படம் | Ishara S Kodikara photo, GETTY IMAGES
பூஜித ஜயசுந்தர என்ற பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகியிருப்பதற்கான காரணம் அவர் ஒரு ‘சிறந்த’ பொலிஸ் அதிகாரி என்பதனாலாகும். அவர் கண்டியில் இருந்தபோது தினமும் தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டதன் பின்னரே வேலைக்குச் செல்வதாக சிலர் கூறுகிறார்கள். அத்துடன், அவர் இலங்கையில் வரவேற்பைப் பெற்ற பாடசாலையான கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். இவ்வாறான விடயங்களால் பூஜித சமூக ஊடகத்தளங்களில் மிகவும் பிரபலமான ஒருவராக காணப்படுகின்றார். இருந்தபோதிலும் பூஜித தொடர்பாக நற்சான்றிதழ் வழங்கிவரும் மக்கள் பின்னர் அவரின் செயற்பாட்டால் விரக்தியடைவதற்கு முன்னர் காட்டுமிராண்டித்தனமாக உள்ள பொலிஸ் திணைக்களத்தை மக்களுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒழுக்கமான நிறுவனமாக கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை பூஜித்தவுக்கு வழங்குவதே சிறப்பானதாக இருக்கும்.
அனைத்து மக்களினதும் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும், இனபேதமின்றி அனைத்து இன மக்களையும் கௌரவத்துடன் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தும் பொலிஸ்மா அதிபர் ஒருவரே நாட்டிற்கு தேவை என்பதை சிங்கள பௌத்தத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பூஜிதவின் செயற்பாடுகளை பாராட்டுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். பேஸ்புக்கில் ஒரு நபர் மிகவும் சரியானதொரு பதிவை இட்டிருந்தார். “இவ்வாறான விடயங்களை (விகாரைக்குச் செல்வது போன்ற) மட்டும் அதிகப்படியாக செய்வதன் மூலம் மூக்குடைபடுவதைத் தவிர்க்க முடியாது” என்று.
இந்த நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில், தாயை வணங்கிவிட்டு வேலைக்குச் செல்வது, தினமும் காலையில் புத்த பகவானை வணங்குவது, பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது, நற்பண்டு போன்றவற்றையல்ல நாங்கள் பொலிஸ்மா அதிபரிடமிருந்து எதிர்பார்ப்பது. இவை அவரின் தனிப்பட்ட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விடயங்களாகும். இலங்கை பொலிஸ், மனிதத்துவம் அற்ற காட்டுமிராண்டித்தனமான நிறுவனம் என்பதை பூஜித ஜயசுந்தரவுக்கு புதிதாக சொல்லத் தேவையில்லை. கடந்த காலத்துக்குப் போகாமல் கொடதெனிய சம்பவம் (சேயா என்ற சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தோடு தொடர்புபடுத்தி அப்பாவி பாடசாலை மாணவன் கைதுசெய்யப்பட்டமை), HNDA மாணவர்கள் மீதான தாக்குதல் உட்பட அண்மைய ஒரு சில சம்பவங்களே போதும். ஆகவே, பொலிஸ்மா அதிபரை இலட்சிய மனிதராக உருவகப்படுத்துவதற்குப் பதிலாக, மக்களோடு எருமைகளாக அன்றி, மனிதர்களாக நடந்துகொள்வதற்கான பொலிஸ் சேவையை (புதிதாக) உருவாக்குவதற்குத் தேவையான ஆதரவை வழங்கி அர்ப்பணிப்புடன் பிரஜைகள் செயற்படுவது அவசியமாகும்.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி வரை அதிகாரத்தை தனக்குத் தேவையான விதத்தில் பயன்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஊழல்வாத மஹிந்த ரெஜீமை விரட்டியடித்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்ற (இப்போதும் பெரிய வித்தியாசம் இல்லை, காரணம் – மஹிந்த ரெஜீமில் இருந்த அத்தனை ஊழல்வாதிகளும் தற்போதை அரசாங்கத்திலும் பங்குகொண்டிருப்பதனால்) பாடுபட்ட மக்கள் அனைவரும் பொதுவாக ஒரு விடயத்தை எதிர்பார்த்தார்கள். இருந்ததை விட சிறந்த முறையில், உரிமைகளைப் பெற்று வாழக்கூடிய நாடாக இலங்கை இருக்குமென்று எதிர்பார்த்தார்கள். மக்கள் வாழ்க்கையோடு நேரடியாக தொடர்புபட்ட பொலிஸ் நிறுவனத்தில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்பட்டு ஒழுக்கம் நிலைநிறுத்தப்படும் என எண்ணினார்கள். ஆனால், இன்று வரை எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ராஜபக்ஷ காலத்தில் இருந்த அதே காட்டுமிராண்டித்தனம் எதுவித மாறுதலுமின்றி செயற்பட்டு வருவதை அவதானிக்கமுடிகிறது.
குறைந்தது, ஏதொவொரு தேவை கருதி தன்னிடம் வரும் மக்களிடம் ஒழுக்கமாகப் பேசக்கூடத் தெரியாத அறிவற்ற பொலிஸாரைக் கொண்ட இனத்தைச் சேர்ந்தவர்களாக நாம் இருக்கிறோம். ஆகவே, பூஜித ஜயசுந்தரவுக்கு அனைத்து பக்கத்திலிருந்தும் கூடாத செய்திகளை விட நல்ல செய்திகள், வாழ்த்துகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், முதலில் செய்யவேண்டியது பொலிஸார் மீது படிந்துள்ள சேற்றை கழுவி அகற்றிவிட்டு நம்பிக்கையான பொலிஸ் சேவையை நிறுவுவதேயாகும். பல சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகளுடனும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டு பயமின்றி தனது கடமையை நிறைவேற்றி வந்தவர் என்று பலரும் பாராட்டுகின்ற நிலையில், தற்போது பொலிஸ் துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசியல்வாதிகளின் உதவி அத்தியாவசியமாக தேவைப்படாது என்றே மக்கள் கருதுகின்றனர். நாங்கள் கதிரை மாற்றத்துக்கு மாறாக ஒழுக்கம், சட்டம் மற்றும் மனிதத்துவத்தை பொலிஸாருக்கு கற்றுக்கொடுக்க வேண்டுமென்பதையே வேண்டி நிற்கிறோம்.
‘காட்டுமிராண்டித்தனமான பொலிஸார்’ என்று அழைக்கப்படுவதை மக்களிடமிருந்து மறக்கடிக்கச் செய்து அதற்குப் பதிலாக ‘பொறுப்புள்ள பொலிஸார்’ என்று பொலிஸாரை கௌரவத்துடன் மதிக்க, அழைக்க பூஜித ஜயசுந்தர மக்களுக்கு உதவுவார் என்று நம்புவோம்.
“පූජිත පොලිස් සේවයක් වෙනුවෙන් පූජිත්ගේ වගකීම” என்ற தலைப்பில் அஸான் வீரசிங்கவால் எழுதப்பட்டு ‘விகல்ப’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இது.