படம் | Google Street View

போர்  நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையில் எதுவித மாற்றத்தையும் ‘மாற்றம்’ அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை பிரதான இராணுவ முகாமினுள் கொண்டு செல்லப்பட்டுள்ளனவே தவிர பிரதான முகாம்கள் அகற்றப்பட்டு அந்த நிலங்கள் மக்களுக்கு இன்றுவரை கொடுக்கப்படவில்லை.

மாறாக தமிழர் பகுதிகளில் இப்போது ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கையோ ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருக்கிறது. இராணுவச் சிப்பாயாக இல்லாமல் தர்மத்தைப் போதித்த புத்தராக அந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

2009ஆம் ஆண்டு போர் முடிந்த கையோடு தமிழ் மக்களை தோல்வியடைந்தவர்களாகப்  பார்த்த தென்னிலங்கை, அவர்களை ஆக்கிரமித்து அடிமைகளாக, தங்களது கண்காணிப்பில் வைத்திருப்பதற்கான திட்டத்தை அப்போதே நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருந்தது.

தமிழர் நிலப்பகுதியில் இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும், மக்களின் காணிகளில் பாரிய இராணுவ முகாம்களை நிறுவுவதன் மூலமும், தமிழர் காணிகளை அபகரிப்பதன் மூலமும், அவர்களது பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதன் மூலமும், சிவில் விடயங்களில் தலையிடுவதன் மூலமும் தமிழ் மக்களை தாங்கள் ஆக்கிரமிப்பதாக இலங்கை அரசாங்கம் காட்டிக் கொண்டது. காலப்போக்கில் தாங்கள் அனைவரும் இராணுவத்தின் முற்றுகைக்குள் இருப்பதாக மக்களும் உணரத் தொடங்கினர்.

இராணுவக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்ட அதேவேளை அதனோடு சேர்ந்தே ஆக்கிரமிப்பின் சின்னமாக புத்தரையும் தமிழர் நிலப்பகுதிகளில் இராணுவத்தினர் தங்களோடு குடியேற்றினர்.

இராணுவத்தினர் அமைத்திருக்கும் அத்தனை சிறிய, பெரிய இராணுவ முகாம்களிலும் 2 – 5 வயது கொண்ட அரச மரத்தின் கீழ் அமர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன், பிரதான பாதைகளின் இருமருங்கிலும், சிங்கள மக்களே வசிக்காத, வசித்தனர் என்ற வரலாறே இல்லாத இடங்களில், பெரும் நிலப்பரப்பில் இராணுவத்தினர் கொண்டிருத்திய புத்தர் தனியாளாக அசையாமல் ஆட்சிசெய்து வருகிறார். அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் அத்தனை விகாரைகளும் இராணுவ பிரிகேட் பிரிவுகளால் நிறுவப்பட்டவை. அத்தோடு, இந்தப் பகுதிகளில் சிங்கள மக்களே பூர்வகுடிகளாக இருந்தனர் என்றும், தமிழ் மக்கள் வந்தேறுகுடிகள் என்றும் சித்தரிக்கவே இந்த விகாரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராணுவச் சிப்பாய்கள் போரின்போது நடத்திய சாகசங்களை  பார்ப்பதற்காக தென்னிலங்கையிலிருந்து வரும் மக்கள் தங்கிச் செல்லக்கூடிய வகையிலேயேதான் இதில் ஒரு சில விகாரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. தாங்கள்தான் இந்தப் பகுதிகளிலும் பூர்வகுடிகளாக இருந்தவர்கள் என்ற மனோநிலையை தென்னிலங்கையிலிருந்து வரும் மக்களுக்கு இந்த விகாரைகள் வழங்கத் தவறுவதில்லை.

ஆகவே, பிரதான விகாரைகள் அமைந்துள்ள பகுதிகளில் தமிழர் வாழ்ந்தார்கள் என்பதற்கான உண்மையான வரலாறையும், சான்றுகளையும் இங்கு குறிப்பிட வேண்டிய கட்டாய நிலைமைக்கு நாங்கள் உள்ளானோம்.

கனகராயன்குளத்திலிருந்து பரந்தன் வரைக்கும், அங்கிருந்து முல்லைத்தீவு வழியாக கொக்கிளாய் வரைக்கும் பிரதான பாதையின் அருகில், தமிழ் மக்களது சொந்தக் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளை Storymap இன் ஊடாக Google Street View இன் உதவியுடன் கூகள் மெப்பில் படங்களுடன் பதிவினை மேற்கொண்டிருக்கிறோம். Storymap புதிய வலைதள தொழில்நுட்பத்தைக் கொண்டு இலங்கையில் தமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட புகைப்பட/ செய்திக் கட்டுரையாகும்.

இங்கு கிளிக்  செய்வதன் ஊடாகவும் கீழ் தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.

செல்வராஜா ராஜசேகர் மற்றும் ஜெரா