கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள தனது கணவரை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன் மூன்று பிள்ளைகளின் தாயான மயூரி இன்று காலை போராட்டத்தில் குதித்துள்ளார். கணவர் காணாமல்போனமை குறித்து ஜனாதிபதி அல்லது பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமொன்றைத் தருமாறு கோரி அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அநுராதபுரம் புதிய பஸ் நிறுத்தும் இடத்தில் பழக்கடை ஒன்றை நடத்தி வந்த மயூரியின் கணவரான மதுஷ்க ஹரிஸ் த சில்வா 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி கடத்திச் செல்லப்படுகிறார். நண்பர்கள் இருவருடன் முச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்தபோது வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோரால் மூவரும் கடத்தப்படுகின்றனர். நண்பர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட அன்றிலிருந்து இன்று வரை மதுஷ்கவைக் காணவில்லை.
மதுஷ்கவை தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி மயூரி சிவில் அமைப்புகளுடன் இணைந்து கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடத்தியிருந்தார். அனுராதபுரம் நீதிமன்றம், பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் இரு பிள்ளைகளுடன் மயூரி தனது கணவரை மீட்டுத்தருமாறு போராடினார். இருப்பினும், இலங்கை நீதிமன்றமோ, பொலிஸோ மயூரியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. கடந்த காலம் இந்த இரு துறைகள் அந்தளவுக்கு மோசமானதொரு நிலையில் இருந்ததற்கு இதுவும் ஓர் உதாரணமாகும்.
இருப்பினும், 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர் மயூரிக்கும் அவரோடு இணைந்து போராடியவர்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. அந்த எதிர்பார்ப்புடன் 2015 மார்ச் மாதம் தனது பிள்ளைகளுடன் நேரடியாக ஜனாதிபதிக்கு தனது கணவர் குறித்த விடயத்தை தெரிவிக்க ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் கணவரின் படத்துடன் அமர்ந்திருந்தார். அதன் பின்னர் இதுவரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் காரியாலயத்திலிருந்து கடிதங்கள் வருகின்ற போதிலும், அந்தக் கடிதங்களில் தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று மயூரி கூறுகிறார்.
கணவர் கடத்தப்பட்டு 1010 நாட்கள் கடந்த நிலையில் ஜூன் மாதம் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் நீதிகோரி மயூரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அன்று ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் தங்களது வழமையான பதிலை மயூரிக்கும் வழங்கியிருந்தனர். “இன்னும் ஒருவார காலப்பகுதியில் அறியத்தருகிறோம்” என்று கூறியிருந்தனர்.
இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் ஜனாதிபதியிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.
“போராட்டத்தில் குதித்த நேரத்திலிருந்து இதுவரை ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், பொலிஸார் என்னை வந்து சந்தித்துப் பேசினர். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், அதிகாரி, எஸ்.எஸ்.பி ஆகியோரைச் சந்திக்க வருமாறு அவர்கள் வந்து கூறினார்கள். நான் மறுத்துவிட்டேன். அவர்களிடம், ஜனாதிபதியைச் சந்திக்கவேண்டும் என்று உறுதியாகக் கூறினேன். தொடர்ந்து நான் ஏமாறத் தயாரில்லை. தொடர்ந்து என்னிடம் பொய்தான் கூறிவருகிறார்கள். நான் ஜனாதிபதியைத்தான் சந்திக்க வேண்டும்.”
கடத்தப்பட்ட கணவனை மீட்டுத்தருமாறு மயூரி @MaithripalaS செயலகம் முன் ஆர்ப்பாட்டம் #lka #srilanka pic.twitter.com/2nxVNyVGaK
— மாற்றம் (@MaatramSL) September 1, 2016
இரண்டு சிறுவயது பிள்ளைகளுடன் நாளை காலை வரை பாதையில் உட்கார்ந்திருக்கும் மயூரிக்கு ஜனாதிபதி பதில் அளிப்பாரா? பிரஜைகளின் குரலுக்கு செவிகொடுப்பதாகக் கூறிக்கொள்ளும் ஜனாதிபதி மயூரியின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துவாரா?