிர்ப்பிழைத்துக்கொண்ட தந்தை, தலை மீது சுடப்பட்ட மூன்று குண்டுகளுக்குப் பின்னரும் மரணப் போராட்டத்தைக் கைவிடாமல், நிமலராஜன் இருந்த அறைக்குள் வீசப்பட்டிருந்த கிரணைட் குண்டுத் தாக்குதலால் காயமடைந்திருந்த பதினொரு வயது உறவினரின் பிள்ளை மற்றும் கிரணைட் குண்டுத் துகள்களால் காயமடைந்திருந்த நிமலராஜனின் தாய், நினைவிழந்து பெரும் சோகத்திற்கும் – பீதிக்கும் உள்ளாகியிருந்த மனைவி, வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியிருந்த ஐந்து வயதை கடந்திராத குழந்தைகள் மூவருமே இவ்வாறு உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்தவர்கள்.
நிமலராஜன் கொல்லப்பட்ட வாரத்தில் இஸ்ரேலில் ஷெல் தாக்குதலில் உயிரிழந்த பிபிசியின் மத்திய கிழக்கு செய்தியாளரின் சாரதியின் குடும்பத்திற்கு ஆயிரக்கணக்கான பவுண் நட்டஈடு வழங்கப்பட்டபோதும், ஒப்பந்த அடிப்படை இல்லாமல் கடமையாற்றிய நிமலராஜனின் பிள்ளைகள், மனைவி மற்றும் காயமடைந்து அசெளகரிய நிலையிலுள்ள பெற்றோருக்கு நட்டஈடு வழங்கக்கூடிய நிலையில் பிபிசி நிர்வாகம் இல்லை என்று கூறியது. முழு குடும்பமும் மரண அச்சுறுத்துலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களை வெளிநாட்டிற்கு கொண்டுசெல்வதே பாதுகாப்பு வழங்கும் வழிமுறையாக இருந்தது. பிபிசியில் உள்ள உயர் அதிகாரிகளின் ஒவ்வொரு அலுவலகத்துக்கும் சில வாரங்களாக ஓயாது, ஒருமுறை கோபத்துடனும், ஒருமுறை கண்ணீருடனும் அழைந்து மேற்கொண்ட வேண்டுதலின் பலனாக இறுதியில் லண்டனிலிருந்து மேற்குப் பக்கம் 200 மைல்கள் தொலைவில் நிறுவப்பட்டுள்ள பிபிசி பிரிஸ்டல் கிளையின் காப்புறுதி நிதியத்தில் போதுமான நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை பாக்கியமாகும். இதற்கிடையே குடும்ப அங்கத்தவர்களுக்காக விமான பயணக் கட்டணம் பெறுவதற்காக மனித உரிமைகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சந்தன பண்டார, இறுதியாக கொழும்பிலிருந்து கனடா செல்வதற்கு 11 பேருக்கான செலவை மன்னிப்புச் சபை ஏற்றுக்கொள்வதற்கு இணங்கச் செய்திருந்தார்.
நிமலராஜனின் குடும்ப அங்கத்தவர்களுக்காக கனடாவில் வீடொன்றை விலைக்கு வாங்குவதற்கு நட்டஈட்டுப் பணம் போதுமானதாக இருந்தது என நிமலராஜனின் தந்தை என்னிடம் பின்னர் கூறியிருந்தார். பாதுகாப்பு கருதி லண்டனுக்கு அழைப்புவிடுத்தபோதும், தங்களது உறவினர்கள் நண்பர்களுடன் கனடாவில் வசிக்க அதிக விருப்பம் இருப்பதாக அவர் கூறினார்.
பிபிசி உலக சேவைக்குள் ஆங்கிலமொழி மூலமாக பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் வசதிகள், சம்பளம், நிர்வாகம் மற்றும் வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்படுகின்ற வருடாந்த நிதி ஏனைய மொழி சேவையாளர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த அசாதாரணத்தைத் தெரிந்திருந்தும், அதற்கெதிராக தொழிற்சங்கங்கள் போராடவில்லை. இந்த வேற்றுமை மரணித்த சகோதரரின் மரணத்தின்போதும் உணரப்பட்டவேளை நிர்வாகம் மீது எனக்கிருந்த அதிருப்தி மேலும் அதிகரித்தது.
நிமலராஜனுக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இத்தோடு நிறுத்தப்படக்கூடாது என்று புரிந்துகொண்ட போதிலும், பெரிய நிறுவனத்துக்குள் இருந்த மிகவும் சிறிய பிரிவின் முகாமையாளர் ஒருவர் தனியாக போராட்டத்தை முன்னெடுப்பதென்பது கசப்பான தொழில் வாழ்க்கையின் ஆரம்பமாகும். இந்தப் போராட்டம் நிமலராஜனின் போராட்டமாகும்.
உலகமெங்கும், தாய்மொழியில் பிபிசிக்கு செய்தி வழங்கும் அனைத்து சுதந்திர ஊடகவியலாளர்களுக்கும் ஒப்பந்தம் அடிப்படையில் கடமையாற்றுவதற்கும், காப்புறுதி பாதுகாப்பு பெற்றுக்கொடுப்பதற்கும் கொலைசெய்யப்பட்ட நிமலராஜன் தனது சகாக்களுக்கு வென்று கொடுத்த முதல் உரிமையாகும்.
இலங்கையிலிருந்து பிபிசிக்கு செய்தி வழங்கும் அனைத்து செய்தியாளர்களின் வீடுகளும் பாதுகாப்பானதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக லண்டனிலிருந்த பாதுகாப்பு விசேட நிபுணர் ஒருவரை அனுப்பி, அந்தந்த வீடுகளுக்காக அவர் முன்வைத்த பரிந்துரைகளுக்கமைய மேலதிக நிர்மானங்களுக்கான அனைத்து செலவுகளையும் பிபிசி பெற்றுக்கொடுக்கும் வகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது நிமலராஜன் பெற்றுக்கொண்ட மற்றொரு வெற்றியாகும்.
10 இலட்சம் பிரிட்டன் பவுண் செலவில் லண்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்ட பிபிசியின் புதிய தலைமையக கட்டடத்தின் 5ஆவது மாடியில் பிரதான கூட்ட அறைக்காக பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது ‘மயில்வானம் நிமலராஜன்’ இன் பெயரை பரிந்துரைக்க எம்மால் முடிந்தது.
கூட்டத்துக்காக தினமும் இந்த அறையை ஒதுக்கும் பல்வேறு பதவிகளிலுள்ள பிபிசி சேவையாளர்கள், அந்தக் கூட்டங்களில் பங்குபெறுபவர்கள் தட்டுத்தடுமாறி இந்த நீண்ட தமிழ்ப் பெயரையே உச்சரிக்கிறார்கள்.
புதிய தலைமையகத்திலிருந்து வான் நோக்கி உயர்ந்திருக்கும் கோபுரத்திலும் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.
பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சிறிய அறைக்குள் கொடூரமான முறையில் அவர் கொல்லப்படுவதிலிருந்து விடுவித்து, அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்த நான், அதிலிருந்து தவறிய குற்றச்சாட்டை ஏற்கிறேன்.
ஜனாதிபதி, அமைச்சர்கள், இராணுவம், பொலிஸ், ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட பல சக்திகள் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதியும், அதன் பின்னரும் இடம்பெற்ற கொலை முயற்சிகளுக்கு பங்காளிகளாயுள்ளனர்.
ஆனால், மயில்வாகனம் நிமலராஜனை கொலைசெய்வதற்கு அவர்களால் முடியாதுபோயுள்ளது.