படம் | COLOMBO TELEGRAPH

இன்றைய நிகழ்வு (29.04.2016) ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டுள்ளது. இன்று காலை கொழும்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது சிவராமின் கொலைக்கு வகைப்பொறுப்புக் கூறுதலைக் கோரி, ஊடகச் சுதந்திரத்தின் கூட்டமைப்பொன்றினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வடக்கிலும், தெற்கிலும் அவரை நினைவுகூருவதற்கான நிகழ்வுகள் பொருத்தமானவையாகும். ஏனெனில், அவர் தெற்கில் பணியாற்றியதுடன், அங்கு வாழ்ந்துமுள்ளார். அத்துடன், தெற்கில் பெருமளவு நண்பர்களையும் கொண்டிருந்தார்.

இன்றைய நிகழ்வு ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டிருந்தாலும், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பான பரந்த பிரச்சினைகள் மீதும் எம்மால் பிரதிபலிக்க முடியும். இவற்றில் சில குறித்து நான் சுருக்கமான எண்ணங்களைப் பரிமாறுகின்றேன்.

ஆளுமை

சிவராம் பற்றி அதிகளவு சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் உள்ளன. நான் ஒரு போதுமே அவரை அல்லது அவரது குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை என்பதுடன், அவரது எழுத்துக்களில் சிலவற்றை மட்டுமே வாசித்திருக்கிறேன். எனவே, அவரைப் பற்றி சிறிதளவே பரிமாறிக்கொள்ளவேன் என்பதுடன், ஓர் எண்ணத்திற்கு மட்டும் நான் என்னைக் கட்டுப்படுத்தியுள்ளேன். கொழும்பில் தளத்தைக் கொண்ட பிரதானநீரோட்ட ஆங்கிலப் பத்திரிகைகளில் பிரசித்தமற்ற கருத்துக்களை எழுதுவதற்கும், வெளியிடுவதற்குமான வாய்ப்பினை கொண்டிருப்பதிலிருந்து சிவராம் நன்மையடைந்திருப்பதாகத் தோன்றுகின்றது. இது ‘தி ஐலன்ட்’ பத்திரிகையின் ஆசிரியர் திரு. காமினி வீரக்கோனினால் சிவராமுக்கான பாராட்டுரையொன்றில் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் சிவராமுக்கு தொழில் ஒன்றைக் கொடுத்திருந்த வேளை ‘தராக்கி’ என்ற புனைப்பெயரில் சிவராம் அழைக்கப்படலானார். ஆனாலும், தெற்கில் பிரதான நீரோட்ட ஊடகங்களின் தலையாய ஆசிரியர் தலையங்களுக்கு வித்தியாசமாக அல்லது அதை எதிர்ப்பதாகவே சிவராமின் கருத்துக்கள் விளங்கின. “பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு அருகாக சவாரி செய்தபோதும்” சிவராமின் கருத்துக்களை வெளியிடும் ஆபத்தினை திரு. வீரக்கோன் எடுத்திருந்தார். பத்திரிகை ஆசிரியர் ஒருவராக மாறுபட்ட கருத்துக்களுக்காக சிவராம் தன்னை அனுமதித்ததுடன், சுதந்திரத்தையும் மேம்படுத்தினாரா? என்ற கேள்வியை இன்று கேட்பது இன்றியமையாததாகும். கடந்த காலத்திலும், இன்றும் பன்மைத்தன்மையையும், மாறுபட்ட கருத்துக்களையும் தமிழ் ஊடகங்கள் மேம்படுத்துவதுடன், அனுமதிக்கின்றனவா? நாம் சிவராமை நினைவில் வைத்திருக்கையில், அதன் உரித்துரிமைக்கும், ஆசிரியர் தலையங்கக் கொள்கைக்கும் மாறுபட்ட அல்லது எதிர்ப்பான கருத்துக்களுக்கு இணைய தள ஊடகங்கள் உட்பட ஊடகங்கள் எந்தளவுக்கு வாய்ப்புக்களை வழங்குகின்றன என்பதைப் பிரதிபலிப்பது சிறந்ததாகும்.

கருத்துச் சுதந்திரம்

ஒரு சில நாட்களுக்கு முன், ஊடகவியலாளர்களுக்கு “அரசியல் ஆலோசனை” வழங்கும் உத்தியோகபூர்வ சுற்றறிக்கையொன்றை ஊடக அமைச்சுக்கு புதிததாக நியமிக்கப்பட்ட செயலாளர் (சிங்களத்தில் மாத்திரம்) வெளியிட்டிருந்தார். இது தற்போதையை அரசாங்கத்திற்குச் சாதகமாக விளங்கியதாகத் தோன்றுகின்றது. இது பற்றி அவரிடம் விசாரிக்கப்பட்ட போது யாருக்கேனும் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டால் அவராகவே மொழிபெயர்ப்பைச் செய்விக்கலாம் எனக் கூறியதாகக் கூறப்படுகின்றது. செய்தி இணையதளங்களையும் பதிவுசெய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிகளை எடுப்பதாகத் தோன்றுகின்றது. பொதுஇடங்களில் ஊடகவியலாளர்களைப் பிரதமரும், அமைச்சர்களும் மரியாதையீனப் படுத்தியுள்ளனர். வடக்கில் இந்த மாதம் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டுள்ளனர். புகைப்படக் கருவியொன்றும் உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் பரஸ்பரம் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகக் கூறப்பட்ட போதிலும், இத்தகைய சம்பவங்களை நாம் மேம்போக்காகக் கருதக்கூடாது. ராஜபக்‌ஷ ஆட்சியின் கீழிருந்ததை விட இப்போது நாம் உறுதியாகவே அதிகளவு கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டுள்ளோம். ஆனால், நாம் இன்னும் அதிகளவு நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதைக் இம்மாதம் சுட்டிக்காட்டுகின்றது.

தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமை

நல்லாட்சியின் 475 நாட்கள் உட்பட 11 வருடங்களின் பின்னர் சிவராமைக் கொன்றவர்களுக்கான வகைப்பொறுப்புக்கூறுதலுக்கு நாம் இன்னும் நெருங்கவே இல்லை. இதுவே காணாமல்போன, கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட பெருமளவு ஏனைய ஊடகவியலாளர்களுக்கும், அத்துடன் தீயூட்டலுக்கும், வேறு தாக்குதல்களுக்கும் உள்ளான ஊடக நிறுவனங்களுக்கும் நிகழ்ந்த விடயங்களாகும். இப்பொழுதிலிருந்து மூன்று நாட்களில் மே 2 அன்று, யாழ்ப்பாணத்திலும், உலக பத்திரிகைச் சுதந்திரத் தினத்தன்று ‘உதயன்’ பணியாளர் கொல்லப்பட்டதையும் நாம் நினைவுகூருகின்றோம். இலங்கையில் பத்திரிகைச் சுதந்திர தினம் இரத்தச் சிவப்பாகத் தொடர்ந்தும் இருக்கும் என்பதுடன், அரசாங்கத்தினால் எந்த அளவிலான வாக்குவன்மைகளும், கலந்துரையாடல்களும், ஊடகவியலாளர்களுக்கான சிறப்புரிமைகளின் ஏற்பாடும் இதை தூர எடுத்துச்செல்ல முடியாது. வகைப்பொறுப்புக் கூறுதலுடன் சேர்த்து உண்மையான கட்டமைப்பிலான சீர்திருத்தங்கள் மட்டுமே இக்கறைகளை அழிப்பதற்கு உதவும்.

ஆட்கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

சிவராம் கடத்தப்பட்டு, சட்டத்திற்குப் புறம்பாகக் கொல்லப்பட்டார். பதினொரு வருடங்களின் பின், இம்மாதம் வடக்கிலும், கிழக்கிலும் ஆட்கடத்தல்களின் அறிக்கைகளில் எச்சரிக்கையூட்டும் அதிகரிப்பொன்றை நாம் காண்கின்றோம். கடத்தப்பட்டவர்களில் சிலர் பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தின் (TID) பாதுகாவலில் உள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஏனைய கடத்தப்பட்டவர்களின் விதியும், நடமாட்டங்களும் இன்னுமே தெரியவில்லை எனத் தோன்றுகின்றது. மிகக் கொடுமையான சட்டமொன்றாகக் கருதப்படும் பயங்கரவாதத் தடைச்ச்சட்டத்தின் (PTA) கீழ் பெருமளவு கைதுகள் இடம்பெற்றுள்ளன. இச்சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் வாக்களித்திருந்தது. இது எனது சொந்த கருத்துச் சுதந்திரம் உட்பட கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதற்கு பரந்தளவில் பயன்படுத்தப்படுகின்றது. நாம் சிவராமை நினைவுகூரும் போது, இன்று இச்சூழமைவை குறிப்பாக இலங்கையில் வடக்கிலும், கிழக்கிலும் நாம் உதாசீனம் செய்யமுடியாது என்பதுடன், செய்யவும் கூடாது.

நினைவுச்சின்னத்தை நிறுவுதல்

இன்று யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக நினைவுச்சின்னமொன்றை நாம் கொண்டுள்ளோம். மலர்களைத் தூவுவதற்கும், தீபங்களை ஏற்றுவதற்கும், நினைவுகூரல் வைபவமொன்றை நடத்துவதற்கும் எம்மால் இயலக்கூடியதாகவிருந்ததுடன், இதன் பின்னர், இந்த நினைவுகூரல் நிகழ்ச்சிக்காக வரலாற்றுப் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நூலகத்திற்கு நாம் வந்துள்ளோம். இந்த அரசாங்கம் நினைவுச்சின்னம் நிறுவப்படுவதை ஓரளவுக்கு அனுமதித்துள்ளது. ஆனால், கடந்த வருடம் மே 18 அன்று போன்று சில நினைவுகூரல் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கும் முயன்றுள்ளது. ஆனால், இந்தப் பாரம்பரியத்தை அழுத்துவதற்கு முயல்வோம். அதேவேளை, கடந்த காலத்தின் வன்முறையையும், துஷ்பிரயோகத்தையும் மேன்மைப்படுத்தாதிருப்பதில் கவனமாக இருப்போம்.

பிரதிபலிப்புக்களை முடித்துவைத்தல்

பன்மைத்தன்மைக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும் கிட்டுகின்ற மிகச் சிறிதளவு இடத்தினால் சிவராம் நன்மையடைந்ததுடன், அதை அவர் பயன்படுத்தியுமுள்ளார். அவர் கருத்து வேறுபாடுக்காக தனது உயிரை விலையாகக் கொடுத்தார். பெரும்பான்மையினருக்கும், அதிகாரம் உள்ளவர்களுக்கும் எதிராக பன்மைத்தன்மையிலானதும், கருத்து வேறுபாடின்றியும் இனத்துவ மோதலின் அடிப்படைக் காரணிகளை விசேடமாக இலக்கரீதியான சிறுபான்மைச் சனசமூகங்களின் மனக்குறைகளையும், விருப்பார்வங்களையும் கவனத்திற்கெடுப்பது கஷ்டமானதாகும். ஊடகவியலாளர்களுக்கும், ஊடக ஊழியர்களுக்கும் எதிரானவை உட்பட யுத்தம் தொடர்பான கடந்த கால துஷ்பிரயோகங்களைக் கையாள்வதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்கு பன்மைத்தன்மையினாலான கருத்துக்களையும், மாறுபட்ட கருத்தினையும் வரவேற்பதும், பாராட்டுவதும் முக்கியமானதாகும். பொருளாதார அநீதிகள், சாதி, வகுப்பு மற்றும் பால்நிலை போன்ற சனசமூகங்களினுள்ளும், அவை முழுவதும் உள்ள வரலாற்று ரீதியிலான அநீதிகளைக் கவனத்திற்கெடுப்பதற்கு மாறுபட்ட கருத்தும் முக்கியமானதாகும்.

கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் நினைவுநாளில் மனித உரிமை செயற்பாட்டாளர் ருகி பெர்ணாண்டோவால் ஆற்றப்பட்ட உரையே மேல் தரப்பட்டுள்ளது.