படம் | TAMIL GUARDIAN

யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தையும் அது சார்ந்து வெளிவந்த செய்திகள் பற்றியும் இங்கே இம்மியளவும் கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை. கொட்டனை ஓங்கினார்கள், கல் எறிந்தார்கள், காயம் வந்தது, பொலிஸ் வந்தது, சிங்களவன் என்றோம், தமிழன் என்றோம் என்ற பாணியில் மக்களை உசுப்பேத்தி வர்ணனைகளை அள்ளி வீசும் எந்த ஊடகத்திற்கும் வெளியே நான் நிற்க பிரியப்படுகின்றேன். இது நாம் உரையாடிக்கொள்ள வேண்டிய தருணம்.

ஞாயிறன்று இரவு பல்கலைகழகத்தைக் கடந்துவரும் போது மயான அமைதியுடன் பொலிஸ் சூழ இருந்தது. பகல் நடந்தவைகள், செய்தியில் திரிக்கப்பட்டவைகள், ரோட்டில் கேள்வியுற்றவைகள் அனைத்தும் என்னை மிகவும் உணர்ச்சி வசப்படுத்தியிருந்தன. வந்தவுடன் பேஸ்புக்கில் ஒரு இஸ்டேட்டஸ் போட்டேன் பத்து நிமிடத்தில் அதை அழித்துவிட்டேன். எனக்குள்ளும் அந்த பதற்றமும், உணர்வுச்சிக்கலும் தொற்றியிருந்தது. நீங்களும் அவ்வாறுதான். நம்முடைய மனதில் காழ்பு இல்லை என்பதை மீண்டும் மனதுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்போம்.

இப்போது,

இத்தனை வருட கால இன முரண்பாடு, எங்களை எத்தனை உணச்சிக்கு ஆளாக்கி வைத்திருக்கின்றது என்பதை நம் ஒவ்வொருவராலும் உணர முடிகின்றது. பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் எழுந்த முரண்பாட்டை மாணவர்கள் அந்த இடத்தில் அணுகியதைவிட ஊடகங்களும், வலைத்தள வாசிகளும் மிக கூர்மையாக அணுகினார்கள். பலருக்கு யாரோ சிலர் ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு அவர்களுக்கு முன்னால் போய் நிற்கவேண்டும், அது மட்டும்தான் வேண்டும். அத்தனை பழி உணர்ச்சி.

குறிப்பாக Safe Zone க்குள் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களும், அதிகாரம், அரசியல் பின்னனி சார்ந்தவர்களுக்கும் நாங்கள் ஆயுதம் தாங்கி அடிபடவேண்டும். எல்லா இன மக்களிடையேயும் இப்படி சிந்திக்கும் பிற்போக்கு பேர்வழிகள் மலிந்து போய்க்கிடக்கிறார்கள்.

இது பல்கலைக்கழக பிரச்சினை, முன்பு போல் அதை பகடை அரசியலாக்கி கொண்டிருக்கின்றன சிங்கள தமிழ் ஊடகங்கள். பார்க்கப்போனால் அது சில நபர்கள் சார்ந்தது மட்டுமே. முதல் உணர்வு வசப்பட்டு கையோங்கிய சிலரதும் அதற்கு பதில் கை ஓங்கிய சிலரதும் பிரச்சினை. அந்த சிலர் இரண்டு தரப்பிலும் பல்கலைக்கழக வளாகத்தில் உலவுகின்றனர்.

அவர்கள் அங்கே தீடிரென முளைத்தவர்கள் கிடையாது. சமீப நாட்களாக இது பனிப்போர் போல் உள்ளே குமைந்து கொண்டு இருந்த ஒன்றுதான். விகாரை கட்ட வேண்டும் என்ற சுவரொட்டிகள், நந்தி சிலை உடைப்பு, உட்காரும் பெஞ்ச்கள் உடைப்பு என  விஞ்ஞான பீடத்திற்கு நெருக்கமாக இருக்கும் இடங்களில் மறைந்தும் மறையாமலும் குமைந்து வந்த பிரச்சினை வெடித்திருக்கிறது. அது ஒரு தீடீர் காரணம் கிடையாது, அது பல உபநிகழ்வுகளின் சமீபத்தைய வெடிப்பு.

ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களையோ ஒட்டுமொத்த சிங்கள மாணவர்களையோ இரண்டு தரப்பாக நிறுத்தி அடிபடுங்கள் என்று சொல்வதைப்போலிருக்கிறது ஊடகங்களினதும் சமூக வலைத்தளங்களினதும் பதிவுகள். அவர்களின் சுவாரஸ்ய பசிக்கும், இனவாதத் தாகத்துக்கும்  மாணவர்கள் பலியாடுகள், கயவர்கள்.

சகல இனத்தவர்களுக்கும் தங்களுடைய அடையாளம் சார்ந்த  ஆற்றுகைகளையும் வெளிப்படுத்த உருத்துடையவர்கள் தான். ஆனால், அது எந்தச்சூழலில் எப்போது நிகழ்த்தப்படுகின்றது என்பதும், அது அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டு அரசினாலும் குறித்த பெரும்பான்மை அடிப்படை வாதத்தாலும் வஞ்சிக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் நடைமுறைச்சூழலில் வலிந்து செய்யப்படுவது மோசமானது. ஆனால், பல்கலைக்கழகத்திற்கு வெளியே முளைக்கும் புத்தர் சிலைகளை நோக்கி யாரும் ஏன் சுட்டு விரலைக்கூட தூக்க வில்லை என்பது நகை முரண் அல்லவா? இதற்கு பின்னால் ஏதோ ஒன்று இயங்குவதை உணர்ந்துகொள்ளுங்கள்.

எல்லோரும் சுதந்தரமானவர்கள், சமனானவர்கள் என்று பேச முன்வரும் யாரிடமும் நான் முன்பு குறிப்பிட்ட சுவரொட்டிகள், நந்திசிலை உடைப்புகள், கல்லாசன தகர்ப்புக்கள் நிகழ்த்தப்பட்ட பின்னனி என்ன என்பதற்கான விபரத்தை கோரி நிற்கின்றேன். நிச்சயமான இது ஒட்டு மொத்த இனச்சூழலின் வடிவமல்ல, அடிப்படைவாத பிற்போக்கு மனநிலை கொண்ட ஒரு சிலரின் செயல்கள்.

ஏன் வழமைக்கு அதிகமாக கடந்த வருடங்களில் இனமுரண்சூழலை கட்டமைப்பது போல யாழ். பல்கலைக்கழகத்திற்கு அதிகமான சிங்கள மாணவர்கள் திணிக்கப்படுகின்றார்கள் என்பதற்கும், ஏன் தமிழ் – சிங்கள மாணவர்கள் ஒரு சில பீடங்களைத்தவிர மிகுதியான பீடங்களில் எதிர்படுகையில் புன்னகைத்து கொள்வது கூட இல்லையென்பதற்கும் தர்க்க ரீதியான பதில் அதிகாரம் சார்ந்த யாரிடமாவது இருக்கின்றதா? இது கூட அங்குவரும் சிங்கள மாணவர்கள் செய்யும் செயலல்ல. அது இனவாதம் ஊறிப்போன அதிகார மையங்கள் செய்யும் கயமைத்தனம்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடக்கம் பல்கலைக்கழக நிர்வாகம் வரை இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நீர் சுத்திகரிப்பானில் நீர் பெறுவதில் இருந்து சிங்கள – தமிழ் பிரச்சினை பல்கலைக்கழக வளாகத்தினுள் தினமும் கூர்ப்படைவதை பல்கலைக்கழக நிர்வாகம் எப்போது  உணரப்போகின்றது.

அதிகார பீடங்கள் எப்போதும் மக்களுக்கும் அறத்துக்கும் எதிரானவைதானே. ஆனால், இதை இப்படியே விட்டால் இந்த கொடுநோய் மீண்டும் அழிவுக்குத்தான் கொண்டு செல்லும்.

தவிர தமிழ் – சிங்கள் மாணவர்களைப் போலவே முஸ்லிம் மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்குமான உறவு நிலைகள் தொடர்ந்தும் நோயுற்று இருப்பதை மிகச்சாதாரணமாக கடந்து போக இயலுமா? முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறையில் ஊற்றப்பட்ட ஓயில் கறை இன்னும் அகலாமல் கிடப்பதை உள்ளூர எவருமே உணரவில்லையா?

மூன்று இனத்தவரும் ஒரே வளாகத்தில் எங்கிருந்தோ உருவாக்கப்படும் வேற்றுமனநிலைக்கு பழக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம். ஒரு குழு அல்லது குறுகி இயங்கும் ஆள்மனப்பதிவு ஒன்று தொடர்ந்தும் அந்த பல்கலைக்கழக வளாகத்தினுள் அடுத்தடுத்து கடத்தப்படுகின்றது.

லீவு விடுவதன் ஊடாக காழ்ப்பு அல்லது எதிர்மறை நிலை என்ற கத்தியை உறைக்குள் திரும்ப அனுப்புகின்றது நிர்வாகம். அதிகார பீடங்கள் எங்கும் அப்படித்தான். உறையிலடப்பட்ட கத்தியை எப்படி கண்டறிந்து அழிக்கப்போகின்றோம் என்ற மனித நிலைக்கு நாங்கள் எப்போது போகப்போகின்றோம். முரண்பாடு தவிர்ப்பு, முரண்பாடு நிலை மாற்றம், முரண்பாட்டு அகற்றல் எல்லாம் பாடத்திட்டமாக மட்டும் பல்கலைக்கழகம் கடந்து போகின்றது.

நாம் இனி அடக்குமுறையை எப்போதும் ஆயுதத்தால் எதிர்கொள்ளப் போவதில்லை என்று ஒரு நம்பிக்கையை ஆவது உருவாக்கிக் கொள்வோம்.

மரபை, சுயத்தை, நமது இருப்பை அழிப்பது மாணவர்கள் இல்லை. அவ்வாறு இயங்குபவர்களுக்கு பின்னால் அதிகாரம், அடிப்படைவாதம் சார்ந்த பெரிய அரசியல், பணக்கொள்ளைக்கூட்டம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை உணரவேண்டும். சிந்தனை தளத்தில் இவைகளை எதிர்கொண்டால் மாணவர்கள் முன்னால் அவை கண்நேரமும் நிற்காது.

நாம் எமது இருப்பைப் பாதுகாக்கப் போராடுதல் தவறில்லை. ஆனால், அது உணர்ச்சி, பதற்றம் என்பவற்றின் தளத்தில் நடத்தல் கூடாது. அது, சிந்தனைத்தளத்தில் நின்று நடக்க வேண்டும்.

உங்களை தூண்டி விட்டு குளிர் காய்பவர்கள் நாளை நீங்கள் ஒரு பிரச்சினைக்குள் போக அவர்கள் அரசியல் மேடைகளை அலங்கரித்து யாருக்கு எதிராக உங்களை கல்லெறியச்சொன்னார்களோ அவர்களோடு சேர்ந்து நிற்பார்கள்.

நாங்கள் மாணவர்கள். நாங்கள் அவர்களைப்போல் கயவர்கள் இல்லை.

ஒரே வளாகத்தில் ஒரே வகுப்பறைகளில் ஒரே சிற்றுண்டிச்சாலைகளில்  உலவுகிறோம், கல்வி கற்கிறோம், ஒவ்வொரு நாளும் எதிர்ப்படுகிறோம். நிமிர்ந்து பரஸ்பரம் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். எல்லோரும் மனிதர்களாகவே பிறக்கிறோம். ஆதலால், புன்னகைக்க தொடங்குவோம்.

ஓம் அதையும் நாங்களே தொடங்குவோம்.

அன்புள்ள

யதார்த்தன்