படம் | @Garikaalan

தமிழ் பேச்சு வழக்கில் ஒரு ஒரு சொற்தொடருண்டு. அதாவது, கேட்பவர் கேனயன் என்றால் எலி ஏரப்பிளேன் ஓட்டுமாம். அவ்வப்போது சில தமிழ் அரசியல் தலைவர்கள் உதிர்த்துவரும் வார்த்தைகளை கேட்கநேரும் போதெல்லாம் மேற்படி பேச்சுவழக்கே நினைவுக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள – தமிழ் மாணவர்களுக்கிடையில் மோதலொன்று இடம்பெற்றது. இது இலங்கைக்கு புதிய விடயமல்ல. இது போன்று தென்பகுதியிலுள்ள பல்கலைக்கழங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது தமிழ் மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களிலெல்லாம் அதற்கு பின்னால் ஒரு சக்தியிருப்பதாகவோ அல்லது அதற்கு பின்னால் ஒரு அரசியல் நிகழ்ச்சிநிரல் இருப்பதாகவோ தமிழ் தலைவர்கள் கூறியதாக நினைவில்லை. ஆனால், சில தினங்களுக்கு முன்னர் யாழ். பலக்லைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் மோதல் உடனடியாக அரசியல் மயப்படுத்தப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் முடிவுகளை தீர்மானிப்பவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மேற்படி சம்பவம் ஒரு திட்டமிட்ட செயற்பாடென்றும், நாட்டில் இடம்பெறவுள்ள முற்போக்கான விடயங்களை குழப்ப முற்படும் சக்திகளே, குறிப்பாக ஆட்சியிலிருந்து விரப்பட்டவர்களே இதற்கு பின்னாலிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதாவது, மஹிந்த ராஜபக்‌ஷவே யாழ். பல்கலைக்கழக மோதலை திரைமறைவிலிருந்து இயக்கியிருக்கின்றார்.

இவ்வாறானதொரு விளக்கத்தை சில தினங்களுக்கு முன்னர் சம்பந்தன் தெரிவித்தபோது, அதனை செவிமடுத்துக் கொண்டிருந்தவர்களில் இப்பத்தியாளரும் ஒருவர். கடந்த 17ஆம் திகதி மன்னாரில் “தடம்மாறுகிறதா தமிழ் தேசியம்” என்னும் தலைப்பில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இன்றைய நிலையில் வடக்கு கிழக்கை தளமாகக் கொண்டியங்கிவரும் முன்னணி கருத்துருவாக்கிகள், ஆய்வாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் பலரும் இதில் பங்குகொண்டிருந்தனர். கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் பங்குகொண்டிருந்தனர். நீண்ட காலத்திற்கு பின்னர் தமிழ் தேசிய நிலையில் இயங்கிவரும் அரசியல் சிந்னையாளர்களும் கூட்டமைப்பின் தலைவர்களும் நேரடியாக உரையாடிக்கொண்ட நிகழ்வாக மேற்படி சந்திப்பை குறிப்பிட முடியும். முக்கியமாக நேரடியாகவே தலைவர்களை முக்கியமாக சம்பந்தனை நோக்கி கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், அப்படியானதொரு இடத்தில் கூட சம்பந்தன் தனது அரசாங்கத்தின் மீதான பாசப்பிணைப்பை விட்டுக்கொடுக்கவில்லை. திருகோணமலையின் சாம்பல்தீவு என்னுமிடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதையும், அதனால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்திகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு சம்பந்தன் இவ்வாறு பதிலளித்திருந்தார் – அது தொடர்பில் அரசாங்கத்தின் மீது சந்தேகம் கொள்ளக் கூடாது. அதற்கு அரசாங்கம் பொறுப்பல்ல. அது வேறு ஒரு சக்தியின் வேலை. சில சக்திகள் குழப்ப முற்படுகின்றன என்று குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, தனதுரையில் சம்பந்தன் புதிய விடமொன்றையும் குறிப்பிட்டிருந்தார். அதாவது, யுனிட்டறி பெடரலிசம் என்னும் ஒன்று பற்றியும் இப்போது புதிதாக பேசப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சந்திப்பின் போது பேசிய பலரும் ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு பற்றி ரணில் பேசிவருவது தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தனர். குறிப்பாக வடக்கு – கிழக்கு இணைப்பை உள்ளடக்கிய சமஷ்டிக் கட்டமைப்பின் கீழான அரசியல் தீர்வு தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தனர். அவ்வாறான அனைவருக்கும் சம்பந்தன் வழங்கிய பதில் ஒன்றுதான் – அதாவது, ‘யுனிட்டறி பெடரலிசம்’. அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டுமென்பதற்காக சம்பந்தன் தனது மதிநுட்பம் கொண்டு கண்டுபிடித்ததுதான் – யுனிட்டரி பெடரலிசம்.

இப்போது மீண்டும் பல்கலைக்கழக மாணவர் விவகாரத்திற்கு வருவோம். யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் மோதல் தொடர்பில் முறையான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை. இதிலுள்ள வேடிக்கையான விடயம் மோதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மூன்று தமிழ் மாணவர்களே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவ்வாறாயின் இதற்கு பின்னாலிருக்கும் சக்தி தமிழ் மாணவர்களை பயன்படுத்தியா குழப்பங்களை ஏற்படுத்த முற்படுகின்றது? ஒருவேளை, அந்தச் சக்தி சிங்கள மாணவர்களைப் பயன்படுத்தி குழப்பங்களை விழைவிக்க முற்பட்டிருந்தாலும் கூட, அதற்காக பலியாவதும் தமிழ் மாணவர்கள்தானா? இந்த இடத்தில் நீங்கள் ஆரம்பத்தில் வாசித்த அந்த பேச்சுவழக்கை நினைத்துக் கொள்ளலாம்.

உண்மையில் இந்த விடயத்தை வெறுமனே பல்கலைக்கழக்கத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான மோதலாக மட்டுமே பார்த்திருக்க வேண்டும். அதற்கான காரணங்களை கண்டறிவதற்கு முற்பட்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து விடுத்திருக்கும் அறிக்கை கனதியானது. அவர்கள் கோரியிருப்பது போன்று ஒரு முறையான விசாரணையை மேற்கொள்வதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இது போன்ற மோதல்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதை தடுக்க முடியும். அதனைவிடுத்து வெறுமனே நாங்கள் சிங்கள மாணவர்களை வரவேற்கிறோம். அவர்கள் வர வேண்டும் என்று குறிப்பிடுவதில் பொருளில்லை. இவ்வாறான வெறும் வார்த்தைகளால் இருதரப்பு மாணவர்கள் மத்தியிலும் நம்பிக்கையை உருவாக்க முடியாது. தமிழ்த் தேசியவாத கருத்துநிலையின் திரட்சியில் யாழ். பல்கலைக்கழக்கத்திற்கு ஒரு தனியிடமுண்டு. எனவே, அவ்வாறானதொரு பல்கலையில் கற்கும் தமிழ் மாணவர்கள் இயல்பாகவே எதிர்ப்பரசியல் கருத்துநிலைக்கு உட்பட்டவர்களாகவே இருப்பர். இவ்வாறானதொரு சூழலில் திடீரென்று சிங்கள மாணவர்கள் அங்கு தங்களின் தனித்துவம் என்னும் பெயரில் செயலாற்ற முற்படும் போது, அதனை தமிழ் மாணவர்களால் உடனடியாக ஏற்றுக்கொள்வது இயலாத காரியமாகவே இருக்கும். மேலும், யாழ். பல்கலைக்கழகத்தில் கற்கும் தமிழ் மாணவர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இதனை முதலில் அரசாங்கம் புரிந்துகொள்ள முற்பட வேண்டும். கூடவே அரசாங்கத்தை காப்பாற்ற முனைவோரும் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறில்லாது இந்த விடயத்தை மேலோட்டமாக அனுகினால் எதிர்காலத்தில் இது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் குழப்புதல் என்னும் சொல்லும், குழப்பாதீர்கள் என்னும் சொல்லுமே சம்பந்தன் அடிக்கடி உச்சரிக்கும் சொற்களாக இருக்கின்றன. நான் மேலே குறிப்பிட்ட கூட்டத்திலும் நாங்கள் குழப்பக் கூடாதென்று அழுத்திக் குறிப்பிட்டார். அதாவது, அரசாங்கம் எதனையும் செய்யாவிட்டாலும் கூட நாங்கள் அமைதியாகவே இருக்க வேண்டும்! வடக்கு கிழக்கில் புத்தர் சிலைகளை வைக்கலாம், காணிகளை பிடிக்கலாம், கைதுகளைத் தொடராலாம். ஆனால், அவை பற்றி தமிழர் தரப்பு எதுவும் பேசக் கூடாது. அவ்வாறு பேசினால் நிலைமைகள் குழம்பிவிடும். மஹிந்த புகுந்துவிடுவார். இதுதான் சம்பந்தனதும் அவரது தரப்பினதும் அரசியல் வகுப்பு. உண்மையில் சம்பந்தன் கூறுவது போன்று தமிழர் தரப்பு அமைதியாக இருந்தாலும் கூட, மஹிந்த குழப்பாமல் இருக்கப் போவதில்லை. மஹிந்த மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு தன்னாலியன்ற அனைத்தையுமே செய்வார். அதில் ஆச்சிரியம்படவும் எதுவுமில்லை. மஹிந்த மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக சூழ்ச்சிகளை மேற்கொள்வாராயின் அதனை எதிர்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் பணி. உதாரணமாக பல்கலைக்கழக சம்பவதற்கு பின்னால் சில சக்திகள் இருந்திருப்பது உண்மையெனின் ஒரு விசாரணையின் மூலம் அவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும். அதனை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால், அவ்வாறானதொரு கடமை அரசாங்கத்திற்கு உண்டு என்பதை தமிழர்கள் எதிர்பார்க்கக் கூடாது என்பதே சம்பந்தனின் வாதமாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் இப்பத்தி ஒரு கேள்வியை முன்வைக்கிறது – சம்பந்தனின் பிரதான பணி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதா அல்லது அரசாங்கம் எந்தவொரு நெருக்கடியையும் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக பணியாற்றுவதா – எது சம்பந்தனின் பணி?

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டது. இந்த ஒன்றரை வருடங்களில் தமிழ் மக்களிடம் பறித்தெடுத்த காணியில் 3,000 ஏக்கரை அரசாங்கம் திருப்பி வழங்கியிருக்கிறது. அதிலும் 1.200 ஏக்கர் காணி ஏற்கனவே மஹிந்தவால் விடுவிப்பதாக உறுதியளிக்கப்பட்ட காணி. இவ்வாறானதொரு நிலையில்தான் சம்பந்தன் எந்தவொரு விடயம் தொடர்பிலும் அரசாங்கத்துடன் அதிர்ந்து பேசக் கூடாது என்கிறார். ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான தமிழ் அரசியல் என்பது ஒரு காயடிக்கப்பட்ட அரசியல்தான். ஆனால், அரசாங்கமோ தெளிவாக இருக்கிறது. அது மஹிந்த என்னும் பூச்சாண்டியை காண்பித்தே எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொள்ள முற்படுகிறது. அரசியல் யாப்பு விடயத்திலும் மஹிந்த பூச்சாண்டியை காண்பித்து தாங்கள் விரும்பும் எல்லாவற்றையுமே தமிழ் தரப்பின் அனுசரனையுடன் மேற்கொள்வர். அப்போதும் ஒரு குரல் ஒலிக்கும் – நாங்கள் குழப்பக் கூடாது. நாங்கள் அதிர்ந்து பேசினால் மஹிந்த விழித்துக் கொள்வார். இது மஹிந்த இந்த நாட்டில் இருக்கும் வரையல்லாவா தொடர முடியும்! ஒருவேளை மஹிந்த இல்லாவிட்டால் மஹிந்தவிற்கு பதிலாக கோட்டாபய இருப்பார். விடயங்கள் அனைத்தையும் தொகுத்து நோக்கினால் ஒன்று மட்டுமே வெள்ளிடைமலை. அதாவது, தமிழர்கள் தருவதை பெற்றுக்கொள்ள வேண்டியவர்களே தவிர, அவர்கள் தங்களின் தேவைகள் தொடர்பில் பேசக் கூடாது. அப்படி பேசினால் மஹிந்த வந்துவிடுவார். அரசாங்கத்துடன் ஆரோக்கியமான வகையில் ஊடாடுவது தொடர்பில் இப்பத்தி குறைகூறவில்லை. அது அவசியமானதும் கூட. ஆனால், அந்த ஊடாடல் தமிழ் மக்களின் நலன்களை கைகழுவிவிடுவதாகவோ அல்லது அதற்கான வாய்ப்பை அரசாங்கத்திற்கு வழங்குவதாகவோ இருக்கக் கூடாது.

யதீந்திரா எழுதிய இக்கட்டுரை முதலில் தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.