படம் | South China Morning Post

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அடங்கலாக கடற்படை தளபதிகள் மூவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியின் அதிருப்தியும், கண்டிப்பும் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் குற்றவாளிகளைக் கொண்டு செல்லுதல், இழுத்துக்கொண்டு செல்லுதல் போன்று (ஜனாதிபதியினால்) குறிப்பிடப்படுவது சட்டத்தை மதிக்காத தன்மையையே காட்டுகிறது, இது சட்டத்திற்கு அரசியல் அழுத்தங்களை பிரயோகிப்பது போன்றதாகும். பலம்படைத்தவர்கள் மற்றும் தமக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தும் போது அதனை எதிர்ப்பது இலங்கை அரசியலில் புதிய விடயம் அல்ல. ராஜபக்‌ஷக்களின் பிடியில் நாடு இருந்த காலத்தில் அது விசேடமாக இடம்பெற்றது. தற்போது புதிய ஜனாதிபதிக்கும் பழைய நோய் தொற்றிக்கொண்டிருக்கின்றது என்பது அவரின் கருத்து மூலம் தெளிவாகியுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், தற்போதுள்ள பாதுகாப்பு செயலாளர், அமைச்சர், அப்படியில்லையென்றால் வேறு உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் நாட்டின் நீதித்துறைக்கு எதிராக செயற்படுவார்களேயானால் பாராமுகமின்றி அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வரவேண்டியது அது தொடர்பான நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் உள்ள அதிகாரிகளின் கடமையாகும். அதற்கு ஜனாதிபதி அழுத்தம் கொடுப்பாராகவிருந்தால் அது அரசியல் தலையீடே ஆகும். ஜனாதிபதி சிறிசேனவின் யோசனைப்படி அரசியலமைப்புக்கமையவே குறித்த நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர் அந்த நிறுவனங்களுக்கும் மற்றும் அதன் அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்றார். இவ்வாறான அச்சுறுத்தல் அரசியலுக்கு நமது நாடு பழக்கப்பட்டுள்ளது. அது கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் அரசியலாகும். அன்று அவர்களுக்கு எதிராக யாரேனும் அரசியல் செய்திருந்தால் மற்றும் அவர்களின் ஊழல்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பியிருந்தால் பகிரங்கமாகவே அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கும், விடுக்கப்பட்டிருந்துமிருக்கும். அதுமட்டுமல்லாமல், சிலர் காணாமலாக்கப்பட்டனர், இன்னும் சிலர் நாட்டை விட்டு செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இன்று ஜனாதிபதி அன்றுபோலவே ஆரம்பித்துள்ளார். இந்த நிலைமையை சிவில் சமூகம் அடங்கலாக அரசியல் சக்திகள் உடனடியாக எதிர்க்க வேண்டும்.

ஆரம்பத்தில் சிறியளவில் தொற்றும் மன நோய்க்கு உடனடியாக சிகிச்சையளிக்காவிட்டால் அந்த நோய் தீவிரமடையும். அதன் பின்னர் சிகிச்சையளித்தாலும் நோயைக் குணப்படுத்த முடியாத நிலைமை ஏற்படும். இராணுவ அதிகாரிகள் மீது வழக்குகள் தொடரப்படாது சிறைகளில் இருப்பது தொடர்பாகவே ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். இந்த நாட்டில் வழக்குகள் தொடரப்படாது எத்தனை பேர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? தமிழ் அரசியல் கைதிகளில் எத்தனை பேர் 7-8 அல்லது 10 வருடங்களாக வழக்குகள் எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? ஜனாதிபதிக்கு வேதனையாக இருப்பது குற்றச்செயல்களின் பங்குதாரர்களான இராணுவ அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மட்டுமா?

ஜனாதிபதிக்கு, தன்னையே மறந்துபோயுள்ளது என்பதனை அவரின் கருத்து மூலம் வெளிப்படுகின்றது. அன்று ஜனவரி 8 தானும் தனது குடும்பத்தாரும் குருணாகலில் தனது நண்பர் ஒருவரின் வீட்டில் ஒழிந்திருந்ததாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஒருசில நேரம் தேர்தலில் தோற்றுப்போயிருந்தால் தானும் தன்னுடைய குடும்பத்தாரும் 6 அடி மண்ணுக்குள் போயிருப்போம் என தெரிவித்திருந்தார். அவருக்கு இருந்த மரண அச்சுறுத்தல் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் ஏற்பட்டதா? இல்லை. அன்று அவருக்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மூலமாகவா உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது? அந்த அச்சுறுத்தல் கோட்டாபயவின் கொலையாளி குழுக்களிடமிருந்தும், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்திடமிருந்துமே வந்தது. அப்படியாயின் அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவர்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகளா குற்றவாளிகள்? அவ்வாறு குற்றம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தும், நாட்டின் சட்டத்தை செயற்படுத்த முயற்சிக்கும் அதிகாரிகளுக்கு அதனை செய்வது தொடர்பாக குற்றஞ்சாட்டும், கடுமையாக அச்சுறுத்தல் விடுக்கும் ஜனாதிபதி இன்று செய்வது அன்று மஹிந்த செய்ததைத்தானே?

பிரகீத் எக்னலிகொட இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது உலகத்திற்கே தெரியும். அது இராணுவ புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது என்பது தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்துவது தவறா? லசந்த கொலை அல்லது தாஜுதின் கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள் குற்றவாளிகளா? ஜனாதிபதியின் இந்த குழந்தை தனமான பேச்சு கூறுவது குற்றவாளிகள் தொடர்பாக தேடும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவர முயற்சிக்கும் அதிகாரிகள் குற்றவாளிகள் என்றா?

கடந்த தினங்களில் நாமல் ராஜபக்‌ஷவின் பாட்டியின் காணியை அளவிடுவது தொடர்பாக அவர் ஊடகங்களில் பேசினார். நாடுபூராகவும் கோடி கணக்கிலான சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாகியுள்ள, கோடி கணக்கில் முறையற்ற வகையில் சொத்துக்களுக்கு உரிமையாளர்களாகிய ராஜபக்‌ஷக்கள் தொடர்பாக விசாரணை நடத்துவது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு செய்யும் குற்றமா? இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, எப்.சீ.ஐ.டி. ஆகிய நிறுவனங்களினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் காரணமாகவே ராஜபக்‌ஷக்களினால் நாட்டில் கொள்ளையடித்து தின்றவற்றில் ஒரு பகுதியாவது வெளிவந்திருக்கின்றது. இது தவிர ஜனாதிபதி அடங்கலாக அரசியல் தலைமைத்துவம் நாட்டில் பெரிதாக எதனையும் செய்யவில்லை என்பதனை நாம் அறிவோம். ஓரளவேனும் நாட்டில் ஏதேனும் நடந்தமைக்கும் சட்டம் சீர்குலைந்திருந்த நாட்டை சட்டத்தின் ஆட்சி பாதையில் கொண்டு செல்வதற்காக அடித்தளமிட்டமைக்கும் இந்த நிறுவனங்களும் அதன் அதிகாரிகளின் செயற்பாடுகளுமே காரணமாகும். ஜனாதிபதிக்கு இது தொடர்பாக வேதனை இருக்குமாயின் அது பழைய பழக்கத்திலானதாக இருக்க வேண்டும். ஆனாலும், இந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் மூலம் வெளிவரும் ஊழல், மோசடிகள் மற்றும் கொலைகள் தொடர்பான தகவல்கள் வெளிவருவது குறித்து நாட்டு மக்களில் அதிகமானோர் மகிழ்ச்சியடைகின்றனர்.

தனக்கு தலைமைத்துவத்திற்கு வர இடமளிக்காமை தொடர்பான தனிப்பட்ட குரோதமே மஹிந்த ராஜபக்‌ஷ மீது ஜனாதிபதிக்கு இருந்திருக்கலாம். ஆனால் எமக்கு, நாட்டு மக்களுக்கு இருந்த பிரச்சினையோ வேறு. நாட்டின் சொத்துக்களை தமது தனிப்பட்ட சொத்துக்களை போன்று மாற்றியமைத்து, தமது பேச்சை நாட்டின் சட்டமாக மாற்றியமைத்து, நாட்டு மக்களை தமது அடிமைகள் போன்று கருதி, மனித உரிமைகளை மிதித்து அதன்மேல் அமர்ந்து பகுதியளவில் பாசிசம், தான்தோன்றித்தனமான ஆட்சியை நாட்டில் நடத்தியமை தொடர்பாகவும் ஆட்சியாளர்களின் பிள்ளைகள் இராஜகுமாரர்கள் போல் நடந்துகொண்டமைக்கு எதிராகவுமே எமது எதிர்ப்பு இருந்தது (சிலவேளை தஹம் சிறிசேன நடந்துக்கொள்வதும் அவ்வாறாக இருக்கலாம்). ஜனாதிபதிக்கு இருக்கும் வேதனையோ மனித உரிமைகளை மீறிய குற்றச் செயல்களின் பங்குதாரர்களான அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவது தொடர்பானதே. மனித உரிமைகளை மீறிய குற்றச் செயல்களின் பங்குதாரர்கள் என்ற காரணத்தினால் இராணுவம் மற்றும் பொலிஸ் சேவைகளில் உயர் அதிகாரிகள் சட்டத்தின் முன் கொண்டுவருவது தொடர்பாக எதிர்க்கப்படுகின்றது.

மனித உரிமைகள் எனப்படுவது மக்கள் உரிமைகள் என்பதை ஜனாதிபதி மறந்துவிடுகிறார். தங்களுடைய உரிமைகளை இழந்த நாட்டில் வசிப்போருக்கு அந்த நாடு சிறைச்சாலையே, அது அவர்களுக்கு சுதந்திரமான நாடு அல்ல என்பதனை அவருக்கு மீண்டும் நாட்டு மக்கள் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. அன்று ஜனவரி 8 ராஜபக்‌ஷ கும்பலுக்கு மக்கள் கூறியது அதுவே, அதன்மூலம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார் என்பதும் அவருக்கு மறந்துபோயுள்ளது. மீண்டுமொரு மஹிந்த அவரிடத்தில் உருவாகிவிடக்கூடாது என்பதற்காகவே மக்கள் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள் என்பதை அவர் அறியாமலில்லை. மக்கள் சக்திகள் உடனடியாக ஓரணியில் இணைந்து இவ்வாறான போக்குடைய அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட வேண்டுமென்பதையே ஜனாதிபதியின் இந்தக் கருத்து வெளிப்படுத்துகின்றது.

ஊழல்கள் மற்றும் குற்றச் செயல்களை அம்பலப்படுத்துவது நல்லாட்சியின் ஆரம்பப்படி என்பதை ஜனாதிபதி அறிந்திருக்காவிட்டால் அவருக்கு அது தொடர்பாக சொல்லிக்கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், அன்று மஹிந்த மற்றும் அவரின் நண்பர்கள் பின்பற்றிய அச்சுறுத்தல் அரசியல் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதன் மூலம் நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகிறது. சட்டம் யாருக்கும் ஒன்றாகவும் மற்றும் சமமானதாகவும் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் சட்டத்தில்  தலையிடக்கூடாது என்பது ஜனாதிபதி மைத்திரிக்கும் செல்லுபடியாகும்.

ජනාධිපතිටත්, මහින්දගේ රෝගයම වැළදෙමින් පවතීද?ரஞ்சித் ஹேனாயக்க ஆரச்சி எழுதி ‘விகல்ப’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.