படம் | பிரதமரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னைநாள் உதவி இராஜாங்கச் செயலரும் மூத்த இராஜதந்திரியுமான ரிச்சர்ட் ஆமிரேஜ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். அவர் கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட பல அரசியல் தலைவர்களையும் சந்தித்திருந்தார். அவர் கொழும்பில் இருந்த வேளையில் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு நேர்காணலையும் வழங்கியிருந்தார். மேற்படி நேர்காணலை சண்டே டைம்ஸ் – ஆமிரேஜ் இலங்கையில் என்ன செய்துகொண்டிருக்கின்றார்? என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தது. சீனா தொடர்பிலான கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது ஆமிரேஜ் – இது வேறு இலங்கை (This is a different Sri Lanka) என்று கூறியிருக்கிறார். தமிழர் தரப்பு கூர்ந்து கவனிக்க வேண்டிய பல விடயங்கள் இந்த நேர்காணலில் இருக்கின்றன. நேர்காணுபவரின் ஒரு கேள்வி – உங்களுடைய இலங்கை விஜயம் பொதுநல நோக்கம் (Altruistic motive) கொண்டதா? இதற்கு ஆமிரேஜ் இவ்வாறு பதிலளிக்கின்றார். இல்லை – அது என்னுடைய நலனுக்கானது. அதாவது, நான் நினைக்கின்றேன் எனது இலக்கை நிறைவு செய்வதற்கானதென்று. 2002இல் யுத்தத்தை அமைதி வழியில் நிறுத்துவதற்கும் தீவிரவாதத்தை நிறுத்துவதற்குமான ஒரு வாய்ப்பை நாங்கள் பெற்றிருந்தோம். ஆனால், அது தோல்வியிலேயே முடிந்தது. இது தொடர்பில் நான் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அது உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்திருக்க முடியும் ஆனால், நாங்கள் எங்களது முயற்சியில் தோல்வியுற்றோம். அதன் பின்னர் வாய்ப்பு கிடைத்தபோது இலங்கைக்கு வந்திருக்கிறோம் – எங்களுடைய இலாபத்திற்காக அல்ல, மாறாக இலங்கையை முன்நோக்கி நகர்த்துவதற்காக.

ரிச்சர்ட் ஆமிரேஜுக்கும் இலங்கைக்கும் அப்படியென்ன தொடர்பு? அவர் நிறைவு செய்ய விரும்பும் அந்த இலக்கு என்ன? அமெரிக்க – இலங்கை தொடர்பானது ஆரம்பத்தில் ஒரு மட்டுப்பட்ட நிலையில்தான் இருந்தது. 2001 -2002 இல் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்புக்கள் இந்த நிலைமையில் சடுதியான மாற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கான காரணங்கள் என்ன? இதற்குப் பின்னால் மூன்று காரணங்கள் இருந்ததாகக் கூறுகின்றார் இலங்கைக்கான முன்னைநாள் அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லுன்ஸ்டட். இவர் 2003 தொடக்கம் 2006 வரையான காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அமெரிக்கத் தூதுவராக இருந்தவர். அவர் கூறும் காரணங்கள்: ஒன்று – 2001 செப்டம்பர் 11இல் அமெரிக்காவின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளுவது தொடர்பில் அமெரிக்கா காண்பித்த உறுதிப்பாடு. இரண்டு – முற்றிலும் மேற்கு சார்பான உலகமயமாக்கலுக்கு ஆதரவான ஜக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றிருந்தமை. மூன்றாது – தற்போது இப்பத்தி ஆராய்ந்துகொண்டிருக்கும் ரிச்சர்ட் ஆமிரேஜின் தனிப்பட்ட ஆர்வம். இது பற்றி மேலும் குறிப்பிடும் லுன்ஸ்டட், அன்று இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபட்டிருந்த அனைத்து அமெரிக்க அதிகாரிகளுக்கும் இது நன்கு தெரிந்திருந்தாகவும் கூறுகின்றார். இதன் காரணமாகவே அப்போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள வட்டாரத்தில் ஆமிரேஜ்யை இலங்கை தொடர்பான அலுவலகர் (The Sri Lanka desk officer) என்றும் அழைப்பார்களாம். அந்தளவிற்கு ஆமிரேஜ் இலங்கை விவகாரத்தில் தனிப்பட்ட அக்கறை எடுத்திருக்கின்றார்.

இத்தனைக்கும் ஆமிரேஜ் சமாதான முன்னெடுப்புக்களுக்கு முன்னதாக ஒரேயொரு முறைதான் இலங்கையில் தரையிறக்கியிருக்கிறார். இங்கு நான் தரையிறங்கினார் என்பதன் பின்னாலும் ஒரு பொருள் உண்டு. ஆமிரேஜ் முதன்முதலாக 1983இல் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாகவே சிலர் எழுதுகின்றனர். உண்மையில் அது அவரின் இலங்கைக்கான விஜயமல்ல. அப்போது அமெரிக்காவின் பாகாப்புச் செயலராக இருந்த வெயின்வேகர் இலங்கையின் ஆகாய எல்லையால் பயணம் செய்துகொண்டிருந்த போது எண்ணெய் நிரப்புவதற்காக கொழும்பு விமான நிலையத்தில் சில மணிநேரம் தரித்துநின்றார். இதன்போது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கும் பாதுகாப்புச் செயலருக்கும் இடையில் மிகவும் குறுகிய நேர சந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்தது. அன்று அமெரிக்க பாதுகாப்புச் செயலரின் குழுவில் இருந்தவர்களின் ரிச்சர்ட் ஆமிரேஜும் ஒருவர். இவ்வளவுதான் ஆமிரேஜுக்கும் இலங்கைக்குமான பாசப்பிணைப்பு.

இந்த விடயங்களை ஆமிரேஜ் தனது உரையொன்றில் குறிப்பிட்டுமிருக்கிறார். ஆனால், ஒருவரது தனிப்பட்ட ஆர்வத்திற்கு இதுமட்டும் பேதுமானதா? ஆமிரேஜின் இந்த தனிப்பட்ட ஆர்வம் ஏன்? இதற்கும் அமெரிக்கத் தூதுவரே பதலளித்திருக்கின்றார். ஆமிரேஜின் ஆர்வத்தை தூண்டியதன் பின்னால் புதிதாக அதிகாரத்திற்கு வந்த ஜக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் அரசியல் இருந்தது. ஏனென்றால், ஜக்கிய தேசியக் கட்சி என்பது மரபுரீதியாக இலங்கையில் ஒரு வலதுமைய கட்சியாக இயங்கிவருகிறது. அதுமட்டுமன்றி அது சர்வதேச பழமைவாத அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பிலும் (Groping of international conservative political parties) மற்றும் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்திலும் (International Democrat Union) அங்கத்துவத்தை கொண்டிருக்கிறது. இந்த ஒன்றியத்தின் இணை நிறுவுனர்களில் ஒருவர் முன்னைநாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஆவார். இவ்வாறான காரணங்கள்தான் ஆமிரேஜின் தனிப்பட்ட ஆர்வத்தின் பின்னால் இருந்தது. நீண்ட காலங்களின் பின்னர் ஜக்கிய தேசியக் கட்சி மீளவும் அரசாங்கத்தை கைப்பற்றக் கூடியதொரு சூழலில் உருவாகியிருக்கிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ரிச்சர்ட் ஆமிரேஜ் இலங்கையின் மீது மீண்டும் தனது கரிசனையை வெளிப்படுத்துகின்றார்

இப்போது அவர் தன்னுடைய இலக்கை நிறைவு செய்யவே வந்திருக்கிறேன் என்று குறிப்பிடுவதன் பின்னாலுள்ள அந்த நலன் என்னவென்று விளங்குகின்றதா? நான் மேலே குறிப்பிட்ட நேர்காணலில் ஒரு இடத்தில் அமெரிக்க – இலங்கை நட்புறவு தொடர்பில் ஆமிரேஜ் இவ்வாறு கூறுகின்றார். எங்களுடைய நட்புறவு ராஜபக்‌ஷ காலத்தில் ஆரம்பித்த ஒன்றல்ல. நவீன வரலாற்றில் எங்களுக்கும் இலங்கைக்குமான உறவு ஜோர்ஜ் புஷ்ஷின் காலத்தில் ஆரம்பித்திருந்தது. 2001-2005 வரையான காலப்பகுதியில் எங்களுக்கிடையில் மிகவும் சிறப்பான உறவு இருந்தது. ஆனால், 2005இலிருந்து இலங்கை தன்னை தன்னிச்சையாக தனிமைப்படுத்திக் கொண்டது. ஆனால், இலங்கை ஜெனிவா பிரேரணையை ஏற்றுக் கொண்டு ஜக்கிய நாடுகள் சபையுடன் பணியாற்றுவதற்கு இணங்கிய போது இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது.

ஆமிரேஜ் போன்ற ஒருவர் கூறும் கருத்துக்கள் அமெரிக்க நலன்கள் தொடர்பானவை என்பதை விளங்கிக் கொள்வதில் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. 2005இல் ஜக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதற்கான சூழல் மிகவும் பிரகாசமாகவே இருந்தது. ஆனால், அந்த நிலைமை விடுதலைப் புலிகளின் அணுகுமுறையால் தலைகீழானது. அந்தத் தலை கீழ் அரசியல் நிலைமையின் விளைவாகவே இலங்கை சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே சீனாவின் ஆதிக்கம் இலங்கைக்குள் எல்லை மீறியது. இதுதான் ஆமிரேஜ் கூறும் ‘இது வேறு இலங்கை’. ஜெனிவா முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஆமிரேஜ் தெரிவித்திருக்கும் ஒரு விடயமும் அண்மையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த ஒரு விடயமும் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. உள்ளக பொறிமுறை மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கான அமெரிக்க உதவிகள் தொடர்பில் தான் நல்ல செய்திகளை கேட்டதாகவும் ஆமிரேஜ் குறிப்பிடுகின்றார். ஆரம்பத்தில் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளும் பங்குகொள்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதும் தற்போது ரணில் அதற்கு முற்றிலும் மாறாக பேசுகின்றார். ரணில் இதற்குக் கூறும் நியாயத்தை அமெரிக்கா உட்டபட்ட மேற்குலகமும் ஏற்றுக்கொள்ளும். ஜக்கிய தேசியக் கட்சி மீளவும் ஒரு வலுவான நிலையில் இலங்கையில் காலூன்ற வேண்டுமாயின் அதற்கு சில விடயங்களை மறப்பதே அவர்களுக்கு நல்லது. அதனையே மேற்குலகம் தனக்கும் நன்மையான ஒன்றாக பார்க்கும்.

இதிலிருந்து ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, மீளவும் ஒரு பலமான ஜக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதையே அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக்காவின் பார்வையில் அது சரியானதே! எனவே, இந்த நிலைமைகளை குழப்பும் அல்லது சங்கடங்களுக்குள்ளாக்கும் எந்தவொரு விடயத்திற்கும் அமெரிக்கா ஆதரவு வழங்கப் போவதில்லை. ஆனால், இந்தச் சூழலைத்தான் தமிழர் தரப்பு தங்களுக்கு சாதகமாகவும் கையாள வேண்டியிருக்கிறது. 2005இல் ஜக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குழப்பப்பட்ட போது உலகின் கோபம் தமிழர் தரப்பின் பக்கமாகவே திரும்பியது. இப்போதும் நிலைமைகள் குழம்புமாக இருந்தால் அது தமிழர் விவகாரத்தினால் மட்டுமே குழம்பும். இந்த சிக்கலான நிலைமையை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப் போகின்றது. உலகிலிருந்து அந்நியப்படவும் கூடாது, அதேவேளை அடிப்படைகளையும் விட்டுவிலகவும் கூடாது. அதற்கான உக்திகள் என்ன? இதில் புலம்பெயர் சமூகமே அதிகம் செயலாற்ற வேண்டியிருக்கிறது. மேற்கின் ஜனநாயக வெளியை மிகவும் சிறப்பாக கையாளுவதன் ஊடாக தமிழர் விவகாரங்கள் தொடர்பில் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.

யதீந்திரா