படம் | WIKIMEDIA

பல்லாயிரக்கணக்கான உயிர்களின் பலியிடலால் உருப்பெற்ற தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று அத்தனை இழப்புக்களையும் கேவலப்படுத்துவாத தன்னை வெளிப்படுத்திவருகிறது. வெறும் தன்முனைப்பு வாதங்களுக்குள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக அண்மைய நாட்களாக இடம்பெற்றுவரும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான விவாதங்களைச் சுட்டிக்காட்டலாம். வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கருத்துக்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, அதற்கு பொருத்தமான இடம் எது என்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தன. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஓமந்தையை சிபாரிசு செய்திருந்தார். ஆனால், கொழும்பின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் அவருடன் இணைந்து நிற்கும் தரப்பினர் தாண்டிக் குளத்தை சிபாரிசு செய்திருந்தனர். இந்தப் பின்னணியில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஓமந்தையா – தாண்டிக்குளமா என்னும் பட்டிமன்றம் ஆரம்பமாகியது. வழமைபோல் எதுவிதமான அசைவுமற்றிருந்த சம்பந்தரோ, மேற்படி பட்டிமன்றம் ஊடகங்கள் மத்தியில் பேசுபொருளானதைத் தொடர்ந்து வழமைபோலவே தன்னுடைய வார்த்தைகளை தனக்கே உரித்தான தந்திரோபாயத்துடன் உதிர்த்திருந்தார். அதாவது, ஓமந்தை அணியின் வாதம் சரியானதா அல்லது தாண்டிக்குளம் அணியின் வாதம் சரியானதா என்பதை ஜனநாயக ரீதியில் தீர்த்துக் கொள்ளலாமென்பதே சம்பந்தனின் ஆலோசனையாக இருந்தது. இதனடிப்படையில் மேற்படி விவகாரம் முதலமைச்சரின் தலைமையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதன்போது முதலமைச்சரின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக 18 மாகாண சபை உறுப்பினர்களும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். வெறும் 5 பேர் மட்டுமே தாண்டிக்குளத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். 14 பேர் வாக்களிப்பில் பங்குகொண்டிருக்கவில்லை.

ஆனால், இதிலுள்ள முரண்நகையான விடயம் என்னவென்றால், சம்பந்தனின் ஜனநாயக கோரிக்கையை தமிழரசு கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்திருக்கின்றனர்! நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சிவமோகன் ஆகியோர் மட்டுமே தமிழரசு கட்சியின் சார்பில் வாக்களித்திருக்கின்றனர். இதில் சிறிதரன் ஓமந்தைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார். தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூட வாக்களிப்பில் பங்குகொண்டிருக்கவில்லை. அவ்வாறாயின் சம்பந்தனின் கோரிக்கைக்கு தமிழரசு கட்சி கூடவா செவிசாய்க்கவில்லை அல்லது தமிழரசு கட்சி சம்பந்தனின் ஆளுகைக்குள்ளிருந்து வெளிச் செல்ல முயல்கின்றதா? ஏன் வாக்களிப்பில் பங்குகொள்ளவில்லை என்னும் கேள்விக்கு சுமந்திரன் மட்டுமே பதிலளித்திருக்கின்றார். அதாவது, வடக்கு மாகாண சபையின் ஜனநாயக முடிவுக்கு மாறாக தான் வாக்களிக்க விரும்பவில்லை என்பதே சுமந்திரனின் பதிலாக இருக்கிறது. அவ்வாறாயின் வடக்கு மாகாண சபையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஜனநாயக முடிவுகளுடனும் சுமந்திரன் உடன்படுகின்றாரா? இனப்படுகொலை தீர்மானத்துடனுமா?

இந்த விடயங்களை உற்றுநோக்கினால் உரிமைக்காக போராடிவரும் அரசியல் தலைமையொன்று, எந்தளவிற்கு பலவீனமாக இருக்கிறது என்பதை அரசியல் ஆர்வலர்கள் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறானதொரு புரிதலை இலக்காகக் கொண்டே மேற்படி தகவல்களை இப்பத்தி பதிவுசெய்திருக்கிறது. இனி இதிலுள்ள அரசியல் பலவீனங்கள் தொடர்பில் பார்ப்போம். முதலாவது, பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான விடயங்கள் பொதுமக்கள் முன்னிலையில் விவாதப்பொருளாகும்வரை அமைதியாக இருந்தது, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இழைத்த முதல் தவறாகும். இதனை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கான சூழலை ஏற்படுத்தியது சம்பந்தனின் இரண்டாவது தவறாகும். தமிழ் மக்களின் உரிமைசார்ந்து இயங்கும் ஒரு அரசியல் கட்டமைப்பு மக்கள் நலன்சார்ந்து மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறதெனின், அதற்குள் மக்கள் நலனைவிடவும் தனிப்பட்ட நலன்களே மேலோங்கிக் காணப்படுகிறது என்பதே பொருளாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது மாகாண சபை உறுப்பினர்கள் எவருமே பொருளாதார நிபுணர்கள் அல்லர். பொருளாதார நிபுணர்கள் அரசியல் தலைவர்களாக வரமுடியும். ஆனால், அவ்வாறான எவரும் தற்போது கூட்டமைப்புக்குள் இல்லை. கூட்டமைப்பில் இடம்பெறும் அனைவருமே அரசியல் மற்றும் சட்டத்துறைசார் நிபுணத்துவம் உடையவர்களேயன்றி பொருளாதார விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்டவர்கள் அல்லர். இது அவர்களும் அறிந்த ஒன்றே! எனவே, இவ்வாறான விவகாரங்கள் மேலெழுகின்றபோது அதற்குரிய நிபுணர்களின் கருத்துக்களையே இறுதியானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே ஒரு முதிர்ந்த பக்குவமான அரசியல் தலைமைக்கழகு. ஆனால், சம்பந்தன் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. மாறாக விடயத்தை அரசியல்வாதிகளுக்கான விவாதப்பொருளாக சுருக்கிவிட்டிருக்கின்றார். இதுதான் இந்த விடயம் இந்தளவிற்கு சிக்கலானதொரு விடயமாக உருமாறியதற்கான காரணமாகும்.

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எந்த இடத்தில் எவ்வாறு நிறுவ வேண்டுமென்பதை கொழும்பு தீர்மானிக்க முடியாது, அதனை வடக்கின் தலைவர்களும் நிபுணர்களுமே தீர்மானிக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே மேற்படி விடயம், இவ்வாறானதொரு புரிதலின் கீழ் அணுகப்பட்டிருக்கவில்லை. உண்மையில் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்திற்கு பொருத்தமான இடம் எது என்னும் கேள்விக்கான பதில்களில் மாங்குளம் என்பதே முதற்பதிலாக இருந்தது. விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் இது தொடர்பில் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மாங்குளம் வடக்கின் ஜந்து மாவட்டங்களாலும் இலகுவாக அனுகக் கூடிய மையப்பகுதியாக இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டே வடக்கு மாகாண சபைக்கான தலைமைச் செயலகத்தைக் கூட அங்கு நிறுவ வேண்டுமென்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. மாங்குளத்திற்கு அடுத்தது எது? என்னும் கேள்விக்கு பதிலாகவே ஓமந்தை அமைந்தது. ஒருவேளை, தாண்டிக்குளம் என்பதாக நிபுணர்கள் கருதுவாராக இருப்பின் அதற்கான வலுவான காரணங்களை முன்வைத்து இந்த விடயத்தை முற்றுப்பெறச் செய்திருக்கலாம். ஆனால், இந்த விவாதங்களின் இறுதி விளைவு என்னவென்று பார்த்தால் கூட்டமைப்புக்குள் மேலும் பிளவுநிலை தோன்றியிருக்கிறது. அவ்வாறானதொரு பிளவுநிலை தோன்ற வேண்டுமென்பதே இதற்குபின்னாலுள்ள திரைமறைவு சக்திகளின் தேவையாக இருக்கலாம்.

பிந்திய தகவல்களின்படி ஒமந்தை என்பது ஒரு கட்சியின் முடிவேயன்றி அனைத்து தரப்பினரதும் முடிவல்ல என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அதனடிப்படையில் ஓமந்தை என்று முடிவெடுப்பதாயின் அதனை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும் என்றும் குறித்த அமைச்சர் தெரிவித்திருக்கின்றாராம். இதனை ஆழ்ந்து பரிசீலித்தால் இதன் பின்னால் ஒரு பிரித்தாளும் தந்திரம் தொழிற்படுவதைக் காணலாம். வடக்கு முதலமைச்சர் எதனை குறிப்பிட்டாலும் அதனை எதிர்க்க வேண்டுமென்னும் நோக்கில் ஒரு குழுவினர் கூட்டமைப்புக்குள் இருப்பதையும், அவர்கள் தற்போதும் முதலமைச்சரை எதிர்க்கும் நோக்கிலேயே தாண்டிக் குளத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதையும் துல்லியமாக கணிப்பிடும் கொழும்பின் முளையொன்று கச்சிதமாக ஓமந்தை – தாண்டிக்குளம் விவகாரத்தை தங்களது அரசியல் ஆட்டத்திற்குள் கொண்டுவர எத்தணிக்கிறது. சிலரால் அரசியல் சாணக்கியன் என்று கூறப்படும் சம்பந்தன் ஜயா ஒன்றையும் விளங்கிக்கொள்ள முடியாதவராகவா இருக்கிறார்?

பிரித்தானியர்களிடம் பிரித்தாளும் தந்திரத்தை கற்றுத்தேறியிருக்கும் கொழும்பின் மூளைகள் தமிழ் தலைவர்களை ஒருபோதும் நம்பி நடப்பதில்லை. மாறாக, தமிழ் தலைவர்கள் நம்புமாறு நடந்துகொள்வதிலேயே கவனமாக இருப்பர். இப்போதும் அதுவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சம்பந்தன் கொழும்மை நம்பி நடக்கின்றார். ஆனால், கொழும்போ சம்பந்தனை நம்பவில்லை. மாறாக, சம்பந்தன் தங்களை நம்புமாறு நடந்துகொள்கின்றது. ஆனால், சரியான தருணம் கிடைக்கும் போது அது தனது வேலையை காண்பிக்கும். அப்படியொரு தருணம் குறித்த ஓமந்தை – தாண்டிக்குளம் விவகாரத்தில் கிடைத்திருப்பதாக அவர்கள் கருதுகின்றனரா? விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதியான கருணா, தலைமையுடன் முரண்பட்ட போது கருணாவிற்கு உதவியது ரணிலுக்கு நெருக்கமான ஒரு நபர் என்பதை தமிழர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதேபோன்று தற்போது தாண்டிக்குள விவகாரத்திலும் ரிசாத் என்னும் பாத்திரமொன்றும் ஆங்காங்கே தலைநீட்டுகின்றது. இவற்றையெல்லாம் துல்லியமாக மதிப்பிட்டு செயலாற்றும் வல்லமை நிலையில் சம்பந்தன் இருக்கிறாரா?

மேற்படி பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தில் பொதுமக்களின் கரிசனை ஓமந்தையின் மீதிருப்பதாகவே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் கரிசனை அதன் மீதிருப்பதன் காரணமாகவும் மேலும் நிபுணர்களின் பரிந்துரைப்பும் ஓமந்தையாக இருப்பதன் காரணத்திலாயே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஓமந்தை விடயத்தில் உறுதியாக இருப்பதாகவும் விக்னேஸ்வரனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டியதே தங்களின் கடமையென்று கூட்டமைப்பின் பிறிதொரு கட்சியான புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும் குறிப்பிடுகின்றார். தனக்கு வாக்களித்த கிளிநொச்சி மக்களின் கரிசனைகளுக்கு மாறாக நடக்க முடியாது என்னும் அடிப்படையிலேயே தனது கட்சி தடுமாறியபோதிலும், சிறிதரன் கட்சியின் முடிவுக்கு மாறாக ஓமந்தைக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் கூறப்படுகிறது. அதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் அருவருக்கத்தக்க சில விடயங்கள் இடம்பெற்றதாகவும் தகவலுண்டு. அதாவது, வடக்கு மாகாண சபையில் குறித்த விடயம் வாக்கெடுப்பிற்கு விடப்படுவதற்கு முன்னர் வடக்கு மாகாண சபையின் தவிசாளர் மாகாண சபை உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று ஓமந்தைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாமென்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை வாசிக்க நேரிடும் ஒரு தமிழ்த் தேசிய அபிமானிக்கு ஏற்படும் சங்கடத்திற்காக இப்பத்தியாளர் வருந்துகிறார். ஆனாலும், மக்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான தகவல்களை வெளிக்கொணர வேண்டியது இப்பத்தியாளரின் கடமையாகும்.

ஓட்டுமொத்தமாக நோக்கினால் ஒரு பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தில் தன்னுடைய ஆளுமையால் அனைவரையும் கட்டுப்படுத்தி மக்களின் நலனை முன்னிறுத்தி முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் சம்பந்தன் ஜயா, தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் பயணத்தை எவ்வாறு 2016இல் முடிக்கப் போகின்றார்? ஆனால், இப்படியொரு கேள்வியை அவரிடம் எவருமே கேட்கமாட்டார்கள் என்னும் துனிவு அவருக்குள் இருக்கும் வரையில் அவர் ஒரு தளர்ச்சியடையா தலைவராக தொடர்ந்தும் வலம்வருவார்.

யதீந்திரா எழுதிய இக்கட்டுரை முதலில் தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.