படம் | Reuters/Dinuka Liyanawatte, QUARTZ
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘‘சுதேச நாட்டியம்” எனப்படும் ஒரு பத்திரிகையின் தொகுப்புக்களை தமது ஆராய்ச்சித் தேவைகளுக்காகப் படித்திருக்கிறார். புலவர் கல்லடி வேலுப்பிள்ளை சுதேச நாட்டியத்தின் ஆசிரியராக இருந்தார். அது மாதம் ஒருமுறை வெளியிடப்பட்டது. அதில் ஓர் இதழில், அக்காலப்பகுதிக்குள் நிகழ்ந்த 14 கொலைச் சம்பவங்களைப் பற்றிய செய்திகள் காணப்பட்டுள்ளன. குறிப்பாக 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இதழில் இது தொடர்பாக ஆசிரியத் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. அது பிரிட்டிஷ்காரரின் ஆட்சிக் காலம். குறிப்பாக, ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு பல தசாப்தங்களுக்கு முற்பட்டதொரு காலம். அக்கால கட்டத்தில் ஒரு மாத காலத்திற்குள் 14 கொலைகள் நடந்துள்ளன. இவற்றில் அநேகமானவை கூராயுதங்களால் செய்யப்பட்டவை.
இப்புள்ளி விபரத்தின் அடிப்படையில் பார்த்தால் இப்பொழுது நிலைமை எவ்வாறு உள்ளது? அண்மை மாதங்களாக யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுக் கலாசாரம் ஒன்று காணப்படுவதாகவும், இதில் கல்லூரி மாணவர்களும் சம்பந்தப்படுவதாகவும் செய்திகள் அதிகமாக வெளிவந்தன. இது காரணமாக இணையத் தளங்களில் யாழ்ப்பாணமா? வாள்ப்பாணமா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. கூராயுதங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை உடனடியாகக் கையளிக்க வேண்டும் என்று யாழ். மேல் நீதிமன்றம் கட்டளையிட்டது. கூராயுதங்களை உற்பத்தி செய்பவர்களும் அதற்குரிய சட்ட அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது. சில வாரங்களுக்கு முன் கொழும்பிலுள்ள சில மூத்த தமிழ்ப் பிரஜைகள் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பொலிஸ்மா அதிபரிடம் இது தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தார்கள். அவரும் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கட்டளையிட்டிருந்தார். இத்தகையதோர் பின்னணியில் இக்கட்டுரையானது மூன்று முக்கிய கேள்விகளை எழுப்புகிறது.
ஒன்று, யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் முன்னைய கால கட்டங்களோடு ஒப்பிடுகையில் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளனவா? இது தொடர்பான புள்ளி விபரங்கள் எங்காவது வெளியிடப்பட்டுள்ளனவா?
இரண்டு, ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில், யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களின் விகிதம் அசாதாரணமாக அதிகரித்துள்ளதா?
மூன்று, வாள் வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் நடக்கின்றனவா? அதை தொடர்ச்சியான ஒரு பெரும் போக்கு அல்லது ஒரு சீரழிந்த பண்பாடு என்று அழைக்கக்கூடிய அளவிற்கு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளனவா? இலங்கையின் வெவ்வெறு பகுதிகளில் இவ்வாறான வாள் வெட்டுச் சம்பவங்கள் நடக்கவில்லையா? அவற்றோடு ஒப்பிடுகையில், யாழ்ப்பாணத்தில் நடந்திருப்பவை விகிதத்தில் அதிகமா? இது தொடர்பில் துலக்கமான புள்ளி விபரங்கள் எங்கேயாவது வெளியிடப்பட்டிருக்கின்றனவா?
மேற்படி கேள்விகளோடு தொடர்புடைய புள்ளிவிபரங்களைத் தேடி யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர்களோடு தொடர்பு கொண்டேன். ஒருவரிடமும் அவை இருக்கவில்லை. ஒருவர் சொன்னார், ‘‘நாங்கள் கேட்பதை விடவும் முதலமைச்சர் கேட்டால் பொலிஸ் உயர் அதிகாரிகள் மேற்படி புள்ளிவிபரங்களை தருவார்கள். எனவே, அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் அதை உத்தியோகபூர்வமாகக் கேட்டால் அவர்கள் கொடுப்பார்கள் என்று”.
எனவே, யாழ். ஊடக வட்டாரத்திற்குள் மேற்படி புள்ளிவிபரங்களைப் பெற முடியவில்லை. அதனால், கொழும்பிலுள்ள பிரபல ஊடகங்களின் ஆசிரியர்களை அணுகினேன். அவர்களிடமும் புள்ளிவிபரங்கள் இருக்கவில்லை. பொலிஸ் தலைமையகத்திடம் கேட்டுப் பெற்றுத் தருவதாகச் சொன்னார்கள். அதேசமயம் “தமிழ் மிரர்” பத்திரிகையின் ஆசிரியர் சொன்னார், அண்மையில் வடக்கிற்கு ஊடக அமைச்சர் விஜயம் செய்தபோது, இது தொடர்பான புள்ளி விபரம் தெரிவிக்கப்பட்டதாக. பலாலியில் நடந்த ஒரு சந்திப்பில் அப்போதிருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரான ருவன் வணிகசேகர இத்தகவலைத் தெரிவித்தாராம். தெற்கிலிருந்து வந்த ஒரு சிங்கள ஊடகவியலாளர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். ஆட்சி மாற்றத்தின் பின், நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளனவா? என்று. அதற்கு பதிலளித்த முன்னாள் பொலிஸ் பேச்சாளர் அப்படியில்லை என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் குற்றசசெயல்கள் ஏறக்குறைய 18 விகிதத்தால் குறைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அதோடு, இப்போதுள்ள இணையப் பெருக்கம் மற்றும் இணையச் சுதந்திரம் காரணமாக செய்திகள் உடனடியாகவும், வேகமாகவும் பரவுவதால் குற்றச்செயல்கள் செறிவாக நடப்பதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, இது ஒரு ஊடக உருப் பெருக்கம் என்ற தொனி அவருடைய பதிலில் காணப்பட்டதாம்.
அவர் கூறியது முழு நாட்டிற்குமான ஒரு புள்ளி விபரம். ஆனால், இக்கட்டுரைக்குத் தேவையாக இருப்பதோ, குடாநாட்டிற்குரிய புள்ளிவிபரம். இவ்வாறான புள்ளிவிபரங்கள் இல்லாலேயே யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கின்றன என்ற ஒரு முடிவிற்கு எப்படி வருவது? சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இது தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்று இக்கட்டுரை எதிர்பார்க்கிறது. அதேசமயம் யாழ்ப்பாணத்தைக் குறித்து இப்படியொரு சித்திரத்தை யாழ்ப்பாணத்தவர்களில் ஒரு பகுதியினரும், யாழ்ப்பாணத்திற்கு வெளியில் இருப்பவர்களும் உருவாக்கி வைத்திருப்பவதற்கு பின்வரும் வலிமையான காரணங்கள் உண்டு. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அரசியல் ரீதியாகவும் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்பட்டு வரும் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உளவியலை தீர்மானிக்கும் காரணிகள் அவை.
காரணம் ஒன்று, தலைமைத்துவ வெற்றிடம். அதாவது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் பலருண்டு. ஆனால், அவர்கள் சொன்னால், இளைஞர்கள் கேட்பார்கள் என்று சொல்லத்தக்க முன்னுதாரணம் மிக்க தலைவர்கள் எத்தனை பேர் உண்டு? அல்லது இப்போதிருக்கும் தலைவர்களுள் எத்தனை பேர் மக்களோடு நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறார்கள்? அல்லது கிராமங்கள் தோறும் மக்களோடு நெருங்கிச் செயற்படும் உள்ளூர் தலைமைகளை கட்டி எழுப்ப வேண்டும் என்ற தரிசனம் அரங்கிலுள்ள எந்தவொரு கட்சியிடமாவது உண்டா? இவர் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்று சொல்லத்தக்க ஆன்மீகத் தலைவர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் எத்தனை பேர் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு?
இரண்டு, வட மாகாண முதலமைச்சர் கூறுவது போல, திட்டமிட்டுப் பரப்பப்படும் போதைப் பொருட்கள். அதிகரித்த படை பிரசன்னத்தின் மத்தியில் போதைவஸ்துக்கள் அதிகரித்த அளவில் விநியோகிக்கப்படுவதாக முதலமைச்சர் குற்றம் சாட்டுகிறார். சமூக பிறள்வுகளுக்கு இதுவும் ஒரு காரணம் என்று அவர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகிறார். இது இன அழிப்பின் நுணுக்கமான ஒரு வடிவம் என்று கூறி வரும் சில விமர்சகர்களும், அரசியல் வாதிகளும் இதை கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை (structural genocide) என்று வர்ணிக்கிறார்கள்.
மூன்று, ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலானது எல்லாவற்றையும் ஐயத்தோடும், முன்னெச்சரிக்கையோடும்தான் அணுகும். ஆயுதப் போராட்ட கால கட்டங்களில் இருந்த நிலைமைகளோடு இப்போதுள்ள நிலைமைகளை அது ஒப்பிட்டுப் பார்க்கும். இந்த ஒப்பீடு காரணமாகவே ‘‘அவர்கள் இருந்திருந்தால்” என்ற வாக்கியம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. குற்றச் செயல்களுக்கு எதிராக ஊர்வலங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடக்கும் பொழுது மேற்படி வாசகம் ஏதோ ஒரு சுலோக அட்டடையிலாவது எழுதப்பட்டிருக்கக் காணலாம். இப்போதுள்ள அரசியல்வாதிகளைக் குறித்த திருப்தியற்ற மனோநிலை அல்லது ஜனவசியம் மிக்க தலைவர்கள் இல்லாத ஒரு வெற்றிடம் போன்றவை இவ்வாறான ஒப்பீடுகளை ஊக்குவிக்கிறன.
நாலாவது, போர் காரணமாக சமூகத்தில ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருந்த உயர் குழாத்தின் பெரும் பகுதி புலம்பெயர்ந்துவிட்டது. அந்த வெற்றிடத்தை புதிதாக எழுச்சி பெற்றுவரும் நடுத்தர வர்க்கமே இட்டு நிரப்ப முற்படுகிறது என்பதனை சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழ் டயஸ்பொறாவிடமிருந்து கிடைக்கும் நிதி உதவியும் இப்புதிதாக எழுச்சி பெற்று வரும் நடுத்தர வர்க்கத்தின் நிதி அடித்தளத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகும். இவ்வாறு புதிதாக எழுச்சி பெற்றுவரும் நடுத்தர வர்க்கமானது, பராம்பரியத் தொடர்ச்சியற்றதாகவும் எதையும் மேலோட்டமாக அணுகும் ஒரு போக்கைக் கொண்டதாகவும் வளர்ந்து வருவதாக மேற்படி விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இத்தயை நடுத்தர வர்க்கப் பின்னணிக்குள் இருந்துவரும் இளவயதினர் எந்தவொரு அறநெறிக்கும் கீழ்ப்படியாதவர்களாகவும் இலட்சிய வேகம் குறைந்தவர்களாகவும் மேலெழுந்து வருவதாக ஓர் அவதானிப்பு உண்டு.
ஐந்தாவது, நவீன தொழில்நுட்பம், குறிப்பாக, இணையச் சுதந்திரமானது ஒரு பெரிய தலைமுறை இடைவெளியை ஏற்படுத்திவருகிறது. தமது இளையவர்கள் கணினியில் எதைப் பார்க்கிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்பதையெல்லாம் மூத்த தலைமுறையானது கண்காணிக்க முடியாத அளவிற்கு ஒரு தொழில்நுட்ப இடைவெளி தோன்றிவிட்டது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே கடவுச் சொற்கள் நுழைந்துவிட்டன. பெற்றோரால் உள்நுழைய முடியாத ஒரு இரகசிய உலகத்துள் வாழும் பிள்ளைகளின் தொகை அதிகரித்து வருகிறது. இதனால், இளைய தலைமுறை மீது மூத்த தலைமுறையின் பிடி ஒப்பீட்டளவில் தளரத் தொடங்கிவிட்டது.
மேற்சொன்ன பிரதான காரணங்களினாலும், ஏனைய உப காரணங்களினாலும் உருவாக்கப்படும் ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலின் பின்ணியில் வைத்தே யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள விமர்சனங்களை அணுக வேண்டும்..
இத்தகையதொரு பின்னணியில், கண்டிப்பான நீதிபதிகளை சமூகம் அதிகரித்த எதிர்பார்ப்புகளோடு பார்க்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, புங்குடுதீவைச் சேர்ந்த வித்தியாவின் படுகொலையின் பின் மேல் நீதிமன்றத்திற்கு ஒரு புதிய நீதிபதி நியமிக்கப்பட்டார். வித்தியாவின் படுகொலையானது அரசியல் மற்றும் பண்பாட்டுப் பரிமாணங்களைக் கொண்டது. ஒரு வித்தியாவுக்காக மட்டும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கவில்லை. அது போன்ற எல்லாச் சம்பவங்களுக்காகவும், குறிப்பாக, யுத்த காலத்தில் சிதைக்கப்பட்டு நிர்ணமானமாக வீசப்பட்ட எல்லாப் பெண்களுக்காகவும் காட்டப்பட்ட எதிர்ப்பே அது. அதுவரை காலமும் அடக்கிவைக்கப்பட்டிருந்த கோபம், ஆற்றாமை என்பவற்றின் வெளிப்பாடே அது. அவ்வாறான ஓர் உணர்ச்சிச் சூழலில் கண்டிப்பான, துணிச்சலான ஒரு நீதிபதியின் வருகையானது யாழ்ப்பாணத்தில் அதிகரித்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியது. அங்கிருந்து தொடங்கிய அந்த எதிர்பார்ப்பு படிப்படியாக வளர்ந்து வருகிறது. தவிர ஊடகங்களால் அது வளர்த்தெடுக்கப்படுகிறது என்றும் சொல்லலாம்.
ஆனால், இது ஒரு கூட்டுப் பொறுப்பு. கண்டிப்பான ஒரு நீதிபதியின் தலையில் மட்டும் பொறுப்புக்களைச் சுமத்திவிட்டு மற்றவர்கள் சும்மா இருந்துவிட முடியாது. இது தனிய சட்டம், ஒழுங்கு பிரச்சினை மட்டும் அல்ல. இது அதைவிட ஆழமானது. இது ஓர் அரசியல் பிரச்சினை. ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலோடு தொடர்புடைய பிரச்சினை. எனவே, இதை அணுகுவதற்கு ஒரு கூட்டுப் பொறிமுறை அவசியம்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், நீதிபரிபாலன துறை சார்ந்தவர்கள், உளவள மருத்துவர்கள், ஆன்மீகத் தலைவர்கள், புத்திஜீவிகள், கல்வித் துறை சார்ந்தவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் போன்ற சமூகத்தின் கருத்தை உருவாக்கும் எல்லாத் தரப்பும் இதில் இணைக்கப்பட வேண்டும்.
அண்மையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் எடுக்கவேண்டிய முடிவுகளை அதிகாரிகள் எடுப்பது பொருத்தமாக இருக்காது என்பதே அது. ஏனெனில், அதிகாரிகளில் குறிப்பிடத்தக்க தொகையினர் மத்திய அரசாங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள். அவர்கள் மத்திய அரசாங்கத்திற்கு கீழ்ப்படிவாக இருப்பார்கள். எனவே, தமக்கு வாக்களித்த மக்களோடு தொடர்புடைய பிரச்சினைகளில் அரசியல்வாதிகளே இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் இப்பொழுது காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் அரசியல்வாதிகளே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். முதலமைச்சர் கூறுவது போல, அதிகரித்த படைப் பிரசன்னம், அதன் பின்னணியில் நிகழும் போதைப் பொருள் பாவனை போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது என்பது முழுக்க முழுக்க அரசியல் தீர்மானங்களின் பாற்பட்டது. அதை இன்னும் செறிவாகச் சொன்னால், அது தமிழ் மக்களுக்குரிய தன்னாட்சி அதிகாரங்களின் பாற்பட்டது.
தமிழ் மக்கள் இலங்கைத் தீவின் நீதிபரிபாலண கட்டமைப்பை அவநம்பிக்கையோடு பார்த்தார்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு நீதிபரிபாலண கட்டமைப்பானது பாரபட்சமானது என்றே தமிழ் மக்களில் அநேகமானவர்கள் கருதுகிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஒரு புதிய நீதிபரிபாலன கட்டமைப்பையே உருவாக்கியது. அது தோற்கடிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கழிந்திருக்கும் காலச் சூழலில் இலங்கைத் தீவின் நீதிபரிபாலன கட்டமைப்புக்குள் மேழெழுந்த ஒரு கண்டிப்பான நீதிபதியை தமிழ் மக்கள் அதிகம் எதிர்பார்ப்போடு பார்ப்பது என்பது இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றிதான். அது மட்டுமல்ல, படை நீக்கத்தை கோரி வரும் தமிழ் மக்கள் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அதிரடிப்படை களத்தில் இறக்கப்பட்டதை ஏற்றுக் கொள்வது என்பது ஓர் அகமுரணே. இந்த அகமுரண்பாடும் அரசாங்கத்திற்கு மற்றொரு வெற்றிதான். பல்பரிமாணங்களை உடைய அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்ட ஒரு விவகாரத்தை சட்டம், ஒழுங்குப் பிரச்சினையாக சுருக்கியதும் அரசாங்கத்திற்குக் கிடைத்த ஒரு மேலதிக வெற்றிதான்.
எனவே, இந்த விவகாரத்தை அதன் அரசியல் அடர்த்தி கருதி மக்கள் பிரதிநிதிகளே கையில் எடுக்க வேண்டும். இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து கூட்டுப் பொறுப்பை ஏற்று கூட்டுத் தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதன் பின் அதற்குப் பொருத்தமான கூட்டுப் பொறிமுறையை வகுக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் முதலில் துலக்கமான புள்ளிவிபரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்தப் புள்ளிவிபரவங்களுக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கங்கள் உண்டா? இல்லையா? என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.