படம் | AP Photo, USA TODAY
ஆர்மேனிய இன அழிப்பின் 101ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி ஆர்மேனியா தொடக்கம் உலகின் பல்வேறு பாகங்களிலும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் நினைவுகூரப்பட்டது. ஆர்மேனியாவுக்கு வெளியே இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்களுடன் ஆர்மேனியர்கள் அல்லாதவர்களும் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக கலந்துகொண்டனர்.
முதலாவது உலகப் போர் ஆரம்பிக்கும் போது இரண்டு மில்லியனாக இருந்த ஆர்மேனிய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டுவருடங்களில் அரை மில்லியனாகியது. அதாவது, ஒட்டொமன் பேரரசால் (இன்றைய துருக்கி) ஒன்றரை மில்லியன் ஆர்மேனிய கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒட்டொமன் பேரரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 250 ஆர்மேனிய அறிவியலாளர்கள் 24 ஏப்ரல் 1915இல் கொன்ஸ்ரான்ரிநோபிளில் (Constantinople) வைத்து படுகொலை செய்யப்பட்டமை ஆர்மேனிய இன அழிப்பின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே ஏப்ரல் 24ஆம் திகதியை ஆர்மேனியர்கள் ஆர்மேனிய இன அழிப்பு நாளாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இஸ்லாம் மதத்தை முன்னிலைப்படுத்தி பரவலடைந்த ஒட்டொமன் பேரரசு, தனது எதிரி நாடான ரஷ்யாவுக்கும் ஆர்மேனியர்களுக்கும் இடையில் நிலவிய உறவு தமது பலத்தை உறுதிப்படுத்தும் விரிவாக்கத்துக்கு இடையூறாக அமையும் என கருதியதாலேயே, ஆர்மேனிய இன அழிப்பை மூர்க்கத்தனமாக மேற்கொண்டதாக கணிசமான வரலாற்றியலாளர்கள் கூறிவருகின்றனர்.
ஆர்மேனியர்கள் மீதான இன அழிப்பை ஒட்டொமன் பேரரசு பல்வேறு கட்டங்களாக முன்னெடுத்திருந்தது. படுகொலைகள், பட்டினியால் சாகடித்தல், கட்டாய இடம்பெயர்வு தொடக்கம் ஆர்மேனிய சிறுவர்களை பலவந்தமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியது வரை வெவ்வேறு வடிவங்களில் இன அழிப்பை முன்னெடுத்திருந்தது. ஆர்மேனியர்களின் பண்பாடு, மொழி, மதம், அடையாளம் போன்றவற்றை நிர்மூலமாக்குதலே இதன் நோக்கமாகும். ஏனெனில், ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் தனித்து குறித்த இனத்தை பகுதியாகவோ முழுமையாகவோ அழிப்பதனூடாக அதனை முழுமையாக அழிக்க முடியாது. மாறாக, குறித்த இனத்தின் மொழி, பண்பாடு, சமூகக் கட்டமைப்பு, பொருளாதாரம், அடையாளம் மற்றும் குறித்த இனக்குழுமத்தினதோ மதக்குழுமத்தினதோ சித்தாந்தம் போன்றவற்றை உடனடியாகவோ படிப்படியாகவோ அழிப்பதனூடாக இன அழிப்பு முழுமைபெறும். இதன் காரணமாகவே இனஅழிப்பு என்பதை நிரூபிப்பதில், செயற்பாட்டின் நோக்கம் (Intention) முக்கியமானதாகும். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் இன்றி பல ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டால் அதனை இன அழிப்பென்று நிரூபிக்க முடியாது. ஆனால், ஒரு இனத்தினதோ அல்லது மதக்குழுமத்தினதோ அடையாளத்தை அழிக்கும் நோக்கோடு, குறித்த இனத்தினரை கட்டாயப்படுத்தி மதம்மாற்றினால் அதனை இன அழிப்பென வாதிடமுடியும் என்பதன் எடுத்துகாட்டாக ஆர்மேனியர்களுக்கு எதிரான இன அழிப்பு திகழ்கிறது.
ஆர்மேனியர்களின் 101 வருடகால நீதிக்கான போராட்டத்தில் ஆர்மேனிய இன அழிப்பை சர்வதேச சமூகம் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்பது முதன்மையாகவுள்ளது.
ஆர்மேனிய இன அழிப்பை அமெரிக்கா வெள்ளை மாளிகை பிரதிநிதிகளும், செனட்டும் தனித்தனியாக ஏற்று அங்கீகரித்துள்ளன. அத்துடன், அமெரிக்காவின் 44 மாநிலங்கள் ஆர்மேனிய இன அழிப்பை ஏற்று அங்கீகரித்துள்ளன. இருப்பினும், அமெரிக்கா ஒரு நாடாக ஆர்மேனிய இன அழிப்பை உத்தியோகபூர்வமாக ஏற்று அங்கீகரிக்கவில்லை. 2008ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது ஆர்மேனிய இன அழிப்பை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக ஏற்று அங்கீகரிப்பதற்காக பணியாற்றுவேன் என உறுதிமொழி வழங்கிய பரக் ஒபாமா அவர்கள், குறித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்ற குற்றாச்சாட்டு ஆர்மேனியர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இனஅழிப்பு (Genocide) என்ற சொற்பிரயோகத்தை தவிர்த்துவரும் பரக் ஓபாமா அவர்கள், அதற்குப் பிரதியீடாக Meds Yeghern என்ற ஆர்மேனிய சொற்பிரயோகத்தை பாவித்தமையையும் விமர்சித்துள்ளனர். Meds Yeghern என்ற சொற்பிரயோகம் 1944லேயே உருவாக்கம் பெற்றது. ஆனால், ஆர்மேனிய இன அழிப்பு ஆரம்பித்தது 1915இல். அக்காலப் பகுதியில் பாரிய குற்றம் (Meds Yeghern) என்றே இன அழிப்பை ஆர்மேனியர்கள் வர்ணித்தார்கள். ஆயினும், 1965லிருந்து ஆர்மேனியர்கள் மீதான படுகொலை இன அழிப்பு என ஏற்று அங்கீகரிக்கப்படத் தொடங்கியது. அதற்கு ஆர்மேனிய புலம்பெயர் சமூகம் மேற்கொண்ட பரப்புரைகளும் இராஜதந்திர நடவடிக்கைகளும் வித்திட்டது. அதன் ஒரு அங்கமாக, பராக் ஒபாமா அவர்களும் 19 ஜனவரி 2008 ஆர்மேனியர்களின் இன அழிப்பை அங்கீகரிப்பேன் என உறுதிமொழி வழங்கினாலும் அதனை காப்பாற்றவில்லை. இது, இனஅழிப்பு என்ற சொற்பிரயோகம் மட்டுமல்ல, சர்வதேச உறவில் குறித்த சொற்பிரயோகங்களை நாடுகளும் முக்கிய தலைவர்களும் தவிர்த்து வருவதற்கான பின்புலத்தையும் புடம்போட்டு காட்டுகிறது.
இதேவேளை, ஆர்மேனிய இன அழிப்பை இதுவரை 20 நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்று அங்கீகரித்துள்ளன. அத்துடன், ஐரோப்பிய நாடாளுமன்றம், தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டது இன அழிப்பு என தீர்ப்பு வழங்கிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent Peoples’ Tribunal) உட்பட உலகின் மிக முக்கியமான அமைப்புகள், சபைகள், பேரவைகளும் ஆர்மேனிய இன அழிப்பை ஏற்று அங்கீகரித்துள்ளன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியதாலோ ஆர்மேனிய இன அழிப்பை மேற்குறித்த நாடுகளோ சபைகளோ ஏற்று அங்கீகரிக்வில்லை. மாறாக, ஆர்மேனிய மக்களின், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனிய மக்களின் இடைவிடாத, சோர்ந்து போகாத, பரம்பரை பரம்பரையான, விலைபோகாத போராட்டமே இன்றும் ஆர்மேனிய இன அழிப்பை சர்வதேச அரங்கில் பேசுபொருளாக வைத்திருப்பதோடு, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா உட்பட 20 நாடுகளையும் உலகின் முக்கியமான அமைப்புகளையும் எற்று அங்கீகரிக்க வைத்திருக்கிறது.
நடாத்தப்பட்ட இன அழிப்பை ஏற்று அங்கீகரித்தல் அல்லது நீதிக்கான தீர்ப்பு வழங்குதல் என்பது சர்வதேச சமூகத்தாலோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தாலோ விரைவாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டு நீதி வழங்கப்படுவது உடனடி சாத்தியமான விடயமல்ல. மாறாக இது பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து தோற்றம் பெற்று, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள், அறிவியலாளர்கள், கல்விமான்கள் போன்ற தரப்புகள் ஊடாக விரிவடைந்து பரிணமிக்கின்ற ஒரு விடயம்.
பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நடந்த அநீதியை, இன அழிப்பை முன்னிறுத்தியதால் சர்வதேச அங்கீகாரம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, சர்வதேச சமூகம் ஏற்று அங்கீகரித்த பிற்பாடே தமக்கு இன அழிப்பு இடம்பெற்றிருக்கிறது என மக்கள் கூறியதாக வரலாறில்லை. இதனைத்தான் உலகில் முதன்முதலாக இன அழிப்பை சந்தித்த ஆர்மேனியர்களின் வரலாறு, இன அழிப்புக்கு முகம்கொடுத்த, முகம்கொடுத்து வருகிற தரப்புகளுக்கும் நீதிக்காக போராடும் தரப்புகளுக்கும் எடுத்துச் சொல்கிறது.
ஒட்டொமன் இராச்சியத்தின் தலைநகரமாக இருந்த கொன்ஸ்ரான்ரிநோபிள் துருக்கியின் இன்றைய முக்கிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்புல் (Istanbul) ஆக திகழ்கிறது. துருக்கி இன்றும் ஒரு பலமான நாடு. அமெரிக்காவோடு முக்கிய உறவைக் கொண்டுள்ள துருக்கி, நேட்டோவில் (NATO) பலம்மிக்க ஒரு நாடாக திகழ்கின்றது. இத்தகைய துருக்கிக்கு எதிராக 101 வருடங்கள் தாண்டியும் சந்ததி சந்ததியாக ஆர்மேனியர்களின் நீதிக்கான போராட்டம் தொடர்கிறது. கடந்த 24ஆம் திகதி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள துருக்கி தூதுவராலயத்திற்கு முன் இடம்பெற்ற நினைவுகூரல் மற்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.
101 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் ஆர்மேனிய இன அழிப்பை மறுத்து வரும் துருக்கி, படுகொலை செய்யப்பட்ட ஆர்மேனியர்களின் எண்ணிக்கையை வலுவாக குறைத்து காட்டுவதுடன், குறித்த மரணங்களுக்கு வேறு கற்பிதங்களைக் கூறிவருகிறது. ஆர்மேனியாவுக்கு அடுத்தபடியாக ஆர்மேனியர்கள் அதிகமாக வாழும் நாடு அமெரிக்கா. ஆதலாலேயே, இன அழிப்புக்கு நீதி கேட்டும் ஆர்மேனியர்களின் போராட்டம் அமெரிக்காவில் அதிக கவனத்தை ஈர்ந்திருக்கிறது. இருப்பினும், இதனை முறியடிக்கும் நகர்வுகளில் துருக்கி தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. ஆர்மேனியர்களின் 101ஆவது ஆண்டு நினைவுகூரலை அமெரிக்காவில் நீர்த்துப் போகச் செய்யும் முகமாக, துருக்கி அமெரிக்காவின் முக்கியமான நகரங்களிலும், முக்கியமான அமெரிக்க நாளேடுகளிலும் பெரும் பணச்செலவில் விளம்பரங்களை மேற்கொண்டது. ஆயினும், ஆர்மேனியர்கள் மனம்தளரவில்லை. அவர்களின் எதிர்ப்பையடுத்து கணிசமான நகரங்களில் குறித்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது.
தாம் உலகின் பலம்மிக்க நாடொன்றுடன் போராடுகிறோம். இது சவால் நிறைந்த முனைப்புகள் என தெரிந்திருந்தும் ஆர்மேனியர்களின் போராடும் உணர்வு குறைந்து போகவில்லை. துருக்கியோடு ஒப்பிடும்போது ஆர்மேனியர்கள் மிகப் பலவீனமான நிலையிலிருந்தாலும், ஆர்மேனியர்களின் பலம் என்பது அவர்களின் மனஉறுதியிலிருந்தும் போராட்டத்தின் தொடர்ச்சியிலிருந்தும் தோற்றம் பெற்று 101 வருடங்களுக்குப் பிறகும் உயிர்ப்போடு திகழ்கிறது. ஆர்மேனியர்களுக்கென்று ஒரு நாடும், அதனை ஆள்வதற்கு அரசும் உண்டு. ஆயினும், அந்த நாட்டின் அமைவிடமும், நாட்டில் பலவீனமான முறைமைகளும் ஆர்மேனிய அரசால் இன அழிப்புக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் பெரும் திருப்புமுனைகளை ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும், நீதிகோரி போராடும் ஆர்மேனிய புலம்பெயர்ந்து வாழும் சமூகத்துக்கு ஆதரவாக ஆர்மேனிய அரசு இருந்து வருகிறது.
நமக்கான போராட்டத்தை நாமே ஆரம்பிக்க வேண்டும்; தொடரவேண்டும். நேர்த்தியான கொள்கை வகுப்புடனும், சிறந்த திட்டமிடல் முகாமைத்துவத்துடனும் முன்னெடுக்கப்படும் மக்கள் மயப்பட்ட போராட்டம், எமக்கான நேச சக்திகளையும், எமக்கு சாதகமான அக, புறச்சூழல்களையும் உருவாக்கும். மாறாக, எமக்காக யாரும் போராடுவார்கள், யாராவது எமக்கு நீதியை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க முடியாது. நாம் போராடாமல் விடுகின்ற ஒவ்வொரு தருணத்திலும், நாம் சோர்வடைகின்ற ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும், யாரையும் நம்பி நாம் காத்திருக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், எமக்கான பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோர் சோரம்போகிற, சரணாகதியடைகிற ஒவ்வொரு சூழலிலும் எமது போராட்டம் நீர்த்துப் போகும். அந்தப் பலவீனமான நிலையென்பது எமது போராட்டத்தின் அடித்தளத்தை மெதுமெதுவாக ஆட்டம் காணச் செய்து, இறுதியில் எமது நீதிக்கான போராட்டத்தை முற்றுமுழுதாக அழித்துவிடும்.
ஆகவே, எமக்காக நாமே போராட வேண்டும். எமக்கு நடந்த அநீதியை, இன அழிப்பை ஓங்கி ஒலித்து, உறுதிபட நாமே சொல்ல வேண்டும். உறுதிகுன்றாத மனோதிடமும் போராட்டத்தின் இடைவிடாத தொடர்ச்சியும் நீதிக்கான எமது போராட்டங்களின் அடிநாதங்களில் முக்கியமான அம்சங்களில் ஒன்று என்ற மனப்பாங்கோடு ஆர்மேனியர்களின் போராட்டம் 102ஆவது ஆண்டில் தடம் பதித்துள்ளது.
தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக, தென்னிலங்கையால் மிக நுட்பமாக முன்னெடுக்கப்படும் தமிழர்களின் அடையாள அழிப்புக்கும் சித்தாந்த சிதைப்புக்கும் மத்தியில், தமிழர்களின் இன அழிப்பு மறுக்கப்பட்டு வருகின்ற சூழலில், தமிழ் இன அழிப்பு என்ற சொற்பிரயோகத்தை வெளிச்சக்திகள் மட்டுமன்றி புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சிலவும், தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் தவிர்த்துவருகின்ற பின்னணியில், உத்தியோகபூர்வ கூட்டுநினைவுகூரல் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்ற பின்புலத்தில், முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு நடாத்திய இன அழிப்பின் ஏழாவது ஆண்டை நினைவுகூர தயாராகும் தமிழர் தேசம் ஆர்மேனியர்கள் தரும் படிப்பினைகளை கவனத்திற்கொண்டு தனது நீதிக்கான போராட்டத்தை பலப்படுத்துமா?
நிர்மானுசன் பாலசுந்தரம்