படம் | REUTERS / Dinuka Liyanawatte, ecumenicalnews

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது அமெரிக்கா, மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவரவுள்ளதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் (US Assistant Secretary of State for South and Central Asian Affairs) நிஷா, சர்வதேச சமூகத்தின் பொறுமை குறைவடைந்து வருவதாக குறிப்பிட்டிருக்கின்றார். இங்கு பொதுவாக, சர்வதேச சமூகம் என்று அவர் குறிப்பிட்டாலும், அதன் உண்மை விளக்கம் அமெரிக்கா என்பதாகும். பலம்பொருந்திய நாடொன்று பிறிதொரு நாட்டின் விடயங்களில் அக்கறை செலுத்தி வருகிறதெனின், அது தொடர்பில் எழும் முதல் கேள்வி, ஏன் அவர்கள் இந்தளவு அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்? சர்வதேச உறவுகள் குறித்து படித்தவர்கள், பொதுவாக இந்த வகையில்தான் சிந்திப்பார்கள்.

மியன்மார் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு சுவிஸ் நாட்டு பெண்மணி ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் சாதாரணமாக ஒரு கேள்வியை கேட்டார். உங்கள் நாட்டு விடயங்களில் கூடுதல் அக்கறையெடுத்து வரும் நாடு எது? நான் அமெரிக்கா என்றேன். இதுவே முன்னர் என்றால், இந்தியா என்று குறிப்பிட்டிருப்பேன். நான் அமெரிக்கா என்று குறிப்பிடதும், அவர் உடடியாகவே கேட்ட கேள்வி, அவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? அந்தப் பெண்மணி ஜரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் சர்வதேச உறவுகள் தொடர்பாக படித்த ஒருவர்.

பொதுவாக உலக அதிகாரப் போட்டியில் பங்குகொண்டிருக்கும் நாடுகள், தங்களது அதிகார நலன்களை புறம்தள்ளி எந்தவொரு விடயத்தையும் அணுகமாட்டாது. இந்த அதிகார நலன்கள் என்பவை பிராந்திய, உலகளாவிய என்னும் இரண்டு நிலைகளில் காணப்படுகின்றன. இந்த இரண்டும் எப்போதும் ஒன்றோடு ஒன்று பிணைப்புக் கொண்டவையாகவும் காணப்படும். இந்த பின்னணியில், ஒரு குறிப்பிட்ட நாட்டின் விடயங்கள், அந்த நாடு அமைந்துள்ள பிராந்தியத்துடன் தொடர்புபட்டிருக்கும் அதேவேளை, பிராந்தியங்களுடன் உறவுகொண்டிருக்கும் உலகளாவிய அதிகார மையங்களுடனும் தொடர்புபட்டிருக்கும். பனிப்போருக்கு பின்னரான இன்றைய உலக ஒழுங்கில், அமெரிக்கா மட்டுமே உலகளாவிய அதிகார மையம் என்று குறிப்பிடக் கூடிய தகுதிநிலையில் இருக்கிறது. அந்த தகுதிநிலையின் வெளிப்பாடாகவே ஏனைய நாடுகளின் மனித உரிமை மற்றும் ஜனநாயக விடயங்களில் அமெரிக்கா தன் கரிசனையை வெளிப்படுத்தி வருகிறது. இந்த பின்னனியில்தான், இலங்கையின் மீது தொடரும் அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் அழுத்தங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால், இவ்வாறு பலம்பொருந்திய நாடுகள், ஒரு குறிப்பிட்ட நாட்டின் விடயங்களில் அக்கறையெடுத்துக் கொள்ளும்போது அதன் உள்நோக்கத்தை குறிப்பாக, அதன் எதிர்கால நோக்கத்தை எவராலும் புரிந்துகொள்ள முடியாது. இது சர்வதேச உறவுகள் குறித்த கோட்பாட்டில் முக்கியமான ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் போராசியர் ஜோன் மியர்ஸ்ஷய்மெர் (John Mearsheimer), ஒவ்வொரு பிரதான அதிகாரங்களினதும்  (Great Power) ஒட்டுமொத்த இலக்கு, அதன் அதிகாரத்தை உச்சளவில் அதிகரித்து இறுதியில் உலக அமைப்பின் மீது ஆதிகம் செலுத்துவதாகும் என்று குறிப்பிடுகின்றார். மேலும் போராசிரியர் ஜோன், சர்வதேசக் கட்டமைப்பானது (International System) மூன்று குணாம்சங்களினால் வரையறுக்கப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுவார். சர்வதேச கட்டமைப்பில் அரசுகளே முதன்மையானவை. அவற்றைவிடவும் அதிகாரமுள்ள பிரதான சக்திகள் (Actors) இல்லை. இரண்டு, ஒவ்வொரு பிரதான அதிகார சக்திகளும், மற்றவர்களுக்கு அச்சுறுத்தலை வழங்கக்கூடிய தாக்குதல்நிலை இராணுவ ஆற்றலைக் (Offensive Military Capability) கொண்டிருக்கும். மூன்று, எந்தவொரு அரசும் திட்டவட்டமாக ஏனைய அரசுகளின் உள் நோக்கங்களை, குறிப்பாக எதிர்கால நோக்கங்களை அறிந்திருப்பதில்லை. உதாரணமாக 2020இல் ஜப்பான் அல்லது ஜேர்மன், அதன் அயல் நாடுகள் தொடர்பில் எத்தகைய உள்நோக்கத்தை கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாது. இலங்கை நிலைமைகளை மேலும் புரிந்துகொள்ளும் நோக்கிலேயே நான் இந்த விடயங்களை எடுத்தாண்டிருக்கிறேன்.

யுத்தகால இலங்கையின் மீதான சர்வதேச கவனமென்பது முற்றிலும் யுத்த நிறுத்தம் அல்லது யுத்தத்தின் முடிவாகவே இருந்தது. யுத்த காலத்தில், அமெரிக்கா கொழும்பின் ஆட்சியாளர்களுடன், நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தது. குறிப்பாக தீவிரவாத முறியடிப்பு விடயங்களில் இலங்கை அரசிற்கு பல்வேறு வழிகளிலும் உதவி வந்தது. குறிப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் – ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் வழிநடத்தப்பட்ட இராணுவத்திற்கும் இடையிலான தீர்மானகரமான யுத்தத்தின் போதும் அமெரிக்கா போதிய ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தது. குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுத பரிவர்த்தனைகளை தடுத்தழிப்பதில் அமெரிக்காவின் உதவி முக்கியமானது. இதனை பாதுகாப்பு அமைச்சு பல தடைவைகள் சுட்டிக்காட்டியுமிருக்கிறது. ஆனால், யுத்தத்திற்குப் பின்னரான சூழலில்தான் அமெரிக்க – இலங்கை உறவில் சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்கள் ஏன்?

இது யுத்தத்திற்கு பின்னர் நிகழ்ந்த மாற்றங்களா அல்லது ஏற்கனவே அமெரிக்காவின் ஆசியா நோக்கிய நகர்வுகளில் ஏற்பட்டுவந்த மாற்றங்களின் நீட்சியா?  இந்த இடத்தில்தான் ஏற்கனவே நான் எடுத்தாண்டிருக்கும் பேராசிரியர் ஜோனின் குறிப்புக்கள் பொருந்திப் போகின்றன. ஆசியாவின் அதிகார மையமாக எழுச்சியுற்றுவரும் சீனாவின் நீண்டகால நோக்கம் என்ன? ஆசியா நோக்கி தனது பார்வையை திருப்பியிருக்கும் அமெரிக்காவின் எதிர்கால நோக்கங்கள் என்ன? இந்தியா இன்னும் இருபது வருடங்களில் என்னவகையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்? தனது இராணுவ ஆற்றலை பெருப்பித்துவரும் ஜப்பானின் எதிர்கால நோக்கங்கள் என்ன? இப்படியான கேள்விகளுக்கு பதலளிக்கும் தீர்க்கதரிசிகள் இவ்வுலகிலில்லை. ஆனால், இங்கு ஒரு விடயம் மட்டுமே உண்மை. இந்த அதிகாரத்திற்கான ஓய்வற்ற நகர்வில், எவரும் நன்பர்களுமில்லை, எவரும் எதிரிகளுமில்லை. இந்த பின்புலத்தில்தான் இலங்கை சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கிறது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை எவராலும் சொல்ல முடியாவிட்டாலும், இலங்கை விடயத்தை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறான அதிகாரங்கள் தங்களுக்குள் மோதப் போகின்றன என்பதை ஓரளவு அவதானிக்க முடிகின்றது. இன்றைய சூழலில் இலங்கையின் மீதான சர்வதேச அவதானம் என்பது இந்தியா – சீனா – அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளைச் சுற்றியதாகவே அமைந்திருக்கிறது. இதில் சீனா ஒரு அணியாகவும், அமெரிக்க – இந்திய கூட்டு பிறிதொரு அணியாகவும் இடம்பெறுகின்றது. எனவே, இலங்கையை பொறுத்தவரையில் சர்வதேச அரசியல் என்பது, மேற்படி முன்று அரசுகளும்தான். என்னவென்று வரையறுக்க முடியாத மேற்படி மூன்று அரசுகளினதும் எதிர்கால நோக்கங்களின் அடிப்படையில்தான் இலங்கை விடயங்கள் எடுத்தாளப்படப் போகின்றன.

இன்றைய நிலைமையில் அனைத்து புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளர்களது விடயப் பொருளானது, சீனாவை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. சீனா எழுச்சியடைந்து வருகிறது. அதனால், தொடர்ந்தும் அமைதி வழியில் மட்டுமே எழுச்சியடை முடியாது. இதுவே இவ்வாறான ஆய்வுகளின் வேராக இருக்கிறது. சீனா அடுத்தகட்டத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமாயின், அது மோதல்களை சந்தித்தேயாக வேண்டியிருக்கும் என்பதே அவ்வாறானவர்களின் பார்வையாக இருக்கிறது. இது எத்தகையதொரு நிலைமையை தோற்றுவிக்கக் கூடுமென்று கணிக்க முற்படும் பேராசிரியர் ஜோன் இவ்வாறு கூறுகின்றார். சக்திமிக்க சீனா என்ன செய்யும்? சீனா தனது அயலவர்களுக்கும் தனக்கும் இடையிலான அதரிகாரவலு இடைவெளியை நிரப்பி, தனது பலத்தை உச்சநிலைக்கு கொண்டுசெல்ல முயற்சிக்கும். இதன் மூலம் ஆசியாவில் தனது பலத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய புறிநிலைமையை இல்லாதொழிக்க முற்படும். இதன் இறுதி நகர்வு ஆசியாவிற்குள்ளிருந்து அமெரிக்காவை வெளியில்தள்ள முயற்சிப்பதாகவே இருக்கும். எவ்வாறு அமெரிக்கா, ஜரோப்பாவின் பிரதான அதிகாரங்களை ஓரங்கட்டி தான் மேலெழுந்ததோ, அத்தகையதொரு நிலைமையையே சீனா ஆசியாவில் விரும்புகிறது.

இந்த ஆய்வுகளை கருத்தில்கொண்டு சிந்தித்தால் ஆசியாவில் சீனாவிற்கு சவால்விடுக்கக் கூடிய சக்தியாக இந்தியாவே அமைந்திருக்கிறது. சீனாவின் அதிகார எழுச்சியை கட்டுப்படுத்தும் ஒரு உபாயமாகவே இந்தியா மட்டுமன்றி சீனாவின் ஏனைய அயல்நாடுகளான ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் அமெரிக்காவுடன் நெருங்கியிருக்கின்றன. இந்த பின்புலத்தில், சீனாவும் தனக்கான அயல்நாடுகளை உருவாக்கி வருகிறது. இத்தகையதொரு புறச் சூழலில்தான், சீனாவுக்கும் இலங்கைக்குமான உறவு வலுவடைந்து வருகிறது. எனவே, இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களும், அமைதி வழியில் தொடர்ந்தும் பயணிக்க முடியாதென்னும் கணிப்பிற்குள்ளாயிருக்கும் சீனாவின் இலங்கை மீதான நெருக்கமும் ஒரு புள்ளியில் சந்திக்க நேரிடுமா? சீனாவின் எழுச்சி இலங்கை விடயத்தின் மூலம் வெளிப்படக் கூடிய சூழல்நிலை தோன்றுமா? இக்கேள்விகளுக்கான விடைகள் நம்வசம் இல்லாவிட்டாலும், இலங்கை விவகாரங்களை, சர்வதேச அரசியலில் தொடர்ந்தும் பேசுபொருளாக்குவதில், மேற்படி விடயங்கள் நிச்சயம் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் ஜயமில்லை.

யதீந்திரா

DSC_4908